என் மலர்tooltip icon

    தேனி

    • வாலிபர் மது பழக்கத்துக்கு அடிமை யானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது
    • வாலிபர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வருசநாடு:

    ஆண்டிபட்டி அருகே ஆட்டுபாறையை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது25). இவருக்கு திருமணமாகி லத்திகாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. மது பழக்கத்துக்கு அடிமை யானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    அடிக்கடி தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டி வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி அழகுபொன்னு கடமலை க்குண்டு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை 2-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சின்னமனூர்:

    உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை 2-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைபுரம்,

    ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், அணை ப்பட்டி, ஆனைமலை யான்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்த ப்படும் என செயற்பொறி யாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

    • பணத்தை கொடுத்து விட்டு காரை எடுத்துச் செல்லுமாறு கூறினார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தூத்துக்குடியை சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது37). இவர் அதே பகுதியில் 4 சக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார்.

    கடந்த மாதம் இணையதளத்தில் கார் விற்பனைக்கு உள்ளது என விளம்பரம் செய்யப்பட்டது. அந்த விளம்பரத்தில் வந்த செல்போன் எண்ணுக்கு போன் செய்தபோது மதுரை மாவட்டம் கொடிக்குளத்தை சேர்ந்த அன்புச்செல்வன் என்பவர் பேசி உள்ளார். அவர் தான் புதிதாக வாங்கிய காரை குடும்ப சூழ்நிலைக்காக விற்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    அதன்படி அந்த காரை ரூ.9 லட்சத்து 10 ஆயிரத்துக்கு விலை பேசி உள்ளனர். பணத்தை கொடுத்து விட்டு ஆண்டிபட்டி அருகே ராஜதானி பகுதியில் காரை எடுத்துச் செல்லுமாறு அன்புச்செல்வன் கூறி உள்ளார். அதன்படி அங்கு வந்தபோது அன்புச்செல்வன் அங்கு இல்லை. தான் மருத்துவ பரிசோதனைக்காக வெளியூர் வந்து விட்டதாகவும் தனது நண்பர்கள் முருகன் மற்றும் ஆனந்த் ஆகியோரிடம் இது குறித்து கூறி உள்ளேன். அவர்களிடம் பணத்தை கொடுத்து விட்டு காரை எடுத்துச் செல்லுமாறு கூறினார்.

    அதன்பேரில் மதன்ராஜ் பணத்தை கொடுத்து விட்டு காரை தனது ஊருக்கு எடுத்து சென்றார். பின்னர் அந்த காரை தஞ்சாவூரை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு ரூ.9 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்தார்.

    சிறிது நாளில் இந்த கார் திருடப்பட்டது என கூறி கேரள போலீசார் அதனை பறிமுதல் செய்து சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் தான் கார் வாங்கிய மதன்ராஜிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

    அதன்பிறகு அன்புச்செல்வன் மற்றும் அவரது கூட்டாளிகள் பேச மறுத்துவிட்டனர். இது குறித்து ஆண்டிபட்டி போலீஸ் நிலையத்தில் மதன்ராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    இந்த கும்பல் மீது மதுரை, சென்னை அண்ணாநகர், அமைந்தகரை, அடையாறு உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் இதேபோல திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சின்னமனூரில் முதன்முறையாக டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயி ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
    • ஒரு ஏக்கருக்கு 10 நிமிடத்தில் டிரோன் மூலம் மருந்து தெளிக்கப்படுகிறது. ஆனால் ஒரு ஏக்கருக்கு ரூ.550 என்பது அனைத்து விவசாயிகளாலும் சாத்தியப்படாது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்ன மனூர், மார்க்கைய ன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நெல், கரும்பு, பூக்கள் உள்ளிட்ட பல்வேறு விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே சின்ன மனூரில் முதன்முறையாக டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயி ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

    இதுகுறித்து விவசாயி தங்கவேலு தெரிவிக்கை யில், தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி நடை பெற்றது. சின்னமனூர் வட்டாரத்தில் முதன்முறை யாக இந்த பணியை நான் மேற்கொண்டுள்ளேன். இதற்கு ரூ.550 கட்டணமாக வாங்கப்படுகிறது.

