என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிங்கம்புணரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி அருகே உள்ள மூவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது38). விறகு வெட்டும் தொழிலாளி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. 

    இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து எஸ்.வி. மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொரோனா பணியில் உயிரிழந்த அரசு அலுவலர்கள் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
    சிவகங்கை:

    தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் தர்மராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தடுப்பு பணியில் வருவாய்த்துறை மற்றும் பிற அரசு அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு ஈடுபடும் அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவமும் தற்போது ஏற்பட்டு வருகிறது. உயிரிழந்த அரசு அலுவலர்களின் குடும்பத்தினருக்கு தகுதியின் அடிப்படையிலும், கருணை அடிப்படையிலும் பணி நியமனம் மற்றும் தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த பிற அரசு அலுவலர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படும் அரசு அலுவலர்களுக்கு முழு செலவு தொகையை காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கவும், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள அரசு அலுவலர்களுக்கு தனி வார்டில் உயர்தர சிகிச்சை அளிப்பதோடு கருணை தொகை ரூ.2 லட்சம் உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சிவகங்கை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    சிவகங்கை:

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த 3 கல்வி மாவட்டங்களில் 284 பள்ளிகள் உள்ளன.

    இந்த பள்ளிகளில் 10-ம் வகுப்பில் படித்த 9,117 மாணவர்கள், 9,031 மாணவிகள் என மொத்தம் 18,148 மாணவ- மாணவிகள் அரசு பொதுத்தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதன்படி சிவகங்கை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ- மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த தகவலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலுமுத்து தெரிவித்துள்ளார்.
    தமிழக அரசின் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்புக்கான புதிய வலைதளம் தொடங்கப்பட்டு உள்ளது என்று சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைதோறும் அலுவலக அளவில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும், 3 மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட அளவிலான பெரிய வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது.

    தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முகாம்கள் நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வேலைதேடும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசால் தற்போது இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தும் வகையில் புதிதாக இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் தங்கள் கல்வித்தகுதிக்கு பொருத்தமான வேலையை எளிதில் தேர்வு செய்யும் வகையில் https://www.tnp-r-iv-at-e-j-obs.tn.gov.in என்ற வலைதளத்தை உருவாக்கி உள்ளது.

    இந்த வலைதளத்தில் வேலை தேடும் இளைஞர்கள் தங்கள் கல்வித்தகுதி மற்றும் சுயவிவரங்களை பதிவு செய்து தங்களுக்கு பொருத்தமான பணி வாய்ப்பினை பெறலாம். இந்த வலைதளத்தில் மாவட்டம் வாரியாக, கல்வித்தகுதிமற்றும் சம்பளம் வாரியாக மற்றும் தொழில் வாரியாக பணிகளைதேர்வு செய்யும் வசதி உள்ளது. இதற்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

    மேற்காணும் இணையதளத்தில் தமிழக அளவில் இதுவரை 747 வேலையளிப்பவர்களும், 31,283 வேலைநாடுனர்களும் பதிவுசெய்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் 12 வேலையளிப்பவர்களும் 493 வேலைநாடும் இளைஞர்களும் பதிவு செய்துள்ளனர்.

    இதுவரை பதிவு செய்யாதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் விவரங்களை மேற்காணும் இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    காளையார்கோவில் அருகே நண்பர்களுடன் நின்றிருந்த வாலிபரை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர்.
    காளையார்கோவில்:

    காளையார்கோவில் அருகே உள்ள உலகஊரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் அருண்குமார் (வயது 23). இவர் நேற்று மாலை காளையார்கோவிலை அடுத்த மாந்தாளி கண்மாய் பகுதியில் தனது நண்பர்களுடன் நின்றிருந்தபோது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் அருண்குமாரை குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர். 

    இது குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட அருண்குமார் மீது காளையார்கோவில், கோவை ஆகிய பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதும், எனவே முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடத்திருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.
    புதுவயல் பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே சாக்கவயல் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புதுவயல், கண்டனூர், மித்ராவயல்,

