என் மலர்
சேலம்
- கல்லூரியில் உள்ள விடுதியில் மதன்குமார் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.
- கொலை நடந்த விடுதியை சோதனை செய்த போலீசார் அங்கிருந்த மதன்குமார் செல்போன் ஒன்றையும் கைப்பற்றினர்.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரை சேர்ந்தவர் மதியழகன் காண்டிராக்டர். இவரது மனைவி பூங்கொடி. இந்த தம்பதிக்கு மதன்குமார் (29)என்ற மகனும், ஜனனிஸ்ரீ (24) என்ற மகளும் இருந்தனர். இவர் தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார்.
எம்.பி.பி.எஸ். படித்துள்ள டாக்டர் மதன்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எம்.பி.பி.எஸ். படித்த இவர் 2 ஆண்டுகள் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றினார். தொடர்ந்து நீட் தேர்வு எழுதிய அவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவக் கல்லூரியில் தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுவியல் மேற்படிப்பில் சேர்ந்தார்.
தற்போது 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் உள்ள விடுதியில் மதன்குமார் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் திடீரென மதன்குமார் மாயமானார். சக மாணவர்கள் அவரை பல இடங்களில் தேடினர். அப்போது விடுதியின் பின்புறம் மதன்குமார் பிணமாக கிடந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்களும் கல்லூரி நிர்வாகத்தினரும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில், விடுதியின் மாடியில் வைத்து டாக்டர் மதன்குமாரை கொலை செய்த மர்ம நபர்கள் அவரது உடலை தீ வைத்து எரித்துள்ளனர். பின்னர் பாதி எரிந்த நிலையில் உடலை தூக்கி கீழே போட்டதில் அந்த உடல் விடுதியின் பின்புறத்தில் விழுந்து கிடந்தது தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் கொலை நடந்த விடுதியை சோதனை செய்த போலீசார் அங்கிருந்த மதன்குமார் செல்போன் ஒன்றையும் கைப்பற்றினர்.
மேலும் அங்கு பதிவாகி இருந்த சில கை ரேகைகளையும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். விடுதியின் மேற்கூரையில் பதிவாகி இருந்த கால் தடங்களையும் போலீசார் பதிவு செய்துள்ளனர்.
இது தவிர சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் விடுதியில் இருந்த மாணவர்களிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.
கடந்த 31-ந் தேதி இரவு மதன்குமார் அவரது செல்போனில் இருந்து கடைசியாக பேசி உள்ளார். அவர் யாரிடம் பேசி உள்ளார் என்பது குறித்தும், என்ன பேசினார் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே டாக்டர் மதன்குமார் இறப்புக்கு உண்மையான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர்கள் ஏதாவது போட்டியில் கொலை செய்திருக்கலாமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதன்பேரிலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையே டாக்டர் மதன்குமார் இறந்த தகவல் நாமக்கல் அருகே புத்தூரில் வசிக்கும் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அதனை கேட்டு கதறி துடித்த அவர்கள் உடனடியாக கோவைக்கு சென்று அங்கிருந்து விமானத்தில் டெல்லி சென்றனர்.
தற்போது டெல்லியில் இருந்து ஜார்கண்டிற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து அவர்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையிலும் போலீசார் விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறார்கள். மேலும் பெற்றோரிடம் ஒப்புதல் பெற்றதும் மதன்குமார் உடல் பிரேத பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட உள்ளது.
தொடர்ந்து மதன்குமார் உடலை நாமக்கல் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகளும், மதன்குமாரின் பெற்றோர்களும் இறங்கி உள்ளனர். இதையொட்டி அவரது சொந்த ஊரில் உறவினர்கள் திரண்டு உள்ளனர். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
- ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சக்தி சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.
- போலீசார் சக்தியின் மனைவி மணிமுடியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் கொசவன்கரடு பகுதியை சேர்ந்தவர் சக்தி (42). லாரி டிரைவர். இவரது மனைவி மணிமுடி (35). இவர்களது மகள் கேந்திரியா (11) அங்குள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
இந்த நிலையில் சக்தி குடி பழக்கத்திற்கு அடிமையானதால் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று இரவும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே தகராறு முற்றவே ஆத்திரமடைந்த மணிமுடி கணவர் சக்தியை வீட்டிலிருந்த இரும்பு கம்பியால் தலையில் பலமாக அடித்துள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சக்தி சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சக்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சக்தியின் மனைவி மணிமுடியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசால் நகர நிலவரித்திட்ட தனி தாசில்தாரால் பொது மக்களுக்கு பட்டா வழங்கும் பணி மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- பதிவுப்பத்திர ஆவணங்களை கொண்டு மனு செய்து நகர நிலவரித்திட்ட தனி தாசில்தார் வழியாக பட்டா பெற்றுக் கொள்ளலாம்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாநகராட்சியில் 35 வார்டுகள் மற்றும் 1301 பிளாக்குகளுக்கு நகர நில அளவை வருவாய் பின் தொடர் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அரசால் நகர நிலவரித்திட்ட தனி தாசில்தாரால் பொது மக்களுக்கு பட்டா வழங்கும் பணி மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தாசில்தார் அலுவலகம்
இதன் பொருட்டு சேலம் நகர நிலவரித்திட்ட தனி தாசில்தார் அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு இது சேலம் மேற்கு தாசில்தார் அலுவலக முதல் தளத்தில் செயல்பட்டு வருகிறது.
சேலம் மாநகராட்சியில் நகர நிலவரித்திட்டத்தின் கீழ் பட்டாதாரர்கள் இணையதளம் வழியாக தங்களிடம் உள்ள பதிவுப்பத்திர ஆவணங்களை கொண்டு மனு செய்து நகர நிலவரித்திட்ட தனி தாசில்தார் வழியாக பட்டா பெற்றுக் கொள்ளலாம்.
எனவே சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலம், சேலம் மேற்கு மற்றும் சேலம் தெற்கு வட்டங்களை சார்ந்த நில உரிமையாளர்கள் இதன் வாயிலாக பட்டாக்கள் பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப் படுகிறது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- விஜய் பாண்டி என்பவரது மீன் கடையில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
- வீட்டிற்கு வந்து பெற்றோருடன் தூங்கிய விஜய் அதிகாலையில் சேலம் 3 ரோடு பகுதியில் உள்ள தனது அறைக்கு சென்றார்.
சேலம்:
சேலம் திருவாகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் விஜய் (20).
இவர் அந்த பகுதியில் உள்ள பாண்டி என்பவரது மீன் கடையில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நாமக்கல்லில் தனியாக கடை வைக்க முடிவு செய்த விஜய் வேலையை விட்டுவிட்டு 3 நாட்களுக்கு முன்பு நாமக்கல்லுக்கு சென்றார்.
இதையடுத்து விஜயை தொடர்பு கொண்ட பாண்டி மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஏன் வேலையை விட்டு சென்றாய்? எங்கள் கடையிலேயே வேலை பார்த்திருக்கலாமே என்று கேட்டனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விஜய் பாண்டியின் மனைவியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனை செல்போனில் பதிவு செய்த பாண்டி சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் அவர்களை அழைத்து நேற்று இரவு விசாரணை நடத்தினர்.
இரவு 11 மணி ஆகிவிட்டதால் போலீசார் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இன்று காலை போலீஸ் நிலையத்திற்கு வருமாறு கூறினர்.
இதையடுத்து வீட்டிற்கு வந்து பெற்றோருடன் தூங்கிய விஜய் அதிகாலையில் சேலம் 3 ரோடு பகுதியில் உள்ள தனது அறைக்கு சென்றார். பின்னர் அங்கு சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவர் தங்கி இருக்கும் அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அறை கதவை தட்டியும் கதவு திறக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு விஜய் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கதறி அழுதனர்.
சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். விஜய்யை இன்றும் விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறியிருந்ததால் பயந்து போய் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லட்சுமண ராஜ் (வயது 56). இவரது மனைவி ரேணுகாதேவி (53). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
- தற்சமயம் லட்சுமண ராஜ் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்.
சேலம்:
சேலம் இரும்பாலை அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டி அடுத்த மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமண ராஜ் (வயது 56). இவரது மனைவி ரேணுகாதேவி (53). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
தற்சமயம் லட்சுமண ராஜ் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். வாரம் ஒரு முறை வீட்டிற்கு வந்து செல்லும் லட்சுமண ராஜ் நேற்று முன்தினம் காலை ரேணுகாதேவியிடம் போன் செய்து பேசி உள்ளார். அப்போது தனக்கு உடல் நலக்குறைவாக உள்ளதாக ரேணுகாதேவி தெரிவித்துள்ளார்.
கதவு திறக்கவில்லை
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வீட்டிற்கு பால் போட வந்த நபர் கதவை தட்டியும் ரேணுகாதேவி கதவை திறக்காததால் அவர் தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து சென்று விட்டார்.
இன்று காலையும் பால்காரர் கதவை தட்டிய போது ரேணுகாதேவி கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த பால்காரர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தார்.
மர்ம சாவு
இது குறித்து தகவல் அறிந்ததும் இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரேணுகாதேவி சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையிலேயே இறந்து கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
ரேணுகா தேவியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரேணுகா தேவியின் கணவர் லட்சுமணராஜிக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர் காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்.
பரபரப்பு
பூட்டிய வீட்டில் பெண் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கலெக்டர் கார்மேகம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியுடன் ஆலோசனை நடத்தினார்.
- சேலம் மாநகரத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைப்பதற்காக 170 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மற்றும் மாநகரத்தில் தற்காலிகமாக அனுமதி பெற்று வைக்கப்படும் பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் பொருட்டு அளவுக்கு அதிகமாக பட்டாசுகளை சேமிக்கும் கடைகளை போலீசார் மூலம் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது சேலம் மாநகரத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைப்பதற்காக 170 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் எத்தனை பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதே சமயம் தகுந்த விசாரணையின் அடிப்ப டையில் அனுமதி அளிக்கப்படும் கடைகளில் அளவுக்கு அதிகமாக பட்டாசுகளை குவித்திருக்கும் கடைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும், விபத்துகளை தடுக்கவும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- சேலம் செவ்வாய்ப் பேட்டை லாரி மார்க்கெட் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் வலது பகுதியில் சுரங்கபாதை உள்ளது.
- இன்று காலை இந்த சுரங்க பாதையில் தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
சேலம்:
சேலம் செவ்வாய்ப் பேட்டை லாரி மார்க்கெட் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் வலது பகுதியில் சுரங்கபாதை உள்ளது. இன்று காலை இந்த சுரங்க பாதையில் தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்த லாரி டிரைவர்கள் செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் வாலிபரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தினர். மேலும் வாலிபர் இறந்து கிடந்த மேம்பாலத்தின் மீது மதுபாட்டில் இருந்தது. இதனால் மேம்பாலத்தின் மீது அமர்ந்து மது குடித்தபோது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது கொலை செய்து இங்கு வீசிச் சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வார இறுதி நாட்களை முன்னிட்டு சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் நாளை (3-ந்தேதி) முதல் வருகிற 6-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப் பட்டுள்ளது.
- மேலும் வழிதடப் பஸ்கள் மூலம் கூடுதல் நடைகள் இயக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.
சேலம்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் கோட்ட போக்கு வரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்ட லத்தில் 853 பஸ்களும் சேர்த்து மொத்தமாக 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
150 சிறப்பு பஸ்கள்
இந்த நிலையில் வார இறுதி நாட்களை முன்னிட்டு சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் நாளை (3-ந்தேதி) முதல் வருகிற 6-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப் பட்டுள்ளது. மேலும் வழிதடப் பஸ்கள் மூலம் கூடுதல் நடைகள் இயக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.
இந்த பஸ்கள் சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூருக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் இயக்கப்பட உள்ளது.