    ஒரு ஏக்கருக்கு 10 நிமிடத்தில் டிரோன் மூலம் மருந்து தெளிக்கப்படுகிறது. ஆனால் ஒரு ஏக்கருக்கு ரூ.550 என்பது அனைத்து விவசாயிகளாலும் சாத்திய ப்படாது. இருந்தபோதும் பணி குறைகிறது என்பதால் மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை மற்ற விவசாயிகள் பயன்படுத்து வார்களா என்பது விரைவில் தெரியும் என்றார்.

    • தனிநபர் சிலம்பப் போட்டி குழுவினர் சிலம்பப் போட்டி, வளரி, சுருள்பட்டா, கொம்பு சுற்றுதல், வேல் கம்பு சுழற்றுதல், நெருப்பு சங்கிலி சுழற்றுதல் போன்ற பாரம்பரியமான தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றது.
    • இதில் போடி விருமன் சிலம்பாட்ட பயிற்சி கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்து பரிசு கோப்பையை வென்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    பெரியகுளம் அருகே உள்ள கல்லுப்பட்டியில் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் தற்காப்பு ஆயுதக் கலைகள் சார்ந்த போட்டி நடைபெற்றது. பெரியகுளம் டி.எஸ்.பி. கீதா தலைமை வகித்தார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 25 சிலம்பாட்ட பயிற்சி அணியினர் பங்கேற்றனர்.

    தனிநபர் சிலம்பப் போட்டி குழுவினர் சிலம்பப் போட்டி, வளரி, சுருள்பட்டா, கொம்பு சுற்றுதல், வேல் கம்பு சுழற்றுதல், நெருப்பு சங்கிலி சுழற்றுதல் போன்ற பாரம்பரியமான தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றது. இதில் போடி விருமன் சிலம்பாட்ட பயிற்சி கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்து பரிசு கோப்பையை வென்றனர். அவர்களுக்கு டி.எஸ்.பி. கீதா பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி பாராட்டினார்.

    • ஆற்றின் அருகே டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் அங்கு மதுபானங்களை வாங்கும் மதுப்பிரியர்கள் பெரும்பாலானோர் ஆற்றில் அமர்ந்து மது குடித்து வருகின்றனர்.
    • எனவே உடைந்த மது பாட்டில்கள் ஆற்றின் வழியாக தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகளின் கால்களை பதம் பார்த்து விடுகிறது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுநீர் அனைத்தும் வருசநாடு மூலவைகை ஆற்றில் கலந்து வருகிறது. மழை பெய்யும் நேரங்களில் சாக்கடை கழிவு நீருடன் சேர்த்து பிளாஸ்டிக் குப்பைகளும் ஆற்றில் கலக்கிறது.

    இதனால் ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிக அளவில் குவிந்து காணப்படுகிறது. இதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே ஆற்றின் அருகே டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் அங்கு மதுபானங்களை வாங்கும் மதுப்பிரியர்கள் பெரும்பாலானோர் ஆற்றில் அமர்ந்து மது குடித்து வருகின்றனர். அதில் சிலர் மது பாட்டில்களை ஆற்றில் உடைத்து வீசுகின்றனர்.

    இதனால் ஆற்றில் நீர்வரத்து ஏற்படும்போது உடைந்த மது பாட்டில்கள் ஆறு முழுவதும் பரவி விடுகிறது. எனவே உடைந்த மது பாட்டில்கள் ஆற்றின் வழியாக தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகளின் கால்களை பதம் பார்த்து விடுகிறது. நேற்று வருசநாடு கிராமத்தில் கனமழை பெய்தது. அப்போது சாக்கடை நீருடன் பிளாஸ்டிக் குப்பைகளும் ஆறு முழுவதும் பரவி விட்டது. இதன் அருகே உறை கிணறுகள் அமைந்துள்ளதால் குடிநீர் மாசடையும் நிலை உள்ளது.

