என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலத்தில் கோரிக்கை மனு கொடுக்கவந்த தொழிலாளி தீக்குளிக்க முயன்றார்.
    • அவரை போலீசார் காப்பாற்றிய நிலையில் மாரடைப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் இறந்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை பெரியகிணறு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55). தொழிலாளி. இவர் நேற்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே வந்து உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதை பார்த்த போலீசார், அவர் தீக்குளிக்கும் முன் உடலில் தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். போலீசார் விசாரணை நடத்தியதில் சுப்பிரமணிக்கு யசோதா என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    சுப்பிரமணி தனது மனைவி மற்றும் மகள் பெயரில் வலசையூரில் 900 சதுரடி நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலையில் கணவரை பிரிந்து யசோதா தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார்.

    இதனால் சொத்தில் தனது பங்கை கேட்டு சுப்பிரமணி, யசோதாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் சண்டை போட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து சிகிச்சைக்காக சுப்பிரமணி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.

    • சேலம் மார்க்கெட்டுகளுக்கு எழுமிச்சை பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.
    • இதனால் எலுமிச்சை விலை சரிவு ஏற்பட்டு உள்ளது.

    அன்னதானப்பட்டி:

    தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் எலுமிச்சை மரங்கள் பரவலாக பயிர் செய்யப்படுகின்றன. இங்கு விளைவிக்கப்படும் எலுமிச்சை பழங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால் விற்பனை குறைந்துள்ளது. மேலும் எலுமிச்சை பயிர் செய்யப்பட்ட இடங்களில் அதன் விளைச்சல் அதிக–ரித்துள்ளது. இதன் காரணமாக சேலம் மார்க்கெட்டுக்கு எலுமிச்சை பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.

    சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 டன் வரை எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருகிறது. இங்கிருந்து மாவட்–டத்தில் உள்ள பல்வேறு பகுதி களில் இருந்து சில்லறை வியா பாரிகள் வாங்கிச் சென்று அவர்கள் இடங்களில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். மார்கழி மாத குளிரை தொடர்ந்து தை, மாசி மாதங்களிலும் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால் எலுமிச்சை பழங்களின் தேவை குறைந்த காரணத்தால், அவற்றின் விலை சரிந்துள்ளது.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.6-க்கு விற்ற பழம் தற்போது ரூ.3-க்கு விற்கப்–படுகிறது. ரூ.4-க்கு விற்ற பழம் ரூ.2-க்கு விற்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் மாசி மாதம் தொடங்கவுள்ளது. அப்போது கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். மேலும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடைகால சீசன் ஆரம்பிக்கும் போது தேவை அதிகரித்து, அதன் காரணமாக எலுமிச்சை பழங்கள் விற்பனை நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்தி–றமைகளைக் கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளனர்.
    • மேலும் சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையில் திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ந்தேதி அன்று திருநங்கையருக்கான முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது.

    சேலம்:

    திருநங்கையர் இச்சமூகத்தில் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி, தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளைக் கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளனர்.

    மேலும் சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையில் திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ந்தேதி அன்று திருநங்கையருக்கான முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்று வழங்கப்படுகிறது.

    திருநங்கையருக்கான முன்மாதிரி விருதிற்கு கருத்து–ருக்களை அனுப்புவதற்கு 3-ம் பாலினர்கள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும், குறைந்தது 5 3-ம் பாலினருக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும், மூன்றாம் பாலினர் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது.

