என் மலர்
திருப்பூர்
- கோபுரம் தொடா்பாக எச்சரித்தும் இந்து சமய அறநிலையத் துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- கோபுரத்தை சீரமைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருப்பூர்:
ஸ்ரீ ரங்கம் கோவில் கிழக்கு கோபுரம் சிதிலமடைந்து விழுந்ததற்கு இந்து சமய அறநிலையத் துறையின் அலட்சியமே காரணம் என இந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
வரலாற்று சிறப்பு மிக்கதும், பழைமையானதுமான ஸ்ரீ ரங்கம் கோவிலின் கிழக்கு கோபுரம் சிதிலமடைந்து விழுந்ததற்கு இந்து சமய அறநிலையத் துறையின் அலட்சியமே காரணமாகும். கோபுரம் சிதிலமடைந்தது தொடா்பாக இந்து முன்னணி, ஆன்மிகப் பெரியவா்கள் எச்சரித்தும் இந்து சமய அறநிலையத் துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, கோவிலில் நிகழ்ந்துள்ள அசம்பாவிதத்துக்கு தக்க பரிகாரம் செய்யவும், கோபுரத்தை சீரமைக்கவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேங்காய் கிலோ ரூ.17 முதல் ரூ.23 வரைக்கும் விற்பனையானது.
- ஏலத்துக்கு 5.7 டன் அளவுள்ள தேங்காய் மற்றும் கொப்பரைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
வெள்ளகோவில்:
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தினசரி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 5.7 டன் அளவுள்ள தேங்காய் மற்றும் கொப்பரைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
இதில் கொப்பரை கிலோ ரூ.58 முதல் ரூ.78 வரைக்கும், தேங்காய் கிலோ ரூ.17 முதல் ரூ.23 வரைக்கும் விற்பனையானது.ஏலத்தில் மொத்தமாக ரூ.2.37 லட்சம் மதிப்பிலான தேங்காய், கொப்பரைகள் விற்பனையானதாக வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.
- மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அவினாசி அலுவலகத்தில் நடக்கிறது.
- குறைகளை நேரில் மனுவாக வழங்கி நிவர்த்தி பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
திருப்பூர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சார்பில் வருகிற 9-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அவினாசி அலுவலகத்தில் நடக்கிறது.
இதில் மின் நுகர்வோர்களின் மின் தொடர்பான குறைகளை மின் பொறியாளர் நேரில் ேகட்டறிகிறார்.எனவே மின் நுகர்வோர் தங்களது மின் தொடர்பான குறைகளை நேரில் மனுவாக வழங்கி நிவர்த்தி பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை அவினாசி மின் வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.
- இந்த கூட்டத்திற்கு மாநில பொருளாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்
- பொதுக்குழு கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பல்லடம்:
தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பொருளாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாநில பிரச்சார செயலாளர் பாஸ்கர் ஜோசப், ஊரக வளர்ச்சித் துறை பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் மகேந்திரன், சாலை பணியாளர் சங்க மாநில நிர்வாகி ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்குழு கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில் மாவட்ட தலைவராக தமிழரசன், செயலாளராக தேவி, பொருளாளராக பழனிசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் ஒன்றிய தலைவராக அக்கம்மாள், செயலாளராக ராமசாமி, பொருளாளராக ஜோதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வூதியத்தை உயர்த்தி தர வேண்டும், பதவி உயர்வு மற்றும் அரசு மானியத்தை அதிகப்படுத்தி தரவேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விழா முடிவில் ஒன்றிய பொருளாளர் ஜோதி நன்றி கூறினார்.
- பணம் அனுப்புவதை நிறுத்திய பின் அந்த நபர் கொலை மிரட்டல் விடுக்க துவங்கினார்.
- பணத்தை இழந்த சதீஷ்குமார் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கொசவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் குமார் (வயது 32). இவர் அங்கு செல்போன் கடை நடத்தி வந்தார்.
கடந்த 2021ம் ஆண்டு இவரிடம் அறிமுகமான ஒருவர், தனது நண்பர் ஒருவருக்கு ரூ.10 கோடி பணம் வரும். இதில் தனக்கு ரூ.3 கோடி ரூபாய் கிடைக்கும். தற்போது தனக்கு பண உதவி தேவைப்படுகிறது. நீங்கள் கொடுத்தால் ரூ.3கோடி பணம் வந்ததும் இரட்டிப்பு பணம் தருவதாக கூறியுள்ளார்.
இதை நம்பிய சதீஷ்குமார் நகைகளை அடமானம் வைத்தும் கிரெடிட் கார்டுகள் மூலமாகவும் தொடர்ந்து பணம் கொடுத்துள்ளார்.சுமார் ரூ.50 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு சதீஷ்குமார் பணம் அனுப்புவதை நிறுத்தினார். இதனால் அந்த நபர் சதீஷ்குமாருக்கு மிரட்டல் விடுத்துள்ளதுடன் பணம் தர முடியாது என தெரிவித்துள்ளார்.
