என் மலர்tooltip icon

    சிவகங்கை

    காரைக்குடியில் ஊரடங்கு விதிகளை மீறும் வர்த்தகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி தொழில் வணிக கழக தலைவர் சாமி திராவிடமணி, செயலாளர் கண்ணப்பன் ஆகியோர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று பரவல் அதிகமான காரணத்தால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் தினமும் வணிகர்கள் தங்களது வர்த்தக நிறுவனங்களை இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்க அனுமதித்துள்ளது. ஆனால் காரைக்குடி நகரில் பெரும்பாலான வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் விதிகளை மீறி தங்களது வர்த்தக நிறுவனங்களை இரவு 7 மணிக்கும் மேலாக திறந்து வைத்திருப்பதாக போலீசார் வருத்தம் தெரிவிக்கின்றனர். 

    எனவே நாளை (திங்கட்கிழமை) முதல் அரசு விதிமுறைகளை மீறி வர்த்தக நிறுவனங்களை திறந்து வைக்கக்கூடாது. இதனை பின்பற்றாத வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கீழடியில் அகழாய்வு பணியின் போது மண் குடுவை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது தொல்லியல் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய 4 பகுதிகளில் 6-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதில் பல்வேறு அரிய பொருட்கள், மனித எலும்புக்கூடுகள் கிடைத்த வண்ணம் உள்ளன. மேலும் கீழடி தொழில் நகரமாக விளங்கியதற்கான ஆதாரங்களும் கிடைத்து வருகின்றன. 

    இந்தநிலையில் கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் நேற்று மண் குடுவை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது தொல்லியல் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது.
    காரைக்குடி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆக்கி பயிற்சி மையத்தின் மேலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே பள்ளத்தூர் பகுதியில் ஆக்கி பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தின் மேலாளராக இருக்கும் சங்கர் (வயது 41) என்பவர் தனது வீட்டிலேயே மாணவிகளுக்கு தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கி ஆக்கி பயிற்சி அளித்து வந்தார்.

    இதனை கேள்விப்பட்ட மதுரையைச் சேர்ந்த ஒருவர் 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் தனது 2 மகள்கள் ஆக்கி விளையாட்டில் ஆர்வமாக இருந்ததால் அவர்கள் இருவரையும் காரைக்குடி பகுதியில் உள்ள பள்ளியில் படிக்க வைத்து சங்கரின் ஆக்கி பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டார்.

    இதனால் அந்த 2 மாணவிகளும் சங்கரின் வீட்டிலேயே தங்கி அவரது பயிற்சி மையத்தில் ஆக்கி பயிற்சி பெற்று வந்தனர். இந்த நிலையில் மேலாளர் சங்கர் (41) அந்த 2 மாணவிகளுக்கும் வீட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவருகிறது. இதற்கு அவரது உதவியாளர் கண்ணன் (51) என்பவரும் உடந்தையாக இருந்தாராம்.

    இதைத் தொடர்ந்து தங்களது சொந்த ஊருக்கு சென்ற 2 மாணவிகளும் சங்கரின் பாலியல் தொல்லை குறித்து பெற்றோரிடம் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதனிடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து காரைக்குடி மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, சங்கர், கண்ணன் ஆகிய இருவர் மீதும் போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
    விவசாய நிலங்களில் பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஏரியூர்:

    கோவை அருகே இருகூர் முதல் பெங்களூர் தேவனகொந்தி வரை எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை விவசாய விளைநிலங்கள் வழியாக செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா பழையூர் முதல் கிட்டம்பட்டி வரை உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெரும்பாலை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எண்ணெய் குழாய் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆண்டியப்பன், தமிழரசன், பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மல்லையன், ஒருங்கிணைப்பாளர் அர்ச்சுனன், நிர்வாகிகள் அன்பு, சின்னசாமி, நக்கீரன், சக்திவேல், செல்வம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி தளவாய்அள்ளி, குப்புசெட்டிப்பட்டி, நடப்பனஅள்ளி, மாக்கனூர், ஒன்னப்பகவுண்டனஅள்ளி, பாரதிபுரம், வேப்பிலை அள்ளி, பனைகுளம், கிட்டம்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகி சரவணன், வட்டார செயலாளர் சக்திவேல், கூட்டமைப்பு நிர்வாகிகள் கிருஷ்ணன், ஜெகநாதன், சண்முகம் உள்பட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு பெட்ரோலிய எண்ணெய் குழாய்களை பதிக்கும் திட்டத்தை மாற்று வழியில் சாலையோரமாக கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி மதுக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கொரோனா தொற்றால் இறந்த மதுக்கடை பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணி காலத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அருகே கொல்லங்குடியில் உள்ள மதுக்கடை முன்பு மதுக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் தொழிற்சங்கங்களை சேர்ந்த கருப்பசாமி தலைமை தாங்கினார். தாளைமுத்து, கண்ணன், மலைராஜ், முருகேசன், கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் அடுத்த கட்டமாக வருகிற 25-ந் தேதி பகல் 12 மணி வரை கடைகளை அடைத்துவிட்டு வேலை நிறுத்த போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதேபோல் மானாமதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தாலுகா பொறுப்பாளர் பூமிநாதன், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மாவட்ட துணைச் செயலாளர் கமலகண்ணன், ஏ.ஐ.டி.சி மாவட்ட செயலாளர் தாளமுத்து, விற்பனையாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், இணைச்செயலாளர் சிவசண்முகம், விடுதலை முன்னணி பொறுப்பாளர் முத்துச்சாமி, விற்பனை பணியாளர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    சாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடக்காமல் அங்குள்ள ஒரு தனிநபருக்கு சொந்தமான கிணற்று பாசனத்துடன் கூடிய நிலத்தை வாங்கி அதில் அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து கடலை செடி பயிரிட்டு பராமரிக்க தொடங்கினர்.
    காரைக்குடி:

    கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தது மட்டுமல்லாமல் பெரும்பாலானோருக்கு வேலை வாய்ப்பும் பறிபோனது. இதுதவிர பல்வேறு தொழில்கள் முடக்கம் அடைந்து வேறு மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர். இந்த கொரோனா ஊரடங்கு காலங்களில் சில கிராமங்களில் வீட்டில் இருந்தபடியே கூடை முடைவது, பெட்டிகள் தயாரிப்பது உள்ளிட்ட சிறுதொழில்கள் செய்து பிழைப்பை நடத்தி வருகின்றனர். இன்னும் சில கிராமத்தில் கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான விளைநிலத்தில் காய்கறிகளை பயிரிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடக்காமல் அங்குள்ள ஒரு தனிநபருக்கு சொந்தமான கிணற்று பாசனத்துடன் கூடிய நிலத்தை வாங்கி அதில் அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து கடலை செடி பயிரிட்டு பராமரிக்க தொடங்கினர்.

    தற்போது இந்த செடிகள் எல்லாம் விளைந்து அறுவடைக்கு தயாராகி உள்ளது. இதையடுத்து இக்கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்று கூடி தற்போது அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சுமார் 6 ஏக்கர் வரை உள்ள நிலத்தில் இந்த செடிகளை பயிரிட்டு சுமார் 20 டன் வரை கடலை அறுவடை செய்து வருகின்றனர். இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட கடலை செடிகளை பிரித்தெடுக்கும் பணியிலும், அவற்றை வெயிலில் காய வைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அக்கிராம மக்கள் தரப்பில் கூறியதாவது:- கொரோனா ஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இந்த கடலை செடிகளை பயிரிட்டுள்ளோம். தற்போது இந்த செடிகள் அறுவடைக்கு தயாராக இருந்ததால் தற்போது அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கிணற்று பாசனம் மூலம் விளைந்த இந்த கடலை செடிகளில் பூச்சிகள் அதிகமாக இருந்ததால் விளைச்சல் சற்று குறைந்துள்ளது. மேலும் இங்கு அறுவடை செய்யப்பட்ட இந்த கடலை விற்பனைக்காகவும் அனுப்பி வைக்கப்பட உள்ளது” என்றனர்.
    ஏரியூர் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி நேற்று 2-வது நாளாக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
    ஏரியூர்:

