என் மலர்tooltip icon

    சேலம்

    • குழந்தைக்கு 2 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்ததால் தாரமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பார்த்து வந்துள்ளனர்.
    • குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காமல் குழந்தையை அனுப்பி வைத்ததால் தான் குழந்தை இறந்ததாக கூறி பெற்றோர் கதறி அழுதனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் 5-வது வார்டு வெட்னி கரடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 35)-பிரியா (27).

    இந்த தம்பதிக்கு திலீப் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு 2 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்ததால் தாரமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பார்த்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு இரவு 7 மணிக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர், மேல் சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினார்.

    ஆனால் குழந்தையின் பெற்றோர் தனியார் ஆம்புலன்ஸில் சேலம் அரசு மருத்துவமனைக்கு 8 மணிக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதி செய்வதற்கு ஒரு மணி நேரம் தாமதம் ஆனதாக தெரிகிறது.

    அதன்பிறகு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க சென்றபோது சிறிது நேரத்தில் குழந்தை இறந்து விட்டது.

    இதனால் இன்று காலை ஈஸ்வரன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தாரமங்கலம் அரசு மருத்துவ மனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காமல் குழந்தையை அனுப்பி வைத்ததால் தான் குழந்தை இறந்ததாக கூறி பெற்றோர் கதறி அழுதனர்.

    • அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.

    கடந்த 19-ம் தேதி விநாடிக்கு 1022 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 755 கன அடியாக சரிந்தது. இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து 824 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது.

    கடந்த 19-ம் தேதி 108.37 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 107.2 அடியாக சரிந்தது.

    இன்று நீர்மட்டம் மேலும் சரிந்து காலை 8 மணி நிலவரப்படி 106.61 அடியானது. இதனால் கடந்த 3 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் சுமார் 2 அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இனிவரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

    • அண்ணாதுரை (வயது 24). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது.
    • இருட்டுக்கல் முனியப்பன் கோவில் அருகில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள ஏரி வயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் அண்ணாதுரை (வயது 24). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. அதனால் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அண்ணாதுரை, கடந்த 2-ந் தேதி இருட்டுக்கல் முனியப்பன் கோவில் அருகில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த, உறவினர்கள் அண்ணாதுரையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அண்ணாதுரை, நேற்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு நபர் ஹேமந்தின் விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
    • இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மணியனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்த் (வயது 22). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த மாதம் 26- ந் தேதி அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் ஹேமந்தின் விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெரு பகுதியைச் சேர்ந்த பிரதாப் (32) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சேலம் 4- ஆவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி யுவராஜ், செல்போன் பறித்த வழக்கில் பிரதாப்புக்கு 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

    • காயத்ரி (வயது 20). திருச்செங்கோ ட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம், சி.ஏ. படித்து வருகிறார்.
    • இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பி கல்லூரி சென்ற அவர் மறுபடியும் மாலை வீடு திரும்பவில்லை.

    அன்னதானப்பட்டி:

    சேலம் சீலநாயக்கன்பட்டி ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் . இவரது மகள் காயத்ரி (வயது 20). திருச்செங்கோ ட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம், சி.ஏ. படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பி கல்லூரி சென்ற அவர் மறுபடியும் மாலை வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடியும் எங்கும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இருந்து சேலம் நோக்கி இன்று அதிகாலை சொகுசு கார் சென்று கொண்டிருந்தது.
    • கார் முன்னால் சென்ற ஒரு கண்டெய்னர் லாரியில் உரசி தலை குப்புற கவிழ்ந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இருந்து சேலம் நோக்கி இன்று அதிகாலை சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. சேலம் எருமாபாளையம் அருகே பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே வந்தபோது, கார் முன்னால் சென்ற ஒரு கண்டெய்னர் லாரியில் உரசி தலை குப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், காருக்குள் சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். காரில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக லேசான சிராய்ப்புகளுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்த தகவலின் பேரில், கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலையில் கவிழ்ந்து கிடந்த காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    மேலும் போலீசாரின் விசாரணையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயா (வயது 54) என்பவர் பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    நேற்று இரவு உறவினர்களான ரவிச்சந்திரன் (55), மாணிக்கம் (36), ஹரிசங்கர் (33) மற்றும் எடப்பாடி குள்ளம்பட்டி பகுதியை சேர்ந்த முருகன் (36) ஆகியோர், விஜயாவை பாண்டிச்சேரியில் இருந்து அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு திரும்பும் போது கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. டிரைவரின் தூக்க கலக்கத்தால் நடந்த இந்த விபத்து குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • புதுப்பாளையம் கோவில் உண்டியல், வாழப்பாடி ஆத்துமேடு காமராஜர் நகர் அருகே வீசப்பட்டு கிடந்தது.
    • மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன் மர்ம நபர்கள், அந்த பகுதியில் உள்ள கோவில்களில் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த பணத்தை திருடி சென்றது. இதனையடுத்து, வாழப்பாடி போலீசார், இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் கோவில் உண்டியல் திருட்டு கட்டுக்குள் வந்தது.

