search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவள்ளூர் அருகே 200 அடி சாலைப்பணி: விவசாய நிலத்துக்கு செல்ல வழிகேட்டு பெண்கள் திடீர் மறியல்
    X

    திருவள்ளூர் அருகே 200 அடி சாலைப்பணி: விவசாய நிலத்துக்கு செல்ல வழிகேட்டு பெண்கள் திடீர் மறியல்

    • திருவள்ளூர் மாவட்டத்தில் சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகின்றன.
    • கீழானூர் பகுதி மக்கள் விவசாய நிலத்திற்கும் குடியிருப்பு பகுதிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் நிலை உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் நுழைவதை தவிர்ப்பதற்காக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சந்திப்பு வரை 200 அடி சாலை அமைக்கப்படுகிறது. இது 133 கி.மீ. நீளத்தில் அமைய உள்ளது.

    எண்ணூர் துறைமுகத்தில் இருந்து திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சிங்கபெருமாள் கோயில் வழியாக மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை 200 அடி சாலை அமைய இருக்கிறது.

    இதில் ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் திருவள்ளூர் அடுத்த கீழானூர் கிராமத்தில் சாலையில் தடுப்பு அமைத்து சாலையை உயர்த்தி பணி நடைபெற்று வருகிறது. இதனால் கீழானூர் பகுதி மக்கள் விவசாய நிலத்திற்கும் குடியிருப்பு பகுதிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் நிலை உள்ளது.

    இதையடுத்து விவசாய நிலத்துக்கும், குடியிருப்பு பகுதிக்கும் செல்லும் வகையில் சாலை அமைக்க வேண்டும் என்று கிராமமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் பணி நடந்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கீழானூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு செல்ல புதிதாக அமைக்கும் சாலையில் வழி கேட்டு திருவள்ளூர்- செங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் வெங்கல் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து கிராமமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×