என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • தொழிலாளர், வர்த்தக முகமைகள் என பலதரப்பட்ட தரப்பினரும் ஒரே நேர்கோட்டில் இயங்கி வருகின்றனர்.
    • வருகிற 12-ந்தேதி பாப்பீஸ் ஓட்டலில் கூட்டமைப்பு துவக்க விழா நடக்க உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை தொழில்துறையை பொறுத்தவரை ஆடை உற்பத்தி என்பது பலவகை ஜாப் ஒர்க் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக இருக்கிறது. உற்பத்தியாளர், தொழிலாளர், வர்த்தக முகமைகள் என பலதரப்பட்ட தரப்பினரும் ஒரே நேர்கோட்டில் இயங்கி வருகின்றனர்.

    வர்த்தகம் மற்றும் தொழில் பாதுகாப்பு ரீதியான தேவைகளுக்கும், குறைபாடுகளை தீர்க்கவும், தொழில் அமைப்புகள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு (ஸ்டேக்ேஹால்டர்ஸ் போரம்) என்ற பெயரில் இயங்கி வந்தது. இடையே சில ஆண்டுகள் செயல்பாடின்றி போய்விட்டது.

    வடமாநில தொழிலாளர் இல்லாமல் பின்னலாடை தொழில் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், மறுசீரமைக்கப்பட்ட தொழில் பங்களிப்போர் கூட்டமைப்பு புதிய பொலிவுடன் 12-ந் தேதி தொடங்க இருக்கிறது.

    திருப்பூர் தொழில்துறையை சேர்ந்த நபர்கள், உறுப்பினராக இருப்பர். முதன்முறையாக வடமாநில தொழிலாளர் பிரதிநிதிகளையும் உறுப்பினராக சேர்க்க திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

    ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏ.இ.பி.சி.,), இந்திய பின்னலாடை கண்காட்சி சங்கம்(ஐ.கே.எப்.ஏ.,), திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் ஆகியன சார்பில், பொன்விழா பின்னலாடை கண்காட்சி துவங்கும் நாளில் திருப்பூர் தொழில் பங்களிப்போர் கூட்டமைப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் இளங்கோவன் கூறியதாவது:-

    ஏற்றுமதியாளர்கள் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி சார்ந்த ஜாப் ஒர்க் அமைப்பினர், வர்த்தகர்கள், பிராண்ட் அமைப்புகள், அரசு சாரா பொதுநல அமைப்புகள், தொழிலாளர் துறை அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உறுப்பினராக கொண்டு திருப்பூர் தொழில் பங்களிப்போர் கூட்டமைப்பு இயங்கும்.

    வருகிற 12-ந்தேதி பாப்பீஸ் ஓட்டலில் கூட்டமைப்பு துவக்க விழா நடக்க உள்ளது. வடமாநில தொழிலாளர் தொடர்பான பிரச்சினைகளுக்கும் எளிதில் தீர்வு காணும் நோக்கில் வடமாநில தொழிலாளர் பிரதிநிதிகளும் உறுப்பினராக சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.

    ஒவ்வொரு பிரச்சினைக்கும் தனித்தனியே சென்று பேசி தீர்வு காண வேண்டியுள்ளது. இனிமேல் ஒரே தளத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேசி, சுமூகமாக தீர்வு காணும் வகையில் கூட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. திருப்பூர் தொழில்துறை பங்களிப்போர் கூட்டமைப்பு, பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டும் அமைப்பாக செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • முக்கிய மூலப்பொருளான பஞ்சு விலை சீராக இல்லாததால், நூல் விலை அடிக்கடி உயர்கிறது.
    • தீபாவளி உள்ளிட்ட பண்டிகை ஆர்டர்கள் கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    திருப்பூர்:

    கடந்த ஓராண்டாக ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.பஞ்சு விலை சீராக இல்லாத நிலையில் வியாபாரிகள் இருப்பு வைத்து பஞ்சு விற்பனை செய்வது வழக்கத்தில் உள்ளது.இருப்பினும் விலை குறைவாக இருக்கும் போது பஞ்சை வாங்கி இருப்பு வைத்து செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தி விலையை உயர்த்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

    முக்கிய மூலப்பொருளான பஞ்சு விலை சீராக இல்லாததால், நூல் விலை அடிக்கடி உயர்கிறது. உற்பத்தியை சீராக செய்ய முடியாமல், உள்நாடு மற்றும் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.கடந்த சில மாதங்களாக, நூல் விலை காரணமின்றி உயர்வதால், தீபாவளி பண்டிகை ஆர்டர் கையை கடித்துவிடுமோ என்ற அச்சம் நிலவியது.

    அக்டோபர் 1 முதல் 2023-24ம் பருத்தி ஆண்டு துவங்கியுள்ளது. விரைவில் இந்திய பருத்தி கழகம் ஆலோசனை செய்து நடப்பு ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட உள்ளனர்.வழக்கமாக பருத்தி சீசனில் வரத்து அதிகரித்து விலை சீராக இருக்கும். இனிவரும் சில மாதங்களுக்கு, நூல் விலையிலும் ஏற்றம் இருக்காது என, உற்பத்தியாளர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

    கடந்த 2 மாதங்களாக, 15 நாட்கள் இடைவெளியில் நூல் விலை உயர்ந்தது. தற்போது நூல் விலையில் மாற்றம் இல்லையென, முன்னணி நூற்பாலைகள் அறிவித்துள்ளன. இதன் மூலம் இனிவரும் சில மாதங்களுக்கு, நூல் விலையில் உயர்வு இருக்காது என்று பின்னலாடை உற்பத்தியாளர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

    இதனால் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை ஆர்டர்கள் கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். 

    • 2-ம் நிகழ்வாக காலை 9 மணியளவில் நவசண்டியாகம் தொடங்கியது.
    • அம்மனின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பதால் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    உடுமலை:

    உடுமலை அடுத்த சின்னவீரம்பட்டி கந்தசாமி கார்டனில் சித்தி விநாயகர், சக்தி வாராஹி அம்மன் கோவில் உள்ளது.இந்தக் கோவிலில் நவசண்டியாக விழா நடைபெற்றது. விழாவின் முதல் நாள் நிகழ்வாக காலை கணபதி,லட்சுமி,நவக்கிரக ஹோமம்,பூர்ணாஹூதி நடைபெற்றது.மாலை சங்கல்பம், கலச வழிபாடு, பூர்ணாஹூதி நடைபெற்றது.

    2-ம் நிகழ்வாக காலை 9 மணியளவில் நவசண்டியாகம் தொடங்கியது.அதைத் தொடர்ந்து சுமங்கலி, கன்னியா, வடுக பூஜையும், வஸோத்தாரை யாகம், பூர்ணாஹூதி நடைபெற்றது.கடுமையான தோஷம் உள்ளவர்கள், கிரக நிலை மாற்றம், தீய சக்திகளில் இருந்து விடுபட, பெயர் புகழ் வெற்றி அடைய, எதிரிகள் ஒழிந்து காரிய வெற்றி அடைய நவசண்டியாகம் செய்யப்படுகிறது.

    இதன் மூலம் உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை, துர்கா தேவியின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பதால் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவர், செயலாளர்,பொருளாளர் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி., 4 ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் உபயோகிக்கப்பட்டு வருகிறது.
    • சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி., 4 ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் உபயோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார் பதி மின் நிலையம் வழியாக காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து சேமிக்கப்படுகிறது.

    கால்வாயில் தண்ணீர் திருட்டை தடுக்க வருவாய் துறை, காவல் துறை, நீர் வள ஆதாரத்துறை, விவசாயிகள், மின் துறை அதிகாரிகள் போன்ற கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவினரும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

    இருந்தாலும் காண்டூர் கால்வாயில் தண்ணீர் திருட்டு தொடர்கிறது. பிவிசி., பைப்புகள் கால்வாயில் போட்டு மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் . எனவே தீவிரமாக கண்காணித்து தண்ணீர் திருடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நவகிரகங்களுக்கு நேற்று சிறப்பு யாகமும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ராகு கேது உள்ளிட்ட நவகிரகங்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    உடுமலை:

    உலக இயக்கம் மற்றும் நமது உடலோடு தொடர்பு கொண்டு தலையெழுத்தை தீர்மானிப்பது நவகிரகங்கள். அதில் நிழல் கிரகங்களாக ராகு மற்றும் கேது பகவான் திகழ்கிறார்கள்.இந்த இரண்டு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சரித்து அவரவர் திசை மற்றும் தசா புத்திக்கு ஏற்றவாறு பலன்களை அளித்து வருகிறார்கள்.

    அந்த வகையில் நேற்று மாலை 3.40 மணிக்கு ராகு கேது பெயர்ச்சி நடந்தது.மேஷ ராசியில் சஞ்சரித்து வந்த ராகு பகவான் மீன ராசிக்கும், துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த கேது பகவான் கன்னி ராசிக்கும் இடம் பெயர்ந்தனர். இதை முன்னிட்டு நவகிரகங்களுக்கு நேற்று சிறப்பு யாகமும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ராகு கேது உள்ளிட்ட நவகிரகங்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    இதையடுத்து பரிகாரம் செய்ய வேண்டிய ராசியினர் ராகு மற்றும் கேது பகவானுக்கு தங்களால் இயன்ற பொருட்களை அளித்து வழிபாடு செய்தனர். ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், தில்லைநகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவில்,குட்டை திடலில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட உடுமலை மற்றும் தளி பகுதி கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நவராத்திரி விழாவில் 9 நாட்களும் வீடுகள், கோவில்களில் பல்வேறு வடிவங்களிலான சுவாமி சிலைகளை கொலுவாக வைத்து மக்கள் வழிபடுவது வழக்கம்.
    • ஒவ்வொரு ஆண்டும் கொலு பொம்மைகள் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் உள்ளது.

    தாராபுரம்,அக்.9-

    ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத அமாவாசைக்கு பின் வரும் பிரதமை திதியில் தொடங்கி 9 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. 10வது நாளில் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரி விழாவில் 9 நாட்களும் வீடுகள், கோவில்களில் பல்வேறு வடிவங்களிலான சுவாமி சிலைகளை கொலுவாக வைத்து மக்கள் வழிபடுவது வழக்கம்.

    இந்தாண்டு நவராத்திரி விழா வருகிற 15-ந் தேதி துவங்குகிறது. இதை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பலரும் வீடுகளில் கொலு வைப்பதற்கான பணிகளை தொடங்கி உள்ளனர். கொலு என்றால் அழகு என பொருள்.நவராத்திரியை முன்னிட்டு, பொம்மைகளை அழகுற வரிசையாக நிறுத்தி அவற்றுக்கு பூஜைகள் செய்து வழிபடுவது முறை.

    பழைய பொம்மைகளை சுத்தம் செய்து அவற்றை பயன்படுத்தினாலும், புதிதாக பொம்மைகளை வாங்கி வைக்கும் பழக்கமும் உள்ளது. இதை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது பொம்மைகள் செய்யப்படுகின்றன. இந்தாண்டு, திரவுபதி வஸ்திரம், ஐஸ் வண்டி, பானிபூரி வியாபாரி, பலுான் வியாபாரி, பஞ்சுமிட்டாய் விற்பனை, ஜவ் மிட்டாய் இப்படி பல வகை பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    இது குறித்து கொலு பொம்மை வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் கொலு பொம்மைகள் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் உள்ளது.இந்தாண்டு மூலப்பொருட்கள் விலை உயர்வால் பொம்மைகளின் விலையும் உயர்ந்துள்ளது. இருப்பினும் விற்பனை குறையவில்லை. சிறிய அளவிலான பொம்மைகளை களிமண்ணிலும், பெரிய பொம்மைகளை காகித கூழ் கொண்டும் செய்கிறோம். குறைந்தபட்சம் ரூ.60 முதல் அதிகபட்சம் ரூ.12 ஆயிரம் வரை கொலு பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன.

    ஒவ்வொரு ஆண்டும் தசாவதாரம், கண்ணன், ஆர்மோனியம், தம்பூரா, திருமால் செட், வீடு, பொங்கல் செட் உள்ளிட்ட பொதுவான பொம்மைகள் அதிகம் விற்பனையாகும். இந்தாண்டு பூரி ஜெகன்நாதர், சாப்பாடு செட், கேரளா செண்டை மேளம், சபரிமலை செட், கடோத்கஜன், கும்பகர்ணன், அரசமர விநாயகர் செட், பீஷ்மர் அம்பு படுக்கை, கார்த்திகை பெண்கள், முத்தாலம்மன், புஷ்பக விமானம் உள்ளிட்ட பொம்மைகளை அதிகம் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதேபோல் ஐஸ் வண்டி, பஞ்சு மிட்டாய், ஜவ் மிட்டாய், பானிபூரி, சிவன், பார்வதி சொக்கட்டான் விளையாடும் பொம்மைகள் புதுவரவாக இருந்தன. அவை அதிகளவில் விற்பனையாகியுள்ளன. குறிப்பாக மகாபாரத கதையில் வரும் திரவுபதி வஸ்திரம் பொம்மைகள் அனைவராலும் விரும்பி வாங்கி செல்லப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • முத்துவேல்- ராசாத்தி இருவரும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் வந்துள்ளனர்.
    • தம்பதி என்று கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து குடியிருந்து, பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர்-ஊத்துக்குளி ரோடு பாரப்பாளையத்தில் ஒரு வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. அந்த வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், இளம்பெண் விஷம் குடித்தும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்கள் ஊர், பெயர் விவரம் குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த முத்துவேல் (வயது 30) மற்றும் அதே ஊரை சேர்ந்த ராசாத்தி (28) என்பது தெரியவந்தது. ராசாத்தி ஏற்கனவே திருமணம் ஆனவர். குழந்தை இல்லை.