    எனவே ஆற்றில் மது அருந்துவதை தடுப்பதுடன் பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்ற வேண்டும், மேலும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சம்பவத்தன்று இரவு தனது வீட்டைபூட்டிவிட்டு மனைவியுடன் அருகில் உள்ள சகோதரர் வீட்டில் தூங்கசென்றார்.
    • அறையில் இருந்த பித்தளை அண்டா, பானை, குத்துவிளக்கு, சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களையும், ரூ.4500 பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது

    தேனி:

    தேனி அருகே அல்லி நகரத்தை சேர்ந்தவர் செல்வம்(51). இவர் பொம்மை விற்பனை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு தனது வீட்டைபூட்டிவிட்டு மனைவியுடன் அருகில் உள்ள சகோதரர் வீட்டில் தூங்கசென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்ப ட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிகிடந்தது. அறையில் இருந்த பித்தளை அண்டா, பானை, குத்துவிளக்கு, சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களையும், ரூ.4500 பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று பாண்டியை 3 பேரும் சேர்ந்து கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே சீலையம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. (வயது 39). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன், முத்தையா, காட்டுராஜா ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பாண்டியை 3 பேரும் சேர்ந்து கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். காயமடைந்த பாண்டி சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    உத்தமபாளையத்தை சேர்ந்தவர் உதயராணி (50). இவருக்கும் கொடுவிலார் பட்டியை சேர்ந்த தனலெட்சுமி, கலைச்செல்வி ஆகியோருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் முன் விரோதம் இருந்துள்ளது. அவர் வீரபாண்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற போது தனலெட்சுமி, கலைச்செல்வி ஆகியோர் அவரை தகாத வார்த்தை களால் திட்டி தாக்கியுள்ள னர். காயமடைந்த உதய ராணி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வீரபாண்டி போலீ சில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பிளஸ்-2 படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இருவீட்டார் சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்டது தெரிய வந்தது.
    • அப்போது ஊர்நல அலுவலர் விசாரணை நடத்தியதில் மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தது உறுதியானது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டி பட்டி தாலுகா மூலக்க டையை சேர்ந்தவர் பாண்டிச்செல்வம்(25). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தாழையூத்து பகுதி யில் வசிக்கும் தனது அக்கா மகளான ராஜேஸ்வரி(17) என்பவரை திருமணம் செய்தார். இந்நிலையில் பிளஸ்-2 படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இருவீட்டார் சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்டது தெரிய வந்தது.

    5 மாத கர்ப்பிணியான ராஜேஸ்வரி ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தார். அப்போது ஊர்நல அலுவலர் வாசுகி அவரிடம் விசாரணை நடத்தியதில் மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தது உறுதியானது. இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசில் வாசுகி புகார் அளித்தார்.

    அதன்பேரில் பாணடி ச்செல்வத்தை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் திருமணம் செய்து வைத்த அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று காலை முதல் அணையிலிருந்து 300 கனஅடிவீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
    • கனமழையை தொடர்ந்து மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்ய நிலத்தை தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

    கூடலூர்:

    மதுரை குடிநீர் திட்டத்தி ற்காக லோயர்கேம்ப் அருகே முல்லைபெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்றுமுன்தினம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. பணிக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க மணல் மூட்டைகள் அடுக்கி வைக்க ப்பட்டன.

    நேற்று காலை 6 மணி யிலிருந்து 150 கனஅடி நீர்மட்டம் திறக்கப்பட்டது. ஆனால் இந்த தண்ணீர் இரைச்சல் பாலம் வழியாக வெளியேற்றப்பட்டதால் மின்உற்பத்தி நடை பெறவில்லை. இந்நிலையில் இன்று காலை முதல் அணையிலிருந்து 300 கனஅடிவீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பெரியாறு மின்உற்பத்தி நிலையத்தில் 22 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    அணையின் நீர்மட்டம் 118.10 அடியாக உள்ளது. வரத்து 266 கனஅடி, இருப்பு 2285 மி.கனஅடி.

