என் மலர்tooltip icon

    தேனி

    • தொழிலாளர் நலத்துறையின் சார்பில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் கண்காணிப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது.
    • தேனி மாவட்டத்தில் கட்டிடம், கட்டுமான பணிகள் பதிவு செய்வது அவசியம் என கலெக்டர் தெரிவித்தார்.

    தேனி

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் கண்காணிப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது.

    தேனி மாவட்டத்தில் அரசு சார்பாக நேரடியாகவோ அல்லது ஒப்பந்ததாரர்களை கொண்டோ நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், தனியார் கட்டுமானப் பணியிடங்கள், தனிப்பட்ட பொறியாளர்கள் மூலமாக கட்டப்படும் கட்டுமானங்களும் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்திருந்தால் மட்டுமே அங்கு பணிபுரியும் கட்டிடத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் நேரடியாக கண்காணித்து ஆலோசனைகள் வழங்கப்படும்.

    மேலும், அவர்களை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்து அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க முடியும். கட்டுமானப் பணியிடத்தில் ஒரு தொழிலாளி விபத்து ஏற்பட்டு இறக்க நேரிட்டால், அத்தொழிலாளியின் குடும்பத்திற்கு இச்சட்டத்தின்படி தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் மூலமாக ரூ.5,00,000 இழப்பீடு வழங்கப்படும். மேலும் பணிபுரியும் கட்டுமானப் பணியிடத்தில் தொழிலாளிக்கு விபத்து ஏதேனும் ஏற்பட்டால் அவ்விபத்தின் மூலம் ஏற்பட்ட காயங்கள் மற்றும் ஊனங்களின் வீரியத்தைப் பொறுத்து ரூ.1,00,000 இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.

    கட்டுமானப் பணியிடத்தில் பணிபுரியும் அனைத்து பிற மாநில தொழிலாளர்களையும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்வதன் மூலமாக அத்தொழிலாளர்களுக்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் அளிக்கப்படும். ஆகவே தேனி மாவட்டத்தில் நடைபெறும் தனியார் கட்டிடம் மற்றும் இதரகட்டுமானப் பணியிடங்கள், தனிப்பட்ட பொறியாளர் மூலமாக கட்டப்படும் கட்டுமானங்கள் மற்றும் அரசு சார்ந்தகட்டுமானப் பணியிடங்கள் அனைத்தும் இச்சட்டத்தின்கீழ் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    மேலும், இது தொடர்பான விவரங்கள் அறிய துணை இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், நேருஜி நகர், திண்டுக்கல். (திண்டுக்கல், தேனி, கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கியது) என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

    • வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
    • 71 அடி உயரம் கொண்ட அணையில் இன்று காலை நிலவரப்படி 64.34 அடி நீர்மட்டம் உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை மாநகர குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் வைகை அணை நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முல்லைபெரியாறு நீர்பிடிப்பு பகுதி, மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து சீராக உயர்ந்தது.

    71 அடி உயரம் கொண்ட அணையில் இன்று காலை நிலவரப்படி 64.34 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 781 கனஅடிநீர் வருகிறது. 69 கனஅடிநீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது.

    66 அடியை எட்டும் போது கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்படும். 68.50 அடியில் 2-ம் கட்டமும், 69 அடியாக உயர்ந்தபின்னர் 3-ம் மற்றும் இறுதி கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரியாக திறக்கப்படும்.

    மழை தொடரும் பட்சத்தில் வைகை அணை நீர்மட்டம் விரைவில் முழுகொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் உற்சாகமாக விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 123.85 அடியாக உள்ளது. 593 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 700 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின்நீர்மட்டம் 52.10 அடியாக உள்ளது. 33 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. 73 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    தேக்கடி 1.8, கூடலூர் 2.4, உத்தமபாளையம் 3.2, சண்முகாநதி அணை 2, போடி 0.4, வீரபாண்டி 1.4, சோத்துப்பாறை 1, பெரியகுளம் 2, வைகை அணை 3.6, வீரபாண்டி 3, ஆண்டிபட்டி 3 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • சிறுவன் மூக்கில் ரத்தம் வழிந்து வாயில் நுரைதள்ளியநிலையில் மயக்கமடைந்தான்.
    • அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நித்தின் உயிரிழந்தான்.

    தேவதானப்பட்டி:

    பெரியகுளம் அருகில் உள்ள குள்ளப்புரத்தை சேர்ந்த பிரபாகரன் மகன் நித்தின்(5). இச்சிறுவனுக்கு சம்பவத்தன்று மூக்கில் ரத்தம் வழிந்து வாயில் நுரைதள்ளியநிலையில் மயக்கமடைந்தான்.

