என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இரட்டிப்பு பணம் தருவதாக கூறி பல்லடம் செல்போன் கடைக்காரரிடம் ரூ.50 லட்சம் மோசடி
    X

    இரட்டிப்பு பணம் தருவதாக கூறி பல்லடம் செல்போன் கடைக்காரரிடம் ரூ.50 லட்சம் மோசடி

    • பணம் அனுப்புவதை நிறுத்திய பின் அந்த நபர் கொலை மிரட்டல் விடுக்க துவங்கினார்.
    • பணத்தை இழந்த சதீஷ்குமார் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் கொசவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் குமார் (வயது 32). இவர் அங்கு செல்போன் கடை நடத்தி வந்தார்.

    கடந்த 2021ம் ஆண்டு இவரிடம் அறிமுகமான ஒருவர், தனது நண்பர் ஒருவருக்கு ரூ.10 கோடி பணம் வரும். இதில் தனக்கு ரூ.3 கோடி ரூபாய் கிடைக்கும். தற்போது தனக்கு பண உதவி தேவைப்படுகிறது. நீங்கள் கொடுத்தால் ரூ.3கோடி பணம் வந்ததும் இரட்டிப்பு பணம் தருவதாக கூறியுள்ளார்.

    இதை நம்பிய சதீஷ்குமார் நகைகளை அடமானம் வைத்தும் கிரெடிட் கார்டுகள் மூலமாகவும் தொடர்ந்து பணம் கொடுத்துள்ளார்.சுமார் ரூ.50 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதன் பிறகு சதீஷ்குமார் பணம் அனுப்புவதை நிறுத்தினார். இதனால் அந்த நபர் சதீஷ்குமாருக்கு மிரட்டல் விடுத்துள்ளதுடன் பணம் தர முடியாது என தெரிவித்துள்ளார்.

    இதனால் பணத்தை இழந்த சதீஷ்குமார் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது பெற்றோர் அவரை சமாதானப்படுத்தினர்.மேலும் திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.யிடம் சதீஷ்குமார் புகார் அளித்தார்.புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    இது குறித்து சதீஷ்குமார் கூறுகையில்:- என்னுடன் நட்பாக பழகியதால் அவர் மீது இருந்த நம்பிக்கையின் பேரில் ஆரம்பத்தில் பணம் அனுப்பினேன். பணம் அனுப்புவதை நிறுத்திய பின் அந்த நபர் கொலை மிரட்டல் விடுக்க துவங்கினார். பணத்தை தருவதாக கூறி சென்னை, திருச்சி, ஊத்தங்கரை, மேட்டுப்பாளையம், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு வரச்சொன்னார். பணத்தை தராமல் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். ரூ. 50 லட்சம் வரை இழந்துள்ளேன். செல்போன் கடையையும் காலி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. எனவே நம்ப வைத்து மோசடி செய்து பணத்துடன் மாயமான அந்த நபரை கைது செய்து, இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×