மேலும் பெங்களுருவில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களுருவுக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்துக்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருவுக்கும் இயக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு பஸ்களை பயன்படுத்தி பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலை தவிர்த்து, பாதுகாப்பான பயணம் செய்திடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடப்பதாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இன்று காலை 11 மணி அளவில் திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடப்பதாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது மயங்கி கிடந்த நபர் இறந்திருப்பது தெரியவந்தது.இதனை தொடர்ந்து போலீசார் இறந்த கிடந்த நபரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சி வெள்ளைக் கரடு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
- இங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கூடாது.
கருப்பூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சி வெள்ளைக் கரடு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. தற்போது அந்த கடையை அதிகாரிகள் குடியிருப்பு பகுதிக்கு மாற்றம் செய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் நெருஞ்சிபட்டி, மாங்குப்பை ஆகிய கிராம பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கூடாது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் பாதிக்கப்படுவர். தற்போது உள்ள இடத்திலேயே டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
அதனை வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.கண்ணன், துணைத் தலைவர் ராஜா, ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி ஆகியோர் பெற்றுக்கொண்டு அரசுக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தனர்.
- அதிர்ஷ்ட மூர்த்தி (27), இவர் கடந்த 28-ந் தேதி கேரளாவில் வேலைக்கு செல்வதற்காக தனது மனைவி புஷ்பாவுடன் சேலம் ரெயில் நிலையம் வந்தார்.
- நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிர்ஷ்ட மூர்த்தி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
சேலம்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் அதிர்ஷ்ட மூர்த்தி (27), இவர் கடந்த 28-ந் தேதி கேரளாவில் வேலைக்கு செல்வதற்காக தனது மனைவி புஷ்பாவுடன் சேலம் ரெயில் நிலையம் வந்தார். பின்னர் நடை மேடை 1-ல் சேலம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது புஷ்பா கழிவறைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிர்ஷ்ட மூர்த்தி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அதிர்ஷ்ட மூர்த்தி சேலம் ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மனைவியுடன் சேலம் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு செல்ல வந்தேன். அப்போது கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற எனது மனைவி மீண்டும் திரும்பி வரவில்லை.
ஆனால் எனது தாயாரின் நகை 20 பவுன், 15 ஆயிரத்தை எடுத்து சென்று விட்டார். அவரை மீட்டு தர வேண்டும் என்று கூறி இருந்தார். அதன் பேரில் நேற்று வழக்குப்பதிவு செய்த போலீசார் நகை, பணத்துடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்கள்.
- ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் கொப்பரை மற்றும் மக்காச்சோளம் ஏலம் நடைபெற்றது.
- இந்த ஏலத்தில் மக்காசோளம் மற்றும் தேங்காய் கொப்பரை மொத்தம் ரூ.7.50 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.
வாழப்பாடி:
வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் கொப்பரை மற்றும் மக்காச்சோளம் ஏலம் நடைபெற்றது. 264 மூட்டைகளில் 26.379 டன் மக்காசோளம், 56 மூட்டைகளில் 2.04 டன் தேங்காய் கொப்பரை விற்பனைக்கு வந்தது. ஒரு குவிண்டால் மக்காசோளம் அதிகபட்சம் ரூ.2245-க்கும் குறைந்தபட்சம் ரூ.2237-க்கும் விற்பனையானது. தேங்காய் கொப்பரை ஒரு கிலோ அதிகபட்சம் ரூ.87.77-க்கும், குறைந்தபட்சம் ரூ.58.75-க்கும் விற்பனையானது.
இந்த ஏலத்தில் மக்காசோளம் மற்றும் தேங்காய் கொப்பரை மொத்தம் ரூ.7.50 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. தேங்காய் கொப்பரை விலை உயர்ந்து வருவதால் வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து தரகர் இல்லாமல் விவசாயிகள் விற்பனை செய்து முழு தொகையினை பெறலாம். மேலும் ரூ. 3 லட்சம் வரை பொருளீட்டுக்கடன் கடன் பெறலாமென, ஒழுங்குமுறை விற்பனை கூட பொறுப்பாளர் பிரபாவதி தெரிவித்துள்ளார்.






