3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை வட மாநில தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

பீகார் மாநில தொழிலாளர்கள் 11 பேர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை வட மாநில தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
Published on

சேலம்:

சேலம் அழகாபுரம் பகுதியில் பணி புரிந்து வரும் பீகார் மாநில தொழிலாளர்கள் 11 பேர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவர் எங்களை ஒப்பந்தம் அடிப்படையில் பணி செய்வதற்காக சேலம் அழைத்து வந்தார். அழகாபுரம் பகுதியில் நடைபெற்று வரும் கட்டிட பணிக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்த்தார். அன்று முதல் இன்று வரை எங்களுக்கு ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட உரிமையா ளரிடம் கேட்டபோது பணியில் சேர்த்து விட்ட ராஜாவிடம் கேட்குமாறு தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் 3 மாதங்களாக ஊதியம் கிடைக்காமல் உள்ளது. இதனால் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் தவித்து வருகிறோம்.

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல கூட முடியாமல் உள்ளளோம். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு ஊதியத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த நிலையில் போலீசார் ஒப்பந்ததாரரான ராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்தனர். அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பிறகு ராஜா மற்றும் வட மாநில தொழிலாளர்களை அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com