என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • பெருவாயில் பகுதியில் சாலை கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • லாரியின் சக்கரத்தில் சிக்கிய ராஜசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்(வயது40). கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார்.

    இன்று காலை அவர் தனது தங்கையான புவனேஸ்வரி(32) மற்றும் அவரது மகள் சாருமதி(5) மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    பெருவாயில் பகுதியில் சாலை கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய ராஜசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    புவனேஸ்வரி, அவரது மகள் சாருமதி ஆகியோரின் கால்கள் நசுங்கியது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய அவர்கள் 2 பேரையும் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வளைவில் திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

    லாரி மோதி கிராம நிர்வாக உதவியாளர் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மோதல் குறித்து இரு தரப்பினரும் ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
    • தலைமறைவான நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி புதிய தமிழ் காலனியைச் சேர்ந்தவர் சுகுமார். இவரது மகள் கௌசல்யாவுக்கும், இதே பகுதியைச் சேர்ந்த ஷர்மிளா குடும்பத்தினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், நேற்று இரவு இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி தாக்கி கொண்டார்களாம். மேலும், கௌசல்யாவை தாக்கி அவரது ஆடைகளை ஷர்மிளா குடும்பத்தினர் கிழித்து எறிந்தார்களாம்.

    இந்த சம்பவம் குறித்து கௌசல்யா மற்றும் ஷர்மிளா ஆகியோர் தனித்தனியாக ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். எனவே போலீசார் இரண்டு தரப்பைச் சேர்ந்த வெங்கடேசன்(வயது33), ஷர்மிளா(வயது29), நவீன், ஜெகதா, சுமதி, வெற்றிச்செல்வன்(வயது31), ஜெயா(வயது36), சரளா என மொத்தம் இரண்டு தரப்பைச் சேர்ந்த எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேசன், ஷர்மிளா, வெற்றிச்செல்வன், ஜெயா ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். தலைமறைவான நான்கு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்றம் மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

    • எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற கோரியும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய பாஜக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    பொன்னேரி:

    பொன்னேரியில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சமையல் எரிவாயு உருளை விலை ஏற்றத்தால் ஏழை நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை விளக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தின்போது மண் அடுப்பை பற்ற வைத்து அதில் சமைக்கும் கற்கால நிலைக்கு பெண்கள் சென்று கொண்டிருப்பதாக குற்றம்சாட்டி சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற கோரியும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் துணைத் தலைவர் டி.எல். சதாசிவலிங்கம் கலந்துகொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தினார், இதில் நகரத் தலைவர் வழக்கறிஞர் கார்த்திகேயன் மகிளா காங்கிரஸ் எழிலரசி உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    • லதா நாராயணன் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார்.
    • தண்டையார்பேட்டை பாப்பாத்தி டிராவல்ஸ் வளாகத்தில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் கல்பனா தலைமையில் நடக்கிறது.

    திருவொற்றியூர்:

    சமத்துவ மக்கள் கழகம் சார்பில் உலக மகளிர் தின விழா இன்று மாலை 5 மணிக்கு தண்டையார்பேட்டை பாப்பாத்தி டிராவல்ஸ் வளாகத்தில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் கல்பனா தலைமையில் நடக்கிறது.

    லதா நாராயணன் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக பேராசிரியர் ஜெயஸ்ரீ, எழுத்தாளர் லதா சரவணன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளை தலைவர் எர்ணாவூர் நாராயணன் வழங்குகிறார்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை வட சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளர் குணசுந்தரி, மாநில நிர்வாகிகள் மீனா, ஆனந்தி, விஜயலட்சுமி, கல்யாணி, வர்ஷா, லெசி, அனிதா, ராஜ புஷ்பம், இளங்காவதி ஆகியோர் செய்துள்ளனர்.

    • நீண்டநேரம் ஆகியும் உஷாராணி வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது கிணற்றுக்குள் அவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அன்பழகன் நகரை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி உஷாராணி (வயது55).

