search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செங்கோட்டில் கவர்ச்சி திட்டங்களை அறிவித்து பணம்  மோசடி 2 நிதி நிறுவனங்களை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு
    X

    திருச்செங்கோட்டில் கவர்ச்சி திட்டங்களை அறிவித்து பணம் மோசடி 2 நிதி நிறுவனங்களை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு

    • கடந்த 2010-ம் ஆண்டு முதல் திருசெங்கோடு தெற்கு ரதவீதியில் உள்ள வடிவேலன் பேங்கர்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினர்.
    • இந்த நிதி நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டத்தில் சேர்ந்து பணத்தை இழந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (41) மற்றும் 97 முதலீட்டாளர்கள் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கவர்ச்சி திட்டம்

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி கிராமம் கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி செந்தமிழ்செல்வி. இந்த தம்பதி கடந்த 2010-ம் ஆண்டு முதல் திருசெங்கோடு தெற்கு ரதவீதியில் உள்ள வடிவேலன் பேங்கர்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினர். இந்த நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் பணம் பெற்றுள்ளனர்.

    இந்த நிலையில் மோகன்ராஜ் -செந்தமிழ்செல்வி இறந்த நிலையில் அவரது மகள் சவுந்தர்யா மற்றும் அவரது கணவர் தமிழ்கண்ணன் ஆகியோர் இந்த நிதி நிறுவனத்தை கவனித்து வந்தனர்.

    இந்த நிதி நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டத்தில் சேர்ந்து பணத்தை இழந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (41) மற்றும் 97 முதலீட்டாளர்கள் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி சவுந்தர்யா - தமிழ்கண்ணன் தம்பதி மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மற்றொரு சம்பவம்

    இதேபோல் திருச்செங்கோடு கச்சேரி சாலை அருளகம் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 79). இவரது மனைவி செல்லம்மை (75).

    இந்த தம்பதியின் மகன் அருணாச்சலம்(45), மருமகள் சொர்ணமாலா (38) மற்றும் சோமசுந்தரத்தின் மகள்கள் காந்திமதி (54) , வள்ளியம்மை (50) ஆகிய 6 பேர் வீட்டில் சோமசுந்தரம் செட்டியார் நிதி நிறுவனம் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பல்வேறு கவர்ச்சி திட்டங்களை கூறி பணம் பெற்றுள்ளனர்.

    இது குறித்து அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருடைய மனைவி துர்காதேவி (43) நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இதே போல் மேலும் 11 முதலீட்டாளர்கள் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் விசாரணை நடத்தி நிதி நிறுவனத்தை கவனித்து வந்த அவர்கள் 6 பேர் மீதும் ேமாசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தகவல் தெரிவிக்கலாம்

    இந்த 2 நிதி நிறுவனங்களிலும் பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் நாமக்கல் முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரிடையாக வந்து காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×