என் மலர்tooltip icon

    தேனி

    • கொடைக்கானல், பெரியகுளம் பகுதியில் விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மழை குறைந்து நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு கொடைக்கானல், பெரியகுளம் பகுதியில் விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதாக வனச்சரகர் அலுவலர் டேவிட்ராஜா தெரிவித்துள்ளார். நீர்வரத்து சீரான பின்னர் அனுமதி வழங்கப்படும். அருவியில் நீர்வரத்தை கண்காணித்து வருகிறோம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கும்பக்கரை அருவிக்கு குளிக்க சென்றனர். தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    இதேபோல் ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையம், தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழைபெய்தது. இதனால் வெப்பத்தில் தவித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    குளிர்ச்சியான சூழல் நிலவியதால் அவர்கள் நிம்மதி அடைந்தனர். முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 122 அடியை எட்டியது. அணைக்கு 866 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது. 52.36 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 490 கன அடி நீர் வருகிறது.

    மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.40 அடியாக உள்ளது. விரைவில் 55 அடியை எட்டும் பட்சத்தில் 3-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அணைக்கு 93 கனஅடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 93.43 அடியாக உள்ளது. 47 கன அடி நீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர் 10.2, உத்தமபாளையம் 1.3, சண்முகாநதி அணை 47, போடி 14.2, வீரபாண்டி 7.2, மஞ்சளாறு 42, ேசாத்துப்பாறை 55, பெரியகுளம் 85, வீரபாண்டி 5.4, ஆண்டிபட்டி 12.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • மாட்டு வண்டி பந்தயத்தில் தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான்மாடு, நடுமாடு, பெரியமாடு என 6 வகையான பிரிவுகளில் 80 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.
    • போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசு தொகை, கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பத்தில் மந்தையம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கம்பம் உத்தமபுரம் பிரமலைக்கள்ளர் இளைஞர் அணி மகாசபை சார்பில் 36 இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

    இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் பங்கு பெற்றனர். இந்த போட்டியில் பங்கு பெற்ற மாடுகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. இதில் மாடுகளையும், மாட்டு வண்டியை ஓட்டுபவர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர்.

    இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான்மாடு, நடுமாடு, பெரியமாடு என 6 வகையான பிரிவுகளில் 80 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

    இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசு தொகை, கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியானது கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு வரை சுமார் 8 கி.மீ தூரம் உள்ள சாலையில் நடைபெற்றது.

    மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

    • விவசாயி மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகே குள்ளப்புரத்தை சேர்ந்தவர் மச்சேந்திரன் (வயது54).

    சம்பவத்தன்று தனது தோட்டத்தில் வாழை இலை அறுக்க சென்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அவரது மனைவி நாகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மாநில அளவிலான சிலம்பாட்டம் மற்றும் பல்வேறு தற்காப்பு கலைகளுக்கான திறமைகளை வெளிப்படுத்தும் போட்டிகள் நடைபெற்றது.
    • போடி மாணவ-மாணவிகள் தற்காப்பு கலைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மாநில அளவிலான முதல் பரிசினை தட்டிச் சென்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான சிலம்பாட்டம் மற்றும் பல்வேறு தற்காப்பு கலைகளுக்கான திறமைகளை வெளிப்படுத்தும் போட்டிகள் நடைபெற்றது.

    சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

    சிலம்பாட்டம், சுருள்பட்டா, மான் கொம்பு,வேல் கம்பு, நெருப்புச் சங்கிலி போன்ற தமிழர்களின் பாரம்பரியமான பல்வேறு தற்காப்பு கலைகள் சார்ந்து நடைபெற்ற போட்டிகளில் மாணவ-மாணவிகள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.

    இதில் போடி விர்மன் சிலம்பாட்ட பயிற்சியகம் சார்பாக பங்கேற்ற மாணவ-மாணவிகள் தற்காப்பு கலைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மாநில அளவிலான முதல் பரிசினை தட்டிச் சென்றனர்.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சத்தியமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வெற்றி கோப்பையையும் வழங்கினார்.

    மாநில அளவில் நடைபெற்ற இந்த தற்காப்பு கலைக ளுக்கான திறன் போட்டியில் முதலிடத்தை பெற்ற இருமல் சிலம்பாட்ட பயிற்சியக மாணவ-மாண விகளுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவி த்தனர்.

    • கெங்குவார்பட்டி அருகே மஞ்சளாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புது தடுப்பணையின் நீர்த்தேக்க பகுதிகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர்.
    • ஆக்கிரமித்து நடவு செய்யப்பட்ட 120 தென்னை மற்றும் 25 இலவமரங்கள் உள்ளிட்ட மரங்களை வேரோடு பிடுங்கி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையில் திறந்து விடப்படும் நீர் செல்லும் ஆற்றுப்பகுதியில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு அதன் மூலம் 9 கண்மாய்களுக்கு நீர் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கெங்குவார்பட்டி அருகே மஞ்சளாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புது தடுப்பணையின் நீர்த்தேக்க பகுதிகளை ஆக்கிரமித்து சிலர் தென்னை மரம், இலவமரம் மற்றும் எலுமிச்சை மரங்கள் வைத்து விவசாயம் செய்து வந்தனர்.