    பெரியக்கோட்டை, சாக்கோட்டை, பீர்க்கலைக்காடு, வீரசேகரபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று காரைக்குடி மின் வாரிய செயற்பொறியாளர் (பகிர்மானம்) ஜான்சன் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கையில் ரூ.15.60 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட காதி கிராப்ட் விற்பனை மைய கட்டிடத்தை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை காந்தி வீதியில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்தின் காதி கிராப்ட் விற்பனை மையம் ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். தமிழக கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரிய துறை அமைச்சர் பாஸ்கரன் சீரமைக்கப்பட்ட விற்பனை மையத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 2 விற்பனை நிலையங்கள் மூலம் கடந்த ஆண்டு ரூ.64.96 லட்சம் அளவுக்கு கதர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. காரைக்குடி அருகே கண்டனூரில் ஒரு நவீன திரவ சோப்பு அலகு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு திரவ ஷாம்பு, குளியல் நீர்மம் மற்றும் கை கழுவும் திரவம் உற்பத்தி செய்யப்படுகிறது. விரைவில் இங்கு கை சுத்திகரிப்பான் (சானிடைசர்), தரை கழுவும் திரவம் ஆகியவையும் தயாரிக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரிய மண்டல துணை இயக்குனர் அருணாச்சலம், உதவி இயக்குனர்கள் குமார்(சிவகங்கை), பாரதி (மதுரை), துணை கலெக்டர் (பயிற்சி) கீர்த்தனா, கூட்டுறவு சங்க இயக்குனர் கருணாகரன், எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் கருணாகரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரன், கூட்டுறவு அச்சக சங்க தலைவர் சசிக்குமார், கூட்டுறவு விற்பனை பண்டக சாலை தலைவர் ஆனந்தன், மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் ராஜா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராமசாமி, தாசில்தார் மைலாவதி, யூனியன் துணைத்தலைவர் கேசவன் மற்றும் செல்வமணி, கோபி சிவாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    பக்கத்து வீட்டு சண்டையை வேடிக்கை பார்த்த பட்டதாரி வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த திருவேகம்பத்து பகுதியில் திராணி என்ற கிராமத்தை சேர்ந்தவர், சுப்பிரமணி. அவருடைய மகன் சக்திவேல் (வயது 24). பி.பி.ஏ. பட்டதாரி. வெளிநாட்டில் வேலைக்கு செல்ல ஏற்பாடு செய்து வந்தார்.

    அதே கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் மணிவேல் (25). இவர் குடிபோதையில் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவிலும் வீட்டில் தகராறு செய்துள்ளார்.

    அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் சக்திவேல் மொட்டை மாடியில் நின்று சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த மணிவேல், கத்தியை எடுத்துச் சென்று சக்திவேலை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடியதாக தெரியவருகிறது. சக்திவேல் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் ரத்தவெள்ளத்தில் சக்திவேல் அங்கு பிணமாக கிடந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவேகம்பத்து போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள காட்டுப்பகுதியில் நின்றிருந்த மணிவேலை கைது செய்தனர்.

    இதுபற்றி போலீஸ் விசாரணையில், சக்திவேலுக்கும் மணிவேலுக்கும் சிறுவயதில் இருந்தே பிடிக்காதாம். மேலும் மணிவேலுவின் தங்கையை சக்திவேல் காதலித்து வந்துள்ளார். இதனால் அவரை மணிவேல் கண்டித்துள்ளார். இதனாலும் முன்விரோதம் இருந்துள்ளது.

    இந்தநிலையில் சம்பவத்தன்று குடும்ப தகராறை வேடிக்கை பார்த்ததால் மணிவேல் ஆத்திரம் அடைந்து, சக்திவேலை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக தெரியவந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.

    கைதான மணிவேலை தேவகோட்டை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    திருப்பத்தூர் அருகே தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, கம்பனூர், தென்கரை ஆகிய வன பகுதியில் உள்ள ஏராளமான மான்கள் தண்ணீர் தேடி சாலையை கடக்கும்போது விபத்தில் சிக்கியும், நாய்களிடம் கடிபட்டும் இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதுதவிர தற்போது காடு மற்றும் விவசாய நிலங்களை அழித்து, அவற்றில் முள்வேலி அமைத்து வீடு கட்டி வருவதால் காட்டில் வாழும் மான்கள், மலைபாம்பு ஆகியவை தொடர்ந்து ஊருக்குள் வருகின்றன. இந்நிலையில் திருப்பத்தூர் அருகே தம்பிபட்டி பகுதியில் புள்ளி மான் ஒன்று தண்ணீர் தேடி ஊருக்குள் வந்தபோது அங்கிருந்த நாய்கள் அதை விரட்டி சென்று கடித்தன. இதில் அந்த புள்ளி மான் இறந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த புள்ளி மானை கைப்பற்றி திருப்பத்தூர் கால்நடை மருத்துவர் முன்னிலையில் உடல்கூறு பரிசோதனை செய்து வனச்சரக அலுவலக வன பகுதியில் புதைத்தனர்.
    ‘தினத்தந்தி‘ செய்தி எதிரொலியாக ஏரியூர் அருகே காவிரி ஆற்றில் அனுமதியின்றி இயக்கப்பட்ட 4 பரிசல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ஏரியூர்:

    கொரோனா ஊரடங்கு காரணமாக ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு பஸ், ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் கோட்டையூர் முதல் தர்மபுரி மாவட்டம் ஒட்டனூர் வரையிலான காவிரி ஆற்றுப்பகுதியை உரிய அனுமதியின்றி பரிசல்கள் மூலம் பலர் கடந்து வந்தனர்.

