என் மலர்
சேலம்
- மேட்டூர் அணை கடந்த மாதம் 30-ந் தேதி நிரம்பியது.
- அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து காணப்படுகிறது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணை கடந்த மாதம் 30-ந் தேதி நிரம்பியது. பின்னர் நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக மீண்டும் நிரம்பியது. தற்போது அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து காணப்படுகிறது. நேற்று 6 ஆயிரத்து 598 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று அது 4 ஆயிரத்து 284 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 12 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 117.90 அடியாக குறைந்து காணப்பட்டது.
- தி.மு.க. அரசு திட்டமிட்டு பழி வாங்கும் விதமாக பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்து வருகிறது.
- தேர்தல் பிரசாரத்தின்போது கோவையில் 500 நாட்களில் 100 திட்டம் கொண்டு வருவேன் என்று கூறினார்.
சேலம்:
சேலம் ஓமலூரில் கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. அரசு திட்டமிட்டு பழி வாங்கும் விதமாக பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்து வருகிறது. இவற்றை முறியடிக்கும் வகையில் அ.தி.மு.க. வக்கீல் அணி ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. அண்மையில் தி.மு.க. சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாணயம், சென்னையில் வெளியிடப்பட்டடது.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மூத்த மத்திய மந்திரி கலந்து கொண்டார். மேலும் விழாவில் பா.ஜனதா மாநில தலைவர், தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரி மற்றும் பா.ஜனதாவினர் பலர் கலந்து கொண்டனர். ஆனால் தி.மு.க. இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. அவர்கள் அந்த கூட்டணியின் தேசிய தலைவர்களான சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அல்லது ராகுல்காந்தியை அழைக்கவில்லை. தி.மு.க. ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு ஊழல் நிறைந்த ஆட்சியாக இது இருக்கிறது. அதை மறைக்க மத்திய அரசு தயவு ஆட்சியாளர்களுக்கு தேவைப்படுகிறது. இதனால் தான் நாணய வெளியீட்டு விழாவில் மத்திய மந்திரியை அழைத்து வெளியிட்டு உள்ளனர். இதைச் சொன்னால் தி.மு.க.வினருக்கும், பா.ஜனதாவினருக்கும் கோபம் வருகிறது.
தி.மு.க. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சி. ஆனால் இந்தியா கூட்டணி கட்சியினரை அழைக்காமல் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியை சேர்ந்தவர்களை அழைத்தது சந்தேமாக உள்ளது என்று மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதுபற்றி கேட்டால் இது மத்திய அரசு விழா என்று கூறுகின்றனர். அழைப்பிதழில் மாநில அரசு எம்பளம், தலைமை செயலாளர் அழைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே இது மாநில அரசு விழாதான். இதைச் சொன்னால் மாநில தலைவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. என்னை வசைபாடுகிறார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வந்தபோது அவருக்கு சிறப்பு, புகழ் சேர்க்கும் வகையில் அ.தி.மு.க சர்பில் நாங்களும் நாணயம் வெளியிட்டோம். அந்த நாணயத்தை அ.தி.மு.க. தொண்டனாக முதலமைச்சராக அப்போது நான் வெளியிட்டேன். அதை சிறுமைப்படுததி பேசி உள்ளது சிறுபிள்ளைத்தனமானது. எம்.ஜி.ஆர். 3 முறை முதலமைச்சராக இருந்தவர். வரலாறு தெரியாமல் பா.ஜனதா தலைவர் பேசுகிறார். எனக்கு தெரிந்து அவர் 1984-ல் தான் பிறந்துள்ளார். அவர் பிறப்பதற்கு முன்பே எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்து மக்களின் நன்மதிப்பை பெற்றவர். பாரத ரத்னா விருது, மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் கொள்கைகள், திட்டங்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. உங்கள் தலைவர்கள் யாரும் அப்போது எந்த பதவியிலும் இல்லை. பா.ஜனதாவின் அடையாளத்தை வைத்துதான் நீங்கள் வெற்றி பெற முடியும். அ.தி.மு.க. ஊழல் ஆட்சி என்று கூட்டணியில் சேர்ந்து 2021 தேர்தலில் போட்டியிட்டு சொந்த தொகுதியிலேயே தோல்வி அடைந்தபோது தெரியவில்லையா? மசோதா நிறைவேற்ற ஆதரவு தேவைப்படும் போது தெரியவில்லையா? கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவின் கடன் 55 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் 168 கோடியாக அதிகரித்து உள்ளது. அப்படி என்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளீர்கள்.