    இவர் நேற்று மாலை வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றின் மேல் பகுதியை சுத்தம் செய்தார். அப்போது திடீரென உஷாராணி தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.

    தண்ணீரில் மூழ்கிய அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். நீண்டநேரம் ஆகியும் அவர் வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது கிணற்றுக்குள் உஷாராணி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசாருக்கும் செங்குன்றம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் கயிறுகட்டி உஷாராணியின் உடலை மீட்டனர். பின்னர் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மஞ்சங்காரனை கிராமத்தில் இரும்பு கம்பி தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது.
    • இரும்பு கம்பி திருட்டு தொடர்பாக பெரியபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள மஞ்சங்காரனை கிராமத்தில் இரும்பு கம்பி தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கிருந்த சுமார் 30 டன் எடை கொண்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பெரியபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னை மாத்தூரைச் சேர்ந்த வாசுதேவன், செங்குன்றம் ஆட்டதாங்கலை சேர்ந்த ரவி, அவரது சகோதரர் பழனி, செங்குன்றத்தைச் சேர்ந்த நாசர், தென்காசியை சேர்ந்த மாயாண்டி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    இதேபோல் வடசென்னை அனல் மின் நிலையத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை திருடியதாக மீஞ்சூரை அடுத்த புதுப்பேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக், அன்பு குமார் ஆகிய 2 பேரை காட்டூர் போலீசார் கைது செய்தனர்.

    • ஒரே நாள் இரவில் அடுத்தடுத்த 2 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பாதிரிவேடு:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையை சேர்ந்தவர் மாங்கிலால் (வயது 49). இவர், பாதிரிவேடு அருகே உள்ள பூவலம்பேடு கிராமத்தில் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது கடையின் இரும்பு கதவு மற்றும் ஷெட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்த நகை வைக்கப்பட்டிருந்த லாக்கரை உடைக்க முயற்சித்து உள்ளனர். அது முடியவில்லை. இதனையடுத்து கடையில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணத்தை மட்டும் திருடிச் சென்றனர். மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா ஹார்ட் டிஸ்கையும் அவர்கள் கழற்றி சென்றனர்.

    அதே போல அருகே உள்ள சுமன் (39) என்பவரின் பேன்சி கடையின் இரும்பு ஷெட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்த கல்லாவை உடைத்து அதிலிருந்த ரொக்கப்பணம் ரூ.20 ஆயிரத்தை அள்ளிச் சென்றனர். ஒரே நாள் இரவில் அடுத்தடுத்த 2 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் விசாரணையில் 4 பேர் கொண்ட கும்பலை சேர்ந்தவர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்பது தெரியவந்து உள்ளது.

    இது குறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ஆந்திராவில் இருந்து வந்த ரெயிலில் இருந்து இறங்கிய பயணி ஒருவரின் பையை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்தனர்.
    • பையில் 5 பாக்கெட்டுகளில் மொத்தம் 11 கிலோ எடை கொண்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் நேற்று ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் திடீரென பயணிகளிடம் சோதனை செய்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த ரெயிலில் இருந்து இறங்கிய பயணி ஒருவரின் பையை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்தனர். அந்த பையில் 5 பாக்கெட்டுகளில் மொத்தம் 11 கிலோ எடை கொண்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெபதாஸ் தலைமையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திராவில் இருந்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த நாமக்கல் மாவட்டம் கள்ளிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி (வயது 47) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கூர்மவிலாசபுரம் ஏரிக்கரை அருகே சிலர் சூதாடுவது தெரியவந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கனகம்மாசத்திரம்:

    திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் கூர்மவிலாசபுரம் கிராமத்தில் சூதாட்டத்தில் சிலர் ஈடுபடுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் இரவு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கூர்மவிலாசபுரம் ஏரிக்கரை அருகே சிலர் சூதாடுவது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை சுற்றி வளைத்த போலீசார் கனகம்மாசத்திரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 32), ஹரிபாபு (42), முத்துக்கொண்டாபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் (41), மதன்குமார் (36), காவேரிராஜபுரத்தை சேர்ந்த முனிகிருஷ்ணன் (26) மற்றும் ஆந்திர மாநிலம் விஜயபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் (44), கோபி (42), ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 38 ஆயிரத்து 520 ரூபாய் ரொக்கம், 8 செல்போன்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • முப்பெரும் விழா திருவள்ளுவர் நகரில் வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.எம்.காமராஜ் தலைமையில் நடந்தது.
    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா கலந்து கொண்டு கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    திருவள்ளுவர் நகர் வியாபாரிகள் சங்கம் சார்பில் 30-வது ஆண்டு விழா மற்றும் முப்பெரும் விழா திருவள்ளுவர் நகரில் வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.எம்.காமராஜ் தலைமையில் நடந்தது. செயல் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார. செயலாளர் பெப்சி நாராயணன் வரவேற்புரையாற்றினார்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா கலந்து கொண்டு கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். என்.டி.மோகன், தேசிகன், சின்னவன், ராதா கிருஷ்ணன், மகேந்திரன், சுதர்சன், மீனாட்சி சுந்தரம், வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 108 ஆம்புலன்சை வரவழைத்து ஜெனிபரை திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
    • ஆம்புலன்சை டிரைவர் விஜயகுமார் ஓட்டினார். உடன் நர்சு தாட்சாயினி இருந்தார்.

    திருத்தணி:

    திருத்தணியை அடுத்த அருங்குளம் காலனியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஜெனிபர் (23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜெனிபருக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து 108 ஆம்புலன்சை வரவழைத்து ஜெனிபரை திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆம்புலன்சை டிரைவர் விஜயகுமார் ஓட்டினார். உடன் நர்சு தாட்சாயினி இருந்தார். போகும் வழியிலேயே ஜெனிபருக்கு பிரசவ வலி அதிகமானது. இதைத்தொடர்ந்து ஆம்புலன்சிலேயே ஜெனிபருக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது.

    பின்னர் தாயையும், குழந்தையையும் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்கள் தற்போது நலமாக உள்ளனர். ஜெனிபருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • திருப்பதி பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் மூட்டை மூட்டையாக கட்டி குளிர்பான பாட்டில் வீசப்பட்டு கிடந்தது.
    • காலாவதியானது என்பது தெரியாமல் ஏராளமான சிறுவர்கள் மற்றும் மதுபான பிரியர்கள் அதை போட்டிபோட்டு அள்ளிச்சென்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இதன் அருகே உள்ள திருப்பதி பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் மூட்டை மூட்டையாக கட்டி குளிர்பான பாட்டில் வீசப்பட்டு கிடந்தது.

    இதனை கண்டு சந்தேகம் அடைந்த அவ்வழியே சென்ற பொதுமக்கள் பார்த்தபோது குளிர்பான பாட்டில்கள் அனைத்தும் காலாவதியானது தெரிந்தது.

    இதேபோல் காமராஜர் சிலை அருகேயும், புறநகர் பஸ் நிறுத்தம் அருகேயும் சாலை ஓரத்தில் காலாவதியான குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் மூட்டைகளில் கட்டி வீசப்பட்டு கிடந்தன.

    அவை காலாவதியானது என்பது தெரியாமல் ஏராளமான சிறுவர்கள் மற்றும் மதுபான பிரியர்கள் அதை போட்டிபோட்டு அள்ளிச்சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீஸ் மற்றும் நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து சாலையோரத்தில் வீசப்பட்ட குளிர்பானங்களை அப்புறப்படுத்தினர். காலாவதியான குளிர்பான பாட்டில்களை எடுத்து சென்றவர்கள் அதனை பயன்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    மேலும், திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் குளிர்பானம் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் காலாவதியானவற்றை உடனே கொட்டி அழிக்க வேண்டும். சாலையோரத்தில் வீசி செல்லக்கூடாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    ×