    இதன் காரணமாக ஏரியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டது. தர்மபுரி-சேலம் மாவட்டங்களிடையே காவிரி ஆற்றில் உரிய அனுமதியின்றி பரிசல்கள் இயக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று ஏரியூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதுதொடர்பான செய்தி படத்துடன் ‘தினத்தந்தி‘யில் வெளியானது. அதன் எதிரொலியாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவுப்படி பென்னாகரம் தாசில்தார் சேதுலிங்கம் மற்றும் வருவாய்த்துறையினர் ஏரியூரை அடுத்த நாகமரை பகுதியில் உள்ள ஒட்டனூர்-கோட்டையூர் பரிசல் துறையில் திடீர் ஆய்வு நடத்தினார்கள். அங்கு இயக்கத்திற்காக தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 பரிசல்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பரிசல்களை அனுமதியின்றி இயக்கியது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமதியின்றி பரிசல்களை இயக்கிய பெரியசாமி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இளையான்குடி அருகே சாலைக்கிராமம், சூராணம் பகுதிகளில் மணல் அள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
    இளையான்குடி:

    இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் மற்றும் சூராணம் பிர்காவில் உள்ள பகுதிகளில் சவடு மண் அள்ள மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்று, அரசின் விதிமுறைகளை மீறி மணல் கடத்தல்காரர்கள் திருட்டுத்தனமாக மணல் அள்ளி வந்தனர். இதுகுறித்து சாலைக்கிராமம் விவசாயி ராதாகிருஷ்ணன் மற்றும் சமுத்திரம் கணேசன் ஆகியோர் இளையான்குடி இலவச சட்ட உதவி மையத்தை நாடினர். 

    இலவச சட்ட உதவி மைய வக்கீல் அண்ணாதுரை மூலம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜா மாவட்ட கலெக்டரின் உத்தரவை மீறி மணல் அள்ள சாலைக்கிராமம் மற்றும் சூராணம் பகுதிகளில் மணல் அள்ள தடை உத்தரவு பிறப்பித்தார்.
    வீட்டை காலி செய்ய வற்புறுத்தியதால் மனவருத்தம் அடைந்த பெண், தனது 2 மகன்கள், மகளுக்கு காபியில் விஷம் கலந்து கொடுத்தார். பின்னர் அவரும் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    தேவகோட்டை:

    வீட்டை காலி செய்ய வற்புறுத்தியதால் மனவருத்தம் அடைந்த பெண், தனது 2 மகன்கள், மகளுக்கு காபியில் விஷம் கலந்து கொடுத்தார். பின்னர் அவரும் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவருடைய பிள்ளைகள் 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சிதம்பரநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ். இவர் கடந்த 4 மாதத்திற்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இவருடைய மனைவி பிரியதர்சினி (வயது 36). இவர்களுக்கு பர்வதவர்த்தினி (16) என்ற மகளும், நீலகண்டன் (15), ஜெய்ஹரிகிருஷ்ணன்(11) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் ராமதாசின் பெரியம்மாள் வசந்தி(75) என்பவரது வீட்டின் மாடியில் வசித்து வந்தனர்.

    இந்தநிலையில் ராமதாஸ் இறந்த பின்னர் வீட்டை காலி செய்யும்படி பிரியதர்சினியிடம், வசந்தி வற்புறுத்தினாராம். இதனால் வசந்தி மற்றும் பிரியதர்சினிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

    நேற்று முன்தினம் மாலையில் வசந்தியின் தம்பியும் காரைக்குடி தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிபவருமான ராஜேந்திரன் அங்கு வந்து வசந்திக்கு ஆதரவாக பேசி, பிரியதர்சினியிடம் வாக்குவாதம் செய்து அவரை தாக்க முயன்றதாகவும் தெரியவருகிறது.

    இதனால் மனவருத்தம் அடைந்த பிரியதர்சினி தனது 3 பிள்ளைகளுக்கும் காபியில் விஷம் மற்றும் எலி மருந்தை கலந்துகொடுத்து விட்டு அவரும் குடித்துள்ளார்.பின்னர் 4 பேரும் அடுத்தடுத்து வீட்டில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினர். இதை அக்கம்பக்கத்தினர் கவனித்து, பிரியதர்சினியின் தாயார் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    பின்னர் தாயும், அவருடைய மகள் மற்றும் 2 மகன்களும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியதர்சினி பரிதாபமாக இறந்தார்.

    அவருடைய மகள், மகன்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் 3 பேரும் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    ×