என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூங்கா திட்டம்"

    • இத்திட்டத்துக்கு கடந்த 2015ல் 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
    • தற்போது திருமூர்த்தி அணைக்கரை, குடிமகன்களின் கூடாரமாகி வருகிறது.

    உடுமலை:

    உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள திருமூர்த்தி அணை முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக உள்ளது.நீண்ட காலமாக இப்பகுதியில் சுற்றுலா பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. முக்கிய திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    அணையில் படகு சவாரி முடங்கி பல ஆண்டுகளாகி விட்டது. இந்நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்காக திருமூர்த்தி அணைக்கரையில் பூங்கா அமைக்க வலியுறுத்தப்பட்டது.பல ஆண்டுகளாக வாக்குறுதியாக இருந்த இத்திட்டத்துக்கு கடந்த 2015ல் 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதற்காக திருமூர்த்திமலை ரோட்டுக்கும், அணைக்கரைக்கும் இடையிலிருந்த சீமை கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டன.

    திட்டத்தின் கீழ் தளி வாய்க்கால் முதல் அணை உபரி நீர் ஷட்டர் வரை அழகிய பூங்கா அமைக்கப்படும்.அதில் நீரூற்றுகள், சறுக்கு விளையாட்டுகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.ஆனால் பல ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கரையில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டதால் அப்பகுதி முழுவதும் பொலிவிழிந்து பரிதாப நிலையில் உள்ளது.

    கம்பிவேலி இல்லாததால் அணையின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் திருமூர்த்தி அணையில் பூங்கா அமைக்கப்படும் என அனைத்து கட்சி வேட்பாளர்கள் தரப்பில் வாக்குறுதி வழங்கப்பட்டு, வெற்றிக்கு பிறகு மறப்பது தொடர்கதையாக உள்ளது.

    இதே போல் ஆடிப்பெருந்திருவிழா உள்ளிட்ட விழாக்களின் போது பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பூங்கா அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுவதும் வழக்கமாகியுள்ளது.

    இதற்காக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தரப்பில், சில முறை ஆய்வும் நடத்தப்பட்டது. ஆனால் பூங்கா அமைப்பதற்கான அடிப்படை பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஒவ்வொரு சீசனிலும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.மேலும் தற்போது அணைக்கரை, குடிமகன்களின் கூடாரமாகி வருகிறது. காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் அப்பகுதி முழுவதும் வீசப்பட்டு சுகாதார சீர்கேடும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் அதிகரித்துள்ளது.விரைவில் இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    ×