இதனால் பணத்தை இழந்த சதீஷ்குமார் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது பெற்றோர் அவரை சமாதானப்படுத்தினர்.மேலும் திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.யிடம் சதீஷ்குமார் புகார் அளித்தார்.புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து சதீஷ்குமார் கூறுகையில்:- என்னுடன் நட்பாக பழகியதால் அவர் மீது இருந்த நம்பிக்கையின் பேரில் ஆரம்பத்தில் பணம் அனுப்பினேன். பணம் அனுப்புவதை நிறுத்திய பின் அந்த நபர் கொலை மிரட்டல் விடுக்க துவங்கினார். பணத்தை தருவதாக கூறி சென்னை, திருச்சி, ஊத்தங்கரை, மேட்டுப்பாளையம், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு வரச்சொன்னார். பணத்தை தராமல் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். ரூ. 50 லட்சம் வரை இழந்துள்ளேன். செல்போன் கடையையும் காலி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. எனவே நம்ப வைத்து மோசடி செய்து பணத்துடன் மாயமான அந்த நபரை கைது செய்து, இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மாலை, இரவு நேரங்களில் அமராவதி அணைக்கு செல்வதற்கு யானைகள் கூட்டமாக ரோட்டை கடக்கின்றன.
- வாகன ஓட்டுனர்கள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை -மூணாறு சாலையில் கடந்த சில நாட்களாக யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
மாலை மற்றும் இரவு நேரங்களில் குட்டியுடன் யானைகள் கூட்டம் கூட்டமாக நீர் தேடி அமராவதி அணைக்கு வருகின்றன. ஏழுமலையான் கோவில் சுற்று, யானைக்காடு எஸ். வளைவு பகுதிகளில் யானைகள் கூட்டமாக கடந்து செல்கின்றன.
2 நாட்களுக்கு முன்பு இரவு கேரள மாநில அரசு பஸ் மற்றும் வாகனங்களை யானைகள் வழிமறித்துள்ளன. அதிர்ஷ்டவசமாக எந்த பாதியும் ஏற்படவில்லை. அதேபோல் காட்டுமாடு, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும் அதிக அளவு தென்படுகின்றன. எனவே வாகன ஓட்டுனர்கள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், உடுமலை-மூணாறு ரோட்டில் வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் நீர் தேடி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன.
மாலை, இரவு நேர ங்களில் அமராவதி அணைக்கு செல்வதற்கு யானைகள் கூட்டமாக ரோட்டை கடக்கின்றன. ரோட்டில் வன விலங்குகள் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
யானைகள் இருந்தால் சோதனை சாவடியில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. யானைகள் சென்ற பின் வாகனங்கள் அனுப்பிவைக்கப்படுகிறது. வாகனங்களில் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தி அனுப்புகிறோம் என்றனர்.
- பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மாதாந்திர உரிமைத் தொகையை தங்கள் இல்லத்திலேயே தபால்காரர் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
திருப்பூர்:
திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை பெற, தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள தபால் நிலையத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
தபால்காரர், கிராம தபால் ஊழியருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன், பயோமெட்ரிக் சாதனம் மூலம், பயனாளிகள் தங்கள் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி, விரல் ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கணக்கு துவங்க முடியும். இந்த கணக்குக்கு இருப்பு தொகை எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
தகுதியுள்ள பயனாளிகள், மாதாந்திர உரிமைத் தொகையை அருகில் உள்ள தபால் நிலையங்களில் அல்லது, சிறப்பு சேவை மூலம் தங்கள் இல்லத்திலேயே தபால்காரர் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கணக்கு வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள், பிரதமரின் உதவித்தொகை பெறுவோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவோர், தொழிலாளர் நல வாரிய உதவித்தொகை பெறுவோர் பயன்படுத்தி வருவோருக்கு பயன்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- நடப்பாண்டு கோடை மழை பொழிவு குறைந்ததால், மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவியது.
- வறண்டு காணப்பட்ட அருவியில் ஆர்ப்பரித்து நீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை சுற்றுலா மையத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
மேற்குத்தொடர்ச்சிமலை பகுதியான திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் மூலிகைகள் கலந்து குளிர்ந்த நீராக விழும் அருவியில் குளித்து மகிழ பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர்.
நடப்பாண்டு கோடை மழை பொழிவு குறைந்ததால், மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவியது. இதனால் கடந்த 3 மாதமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது.