    இதற்கு விண்ணப்பிப்பவர்கள் உரிய விவரங்களுடன் சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூகநல சேவையாளரின், சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், சமூகப் பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று மற்றும் கையேடு தமிழில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல் ஆகியவை கருத்துருக்களில் இணைக்கப்பட வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் தங்களது கருத்துருக்களை வருகிற 28-ந்தேதிக்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதளமான https://awards.tn.gov.in-ல் பதிவேற்றம் செய்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், முதல் தளம், அறை எண்.126-ல் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

    • குடியரசு தின விழாவில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • கலெக்டர் கார்மேகம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இப்பள்ளி மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    சேலம்:

    சேலம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் கடந்த ஜனவரி 26-ந்தேதி நடைபெற்ற குடியரசு தின விழாவில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதில் மணக்காடு காமராஜர் நகரவை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 320 மாணவிகள் கோலாட்டம் மையக் கருத்தையும், அபிநவம் ஏகலைவா மாதிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 200 மாணவிகள் மலைவாழ் மக்கள் நடனமும், குண்டுக்கல்லூர் நோட்டர் டேம் ஆப் ஹோலி கிராஸ் பள்ளியை சேர்ந்த 366 பள்ளி மாணவ, மாணவியர்கள் எனது இந்தியா என்ற தலைப்பிலும் நடனமாடினர்.

    மேலும், குளூனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 370 மாணவியர்கள் சேலம் வரலாறு சம்பந்தமான பாடலுக்கும், பெருமாள் மலை ரோடு ஸ்ரீ சைதன்யா பள்ளி 326 மாணவ, மாணவியர்கள் விவசாயம் சம்பந்தமான பாடலுக்கும், கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 257 மாணவ, மாணவியர்கள் நெகிழி பயன்படுத்துவதை தவிர்த்தல் சம்பந்தமான பாடலுக்கும், நெத்திமேடு ஜெயராணி மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 335 மாணவ, மாணவியர்கள் பெண் கல்வி சம்பந்தமான பாடலுக்கும், அரிசிபாளையம் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 250 மாணவ, மாணவியர்கள் செந்தமிழ்நாடு சம்பந்தமான பாடலுக்கும் என மொத்தம் 2,424 பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.

    பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கருத்துருக்களை உள்ளடக்கிய இக்கலைநிகழ்ச்சிகள் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பார்வையாளர்கள் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது. இவர்களின் கலை மற்றும் சமுதாய பற்றினை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இப்பள்ளி மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    அப்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முருகன் உள்ளிட்ட பள்ளிக்–கல்வித்துறை அலுவலர்ள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உடன் இருந்தனர்.

    • ஜெயிலில் அடைப்பதற்காக சார்பதிவாளர் செல்வபாண்டியன் மற்றும் புரோக்கர் கண்ணன் ஆகியோரை வேனில் அழைத்துக் கொண்டு போலீசார் சேலம் மத்திய ஜெயிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
    • ஜெயில் அருகில் சென்றபோது செல்வபாண்டியன் தனக்கு உடல் நிலை சரியில்லை, தனக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க வேண்டும் என போலீசாரிடம் கூறினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தம்மநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயலாளராக உள்ளார். வீரபாண்டி அடுத்த கொழிஞ்சிப்பாடி பகுதியில் தனது தாயார் பெயரில் உள்ள 17 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்வதற்கு முடிவு செய்தார். இதற்காக அவர் சேலம் உடையாப்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த கிழக்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் மனு அளித்தார்.

    அதன்பேரில் தாதகாப்பட்டி சார்பதிவாளர் செல்வபாண்டியன் மற்றும் கொண்டலாம்பட்டியை சேர்ந்த புரோக்கர் கண்ணன் ஆகியோர் பழனிவேலின் தாயாருக்கு சொந்தமான நிலத்தை நேரில் பார்வையிட்டனர். ஆனால் அந்த நிலத்திற்கு பத்திரப்பதிவு செய்யாமல் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பழனிவேலை, புரோக்கர் கண்ணன் தொடர்பு கொண்டு ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என்று பேரம் பேசி உள்ளார். ஆனால் பணம் கொடுக்க விருப்பம் இல்லாத பழனிவேல், இதுபற்றி சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் பழனிவேலிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.50 ஆயிரத்தை கொடுத்து அதை சார்பதிவாளரிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் நேற்று மதியம் உடையாப்பட்டியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றார். அப்போது புரோக்கர் கண்ணனிடம், பழனிவேல் ரூ.50 ஆயிரத்தை கொடுத்தார்.

