என் மலர்
நீங்கள் தேடியது "Development of Knitwear Industry"
- தொழிலாளர், வர்த்தக முகமைகள் என பலதரப்பட்ட தரப்பினரும் ஒரே நேர்கோட்டில் இயங்கி வருகின்றனர்.
- வருகிற 12-ந்தேதி பாப்பீஸ் ஓட்டலில் கூட்டமைப்பு துவக்க விழா நடக்க உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் பின்னலாடை தொழில்துறையை பொறுத்தவரை ஆடை உற்பத்தி என்பது பலவகை ஜாப் ஒர்க் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக இருக்கிறது. உற்பத்தியாளர், தொழிலாளர், வர்த்தக முகமைகள் என பலதரப்பட்ட தரப்பினரும் ஒரே நேர்கோட்டில் இயங்கி வருகின்றனர்.
வர்த்தகம் மற்றும் தொழில் பாதுகாப்பு ரீதியான தேவைகளுக்கும், குறைபாடுகளை தீர்க்கவும், தொழில் அமைப்புகள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு (ஸ்டேக்ேஹால்டர்ஸ் போரம்) என்ற பெயரில் இயங்கி வந்தது. இடையே சில ஆண்டுகள் செயல்பாடின்றி போய்விட்டது.
வடமாநில தொழிலாளர் இல்லாமல் பின்னலாடை தொழில் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், மறுசீரமைக்கப்பட்ட தொழில் பங்களிப்போர் கூட்டமைப்பு புதிய பொலிவுடன் 12-ந் தேதி தொடங்க இருக்கிறது.
திருப்பூர் தொழில்துறையை சேர்ந்த நபர்கள், உறுப்பினராக இருப்பர். முதன்முறையாக வடமாநில தொழிலாளர் பிரதிநிதிகளையும் உறுப்பினராக சேர்க்க திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏ.இ.பி.சி.,), இந்திய பின்னலாடை கண்காட்சி சங்கம்(ஐ.கே.எப்.ஏ.,), திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் ஆகியன சார்பில், பொன்விழா பின்னலாடை கண்காட்சி துவங்கும் நாளில் திருப்பூர் தொழில் பங்களிப்போர் கூட்டமைப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் இளங்கோவன் கூறியதாவது:-
ஏற்றுமதியாளர்கள் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி சார்ந்த ஜாப் ஒர்க் அமைப்பினர், வர்த்தகர்கள், பிராண்ட் அமைப்புகள், அரசு சாரா பொதுநல அமைப்புகள், தொழிலாளர் துறை அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உறுப்பினராக கொண்டு திருப்பூர் தொழில் பங்களிப்போர் கூட்டமைப்பு இயங்கும்.
வருகிற 12-ந்தேதி பாப்பீஸ் ஓட்டலில் கூட்டமைப்பு துவக்க விழா நடக்க உள்ளது. வடமாநில தொழிலாளர் தொடர்பான பிரச்சினைகளுக்கும் எளிதில் தீர்வு காணும் நோக்கில் வடமாநில தொழிலாளர் பிரதிநிதிகளும் உறுப்பினராக சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.
ஒவ்வொரு பிரச்சினைக்கும் தனித்தனியே சென்று பேசி தீர்வு காண வேண்டியுள்ளது. இனிமேல் ஒரே தளத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேசி, சுமூகமாக தீர்வு காணும் வகையில் கூட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. திருப்பூர் தொழில்துறை பங்களிப்போர் கூட்டமைப்பு, பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டும் அமைப்பாக செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.






