என் மலர்
நீங்கள் தேடியது "பணம் மோசடி"
- கடந்த 2010-ம் ஆண்டு முதல் திருசெங்கோடு தெற்கு ரதவீதியில் உள்ள வடிவேலன் பேங்கர்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினர்.
- இந்த நிதி நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டத்தில் சேர்ந்து பணத்தை இழந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (41) மற்றும் 97 முதலீட்டாளர்கள் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கவர்ச்சி திட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி கிராமம் கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி செந்தமிழ்செல்வி. இந்த தம்பதி கடந்த 2010-ம் ஆண்டு முதல் திருசெங்கோடு தெற்கு ரதவீதியில் உள்ள வடிவேலன் பேங்கர்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினர். இந்த நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் பணம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் மோகன்ராஜ் -செந்தமிழ்செல்வி இறந்த நிலையில் அவரது மகள் சவுந்தர்யா மற்றும் அவரது கணவர் தமிழ்கண்ணன் ஆகியோர் இந்த நிதி நிறுவனத்தை கவனித்து வந்தனர்.
இந்த நிதி நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டத்தில் சேர்ந்து பணத்தை இழந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (41) மற்றும் 97 முதலீட்டாளர்கள் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி சவுந்தர்யா - தமிழ்கண்ணன் தம்பதி மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு சம்பவம்
இதேபோல் திருச்செங்கோடு கச்சேரி சாலை அருளகம் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 79). இவரது மனைவி செல்லம்மை (75).
இந்த தம்பதியின் மகன் அருணாச்சலம்(45), மருமகள் சொர்ணமாலா (38) மற்றும் சோமசுந்தரத்தின் மகள்கள் காந்திமதி (54) , வள்ளியம்மை (50) ஆகிய 6 பேர் வீட்டில் சோமசுந்தரம் செட்டியார் நிதி நிறுவனம் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பல்வேறு கவர்ச்சி திட்டங்களை கூறி பணம் பெற்றுள்ளனர்.
இது குறித்து அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருடைய மனைவி துர்காதேவி (43) நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இதே போல் மேலும் 11 முதலீட்டாளர்கள் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் விசாரணை நடத்தி நிதி நிறுவனத்தை கவனித்து வந்த அவர்கள் 6 பேர் மீதும் ேமாசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தகவல் தெரிவிக்கலாம்
இந்த 2 நிதி நிறுவனங்களிலும் பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் நாமக்கல் முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரிடையாக வந்து காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை புகார் அளிக்கலாம்.
இவ்வாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், அதில் கூறியுள்ளார்.
- பணம் அனுப்புவதை நிறுத்திய பின் அந்த நபர் கொலை மிரட்டல் விடுக்க துவங்கினார்.
- பணத்தை இழந்த சதீஷ்குமார் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கொசவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் குமார் (வயது 32). இவர் அங்கு செல்போன் கடை நடத்தி வந்தார்.
கடந்த 2021ம் ஆண்டு இவரிடம் அறிமுகமான ஒருவர், தனது நண்பர் ஒருவருக்கு ரூ.10 கோடி பணம் வரும். இதில் தனக்கு ரூ.3 கோடி ரூபாய் கிடைக்கும். தற்போது தனக்கு பண உதவி தேவைப்படுகிறது. நீங்கள் கொடுத்தால் ரூ.3கோடி பணம் வந்ததும் இரட்டிப்பு பணம் தருவதாக கூறியுள்ளார்.
இதை நம்பிய சதீஷ்குமார் நகைகளை அடமானம் வைத்தும் கிரெடிட் கார்டுகள் மூலமாகவும் தொடர்ந்து பணம் கொடுத்துள்ளார்.சுமார் ரூ.50 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு சதீஷ்குமார் பணம் அனுப்புவதை நிறுத்தினார். இதனால் அந்த நபர் சதீஷ்குமாருக்கு மிரட்டல் விடுத்துள்ளதுடன் பணம் தர முடியாது என தெரிவித்துள்ளார்.
இதனால் பணத்தை இழந்த சதீஷ்குமார் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது பெற்றோர் அவரை சமாதானப்படுத்தினர்.மேலும் திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.யிடம் சதீஷ்குமார் புகார் அளித்தார்.புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து சதீஷ்குமார் கூறுகையில்:- என்னுடன் நட்பாக பழகியதால் அவர் மீது இருந்த நம்பிக்கையின் பேரில் ஆரம்பத்தில் பணம் அனுப்பினேன். பணம் அனுப்புவதை நிறுத்திய பின் அந்த நபர் கொலை மிரட்டல் விடுக்க துவங்கினார். பணத்தை தருவதாக கூறி சென்னை, திருச்சி, ஊத்தங்கரை, மேட்டுப்பாளையம், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு வரச்சொன்னார். பணத்தை தராமல் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். ரூ. 50 லட்சம் வரை இழந்துள்ளேன். செல்போன் கடையையும் காலி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. எனவே நம்ப வைத்து மோசடி செய்து பணத்துடன் மாயமான அந்த நபரை கைது செய்து, இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