இந்நிலையில் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தோணியாற்றில் நீர் வரத்து ஏற்பட்டு பஞ்சலிங்க அருவியில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. வறண்டு காணப்பட்ட அருவியில் ஆர்ப்பரித்து நீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- தமிழக - கேரள எல்லையில் உள்ள கிராமங்களில், கால்நடைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கால்நடை வளர்ப்போரிடம் நோய் பாதிப்பின் தன்மை, சிகிச்சை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
உடுமலை:
கேரளாவில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவி வருகிறது. இதனைத் தடுக்க கேரள அரசு நோய் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தி வருகிறது. இந்த நோயின் தாக்கம் தமிழகத்தில் பரவ வாய்ப்புள்ளது.
இதனால் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக - கேரள எல்லையில் உள்ள கிராமங்களில், கால்நடைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கால்நடை டாக்டர், ஆய்வாளர் மற்றும் உதவியாளர் அடங்கிய குழுவினர் கல்லாபுரம், மானுப்பட்டி, கோடந்தூர், தளிஞ்சி, ஜல்லிப்பட்டி, செல்லப்பம்பாளையம், வாளவாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று கால்நடைகளைக் கண்காணிக்கின்றனர்.
மேலும் இனிவரும் நாட்களில் ஏதேனும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனே அருகில் உள்ள கால்நடை டாக்டரை அணுகி சிகிச்சை பெற கால்நடை வளர்ப்போரிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஜெயராம் கூறியதாவது:-
மாநில எல்லை கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு கிடையாது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமங்களில் உள்ள கால்நடைகள் கண்காணிக்கப்படுகிறது.
கால்நடை வளர்ப்போரிடம் நோய் பாதிப்பின் தன்மை, சிகிச்சை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இருந்தே கேரளாவுக்கு கால்நடைகள் கொண்டு செல்லப்படுகின்றன. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கால்நடைகள் பெருமளவு கொண்டு வரப்படுவதில்லை. இருப்பினும் ஒன்பதாறு சோதனைச்சாவடியில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- 2016-17ம் நிதியாண்டில், பாதாள சாக்கடை திட்டம் இரண்டாவது கட்டப் பணிகளுக்கு திட்டமிடப்பட்டது.
- உட்கட்டமைப்பு மேம்பாட்டு துறையில் 1063.51 கோடி ரூபாய் என மதிப்பீடு தொகை உயர்த்தப்பட்டது.
திருப்பூர்:
அம்ரூத் திட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம், 4வது குடிநீர் திட்டம் ஆகியன திருப்பூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதில் அம்ரூத் திட்டத்தில் 2016-17ம் நிதியாண்டில், பாதாள சாக்கடை திட்டம் இரண்டாவது கட்டப் பணிகளுக்கு திட்டமிடப்பட்டது. இதற்காக கடந்த 2020ம் ஆண்டில் 525.92 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து நகர்ப்புற உட்கட்டமைப்பு மற்றும் நிதி சேவை கழகம், இதை 604.05 கோடி ரூபாய் என திட்ட மதிப்பீட்டை உயர்த்தியது. அதனடிப்படையில் ஆசிய வளர்ச்சி வங்கி பரிந்துரை செய்யப்பட்டது. அந்நிறுவனம் இத்திட்டத்துக்கான விரிவான மதிப்பாய்வு மற்றும் விலை குறைபாடுகளை ஆராய்ந்து திட்ட மதிப்பீட்டை 636.40 கோடி ரூபாய் என நிர்ணயித்தது. திட்டத்துக்கு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிறுவனம் 118.17 கோடி ரூபாய் மானியம் வழங்க வேண்டும்.
அம்ரூத் திட்டத்தில் திருப்பூர் மாநகராட்சியில் 4வது குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2017 - 20 ம் ஆண்டில் இத்திட்டத்துக்கு அனுமதி பெறப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டில் 992.94 கோடி ரூபாய்க்கு நிதி அனுமதி பெறப்பட்டது.
இது உட்கட்டமைப்பு மேம்பாட்டு துறையில் 1063.51 கோடி ரூபாய் என மதிப்பீடு தொகை உயர்த்தப்பட்டது.இந்த திட்டத்தை பரிசீலித்த ஆசிய வங்கி, திட்ட மதிப்பீட்டை 1,120.57 கோடி ரூபாயாக உயர்த்தி பரிந்துரைத்தது. இதற்கான மானிய தொகை 164.29 கோடி ரூபாயை, உட்கட்டமைப்பு சேவை கழகம் வழங்க வேண்டும்.திட்டப்பணி பெருமளவு நிறைவடைந்துள்ளது.
இருப்பினும், தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு போன்ற காரணங்களால் திட்டமிட்டவாறு பணிகள் நிறைவு பெறாமல் தாமதமாக நடைபெற்று வருகிறது.இரு திட்டங்களுக்கான கடன் தொகை பெறுவதற்கும், மானிய தொகை பெறுவதற்குமான கால அவகாசம் அடுத்தாண்டு டிசம்பர் மாதம் 31ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டங்களுக்கான கடன் தொகை பெறுவதற்கும், மானிய தொகை பெறுவதற்குமான கால அவகாசம் அடுத்தாண்டு டிசம்பர் மாதம் 31ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்துக்கு கடந்த 2015ல் 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
- தற்போது திருமூர்த்தி அணைக்கரை, குடிமகன்களின் கூடாரமாகி வருகிறது.
உடுமலை:
உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள திருமூர்த்தி அணை முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக உள்ளது.நீண்ட காலமாக இப்பகுதியில் சுற்றுலா பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. முக்கிய திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அணையில் படகு சவாரி முடங்கி பல ஆண்டுகளாகி விட்டது. இந்நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்காக திருமூர்த்தி அணைக்கரையில் பூங்கா அமைக்க வலியுறுத்தப்பட்டது.பல ஆண்டுகளாக வாக்குறுதியாக இருந்த இத்திட்டத்துக்கு கடந்த 2015ல் 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்காக திருமூர்த்திமலை ரோட்டுக்கும், அணைக்கரைக்கும் இடையிலிருந்த சீமை கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டன.
திட்டத்தின் கீழ் தளி வாய்க்கால் முதல் அணை உபரி நீர் ஷட்டர் வரை அழகிய பூங்கா அமைக்கப்படும்.அதில் நீரூற்றுகள், சறுக்கு விளையாட்டுகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.ஆனால் பல ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கரையில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டதால் அப்பகுதி முழுவதும் பொலிவிழிந்து பரிதாப நிலையில் உள்ளது.
கம்பிவேலி இல்லாததால் அணையின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் திருமூர்த்தி அணையில் பூங்கா அமைக்கப்படும் என அனைத்து கட்சி வேட்பாளர்கள் தரப்பில் வாக்குறுதி வழங்கப்பட்டு, வெற்றிக்கு பிறகு மறப்பது தொடர்கதையாக உள்ளது.
இதே போல் ஆடிப்பெருந்திருவிழா உள்ளிட்ட விழாக்களின் போது பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பூங்கா அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுவதும் வழக்கமாகியுள்ளது.
இதற்காக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தரப்பில், சில முறை ஆய்வும் நடத்தப்பட்டது. ஆனால் பூங்கா அமைப்பதற்கான அடிப்படை பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஒவ்வொரு சீசனிலும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.மேலும் தற்போது அணைக்கரை, குடிமகன்களின் கூடாரமாகி வருகிறது. காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் அப்பகுதி முழுவதும் வீசப்பட்டு சுகாதார சீர்கேடும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் அதிகரித்துள்ளது.விரைவில் இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
- படிப்பு முடிந்தவுடன் வேலைவாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படவுள்ளது.
- பிரான்ஸ் நாட்டில் உள்ள லிசி நிக்கோலஸ் அப்பர்ட் கேட்டரிங் நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
திருப்பூர்:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வழியே 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு முடித்தஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவர்களுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் பி.எஸ்.சி. மருத்துவமனை மற்றும் ஓட்டல் நிர்வாகம் 3 வருட முழுநேர பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகள் சேர்ந்து படித்திடவும் படிப்பு முடிந்தவுடன் வேலைவாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படவுள்ளது.
சென்னை, தரமணியிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மெண்ட் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு நியூட்ரிசன் நிறுவனமானது ஐ.எஸ்.ஓ. 9001-2015 தரச்சான்று பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம். மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. அமெரிக்கன் கவுன்சில் ஆப் பிசினஸ்சில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள லிசி நிக்கோலஸ் அப்பர்ட் கேட்டரிங் நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
உலகளவில் மனிதவள மேம்பாட்டு மையத்தில் 2-வது இடம் பெற்றுள்ளது. சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தர வரிசையில் 13-வது இடத்தில் இந்நிறுவனம் இடம் பெற்றுள்ளது.இப்புகழ் பெற்ற நிறுவனத்தில் 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மாணவர்கள் படிக்க விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்: 501 (ம) 503,5 வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர்-641604. என்ற முகவரிக்கும் 94450 29552, 0421-2971112 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வழியே 12-ம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவர்களுக்கு டிசிஎஸ்.ஐஆன் நிறுவனத்துடன் இணைந்து தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் இணையதளம் வழியாக பயிற்றுவித்து முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்படவுள்ளது.
தகவல் தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட பயிற்சியினை பெற ஏதேனும் ஓரு பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் 18 முதல் 28 வயது நிரம்பிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் ெதரிவித்துள்ளார்.