    இந்த நிலையில், நேற்று நள்ளிரவு வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையம் மாரியம்மன் கோவில், சிங்கிபுரம் நாடார் தெரு மாரியம்மன் கோவில்களில், முகமூடி அணிந்த இருவர், பூட்டை உடைத்து உள்ளே சென்று, உண்டியல்களை உடைத்து அதிலிருந்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.


    ஆத்து மேடு பகுதியில் வீசப்பட்டு கிடந்த உண்டியல்.

    ஆத்து மேடு பகுதியில் வீசப்பட்டு கிடந்த உண்டியல்.



    சிங்கிபுரம் நாடார் தெரு மாரியம்மன் கோவிலுக்குள் போகும் முகமூடி கொள்ளையர்.

    சிங்கிபுரம் நாடார் தெரு மாரியம்மன் கோவிலுக்குள் போகும் முகமூடி கொள்ளையர்.


    புதுப்பாளையம் கோவில் உண்டியல், வாழப்பாடி ஆத்துமேடு காமராஜர் நகர் அருகே வீசப்பட்டு கிடந்தது. இதனால், இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் ஹரிசங்கரி, வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார், இரு கோவில்களையும் பார்வையிட்டனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி உள்ள

    முகமூடி அணிந்த கொள்ளையர்களின் காட்சிகளை வைத்தும், கைரேகை நிபு ணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி அருகே 2 கோவில்களில் முகமூடி கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துச் சென்ற சம்பவத்தால் இப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    • சேலம் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடி யிருப்போர் நலச் சங்கங்கள், தனிநபர்கள்,உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படும்.
    • பசுமை முதன்மையாளர் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 நபர்கள், நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும்.

    சேலம்:

    தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனி நபர்கள், அமைப்புகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கி, தலா ரூ.1 லட்சம் வீதம் வழங்கப்பட உள்ளது.

    சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள்,பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள். நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு, சூழலியல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த நடவடிக்கை, கடற்கரைசார் பகுதிகள் பாதுகாப்பு நடவடிக்கை ஆகிய தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக சேலம் மாவட்டத்தில் செயல்ப டுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடி யிருப்போர் நலச் சங்கங்கள், தனிநபர்கள்,உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படும்.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலை மையில் அமைக்கப்பட்ட பசுமை முதன்மையாளர் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 நபர்கள், நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளமான www.tnpcb.gov.in -ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பசுமை முதன்மையாளர் விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15-ந்தேதி கடைசி நாள் ஆகும் எனவே தகுதி

    யானவர்கள் விண்ணப்பிக்கு மாறு கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • ஆரூர்பட்டி கிராமம், சேடப்பட்டி வாடன்வளவு பகுதியை சேர்ந்த விவசாயி வெள்ளைய கவுண்டர் (வயது 70). இவர் வீட்டில் 10 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.
    • ஆடுகள் கழுத்து, தொடை ஆகிய இடங்களில் ரத்த காயங்களுடன் கீழே விழுந்து துடி துடித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    தாரமங்கலம்,:

    தாரமங்கலம் அருகிலுள்ள ஆரூர்பட்டி கிராமம், சேடப்பட்டி வாடன்வளவு பகுதியை சேர்ந்த விவசாயி வெள்ளைய கவுண்டர் (வயது 70). இவர் வீட்டில் 10 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார், நேற்றுமுன்தினம் வழக்கம் போல் ஆடுகளை இரவு வீட்டிற்கு வெளியே கட்டி வைத்து விட்டு தூங்க சென்றுள்ளார், பிறகு அதிகாலை நான்கு மணியளவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வெள்ளைய கவுண்டர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளார், அப்போது ஆடுகள் கழுத்து, தொடை ஆகிய இடங்களில் ரத்த காயங்களுடன் கீழே விழுந்து துடி துடித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கம் உறவினர்களை அழைத்து பார்த்த போது ஏற்கனவே நான்கு ஆடுகள் இறந்து விட்ட நிலையில் மூன்று ஆடுகள் பலத்த காயங் களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆடுகளை காப்பாற்ற வேண்டி அமரகுந்தி அரசு கால்நடை மருத்துவர்களுக்கு கொடுத்த தகவளின் படி சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர், சம்பவம் குறித்து கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பீதியில் உள்ளனர்.

    • தை அமாவாசையான இன்று, கோவில்கள், நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி சேலத்தில் பல்வேறு இடங்களில் நடந்தது.
    • சேலம் சுகவனேஸ்வரர் கோவில் நந்தவனத்தில் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    சேலம்:

    ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் காவிரியில் புனித நீராடி முன்னோர்க ளுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது ஐதீகம்.

    அதன்படி, தை அமாவாசையான இன்று, கோவில்கள், நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி சேலத்தில் பல்வேறு இடங்களில் நடந்தது.

    சுகவனேஸ்வரர் கோவில்

    சேலம் சுகவனேஸ்வரர் கோவில் நந்தவனத்தில் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் வாழை இலையில் பூ, தேங்காய் மற்றும் சில காய்கறிகள், பழங்களை வைத்தனர். பின்னர் அர்ச்சர்கள் மந்திரம் முழங்கினர். அப்போது தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் தங்களின் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து எள் சாதம் கலந்தள உணவை சம்பந்தப்பட்டவர்கள் காகங்களுக்கு வைத்து வழிபட்டனர். மஞ்சள், அரிசி கலந்ததை தர்ப்பணம் செய்ய வந்தவர்களின் குடும்பத்தினரின் நெற்றியில் அர்ச்சகர்கள் இட்டனர்.

    இதேபோல் சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரியிலும் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். சேலம் சின்னதிருப்பதி பெருமாள் கோவில் அருகே உள்ள தெப்பக்குளத்திலும் பலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, வழிபாடு நடத்தினர்.

    மேட்டூர்

    மேட்டூர் காவிரி பாலம் மற்றும் மேட்டூர் அனல்மின் நிலைய புதுப்பாலம் ஆகிய பகுதியில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் மறைந்த முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தி, தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு காவிரியில் குளித்து தங்களது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    • கோடை காலத்தில் மட்டுமே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கனஅடிக்கு கீழே சரியும்.
    • மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 1,022 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 883 கனஅடியாக குறைந்தது.

    இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 755 கன அடியாக சரிந்தது. கடும் வறட்சி காலமான, கோடை காலத்தில் மட்டுமே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கனஅடிக்கு கீழே சரியும். ஆனால், நடப்பு ஆண்டில் ஜனவரி மாதத்திலேயே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கனஅடிக்கு கீழே சரிந்து உள்ளது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 107.79 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 107.20 அடியாக சரிந்துள்ளது.

    • நிச்சயம் செய்யப்பட்ட பெண், சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்பட பாணியில் அரவிந்த்துடன் செல்போனை மாற்றிக்கொண்டுள்ளார்.
    • நிர்வாண முறையில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் வீடியோ காலில் அரவிந்த் இருந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவருக்கு சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் நிச்சயம் செய்யப்பட்ட பெண், சமீபத்தில் வெளியான 'லவ் டுடே' திரைப்பட பாணியில் அரவிந்த்துடன் செல்போனை மாற்றிக்கொண்டுள்ளார்.

    அப்போது, நிர்வாண முறையில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் வீடியோ காலில் அரவிந்த் இருந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரிடம் திருமண நிச்சயிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

    இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அரவிந்தை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×