    ஏரியூர் ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சாரஅள்ளி ஊராட்சி செல்லமுடி கிராமத்தில் 1200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த 1½ ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண ஆழ்துளை கிணறு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தடைபட்டதாக கூறப்படுகிறது. செல்லமுடி கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கோரியும், ஆழ்துளை கிணறு உடனே அமைக்க வலியுறுத்தியும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி நேற்று 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பென்னாகரம் தாசில்தார் சேதுலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் மற்றும் ஏரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்கவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    சாக்கோட்டை பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள சாக்கவயல் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புதுவயல், கண்டனூர், மித்ராவயல், பெரியகோட்டை, சாக்கோட்டை, பீர்க்கலைக்காடு, வீரசேகரபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. 

    மேற்கண்ட தகவலை காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் (பகிர்மானம்) ஜான்சன் கூறினார்.
    இளையான்குடி அருகே லாரி மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இளையான்குடி:

    இளையான்குடி அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்த முனியசாமி மனைவி தனலட்சுமி (வயது38). இவர் தனது மகன் ஹாரிஸ் உடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே பரமக்குடி நோக்கி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் சிகிச்சைக்காக இளையான்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மணிகண்டனை கைது செய்தனர்.
    ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 898 ஆக இருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் மொத்தம் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 957 ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மட்டும் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பி உள்ளார். மாவட்டத்தில் இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து 3 ஆயிரத்து 378 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போதைய நிலையில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் கோவிட் கேர் மையங்களில் 493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 86 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 154 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் பூரண குணமடைந்த 31 பேர் நேற்று வீடு திரும்பினர். இவர்களை மருத்துவக்கல்லூரி முதல்வர் ரெத்தினவேல், மருத்துவ அலுவலர் மீனா, ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சூரியநாராயணன், உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் முகமதுரபி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். மேலும் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் கொரோனா சிகிச்சையில் இருந்த சிவகங்கையை சேர்ந்த 60 வயது ஆண், மேலப்பூங்குடியை சேர்ந்த 57 வயது பெண், காரைக்குடியை சேர்ந்த 55 வயது பெண் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் சான்றுபெற இணைய தள முகவரியில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 2020-21-ம் கல்வியாண்டில் முன்னாள் படை வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டின்படி மேல் படிப்பில் சேர சான்று தேவைப்படுவோர் இணைய தள முகவரியில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

    மேலும் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் முன்னாள் படைவீரர் இட ஒதுக்கீடு கட்டத்தில் தேர்வு செய்து முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் சான்றின் நகலை கட்டாயம் இணைத்து அனுப்ப வேண்டும். கலந்தாய்வின்போது அசல் சான்றை தவறாமல் எடுத்துச்செல்ல வேண்டும். மேலும் இடஒதுக்கீட்டின்படி படிப்பில் சேருபவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதால் உரிய விவரத்தை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04575-240483 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    மாற்றுத்திறனாளிகள் நிவாரணத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா நோய் தடுப்பினையொட்டி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் 3,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 22 வகையான உணவுப்பொருட்கள், காய்கறிகள், கபசுரகுடிநீர் பாக்கெட்டுகள், முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நிவாரணத்தொகை பெற்றுள்ளனர். இந்த நிவாரணத்தொகை அரசு ஊழியர்களாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் முதல் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வருமான உச்சவரம்பின்றி வழங்கப்படுகிறது.

    எனவே இதுவரை ரூ.1,000 நிவாரணத்தொகை பெறாத சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வருகிற 31-ந் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் பகுதியினை சேர்ந்த ஊராட்சி எழுத்தர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களை ஒப்படைத்து ரூ.1,000 நிவாரணத் தொகை பெற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×