என் மலர்tooltip icon

    தென்காசி

    • தி.மு.க. சார்பில் மாணவர்களுக்கு நோட்டு-புத்தங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
    • நிகழ்ச்சியில் ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நாளை மறுநாள் ( 27-ந் தேதி) கொண்டாடப்படுகிறது.

    அதனை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தென்காசி கலைஞர் அறிவாலயத்தில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு-புத்தங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பா ளர் கிருஷ்ணராஜா முன்னிலை வகித்தார்.

    இதில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கி தென்காசியில் உள்ள திருவள்ளுவர் தொடக்கப் பள்ளி, நேரு உயர்நிலைப் பள்ளி, பொன்னம்பலம் நடுநிலைப்பள்ளி மற்றும் செயின்ட் ஜான்சன் உயர் நிலைப்பள்ளியை சேர்ந்த பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு-புத்தகங்கள், பென்சில் மற்றும் பேனா ஆகியவற்றை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார், சுப்பிரமணி யன், முகமது அப்துல் ரஹிம், ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் , தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், நகர, பேரூர் செயலாளர்கள், மகளிரணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் முகமது அப்துல் ரஹிம் செய்திருந்தார்.

    • கும்பல் கையில் பயங்கர ஆயுதங்களுடன் சண்டையிட்டு கொண்டதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
    • சிலமாத காலமாக பல்வேறு நபர்களிடம் இருந்தும் பணம் பறித்ததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையம் அருகே ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டு வருவதாக புளியங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர். 6 பேர் சிக்கினர்

    இதனை அறிந்த அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச்சென்றனர். அந்த கும்பல் கையில் பயங்கர ஆயுதங்களுடன் சண்டையிட்டு கொண்டதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் அந்த கும்பல் தப்பிச்சென்ற காரை பின்தொடர்ந்து சென்று மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்த 6 பேரையும், காருடன் சேர்த்து புளியங்குடி போலீஸ் நிலையத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர்.

    அவர்களிடம் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் வாசுதேவநல்லூர் அருகே உள்ள உள்ளார் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் செந்தமிழ்(வயது 19), கனகராஜ் மகன் சதீஷ் (20), சிவகிரி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் மகன் கவிக்குமார்(21), ராமர் மகன் கனகராஜ் (22) ஆகிய 4 பேருடன் 17 வயது இளஞ்சிறார்கள் 2 பேர் என்பது தெரிய வந்தது.

    அந்த கும்பல் சிவகிரி பகுதியில் செல்போன் செயலி மூலம் வாலிபர்களை ஒருங்கிணைத்து ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து அவர்களிடம் இருக்கும் பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் பணத்தை பறித்துக் கொண்டு அவர்களை விரட்டியடிப்பதை இவர்கள் வாடிக்கையாக செய்து வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து யாரும் புகார் அளிக்காத நிலையில், சிலமாத காலமாக பல்வேறு நபர்களிடம் இருந்தும் பணம் பறித்ததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து அந்த கும்பலிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
    • நேற்று மாலை 4 மணி முதல் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஆலங்குளம்:

    நெல்லை - தென்காசி நான்கு வழிச் சாலைப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 70 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன.

    பாலப்பணிகள்

    ஆலங்குளம் தொட்டி யான்குளம் கரைப் பகுதியில் பாலப் பணிகள் மற்றும் பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், பாலம் வேலை நடைபெறும் இடங்களில் வாகனங்கள் சென்று வர நெடுஞ்சாலைத்துறையினர் போதிய முன் ஏற்பாடுகள் செய்யாததால் இரு இடங்களிலும் அடிக்கடி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    இப்பகுதியில் சாலையை சீரமைத்து போக்குவரத்தை எளிதாக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத்துறையினர் பொதுமக்களின் கோரிக்கை களைக் கண்டு கொள்ளவில்லை என கூறினர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை இப்பகுதியில் பெய்த கன மழையால் தொட்டியான்குளம் கரைப் பகுதியில் சாலை வலுவிழந்து சேதமடைந்தது. இதனால் இரு வாகனங்கள் சென்று வர வேண்டிய இடத்தில் ஒரு வாகனம் மட்டுமே சென்று வந்ததால் சாலை முழுவதும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் நேற்று மாலை 4 மணி முதல் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் சாலையில் மண் மற்றும் ஜல்லிக்கற்கள் போட்டு ஒரு புறமாக வாகனங்கள் செல்ல வழி செய்தனர்.

    சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக 5 கி. மீ தூரத்திற்கு வாகனங்கள் காத்திருந்து சென்றதால் நெல்லை மற்றும் தென்காசி ரயில் நிலையத்திற்கு சென்ற பயணிகள், மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இரவானதால் சாலையை சீரமைப்பதில் தொய்வு ஏற்பட்டது.

    தொடர்ந்து இரவில் போலீசார் அப்பகுதியில் நின்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    நெடுஞ்சாலைத்துறை யின் பெரும் அலட்சியத்தால் ஆலங்குளத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாயினர் என வாகன ஓட்டுனர்கள் புகார் தெரிவித்தனர்.

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாநில மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற தலைமை நிலைய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் 25, 26-ந் தேதிகளில் நடைபெறும் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்களில் சிறப்பாக செயலாற்றுதல் குறித்து வழங்கப்பட்ட ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகிகளுக்கு கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., எடுத்து கூறி னார்.

    இதில் மாவட்ட இணை செயலாளர் சண்முகப்பிரியா, துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட பொருளாளர் சண்மு கையா, முன்னாள் அண்ணா தொழிற்சங்க மண்டல செய லாளர் கந்தசாமி பாண்டியன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை நிலைய பேச்சாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முப்பிடாதியை கண்டவுடன் டிராக்டரில் உள்ள மண்ணை கொட்டி விட்டு வாகனத்துடன் இருவரும் தப்பி ஓடி விட்டனர்.
    • தப்பி ஓடிய தங்கமலை, கனகராஜ் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி ஊருக்கு மேற்கே உள்ள வழிவழி கண்மாய் பகுதியை மேல்வைப்பாறு வடிநில பிரிவு உதவி பொறியாளர் முப்பிடாதி பார்வையிட சென்றார்.

    அனுமதி இன்றி மண் அள்ளினார்

    அப்போது, கண்மாயில் தேவிபட்டணம் நடுவூர் ராமசாமியாபுரம் கனகராஜ் (வயது 35) என்பவர் பொக்லைன் எந்திரம் மூலமாக மண் அள்ளி, தேவிபட்டணம் நடுவூர் ராமசாமியாபுரத்தை சேர்ந்த தங்கமலை ( 45) என்பவர் ஓட்டி வந்த டிராக்டரில் கொட்டி கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.

    உதவி பொறியாளர் முப்பிடாதியை கண்டவுடன் டிராக்டரில் உள்ள மண்ணை கொட்டி விட்டு வாகனத்துடன் இருவரும் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து உதவி பொறியாளர் முப்பிடாதி சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    வழக்குப்பதிவு

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி வழக்குப்பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்தார். புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன் நேரில் சென்று பார்வையிட்டு இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி தலைமையில் தனிப்படை அமைத்தார்.

    தப்பி ஓடிய தங்கமலை, கனகராஜ் ஆகியோரையும் பொக்லைன் எந்திரத்தையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்க வேண்டும்.
    • அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளதாவது:-

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    அவரது பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சங்கரன்கோவிலில் உள்ள சிறப்பு குழந்தைகள் பள்ளியில் முழு நேர உணவு வழங்குதல், வாசுதேவநல்லூரில் உள்ள சிறப்பு இல்லத்தில் முழு நேர உணவு வழங்குதல், வடக்கு மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரங்கள் மற்றும் குழந்தைகள் காப்பு பெட்டகம் வழங்குதல்,

    வடக்கு மாவட்டத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்க ளுக்கு சீருடை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும்.