    உடனடியாக பெற்றோர்கள் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்தனர். ஆனால் வழியிலேயே நித்தின் உயிரிழந்தான். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • 4-ந் தேதி கம்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • முகாமில் பங்கேற்க எந்தவித கட்டணமும் இல்லை என்று கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வருகிற 4-ந் தேதி கம்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் பி.இ. டிப்ளமோ, நர்சிங் டெய்லரிங், டிரைவர் மற்றும் இதர தகுதி உடைய அனைவரும் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்க எந்தவித கட்டணமும் இல்லை என்று கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • தங்கம்மாள்புரம் பகுதியில் கி.பி.13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்தனர்.
    • குலசேகரபாண்டியனின் ஆட்சி தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கு இடிந்த சிவன் கோவில் இருந்தது என்பது இந்த கல்வெட்டின் மூலம் தெரிய வந்தது.

    போடி:

    தேனி மாவட்டம் போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியின் முதல்வர் சிவக்குமாரின் வழிகாட்டுதலின் படி, கல்லூரி வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் மாணிக்கராஜ், திண்டுக்கல் நல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா ஆகியோர் இணைந்து தொல்லியல் சார்ந்த ஆய்வுகளை செய்து வருகின்றனர்.

    கொடைக்கானல் மன்னவனூர் அரசுமேல்நிலைப்பள்ளி யின் ஆசிரியர் பழனிமுருகன் கொடுத்த தகவலின்படி தேனி மாவட்டம் வருசநாடு அருகேயுள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் கி.பி.13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்தனர்.

    இது குறித்து ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி இணைப் பேராசிரியர் மாணிக்கராஜ், நல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா ஆகியோர் கூறியதாவது:-

    தேனி மாவட்டம் பண்டைய காலத்தில் அழநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. பிற்கால பாண்டியர்கள் காலத்தில் நிர்வாக காரணங்களுக்காக அழநாட்டை பல சிறு சிறு நாடுகளாகப் பிரித்தனர். அதன்படி மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதியான இன்றைய வருசநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

    இந்தப்பகுதியில் முதுமக்கள் தாழி, பெருங் கற்கால கல்லறைகள், பழைய புதிய கற்கருவிகள், பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது கி.பி.13ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த குலசேகரபாண்டியன் (கி.பி. 1297) காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று வருசநாடு தங்கம்மாள்புரம் பொட்டியம்மன் கோவில் அருகே கண்டறியப்பட்டது.

    இதில் குலசேகரபாண்டியனின் ஆட்சி தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கு இடிந்த சிவன் கோவில் இருந்தது என்பது இந்த கல்வெட்டின் மூலம் தெரிய வந்தது.

    இந்த கல்வெட்டு முழுமையாக கிடைக்கப்பெறாததால் முழுமையான செய்தியை அறிய முடியவில்லை. இருப்பினும் பாண்டிய மன்னன் காலத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    • தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • இன்று காலை நிலவரப்படி 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 64.07 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதாலும் வைகை அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

    இன்று காலை நிலவரப்படி 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 64.07 அடியாக உள்ளது. வரத்து 781 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 4426 மி.கன அடி.

    மழை நீடிக்கும் பட்சத்தில் அணையின் நீர் மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 123.90 அடியாக உள்ளது. வரத்து 710 கன அடி. திறப்பு 700 கன அடி. இருப்பு 3400 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 52.40 அடி. வரத்து 33 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 383 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.54 அடியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அணைக்கு வரும் 97 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மில்லியன் கன அடியாக உள்ளது.

    பெரியாறு 1.6, தேக்கடி 2.2, உத்தமபாளையம் 2.4, போடி 2.6, வைகை அணை 16.8, மஞ்சளாறு 30, சோத்துப்பாறை 2, பெரியகுளம் 21, வீரபாண்டி 9.2, அரண்மனைப்புதூர் 10.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.5560 மதிப்பிலான காதொலி கருவிகள் 6 பேருக்கும், ரூ.9050 மதிப்பிலான 3 சக்கர சைக்கிள் 3 பேருக்கும் என 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.71630 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    மேலும் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ, சிறுபான்மையினர் நல அலுவலர் இந்துமதி, ஆதி திராவிடர் நல அலுவலர் சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முருக்கோடை-ராயர்கோட்டை இடையே மூலவைகையாற்றின் குறுக்கே 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டது.
    • பராமரிப்பு பணி இல்லாததால் பாலம் தொடர்ந்து சேதமடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக பாலத்தின் கீழ்பகுதியில் தூண்கள் அமைந்துள்ள இடத்தில் சிமிண்ட் பூச்சு உடைந்து வருகிறது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள அரசரடி, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகள் வைகை அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது. பருவமழை காலங்களில் போதிய மழை பெய்தால் மட்டுமே இப்பகுதி விவசாயிகளுக்கும், குடிநீருக்கும் பற்றாக்குறை இல்லாத நிலை உருவாகும.