    தேனி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையை தொடர்ந்து மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்ய நிலத்தை தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட தொடங்கியுள்ளனர். வழக்கமாக இந்த மழை ஆடி மாதத்தில் பெய்யும். தற்போது தாமதமாக பெய்துள்ள நிலையிலும் விவசாய பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

    இதேபோல் போடி, சோத்துப்பாறை, பெரிய குளம், வீரபாண்டி, தேவ தானப்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்தது. கும்பக்கரை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் குளித்து வருகின்றனர்.

    வைகை அணையின் நீர்மட்டம் 46.95 அடியாக உள்ளது. நேற்று 157 கனஅடிநீர் வந்த நிலையில் இன்று 53 கனஅடியாக குறைந்துள்ளது. அணையிலி ருந்து 69 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1615 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணை யின்நீர்மட்டம் 68.22 அடியாகவும் உள்ளது.

    கூடலூர் 1.2, சண்முகாநதிஅணை 5.6, உத்தமபாளையம் 1, போடி 1.6, வைகை அணை 3.8, சோத்துப்பாறை 4, பெரிய குளம் 1.4, வீரபாண்டி 3.4, அரண்மனைப்புதூர் 6.3, ஆண்டிப்பட்டி 5.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • எய்ட்ஸ் மற்றும் பால்வினைத்தொற்று, வளர் இளம் பருவ நலன், மனநலம், மற்றும் போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்பு ணர்வினை மாணவர்க ளிடம் ஏற்படுத்தும் விதமாக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
    • தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கி புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் வழியாக பழனிசெட்டிபட்டி மேனகா மில் வரை 5 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது.

    தேனி:

    தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலகின் சார்பில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் மற்றும் போதை தடுப்பு குறித்த விழிப்பு ணர்வினை ஏற்படுத்தும் விதமாக கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவி கள் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியினை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்.

    எய்ட்ஸ் மற்றும் பால்வினைத்தொற்று, வளர் இளம் பருவ நலன், மனநலம், மற்றும் போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்பு ணர்வினை மாணவர்க ளிடம் ஏற்படுத்தும் விதமாக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

    தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கி புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் வழியாக பழனிசெட்டிபட்டி மேனகா மில் வரை 5 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது. இதில் 200-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    வெற்றி பெற்ற முதல் 3 மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10,000, 2ம் பரிசாக ரூ.7000, 3ம் பரிசாக ரூ.5000 மற்றும் 7 நபர்களுக்கு ஆறுதல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டது.

    மேலும், சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் வினாடி வினா, நாடகம் மற்றும் ரீல் மேக்கிங் போட்டிகள் நடைபெற்றது.

    இதில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா, மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாடு அலுவலர் முகமது பாரூக், தேனி தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் சேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது.
    • சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் பருவமழை ஏமாற்றியதால் விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல்சாகுபடிக்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் 2-ம் போக சாகுபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது.

    இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மழை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான போடி, அரசரடி, வெள்ளிஅணை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இேதபோல் மஞ்சளாறு, சோத்துப்பாறை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 118.10 அடியாக உள்ளது. வரத்து 3 கனஅடி, திறப்பு 150 கனஅடி. இருப்பு 2285 மி.கனஅடி. முல்லைபெரியாறு அணையிலிருந்து 400 கனஅடி திறக்கப்பட்டு வந்த நிலையில் மதுரை குடிநீர் திட்ட தடுப்பணை பணிக்காக 150 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இரைச்சல் பாலம் வழியாக திறந்துவிடப்படுகிறது. இதனால் பெரியாறு மின்உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 46.98 அடியாக உள்ளது. வரத்து 157 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 1619 மி.கனஅடியாக உள்ளது. வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான ஊத்தாம்பாறை மலைப்பகுதியில் வறண்டு கிடந்த ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மஞ்சளாறு அணை நீர்மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 67.40 அடியாகவும் உள்ளது.

    வைகை அணை 17, மஞ்சளாறு 30, சோத்துப்பாறை 34, பெரியகுளம் 78, அரண்மனைப்புதூர் 23, சண்முகாநதிஅணை 1.4 மி.மீ மழையளவு பதிவானது.

    ×