    மேலும் பிறந்தநாள் அன்று ஒன்றிய, நகர, பேரூர், நிர்வாகிகள் அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். இளைஞர் அணி சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிற பாராளுமன்ற தேர்தலில் இளைஞரணியின் பங்கு குறித்து தொடர் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இதற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணியினர் அந்தந்த பகுதிகளில் இந்த நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முகாமில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு, பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கின்றனர்.
    • ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள எலும்பு ஸ்கேன் பரிசோதனை முகாமிற்கு வருபவர்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஸ்ரீ சக்தி மருத்துவமனை மருத்துவர் வெங்கடேஷ் பாபு ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் திவ்யா மணிகண்டன் ஏற்பாட்டில், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலகம், நெல்லை ஸ்ரீ சக்தி மருத்துவமனை இணைந்து நடத்தும், இலவச எலும்பு ஸ்கேன் பரிசோதனை முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிறபகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

    இதில் ஸ்ரீ சக்தி மருத்து வமனை மருத்துவர்கள் வெங்கடேஷ் பாபு, சுமதி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு, பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கின்றனர்.

    முகாமில் மூட்டு தேய்மானம், மூட்டு வீக்கம், இடுப்பு மற்றும் கழுத்து வலி, தண்டுவட மற்றும் வாதநோய் பிரச்சனை, தோள்பட்டை அல்லது மணிக்கட்டு வலி, உடல் எடை குறைவு மற்றும் கூன் விழுதல், முதுகு வலி உள்ளிட்ட அனைத்து விதமான எலும்பு சம்பந்தப்பட்ட நோய்க ளுக்கும் தீர்வு காணலாம்.

    மேலும், வருங்காலங்க ளில் எலும்பு பலவீனத்தால் எலும்பு முறிவு பாதிப்புக்குள்ளாகாமல் இருக்கும் வகையில், முகாமிற்கு வருபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள எலும்பு ஸ்கேன் பரிசோதனை முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது.

    எனவே, முன்பதிவு செய்துகொள்ள விரும்புவோர் 94425 91760, 94878 10000 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று காலை சாம்பவர் வடகரை அருகே உள்ள தோட்டத்திற்கு ஆறுமுகத்தம்மாள் சென்றார்.
    • மூதாட்டியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சாம்பவர் வடகரை:

    சாம்பவர் வடகரை மேலூர் உலைக்கூட தெருவை சேர்ந்தவர் வேல். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆறுமுகத்தம்மாள் (வயது65). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை சாம்பவர் வடகரை அருகே உள்ள தோட்டத்திற்கு ஆறுமுகத்தம்மாள் சென்றார். சிறிது நேரத்தில் அவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்ததும் சாம்பவர் வடகரை சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நல்லபாம்பு ஒன்றும், பெரிய சாரைபாம்பு ஒன்றும் சண்டையிட்டு கொண்டிருந்தன.
    • பாம்பு சண்டையை வீடியோ பதிவு செய்தவர்கள் அதனை சமூக வலை தளங்களில் பதிவிட்டனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

    இதனால் அணைகள், குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. சங்கரன்கோவில்-புளியங்குடி சாலையில் கனகதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலின் அருகில் சிறிய குளம் ஒன்று காணப்படுகிறது.மழை காரணமாக அந்த குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளது.

    இந்நிலையில் இந்த குளத்தின் கரையோரத்தில் நேற்று மாலை பெரிய நல்லபாம்பு ஒன்றும், பெரிய சாரைபாம்பு ஒன்றும் சண்டையிட்டு கொண்டிருந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த பகுதியின் அருகிலேயே பள்ளி கூடம் ஒன்றும், கோவிலும் உள்ளது. அந்த வழியாக சென்ற சிலர் பாம்பு சண்டையை செல்போனில் வீடியோப் பதிவு செய்தனர்.

    சிறிது நேரம் கழித்து அந்த பாம்புகள் கரையில் இருந்து குளத்துக்குள் சென்றுவிட்டது.

    இந்நிலையில் பாம்பு சண்டையை வீடியோ பதிவு செய்தவர்கள் அதனை சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.

    • நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் அந்த கண்வாயில் செல்ல வழி இல்லாமல் விளைநிலங்களுக்குள் புகுந்தது.
    • சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை தாலுகா பண்பொழி-வடகரை சாலையில் கரிசல்குடியிருப்பு விலக்கில் உள்ள ஆற்று பாலத்தில் 3 கண்வாய்கள் உள்ளது. இதில் ஒரு கண்வாய் பல நாட்களாக அடைத்து சீரமைக்கப்படாமல் இருந்து வருவதாகவும், அதனை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் அந்த கண்வாயில் செல்ல வழி இல்லாமல் விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் விவசாயிகள் பயிர் செய்திருந்த நெற் பயிர்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்தோனேசியாவில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
    • இதில் சாம்பார்வடகரை சிபுகான் சிட்டோரியோ கராத்தே டு அசோசியேசனில் இருந்து பங்கேற்ற ஜெயச்சந்திரன் என்ற ரவிச்சந்திரன் முதல் பரிசாக தங்கப்பதக்கம் வென்றார்.

    சாம்பவர்வடகரை:

    இந்தோனேசியாவில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகள் கலந்து கொண்டன. இலங்கை, இந்தியா, நேபாளம், ஜப்பான், இந்தோனேசியா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கலந்து கொண்டன. இந்திய அணி சார்பாக தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை சிபுகான் சிட்டோரியோ கராத்தே டு அசோசியேசனில் இருந்து பங்கேற்ற ஜெயச்சந்திரன் என்ற ரவிச்சந்திரன் முதல் பரிசாக தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து சிலுக்கான் சிட்டோரியோ கராத்தே டு அசோசியேசன் தொழில்நுட்ப இயக்குனர் டாக்டர் ராஜ மகேந்திரன் தங்கப்பதக்கம் வென்ற வீரரை பாராட்டினார்.

    • சீவலான் கால்வாய் மேற்கு பகுதியில் கரையில் உடைப்பு ஏற்பட்டு மதீனா நகர் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது.
    • உடனே நகராட்சி ஆணையாளர் சுகந்தி தலைமையிலான பணியாளர்கள் பாலத்தில் அடைப்பு ஏற்பட்ட அமலைச் செடிகளை அப்புறப்படுத்தினர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் கனமழை பெய்ய தொடங்கியது. கடந்த வாரம் கருப்பாநதி அணை நிரம்பிய நிலையில் நேற்று இரவு அணையில் இருந்து 350 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கடையநல்லூர் நகரில் ஓடக்கூடிய பாப்பான்கால்வாய் மற்றும் சீவலான் கால்வாய் கரையோர பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, நேற்று இரவு நகராட்சி சார்பில் குடியிருப்பு வாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் இரவு முழுவதும் பெய்த மலையால், சீவலான் கால்வாயில் நள்ளிரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குறுகலான சிறிய பாலத்தில் அமலைச் செடிகள், மலைப் பகுதிகளில் இருந்து இழுத்துவரப்பட்ட மரத்தடிகள் ஆகியவை பாலத்தின் கீழ் நீர் செல்லும் கண்வாய்களில் அடைத்துக் கொண்டது.

    இதனால் சீவலான் கால்வாய் மேற்கு பகுதியில் கரையில் உடைப்பு ஏற்பட்டு மதீனா நகர் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் சிரமம் அடைந்துள்ளனர். உடனே நகராட்சி ஆணையாளர் சுகந்தி தலைமையிலான பணியாளர்கள் பாலத்தில் அடைப்பு ஏற்பட்ட அமலைச் செடிகளை அப்புறப்படுத்தினர்.

    ஆண்டுதோறும் மழை காலத்தில் அடைப்பு ஏற்படுவதால் மாவட்ட நிர்வாகம் பெரிய பள்ளிவாசல் அருகே நூறாண்டு பழமையான சீவலான் கால்வாய் பாலத்தை உடனடியாக அப்புறப்படுத்தி உயரமான பாலம் அமைக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் இந்த பாலத்தில் அமலைச் செடிகள் அடைப்பதால் நீர்வழி கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் செல்வதாக குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்த னர்.

    ×