    முருக்கோடை-ராயர்கோட்டை இடையே மூலவைகையாற்றின் குறுக்கே 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் பயன்பாட்டிற்கு வந்து 9 ஆண்டுகள் ஆகியும் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

    இதனால் பாலம் தொடர்ந்து சேதமடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக பாலத்தின் கீழ்பகுதியில் தூண்கள் அமைந்துள்ள இடத்தில் சிமிண்ட் பூச்சு உடைந்து வருகிறது. இதனைசீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் சிமிண்ட் பூச்சு உடைப்பு பெரிதாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த சமயங்களில் மண் அரிப்பு அதிகமாகி பாலத்தின் தூண்பகுதியும் சேதமடையும் சூழல் உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தில் சீரமைப்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • ஈஸ்வரனின் குடும்பத்தினரும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்துவிடம் புகார் அளித்தனர்.
    • நள்ளிரவில் துப்பாக்கி சூடு நடத்தி கொன்றுவிட்டு மறுநாள் காலையில் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் வண்ணாத்திப் பாறை காப்புக்காட்டில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்து வனவிலங்குகள் வேட்டையாடப் படுவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் கூடலூர் வனவர் திருமுருகன் தலைமையில் வனக்காப்பாளர், வனக்காவலர் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மின்வேலி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்தபோது குள்ளப்பகவுண்டன் பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 55) என்பவர் அப்பகுதியில் பதுங்கி இருந்தார். வனத்துறையினரை கண்டதும் அவர் தப்பியோட முயன்றுள்ளார். அப்போது ஈஸ்வரனுக்கும், வனத்துறையினருக்கும் இடையே நடந்த தகராறில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    இதில ஈஸ்வரன் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து கூடலூர் ரேஞ்சர் முரளிதரன், லோயர்கேம்ப் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஈஸ்வரனின் உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    துப்பாக்கிச்சூட்டில் ஈஸ்வரன் உயிரிழந்தது தெரியவரவே அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் கேட்காமல் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஈஸ்வரன் உடல் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு தேனி எஸ்.பி.பிரவீன் உமேஷ் டோங்கரே, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் ஆனந்த், உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் ராமநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஈஸ்வரனின் குடும்பத்தினரும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்துவிடம் புகார் அளித்தனர். அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும். குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

    நள்ளிரவில் துப்பாக்கி சூடு நடத்தி கொன்றுவிட்டு மறுநாள் காலையில் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஒரு குற்றவாளி மீது எண்கவுண்டர் நடத்துவது போல வனத்துறைக்கு துப்பாக்கியால் சுட அதிகாரம் கொடுத்தது யார்? எனவே இப்பிரச்சினையில் போலீசாரும் எங்களை சமாதானம் செய்யும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகளை பிடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே நாங்கள் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம். அவர்கள் விசாரணை நடத்தினால்தான் இதில் உண்மை வெளிவரும். அதுவரை பிரேத பரிசோதனை நடத்துவதற்கும் நாங்கள் அனுமதி அளிக்காமல் கையெழுத்திட மறுத்துவிட்டோம் என்றனர்.

    இறந்த ஈஸ்வரன் மீது ஏற்கனவே அவர் அமைத்த மின்வேலி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு உள்பட 2 வழக்குகள் உள்ளன. இவர் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வந்ததால்தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

    இன்று தேனி அரசு மருத்துவக்கல்லூரி முன்பு 2ம் நாளாக ஈஸ்வரனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பான சூழல் நிலவியது. 

    • கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் சீராக உயர்ந்தது.
    • இந்த நிலையில் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்தும் சரிந்தது.

    கூடலூர்:

    தமிழகம்-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் சீராக உயர்ந்தது.

    இந்த நிலையில் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்தும் சரிந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 123.90 அடியாக உள்ளது. 803 க.அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 700 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 63.80 அடியாக உள்ளது. 1139 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 52.70 அடியாக உள்ளது. 55 கனஅடி நீர் வருகிறது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.44 அடியாக உள்ளது. 34 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 3.2, தேக்கடி 1, போடி 1.2, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 1, பெரியகுளம் 1.6, ஆண்டிபட்டி 8 மி.மீ. மழையளவு பதிவானது.

    • சம்பவத்தன்று தனது வீட்டு முன்பு பைக்கை நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
    • மறுநாள் காலையில பார்த்த போது பைக்கை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது.

    சின்னமனூர்:

    வீரபாண்டி வெங்கடாசல புரத்தை சேர்ந்தவர் மார்க்கண்டேயன் (வயது 39). சம்பவத்தன்று தனது வீட்டு முன்பு பைக்கை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலையில பார்த்த போது பைக்கை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    முத்துதேவன்பட்டியை சேர்ந்தவர் வீரமணி (31). செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தனது பைக்கை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து வீரபாண்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற கார்த்திக் மாயமானார்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் ராஜா ரைஸ்மில் தெருவை சேர்ந்த பாண்டியராஜன் மகன் கார்த்திக் (வயது20). இவர் தேனியில் உள்ள கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற கார்த்திக் மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் பெற்றோர்கள் தேடினர். ஆனால் எங்கும் கிடைக்காததால் சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை கார்த்திக் தனது வீட்டு மாடியில் உள்ள அறையில் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார்.

    இதை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சின்னமனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கார்த்திக் தன்னுடன் படித்த போடியை சேர்ந்த ஒரு மாணவியை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவர் காதலை ஏற்கவில்லை. இதனால் மாணவியை தேடி சென்றபோது அவர் காதலிக்க மறுத்ததால் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ×