என் மலர்
சேலம்
- பா.ம.க நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விக்னேஷ், கிருஷ்ணராஜை வெட்டிக்கொன்றதை ஒப்புக்கொண்டு, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் ரெயில் நிலையம் அருகே மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் மீனா. இவர் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு மேச்சேரி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவருடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
இதனால் கிருஷ்ணராஜூக்கும், அவரது மனைவி லாவண்யாவிற்கும் தகராறு ஏற்பட்டது. கிருஷ்ணராஜ் லாவண்யாவை விவாகரத்து செய்துவிட்டு மீனாவுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். மீனாவிற்கு ஏற்கனவே விக்னேஷ் (வயது 30) என்ற மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் விக்னேஷ், ஆத்தூரில் உள்ள கசாப்புக் கடையில், இறைச்சி வெட்டுபவராக வேலை செய்து வருகிறார்.
கிருஷ்ணராஜ் ஜே.சி.பி எந்திரம் வைத்து தொழில் செய்து கொண்டு, சேலம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி துணைத் தலைவராகவும், திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில், மீனாவுக்கும், கிருஷ்ணராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணராஜ், மீனாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதை பார்த்த மீனாவின் மகன் விக்னேஷ், என் தாயை ஏன் அடித்தீர்கள்? எனக் கூறி ஆத்திரத்தில் கிருஷ்ணராஜை தாக்கினார். இதனால் பயந்து போன கிருஷ்ணராஜ், வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தார். பின்னர் அருகே உள்ள கதிரேசன் என்பவருடைய வீட்டின் வாசலில் நுழைந்துள்ளார்.
இதை பார்த்த விக்னேஷ், கையில் அரிவாளுடன் கிருஷ்ணராஜை பின்னாலேயே துரத்தி சென்று, கதிரேசன் வீட்டு வாசலிலேயே சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கிருஷ்ணராஜ், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.
இது குறித்து ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, விக்னேஷ், கிருஷ்ணராஜை வெட்டிக்கொன்றதை ஒப்புக்கொண்டு, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதைத் தொடர்ந்து போலீசார் விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பா.ம.க நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 22-ந்தேதி 106.61 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், படிப்படியாக சரிந்து இன்று காலை 104.60 அடியாக உள்ளது.
- கடந்த 4 நாட்களில் மட்டும் நீர்மட்டம் 2 அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர்:
கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.
நேற்று விநாடிக்கு 815 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை சற்று அதிகரித்து விநாடிக்கு 885 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரியில் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
கடந்த 22-ந்தேதி 106.61 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், படிப்படியாக சரிந்து இன்று காலை 104.60 அடியாக உள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் நீர்மட்டம் 2 அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால், மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.
- சுகவனேசுவரர் சுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கருணை இல்லத்தில் இருந்த சுமார் ரூ.5 லட்சம் உலோகப் பொருட்கள் திருட்டு.
- கருணை இல்லத்திற்குள் கல்லூரி மாணவர் ஒருவரும் , லுங்கி மற்றும் சிகப்பு சட்டை அணிந்த மற்றொரு நபரும் அங்கிருந்த பொருட்களை திருடி சென்றுவிட்டனர்.
சேலம்:
சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
சுகவனேசுவரர் சுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கருணை இல்லத்தில் இருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்புடைய நெய் டின்கள், அரிசி மூட்டைகள் , உலோகப்பொருட்கள் மற்றும் ஆகியவைகள் கணக்கில் கொண்டு வரப்படாமல் இருந்தது. இதுபற்றி தகவல் அளித்ததற்கு உடனடியாக அவைகளை கைப்பற்றி ரசீது போடுவதற்கு சக பணியாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கருணை இல்லத்திற்குள் கல்லூரி மாணவர் ஒருவரும் , லுங்கி மற்றும் சிகப்பு சட்டை அணிந்த மற்றொரு நபரும் அங்கிருந்த பொருட்களை திருடி சென்றுவிட்டனர். இது குறித்து உடனடியாக காவல் துறையில் விரிவான புகாரினை அளித்து, துறை ரீதியாகவும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். கோவிலில் திருட்டு போனதாக புகார் அளிக்கப்பட்டது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மேச்சேரி- ஓமலூர் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் மேலாளராக உள்ளார்.
- பங்க் ஊழியர்களிடம் வாலிபர் ஒருவர் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு, பெட்ரோல் பம்ப் மீது கல்லை கொண்டு எரிந்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள சாத்தப்பாடியை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 53). இவர் மேச்சேரி- ஓமலூர் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் மேலாளராக உள்ளார். கடந்த 17-ந்தேதி பங்க் ஊழியர்களிடம் வாலிபர் ஒருவர் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு, பெட்ரோல் பம்ப் மீது கல்லை கொண்டு எரிந்தார். இது தொடர்பாக வேலாயுதம், மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மேச்சேரி பாரப்பட்டியை சேர்ந்த சூர்யபிரகாஷ் (வயது 27) என்பவர் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சேலம் செவ்வாய்ப்பேட்டை எழுத்துக்கார தெருவில் சென்றாய பெருமாள் கோவில் உள்ளது.
- இந்த கோவிலில் மதில் சுவர் அருகே இறைச்சிக் கடை செயல்பட்டு வந்தது.
சேலம்:
சேலம் செவ்வாய்ப்பேட்டை எழுத்துக்கார தெருவில் சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மதில் சுவர் அருகே இறைச்சிக் கடை செயல்பட்டு வந்தது.
இதனை அகற்ற வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் சேலம்ஸ்ரீ, சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யாவிடம் மனு கொடுத்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட அவர், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
துணை கமிஷனர் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் வெங்கடேஷ் மேற்பார்வையில் செவ்வாய்ப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயதேவி, அந்த இறைச்சி கடையை போலீசார் உடன் சென்று அகற்ற நடவடிக்கை எடுத்தார். இதை அடுத்து அந்த இறைச்சிக் கடை அகற்றப்பட்டு உள்ளது. இதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே ஆன்மிக பிரிவு மாநில செயலாளர் சேலம் ஸ்ரீ, துணை கமிஷனர் லாவண்யா, உதவி கமிஷனர் வெங்கடேசன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
- தலைவாசல் தெற்கு வட்டார களஞ்சியம் சார்பில் 21-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
- மேலும் 233 களஞ்சியங்களில் இருந்து 485 பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள தலைவாசல் தெற்கு வட்டார களஞ்சியம் சார்பில் 21-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக வீரகனூர் கிளையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் பார்த்தசாரதி, வீரதனூரில் உள்ள வார்டு உறுப்பினர் சுமதி, வட்டாரத் தலைவிகள், பணியாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும் 233 களஞ்சியங்களில் இருந்து 485 பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் வட்டார பணியாளர் ஜமுனா வட்டாரத்தின் சிறப்புகளை பற்றி விளக்கி பேசினார். மேலும் வங்கி மேலாளர் பார்த்தசாரதி மகளிர் குழுவின் சிறப்பை பற்றியும், வங்கி கடனை திரும்ப செலுத்துதல் குறித்தும் பேசினார். முடிவில் வட்டாரத் தலைவி கல்யாணி நன்றி கூறினார். அனைவருக்கும் சிறுதானியம் வழங்கப்பட்டது.
- சோலவண்டியான் வளவு பகுதியில் ஓடும் சரபங்கா நதியில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக, பாப்பாம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது.
- தாரமங்கலம் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி பிணத்தை மீட்டனர்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி கிராமம்,சோலவண்டியான் வளவு பகுதியில் ஓடும் சரபங்கா நதியில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக, பாப்பாம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து வி.ஏ.ஓ ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாரமங்கலம் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி பிணத்தை மீட்டனர்.
போலீசார் விசாரணை யில், இறந்தவர் இடங்கணசாலை அருகிலுள்ள பாப்பாப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் சங்கர் (வயது 45), நெசவு தொழிலாளி என்பது தெரியவந்தது. அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உயிரிழந்த சங்கருக்கு, சுலோச்சனா என்ற மனைவியும் , 2 மகன், ஒரு மகள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள சங்கர், கடந்த 21-ந்தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்பாத நிலையில் நேற்று சரப்பங்கா நதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சங்கர் குடிபோதையில் தவறி விழுந்து இறந்தாரா? வேறு ஏதேனும் குடும்ப பிரச்சனையில் இறந்தாரா என்பது குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஏற்காட்டில் இருந்து சில்வர் ஓக் மரங்களை வெட்டி கடத்தி வந்த 7 லாரிகளை அப்போதைய சேலம் ஆர்.டி.ஓ. மடக்கி பிடித்து, வனக்காப்பாளர் ெஜயக்குமாரிடம் ஒப்படைத்தார்.
- இது தொடர்பாக ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ம் தேதி ெஜயக்குமார் என்ற வனக்காப்பாளர் பணியில் இருந்தார்.
அப்போது ஏற்காட்டில் இருந்து சில்வர் ஓக் மரங்களை வெட்டி கடத்தி வந்த 7 லாரிகளை அப்போதைய சேலம் ஆர்.டி.ஓ. மடக்கி பிடித்து, வனக்காப்பாளர் ெஜயக்குமாரிடம் ஒப்படைத்தார்.
இதனிடையே அதற்கு அடுத்த நாள் இரவு சோதனைசாவடிக்கு வந்த லாரி டிரைவர்கள் அய்யப்பன், சத்திய மூர்த்தி, பெரியபையன், சபரிவேல், குமார், செல்வராஜ் உள்பட 17 பேர் ஒன்று சேர்ந்து, அங்கு பணியில் இருந்த வனகாவலரை மிரட்டி ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன் சோதனை சாவடியின் கேட்டை உடைத்து லாரிகளை எடுத்துச் சென்று விட்டனர்.
இது தொடர்பாக ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சேலம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கிறிஸ்டல் பபிதா, வழக்கில் தொடர்புடைய 17 பேருக்கும் 2 வருடம் 7 மாத சிறை தண்டனையும், தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.2.25 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெரிய பையன், சித்தை–யகவுண்டர் ஆகியோர் இறந்து விட்டனர். மற்றவர்களை ெஜயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
- சேலம் கடைவீதி முதல் மற்றும் 2-ம் அக்ரஹாரம் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
- இதில் 18 வயதுக்குட்பட்ட 2 குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
சேலம்:
சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் குழந்தை தடுப்பு படையினர், போலீசார், தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்ககம் மற்றும் சைல்டு லைன் ஆகிய குழுவினர் நேற்று சேலம் கடைவீதி முதல் மற்றும் 2-ம் அக்ரஹாரம் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 18 வயதுக்குட்பட்ட 2 குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளின் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி கூறும் போது,' குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த கூடாது. தவறும்பட்சத்தில் கோர்ட்டு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன் மூலமாக குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 2 தண்டனையும் சேர்த்து விதிக்கப்படும்' என்றார்.
- நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை (26-ந் தேதி) கொண்டாடப்படுகிறது.
- இதையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களான ெரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள், சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சேலம்:
நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை (26-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களான ெரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள், சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சேலம் ெரயில் நிலையத்தில் ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலும், ெரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்.பி.எப்.) ஆய்வாளா் தலைமையிலான போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
சேலம் வழியாக டெல்லி, மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் ெரயில்களிலும், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பிற நகரங்களுக்கு செல்லும் ெரயில்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரெயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டா் மூலம் போலீசார் சோதனையிட்டு வருகின்றனா். இதுதவிர இருசக்கர வாகனம், காா் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகிற 27-ந்தேதி வரை தொடா்ந்து கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
- சிங்களாந்தபுரத்தை சேர்ந்த பெருமாள் மகன் ராமச்சந்திரன் (வயது 35) என்பவர் கடத்தி சென்று திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தார்.
- சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந்தேதி நாமக்கல் மாவட்டம் சிங்களாந்தபுரத்தை சேர்ந்த பெருமாள் மகன் ராமச்சந்திரன் (வயது 35) என்பவர் கடத்தி சென்று திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குறித்த புகாரின்பேரில் ஆத்தூர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, ராமச்சந்திரனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, குற்றவாளி ராமச்சந்திரனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
- இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும், அவரது திட்டங்களை முறியடிப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
- ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் பெயர் பரிசீலிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சேலம்:
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் என இருதரப்பும் போட்டியிட தயாராகி வருகின்றனர்.
நேற்று, சேலம் மாவட்டம் ஓமலூர் கோட்டை மேட்டுப்பட்டியில் உள்ள அ.தி.மு.க. சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், எஸ்.பி.வேலுமணி, காமராஜ், கே.பி.அன்பழகன், பெஞ்சமின், செல்லூர் ராஜூ, உதயகுமார், விஜயபாஸ்கர், வளர்மதி, கே.சி.வீரமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி, கே.சி.சம்பத், இசக்கி சுப்பையா, நத்தம் விஸ்வநாதன், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இதில் ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்தும், வேட்பாளராக யாரை நிறுத்துவது, தேர்தல் வெற்றிக்கு என்னென்ன செய்ய வேண்டும், அ.தி.மு.க.வுக்கு சாதகமான நிகழ்வுகள் குறித்தும், இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவது குறித்தும், விரைவில் வரவுள்ள கட்சி தொடர்பான வழக்கின் தீர்ப்பு குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும், அவரது திட்டங்களை முறியடிப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் பெயர் பரிசீலிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அவர் மறுக்கும் பட்சத்தில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, பகுதி செயலாளர் மனோகரன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
சின்னம் கிடைக்காவிட்டாலும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட தயங்க கூடாது, நாம் தான் உண்மையான அ.தி.மு.க என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அதை திறமையாக எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எனவே தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடுங்கள் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆலோசனைக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார்.
இன்று (புதன்கிழமை) காலை எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் பலர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் 2-வது நாளாக இன்றும் ஆலோசனை நடத்தினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அ.தி.மு.க.வில் தொடர்ந்து நிலவி வரும் சர்ச்சைகள் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும் அதை சரிசெய்து தி.மு.க. கூட்டணிக்கு பலமான போட்டியை கொடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டம் வகுத்து வருகிறார்.
இதனால் அரசியல் விமர்சகர்கள் மற்றும் மற்ற கட்சியினரின் பார்வை அ.தி.மு.க. 2 அணிகளை நோக்கி திரும்பியுள்ளது.
குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் முடிவு மற்றும் வியூகத்தை அறிந்து கொள்ள அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.






