என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருவள்ளூரில் சாலையோரம் மூட்டை மூட்டையாக கட்டி வீசப்பட்ட குளிர்பான பாட்டில்கள்
- திருப்பதி பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் மூட்டை மூட்டையாக கட்டி குளிர்பான பாட்டில் வீசப்பட்டு கிடந்தது.
- காலாவதியானது என்பது தெரியாமல் ஏராளமான சிறுவர்கள் மற்றும் மதுபான பிரியர்கள் அதை போட்டிபோட்டு அள்ளிச்சென்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இதன் அருகே உள்ள திருப்பதி பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் மூட்டை மூட்டையாக கட்டி குளிர்பான பாட்டில் வீசப்பட்டு கிடந்தது.
இதனை கண்டு சந்தேகம் அடைந்த அவ்வழியே சென்ற பொதுமக்கள் பார்த்தபோது குளிர்பான பாட்டில்கள் அனைத்தும் காலாவதியானது தெரிந்தது.
இதேபோல் காமராஜர் சிலை அருகேயும், புறநகர் பஸ் நிறுத்தம் அருகேயும் சாலை ஓரத்தில் காலாவதியான குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் மூட்டைகளில் கட்டி வீசப்பட்டு கிடந்தன.
அவை காலாவதியானது என்பது தெரியாமல் ஏராளமான சிறுவர்கள் மற்றும் மதுபான பிரியர்கள் அதை போட்டிபோட்டு அள்ளிச்சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீஸ் மற்றும் நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து சாலையோரத்தில் வீசப்பட்ட குளிர்பானங்களை அப்புறப்படுத்தினர். காலாவதியான குளிர்பான பாட்டில்களை எடுத்து சென்றவர்கள் அதனை பயன்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும், திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் குளிர்பானம் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் காலாவதியானவற்றை உடனே கொட்டி அழிக்க வேண்டும். சாலையோரத்தில் வீசி செல்லக்கூடாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.