    இதனால் கண்மாய்களுக்கு நீர் கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டதால் அப்பகுதி விவசாயிகள் ஆக்கிரமிப்புகள் அகற்றக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர்.

    இதன் அடிப்படையில் கடந்த மாதம் நீதிமன்றம் நீர் நிலை பகுதிகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்துள்ள பகுதிகளில் உள்ள மரங்களை அகற்றி நீர்நிலைப் பகுதிகளை மீட்டெடுக்க உத்தரவிட்டது. அதன் பேரில் பெரியகுளம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சவுந்தரம், மற்றும் உதவி பொறியாளர் கமலக்கண்ணன் தலைமையிலான பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து ஜே.சி.பி. மூலம் நீர் நிலை பகுதியில் ஆக்கிரமித்து நடவு செய்யப்பட்ட 120 தென்னை மற்றும் 25 இலவமரங்கள் உள்ளிட்ட மரங்களை வேரோடு பிடுங்கி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    முன்னதாக ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளை, ஆக்கிரமிப்பாளர்கள் தடுத்து நிறுத்தி ஜே.சி.பி. வாகனத்தின் முன் அமர்ந்து உள்ளே அனுமதிக்காமல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த அரசு அதிகாரிகளை அனுமதிக்கவில்லை என்றால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    அதனைத் தொடர்ந்து போலீசாரின் பாதுகாப்புடன் நீர்நிலை புறம்போக்குகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அனைத்து மரங்களையும் வேருடன் எடுத்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அதே போல் மஞ்சளாறு அணை நீர் தேக்கப் பகுதியில் அதிகாரிகளின் துணையோடு ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    • குடும்ப பிரச்சினையில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வருசநாடு:

    ஆண்டிபட்டி அருகே கோரையூத்து பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்கண்ணன் மனைவி பானுப்பிரியா(30). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பானுப்பிரியாவின் தந்தை முருகன் அவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.

    இதனால் அவர் தந்தை வீட்டிலேயே தங்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.1 லட்சத்தை திருப்பி தந்துவிட்டார். அதிலிருந்து தந்தை-மகள் 2 பேரும் சரியாக பேசிகொள்வதில்லை. இந்த நிலையில் பானுப்பிரியா விஷம் குடித்து மயங்கினார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். இதுகுறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தேனியில் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவு நிகழ்ச்சி 13-ந் தேதி தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
    • இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் இணை கல்வி கழகத்தின் சார்பில், கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவு நிகழ்ச்சி 13-ந் தேதி தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசு இளைய தலைமுறையினர் குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு தமிழர் மரபும், நாகரீகமும், பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு "மாபெரும் தமிழ் கனவு"சொற்பொழிவு நிகழ்ச்சியினை நடத்திட உத்தரவிட்டு, செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி, தேனி மாவட்டத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி, வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, போடி அரசினர் பொறியியல் கல்லூரியில் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவு நிகழ்வு நடத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து 13-ந் தேதி தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவு நிகழ்வில் "கல்வியால் கடந்த காரிருள்" என்னும் தலைப்பில் கவிஞர் மற்றும் எழுத்தாளர் மனுஸ்யபுத்திரன் சிறப்புரையாற்ற உள்ளார் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54 அடியாக உள்ளது. விரைவில் முழுகொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.80 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேவதானப்பட்டி அருகே மேற்குதொடர்ச்சி மலைஅடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேவதானப்பட்டி, வத்தலக்குண்டு மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    கொடைக்கானலில் பெய்யும் மழை மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வறண்டுகிடந்த மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.

    57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணையில் 51 அடியை எட்டும் போது முதல் வெள்ள அபாய எச்சரிக்கையும், 53 அடியை எட்டும் போது 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 55 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை, அதனைதொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும்.

    தற்போது அணையின் நீர்மட்டம் 54 அடியாக உள்ளது. விரைவில் முழுகொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு 23 கனஅடிநீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.80 அடியாக உள்ளது. 866 கனஅடிநீர் வருகிறது. 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 52.13 அடியாக உள்ளது. 374 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 93.15 அடியாக உள்ளது. 26 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    தேக்கடி 6.4, கூடலூர் 14.2, சண்முகாநதிஅணை 13.6, மஞ்சளாறு 7, பெரியகுளம் 3.6, வீரபாண்டி 4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • ஐஸ் வண்டியை சார்ஜ் போடுவதற்காக செல்லப்பாண்டி வீட்டில் இருந்து இரவு வந்துள்ளார்.
    • சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடிவந்து செல்ல பாண்டியை தூக்கி உள்ளனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் கிராமசாவடி பகுதியில் ஐஸ் கடை மற்றும் பன் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.