    இந்தநிலையில் முத்துவேலுடன் ராசாத்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த உறவினர்கள் அவர்களை கண்டித்துள்ளனர். இருப்பினும் 2பேரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

    தொடர்ந்து உறவினர்கள் கண்டிக்கவே, முத்துவேல்- ராசாத்தி இருவரும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் வந்துள்ளனர். பின்னர் தம்பதி என்று கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து குடியிருந்து, பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.

    மேலும் இருவரும் வீட்டை விட்டு சென்று விட்டதால் குடும்பத்தினர், உறவினர்கள் அவர்களிடம் பேசாமல் இருந்துள்ளனர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு அவர்கள் தற்கொலை செய்துள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • தற்போதைய நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 66.60 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.

    உடுமலை

    உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. அணைக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு, சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன. அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.

    அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வெப்ப சலனத்தின் காரணமாக அணையின் நீராதாரங்களில் கோடை மழை பெய்தது. நீர்வரத்து ஏற்பட்டு அணையின் நீர்இருப்பும் உயர்ந்தது. இதனால் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அமராவதி ஆற்றை பிரதானமாக கொண்டுள்ள பாசன நிலங்களுக்கு உரிய இடைவெளி விட்டு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்துக்கு ஏற்றவாறு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    தென்மேற்கு பருவமழையும் கைவிட்டதால் அணையில் நீர்இருப்பும் குறைவாக காணப்படுகிறது. இந்த நிலையில் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையிலும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் கடந்த ஆகஸ்டு் மாதம் 10 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது.

    இந்தநிலையில் வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்படுவதால் வறட்சி அதிகரித்து உள்ளது. அதைத்தொடர்ந்து பழைய மற்றும் புதிய பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை காப்பாற்றவும் குடிநீர் தேவையை சமாளிப்பதற்கும் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அதிகாரிகள் கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர். வருகிற 12-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு தண்ணீர் திறப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போதைய நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 66.60 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 119 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.அணையில் இருந்து வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • குமரிக்கல்பாளையம் என்ற இடத்தில் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்லியல் எச்சங்கள், நடுகல் உள்ளிட்டவை இருக்கிறது.
    • 32 அடி உயர நடுகல், முதுமக்கள் தாழி, பல 100 ஆண்டுகளுக்கு முன் உள்ளவைகளை பார்வையிட்டனர்.

    ஊத்துக்குளி,அக்.9-

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா, காவுத்தம்பாளையம் பஞ்சாயத்தில் உயர்மின் கோபுர திட்டத்தின் கீழ் துணை மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குமரிக்கல்பாளையம் என்ற இடத்தில் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்லியல் எச்சங்கள், நடுகல் உள்ளிட்டவை இருப்பதால் அவற்றை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும். துணை மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் மத்திய தொல்லியல் துறை திருச்சி கண்காணிப்பாளர் காளிமுத்து மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் இங்குள்ள 32 அடி உயர நடுகல், முதுமக்கள் தாழி, பல 100 ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்த இரும்பு ஆலைக்கழிவுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.

    இது குறித்து களஞ்சியம் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் கூறுகையில், ஒரு வாரத்துக்குள் தொல்லியல் ஆய்வுக்குழுவினருடன் முகாமிட்டு, அங்குள்ள தொல்லியல் எச்சங்கள் குறித்து ஆய்வு செய்து அதன் அறிக்கையை மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பி வைப்பதாக அதிகாரிகள் குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர். இங்குள்ள தொல்லியல் எச்சங்களை பார்க்கும் போது இது, கீழடி, ஆதிச்சநல்லுார் நாகரித்துக்கு முற்பட்டதாக கூட இருக்கலாம் எனவும் கணிக்கின்றனர்.

    இந்த இடத்தை விரிவாக ஆய்வு நடத்தும் போது தமிழர்களின் பல மறைக்கப்பட்ட பாரம்பரியம், கலாசார தகவல்கள் வெளிவர வாய்ப்புண்டு என்றார்.

    • நீதிமன்ற பணியாளர்களுக்கு பாலின உணர்திறன் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது.
    • வழக்கறிஞர்கள், கோர்ட்டு பணியாளர்கள் உள்பட 180-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

     திருப்பூர்:

    தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும், திருப்பூர் முதன்ைம மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின் பேரில், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, திருப்பூர் மாவட்ட நீதிமன்ற பாலின உணர்திறன்குழு மற்றும் நிறங்கள் அமைப்பு சார்பில் நீதிமன்ற பணியாளர்களுக்கு பாலின உணர்திறன் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட கூடுதல் சார்பு நீதிபதி மேகலா மைதிலி வரவேற்றார். மாவட்ட விரைவு மகிளா நீதிபதி பாலு முன்னிலை வகித்து பேசுகையில், சமுதாயத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் வழங்கப்படும் சமத்துவம் மூன்றாம் பாலினத்தவருக்கும் நாம் வழங்க வேண்டும். அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் அவர்களை சக மனிதர்கள் போல் நடத்த வேண்டும் என்றார்.மாவட்ட குடும்பநல நீதிபதியும், மாவட்ட நீதிமன்ற பாலின உணர்திறன்குழு தலைவருமான சுகந்தி மற்றும் கூடுதல் மகிளா நீதித்துறை நடுவர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறங்கள் அமைப்பின் இணை நிறுவனர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர்கள் டெல்பினா, நவீன்குமார் ஆகியோர் 3-ம் பாலினத்தவர்களில் உள்ள வேறுபாடுகள் குறித்தும், அவர்கள் சமுதாயத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்பட பல விவரங்கள் குறித்து விளக்கினர்.முடிவில் நீதித்துறை நடுவர் முருகேசன் நன்றி கூறினார். இதில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, வழக்கறிஞர்கள், கோர்ட்டு பணியாளர்கள் உள்பட 180-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கே.வி.ஆர்.நகரை சேர்ந்த காளிஸ்வரன் (27), ஆனந்த் (26) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • இன்ஸ்பெக்டர் பதுர்நிஷா பேகம் மற்றும் போலீசாரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பாராட்டினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் ரோடு வெங்கடாசலபுரம் 3-வது வீதியில் உள்ள மசாஜ் சென்டரில் கடந்த 1-12-2022 அன்று மாலை 4 பேர் கொண்ட கும்பல் புகுந்து அங்கிருந்த பெண் ஊழியர்களை கத்தியால் தாக்கி பணம் கேட்டு கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பூர் ஆண்டிப்பாளையத்தை சேர்ந்த சையது முகமது இக்ரம் (வயது 26), தெற்கு ேதாட்டத்தை சேர்ந்த கார்த்திக் (27), கே.வி.ஆர்.நகரை சேர்ந்த காளிஸ்வரன் (27), ஆனந்த் (26) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. சையது முகமது இக்ரம், கார்த்திக், காளிஸ்வரன், ஆனந்த் ஆகிய 4 பேருக்கு தலா 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார். சிறப்பாக செயல்பட்ட மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்ரா, சிறந்த முறையில் சாட்சிகளை விரைந்து ஆஜர் செய்த இன்ஸ்பெக்டர் பதுர்நிஷா பேகம் மற்றும் போலீசாரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பாராட்டினார்.

    • முருகம்பாளையம், கே.வி.ஆர்.நகர், செல்லம்நகர், ஆண்டிப்பாளையம் ஆகிய பகுதிகளில் தீவிர திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவுப்படி, திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி மற்றும் மத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் திருப்பூர் ஏ.பி.டி.ரோடு, மங்கலம் ரோடு, முருகம்பாளையம், கே.வி.ஆர்.நகர், செல்லம்நகர், ஆண்டிப்பாளையம் ஆகிய பகுதிகளில் தீவிர திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.இதில் 16 கடைகளில் ஆய்வு செய்ததில் அவற்றில் 5 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு அந்த கடைகளுக்கு அபராதம் விதித்து மூடப்பட்டன.திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் முதல் இதுவரை 234 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, அதில் 70 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. முதல்முறையாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், 2-வது முறை குற்றத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் 43 கடைகள் மூடப்பட்டன. புகையிலை பொருட்கள் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.

    ×