தேர்தல் பிரசாரத்தின்போது கோவையில் 500 நாட்களில் 100 திட்டம் கொண்டு வருவேன் என்று கூறினார். அப்படி என்ன திட்டத்தை கொண்டு வந்தார். அவர் பேசுவதெல்லாம் பொய். அ.தி.மு.க. 10 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு துறைகள் வளர்ச்சி பெற்று பல விருதுகள் பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். கால்நடை பூங்கா பூட்டியே கிடக்கிறது. ராஜ்நாத் சிங் கருணாநிதியை புகழ்ந்ததை ரஜினிகாந்த் வெளிப்படையாகவே பேசி உள்ளார். அதை வரவேற்கிறேன். தி.மு.க.-பா.ஜனதா வெளியே எதிரியாகவும், உள்ளே உறவாகவும் உள்ளனர். ஐ.ஏ.ஏஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பந்தாடப்பட்டு வருகின்றனர். அண்ணாமலை உழைக்காமல் பதவிக்கு வந்தவர். அதனால் தலை, கால் புரியாமல் ஆடிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு முதலீடு வாய். தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம், புயலுக்கு எந்த நிவாரணமும் வாங்கி தரவில்லை. அ.தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தாலும் மாநில உரிமைக்கு குரல் கொடுத்து வருகிறோம்.
- ரெயில் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் குற்றச்செயலில் அவர் ஈடுபட்டது தெரிய வந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம், காட்பாடி வழியாக சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் காட்பாடி அருகே உள்ள முகுந்தராயபுரம் ரெயில் நிலையம்-திருவலம் ரெயில் நிலையத்திற்கும் இடையே ரெயில்களை கவிழ்க்கும் வகையில் தண்டவாளத்தின் மீது சுமார் 9 அடி நீளமுள்ள இரும்பு துண்டு மற்றும் கற்களை கடந்த 17-ந் தேதி மர்ம நபர்கள் வைத்து சென்றனர் . இதனை அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் பார்த்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் இது தொடர்பாக முத்தையாபுரம் ரெயில்வே அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் சேலம் ரெயில்வே போலீஸ் டி.எஸ்.பி. பெரியசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி அந்த மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தண்டவாளத்தில் இரும்பு ராடுகளை வைத்தது ராணிப்பேட்டை மாவட்டம் வாலஜா பகுதியை சேர்ந்த நவீன் (21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது ரெயில் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் குற்றச்செயலில் அவர் ஈடுபட்டது தெரிய வந்தது.
வாலிபரை கைது செய்த தனிப்படையினரை தமிழ்நாடு ரெயில்வே போலீஸ் கூடுதல் இயக்குனர் வனிதா மற்றும் சூப்பிரண்டு ஈஸ்வரன் ஆகியோர் பாராட்டினர்.
- மேட்டூர் அணை இந்தாண்டில் 2-வது முறையாக நிரம்பியது.
- டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைய தொடங்கியது.
சேலம்:
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணை கடந்த 30-ந் தேதி நிரம்பியது. பின்னர் நீர்வரத்தை விட அதிகளவில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
இதற்கிடையே நீர்வரத்து மீண்டும் அதிகரித்ததன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் 2-வது முறையாக நிரம்பியது. அப்போது அதிகபட்சமாக வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. பின்னர் மீண்டும் நீர்வரத்து குறைந்தது. ஆனாலும் டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைய தொடங்கியது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 118.75 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 467 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 700 கனஅடியும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
- போலி என்.சி.சி. முகாம் நடத்தி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது.
- எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்டார். கடந்த 19-ந்தேதி சிவராமன் கைது செய்யப்பட்டார்.
போலீசார் கைது செய்ய முயன்றபோது தப்பி ஓட முயற்சித்ததில் அவரது காலில் முறிவு ஏற்பட்டது. இதற்கு மாவு கட்டு போடப்பட்டிருந்தது.
கிருஷ்ணகிரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட சிவராமன் திடீரென சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கைது செய்யப்படுவதற்கு ஒருநாளைக்கு முன்னதாகவே எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பத்தில் இயங்கி வந்த ஒரு தனியார் பள்ளியில் என்.சி.சி. முகாம் என்ற பெயரில் போலி முகாம் நடந்தது. அதில் பங்கேற்ற 8-ம் வகுப்பு மாணவி, போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் சிவராமன் 13 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சிவராமன் மற்றும் சம்பவத்தை மறைத்ததாக பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட மொத்தம் 11 பேரை பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் அவசர கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், இந்த வழக்கு தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். அதேபோல நேரில் விசாரணை நடத்தி உரிய பரிந்துரைகள் அளிக்க சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் ஒரு பல்நோக்கு குழுவும் அமைத்தார்.
சேலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டது குறித்து போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறுகையில் "மாணவி பலாத்கார வழக்கில் கைதாகி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிவராமன் சிகிச்சை பெற்று வந்தார். முன்னதாக கடந்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் அவர் எலிபேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில், தற்போது தப்பி ஓட முயன்ற போது கால் முறிவு ஏற்பட்டு சிவராமன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். முன்னதாக கைதாவதற்கு ஒரு நாளைக்கு முன்பு கைதுக்கு பயந்து, அவர் எலி பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
தற்போது சிவராமனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டடார்" நேற்று விளக்கம் அளித்திருந்தார்.
- ரகசிய இடத்தில் வைத்து சிவராமனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
- சிவராமனுக்கு விஷம் ரத்தத்தில் கலந்து இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.
சேலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காவேரிப்பட்டணம் காந்திநகர் காலனியை சேர்ந்த சிவராமன் (35 )என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அரசியல் கட்சியை சேர்ந்த அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
மேலும் பள்ளி மாணவி பலாத்கார சம்பவத்தை மறைக்க முயன்றதாக பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் உள்பட மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் சிவராமன் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
ரகசிய இடத்தில் வைத்து சிவராமனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது தப்பித்து ஓட முயன்றபோது தவறி விழுந்ததில் அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பலத்த பாதுகாப்புடன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சிவராமன் எலிகளுக்கு கொடுக்கப்படும் விஷ மாத்திரையை கைது செய்யப்பட்ட 18-ந் தேதி அன்று சாப்பிட்டதாக போலீசாரிடம் நேற்று தெரிவித்தார். உடனடியாக அவருக்கு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ரத்த பரிசோதனையும் செய்தனர்.
அப்போது அவர் எலிகளுக்கான விஷ மாத்திரையை தின்றதும், அந்த விஷம் ரத்தத்தில் கலந்து இருப்பதையும் டாக்டர்கள் உறுதி செய்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலையும் போலீசார் கைது செய்தனர்.
- அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் கார் டிரைவர் கனகராஜ். இவர் தலைமையிலான கும்பலைச் சேர்ந்தவர்கள் கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் பங்களாவில் கொள்ளை அடிக்க சென்றனர். அப்போது காவலாளியை கொன்று விட்டு கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்த நிலையில் கனகராஜ் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் இறந்தார். இந்த கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலையும் போலீசார் கைது செய்தனர். இவர் கனகராஜின் சிம்கார்டை எரித்து சாட்சியங்களை அழித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தாரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் அழகு துரையின் சட்டையை பிடித்து தள்ளியதாக போலீசார் தனபாலை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் நேற்று தனபாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது . அவரை உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சிறையில் இருந்த போதும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பலமுறை கேட்டும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
- போலீசார் அருண்குமார் மீது மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சந்திரபால், இவரது மனைவி சவுதாமணி (43), முதுநிலை பட்டதாரி ஆசிரியையான இவர் சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணி புரிந்து வருகிறார்.
இவரிடம் சென்னையை சேர்ந்த அருண்குமார் என்பவர் தொடர்பு கொண்டார். தொடர்ந்து சவுதாமணியின் வீட்டிற்கு வந்த அருண்குமார் அரசு பள்ளியில் அவருக்கு ஆசிரியை பணி வாங்கி தருவதாகவும், அவரது கணவரிடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளர் பணி வாங்கி தருவதாகவும் கூறி உள்ளார்.
இதனை நம்பிய சவுதாமணி, அருண்குமாருக்கு கூகுள் பே மூலம் கடந்த 2021 மற்றும் 22-ம் ஆண்டுகளில் ரூ. 12 லட்சத்து 25 ஆயிரத்து 250 ரூபாயை 15 தவணைகளாக அனுப்பி உள்ளார். ஆனால் அவர் கூறிய படி இதுவரை வேலை வாங்கி கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சவுதாமணி சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் விசாரணை நடத்திய அம்மாப்பேட்டை போலீசார் அருண்குமார் மீது மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
- காவிரி கரையோர மாவட்டங்கள் வெள்ளக்காடானது.
- அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்:
காவிரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியது. இதனால் உபரிநீர் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த மாதம் 30-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.
தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்ததால் அது அப்படியே உபரிநீராக 16 கண் பாலம் வழியாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இதன் காரணமாக காவிரி கரையோர மாவட்டங்கள் வெள்ளக்காடானது.
இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்தும் குறைந்தது. இதன் காரணமாக உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
பின்னர் மீண்டும் கடந்த வாரம் நீர்வரத்து அதிகரித்தது. அதிகபட்சமாக வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தால் அணை இந்தாண்டில் 2-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து மீண்டும் உபரிநீர் 16 கண் பாலம் வழியாக வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து வழக்கம் போல் நீர்வரத்து குறைந்ததால் உபரிநீரும் நிறுத்தப்பட்டது. அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து விட்டதால் அணைக்கு நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 8 ஆயிரத்து 563 கனஅடியாக குறைந்தது. ஆனால் தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் அணையின் நீர்மட்டம் 119.76 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருவதால் நீர்மட்டம் குறைய தொடங்கியது.
- தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
- ஓமலூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளிலும் கனமழை கொட்டியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
குறிப்பாக சேலம் மாநகரில் நேற்று கோரிமேடு, சாரதா கல்லூரி சாலை, புதிய பஸ் நிலையம், அத்வைத ஆசிரம ரோடு உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது . தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் பல இடங்களில் சாக்கடை கழிவு நீரும் மழை நீரும் சேர்ந்து சாலையில் ஓடியதால் வாகன ஓட்டிகள், சாலைகளில் நடந்து சென்றவர்கள் தவியாய் தவித்தனர்.
மேலும் திடீரென பெய்த மழையால் பள்ளி, கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவ-மாணவிகள் போக்குவரத்து நெரிசலால் பல மணி நேரம் தாமதத்திற்கு பின்பே வீடு திரும்பினர். குறிப்பாக சாரதா கல்லூரி சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவியதால் வாகன ஓட்டிகள், மற்றும் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதே போல சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஓமலூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இதனால் அந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓமலூரில் 15 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 1.3, ஏற்காடு 3.6, வாழப்பாடி, ஆனைமடுவு 2, கெங்கவல்லி 4, தம்மம்பட்டி 11, ஏத்தாப்பூர் 3, கரியகோவில் 3, எடப்பாடி 1.2, மி.மீ. என மாவட்டம் முழுவதும் 46.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
ஏற்காடு:
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஏற்காடும் ஒன்றாகும். இங்கு வார இறுதி நாட்களிலும் அரசு விடுமுறை தினங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
தற்போது தொடர் விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர். ஏற்காட்டில் தொடர் மழை பெய்து குளுமையான சீதோசன நிலை நிலவி வருவதால் இதை அனுபவிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இவர்கள் இங்குள்ள முக்கிய சுற்றுலா இடங்களான அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், லேடிஸ் சீட், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் குகை கோவில், ஐந்திணை பூங்கா போன்ற இடங்களை குடும்பத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
குறிப்பாக படகு இல்லத்தில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு பயணச் சீட்டு பெற்று இயற்கை அழகை ரசித்தவாறு படகு பயணம் செய்தனர்.
தொடர் மழை காரணமாக ஏற்காடு மலையின் பல்வேறு பகுதிகளில் அருவிகள் உருவாகி உள்ளது. அதில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை ஏற்காட்டில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஏற்காடு மலை பாதை 18-வது கொண்டை ஊசி வளைவு அருகில் ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நீண்ட நேரம் மலைப்பாதையில் அணிவகுத்து நின்றன. பலத்த மழை பெய்து கொண்டே இருந்ததால் மரத்தை வெட்டி அப்புறப்படுத்த நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் வரவில்லை.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஏற்காடு வாழ் இளைஞர்கள் தாங்களாகவே மரங்களையும் மரக்கிளைகளையும் அகற்றினர். இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கு பின்பு போக்குவரத்து தொடங்கியது.
- அகில இந்திய மருத்துவ சங்கம் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
- நீண்ட வரிசையில் வெகு நேரம் நோயாளிகள் காத்து நின்று சிகிச்சை பெற்று சென்றனர்.
சேலம்:
மேற்கு வங்காள தலைநகர் கோல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் பணியில் இருந்த 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய கேட்டு நாடு முழுவதும் டாக்டர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அகில இந்திய மருத்துவ சங்கம் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. அதன் படி நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்படும் 200-க்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் இன்று காலை 6 மணி முதல் வெளி நோயாளிகள் பிரிவு மூடப்பட்டது.
அவசர சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பெரும்பாலான ஆஸ்பத்திரிகள் வெளி நோயாளிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வெளி நோயாளிகள் பிரிவு மூடப்பட்டதால் காய்ச்சல் தலைவலி, வயிற்று வலி உள்பட சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் கடும் அவதிப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளி நோயாளிகள் பிரிவில் அதிக நேரம் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. நீண்ட வரிசையில் வெகு நேரம் நோயாளிகள் காத்து நின்று சிகிச்சை பெற்று சென்றனர்.
இதேபோல் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கொல்கத்தா மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், சம்பவத்தில் தொடர்புடையவர்களை தூக்கிலிட வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.தொடர்ந்து மருத்துவமனை யில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை மட்டும் நடைபெறுகிறது.






