என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
கொரோனா பணியில் உயிரிழந்த அலுவலர்கள் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்
கொரோனா பணியில் உயிரிழந்த அரசு அலுவலர்கள் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சிவகங்கை:
தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் தர்மராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தடுப்பு பணியில் வருவாய்த்துறை மற்றும் பிற அரசு அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு ஈடுபடும் அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவமும் தற்போது ஏற்பட்டு வருகிறது. உயிரிழந்த அரசு அலுவலர்களின் குடும்பத்தினருக்கு தகுதியின் அடிப்படையிலும், கருணை அடிப்படையிலும் பணி நியமனம் மற்றும் தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த பிற அரசு அலுவலர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படும் அரசு அலுவலர்களுக்கு முழு செலவு தொகையை காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கவும், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள அரசு அலுவலர்களுக்கு தனி வார்டில் உயர்தர சிகிச்சை அளிப்பதோடு கருணை தொகை ரூ.2 லட்சம் உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