    இவரது ஐஸ் கடையில் இளைய மகன் செல்லப்பாண்டி (வயது34) உடன் பணிபுரிந்து வந்துள்ளார். காலையிலிருந்து ஐஸ் வண்டிகள் வெளியே சென்று விற்பனையை முடித்துவிட்டு மீண்டும் இரவு ஐஸ் கம்பெனிக்கு வந்தடைந்து விடும். பின்னர் அதற்கு மின்சாரம் கொண்டு சார்ஜ் செய்வது தினசரி வாடிக்கையான ஒரு செயலாக இருந்து வருகிறது.

    அந்த ஐஸ் வண்டியை சார்ஜ் போடுவதற்காக செல்லப்பாண்டி வீட்டில் இருந்து இரவு வந்துள்ளார். சார்ஜ் செய்வதற்காக சுவிட்ச் ஆன் செய்துவிட்டு வந்தபோது வண்டியில் இருந்து மின்சாரம் எதிர்பாராத விதமாக செல்லப்பாண்டி மீது பாய்ந்தது.

    உடனே அவர் பயங்கர சத்தம் போட்டு சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடிவந்து செல்ல பாண்டியை தூக்கி உள்ளனர். அப்போது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதனை அடுத்து அங்கு இருந்த மின்சார சுவிட்ச் அனைத்தையும் அணைத்து விட்டு பின்னர் செல்லப்பாண்டியை வந்து பார்த்துள்ளனர். அவர் சுயநினைவின்றி மயங்கி கிடந்தார்.

    இதனை அடுத்து அவர்கள் அருகே இருந்த ஆட்டோ மூலம் செல்லப்பாண்டியை உடனடியாக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரது உறவினர்கள் தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் செல்லப்பாண்டி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    பின்னர் இது குறித்து கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன் இறந்தது முதல் மிகுந்த சோகத்தில் இருந்த பெண் சம்பவத்தன்று தனது 11 வயது மகன் சக்திவேல் உடன் மாயமானார்.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்கன்முத்தன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மகே ஸ்வரன் மனைவி சத்யா (வயது 28). இவர்களுக்கு சக்திவேல், ராமர்லெட்சு மணன் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். மகேஸ்வரன் கடந்த 1 வருட த்துக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அப்போது முதல் சத்யா தனது 3 குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். கணவன் இறந்தது முதல் மிகுந்த சோகத்தில் இருந்த சத்யா சம்பவத்தன்று தனது மகன் சக்திவேல் (வயது 11) உடன் மாயமானார்.

    அவரது தாய் மாரியம்மாள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இருவரை யும் தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த காஜா மைதின் மகள் சூரத் நிஷா (18). இவர் உத்தமபாளை யத்தில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார். பல இடங்க ளில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து அவரது தந்தை உத்தம பாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
    • தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.90 அடியாக உள்ளது.
    • சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 91.34 அடியாக உள்ளது. வரத்து 27 கன அடி. திறப்பு 3 கன அ டி. இருப்பு 50.71 மி.கன அடி.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் நேற்று 121.30 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 121.60 அடியாக அதிகரித்துள்ளது. நேற்று 835 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 1105 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2945 மி.கன அடியாக உள்ளது.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 52 அடியை எட்டியது. நீர் வரத்து 616 கன அடி. தண்ணீர் திறப்பு 69 கன அடி. இருப்பு 2259 மி.கன அடி.

    தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.90 அடியாக உள்ளது. ஏற்கனவே தேனி, திண்டுக்கல் கரையோர மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் 54 அடியை எட்டியதும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்.

    அணைக்கு நீர்வரத்து 11 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 413.15 மி.கன அடியாக உள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 91.34 அடியாக உள்ளது. வரத்து 27 கன அடி. திறப்பு 3 கன அ டி. இருப்பு 50.71 மி.கன அடி.

    உத்தமபாளையம் 1, சண்முகாநதி அணை 0.8, போடி 24, வைகை அணை 40, சோத்துப்பாறை 4, பெரியகுளம் 3.4, வீரபாண்டி 38, அரண்மனைப்புதூர் 27.2, ஆண்டிபட்டி 1.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாநகராட்சி சுகாதார அலுவலரை பணி நீக்கம் செய்ய உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆண்டிபட்டி:

    தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத் துறை யில் மகப்பேறு டாக்டர்களின் எண்ணிக்கையை கூடுதலாக்க வலியுறுத்தியும், அரசு மகப்பேறு டாக்ட ர்களை முகாம்களில் பங்கேற்க வைப்பதை தவிர்க்கவும்,

    மதுரை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் அத்துமீறி நுழைந்து டாக்டர்கள் மற்றும் பேரா சிரியர்களை மரியாதை இல்லாமல் பேசிய மாநகராட்சி சுகாதார அலுவலரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தேனி அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் சங்கத் தலைவர் ஜெய் கணேஷ், செயலாளர் அரவாளி, பொருளாளர் பால கிருஷ்ணன், டாக்டர்கள் சிவா, பிரேமலதா, ருக்மணி, வனிதா, மகாலட்சுமி உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ×