என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆத்தூரில் பாமக நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: 2-வது மனைவியின் மகன் வெறிச்செயல்
- பா.ம.க நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விக்னேஷ், கிருஷ்ணராஜை வெட்டிக்கொன்றதை ஒப்புக்கொண்டு, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் ரெயில் நிலையம் அருகே மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் மீனா. இவர் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு மேச்சேரி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவருடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
இதனால் கிருஷ்ணராஜூக்கும், அவரது மனைவி லாவண்யாவிற்கும் தகராறு ஏற்பட்டது. கிருஷ்ணராஜ் லாவண்யாவை விவாகரத்து செய்துவிட்டு மீனாவுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். மீனாவிற்கு ஏற்கனவே விக்னேஷ் (வயது 30) என்ற மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் விக்னேஷ், ஆத்தூரில் உள்ள கசாப்புக் கடையில், இறைச்சி வெட்டுபவராக வேலை செய்து வருகிறார்.
கிருஷ்ணராஜ் ஜே.சி.பி எந்திரம் வைத்து தொழில் செய்து கொண்டு, சேலம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி துணைத் தலைவராகவும், திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில், மீனாவுக்கும், கிருஷ்ணராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணராஜ், மீனாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதை பார்த்த மீனாவின் மகன் விக்னேஷ், என் தாயை ஏன் அடித்தீர்கள்? எனக் கூறி ஆத்திரத்தில் கிருஷ்ணராஜை தாக்கினார். இதனால் பயந்து போன கிருஷ்ணராஜ், வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தார். பின்னர் அருகே உள்ள கதிரேசன் என்பவருடைய வீட்டின் வாசலில் நுழைந்துள்ளார்.
இதை பார்த்த விக்னேஷ், கையில் அரிவாளுடன் கிருஷ்ணராஜை பின்னாலேயே துரத்தி சென்று, கதிரேசன் வீட்டு வாசலிலேயே சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கிருஷ்ணராஜ், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.
இது குறித்து ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, விக்னேஷ், கிருஷ்ணராஜை வெட்டிக்கொன்றதை ஒப்புக்கொண்டு, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதைத் தொடர்ந்து போலீசார் விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பா.ம.க நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