    பிறகு அவர் அந்த பணத்தை சார்பதிவாளர் செல்வபாண்டியனிடம் கொடுக்க முயன்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், 2 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

    இதையடுத்து 2 பேரையும் ஜெயிலில் அடைப்பதற்காக நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, 2 பேரையும் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து ஜெயிலில் அடைப்பதற்காக சார்பதிவாளர் செல்வபாண்டியன் மற்றும் புரோக்கர் கண்ணன் ஆகியோரை வேனில் அழைத்துக் கொண்டு போலீசார் சேலம் மத்திய ஜெயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். ஜெயில் அருகில் சென்றபோது செல்வபாண்டியன் தனக்கு உடல் நிலை சரியில்லை, தனக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க வேண்டும் என போலீசாரிடம் கூறினார்.

    இதையடுத்து போலீசார், புரோக்கர் கண்ணனை ஜெயிலில் அடைத்தனர். சார்பதிவாளர் செல்வபாண்டியனை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள், அவரை பரிசோதித்து வார்டு அறையில் அனுமதித்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பாதுகாப்புக்காக அறை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இது பற்றி போலீசார் கூறுகையில், சார்பதிவாளர் செல்வபாண்டியனுக்கு சிகிச்சை முடிந்ததும், உடல் நிலை சீராகி விட்டது என டாக்டர்கள் அளிக்கும் சான்றிதழின் அடிப்படையில் அவர் ஜெயிலில் அடைக்கப்படுவார் என தெரிவித்தனர்.

    • மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.74 அடியானது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், சரிவதுமாக இருந்து வருகிறது.

    நேற்று முன்தினம் விநாடிக்கு 1,454 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 1,466 கன அடியாக அதிகரித்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து மீண்டும் சரிந்து, விநாடிக்கு 1,454 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம், நேற்று 103.75 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 103.74 அடியானது.

    • சேலம் அருகே வேளாண்மை கல்லூரி மாணவிகள் பணி அனுபவ பயிற்சி பெற்று வருகிறார்கள்.
    • அவர்கள் விவசாயிகளுக்கு வேளாண்மை குறித்த ஆலோசனைகள் வழங்கினர்.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள ஏகாபுரம் கிராமத்தில் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி மாணவிகள் நடத்தும் கிராம வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் சார்பாக, விவசாயிகளுக்கு பருத்தியில் இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தனர்.

    இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த , பஞ்சகாவியா ,தசகாவியா ,ஐந்திலைக் கரைசல் ஆகியவற்றை தயாரிக்கும் முறை மற்றும் அதன் பயன்பாடுகளை விளக்கினர். மேலும் ,பருத்தியில் விளைச்சலை அதிகரிக்க இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்வது குறித்தும் எடுத்துக்கூறினர்.

    • முதல் பக்தர்கள் ஒவ்வொரு குழுக்களாக சேர்ந்து பழனி கோவிலுக்கு பாத யாத்திரையாக புறப்பட்டனர்.
    • எடப்பாடியில் இருந்து சுமார் 2 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் காவடி தூக்கி பாதயாத்திரையாக நடந்து சென்று பழனி மலை ஏறி முருகனை தரிசிக்க உள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டார மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பழனி மலைக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். அதன்படி தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று ( 5-ந்தேதி) முதல் பக்தர்கள் ஒவ்வொரு குழுக்களாக சேர்ந்து பழனி கோவிலுக்கு பாத யாத்திரையாக புறப்பட்டனர்.

    வருகிற 14-ந்தேதி வரை காவடி தூக்கி எடப்பாடியில் இருந்து முக்கிய வீதிகள் நடந்து சென்று பழனி முருகனை தரிசிக்க உள்ளனர்.

    எடப்பாடியில் இருந்து சுமார் 2 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் காவடி தூக்கி பாதயாத்திரையாக நடந்து சென்று பழனி மலை ஏறி முருகனை தரிசிக்க உள்ளனர்.

    எடப்பாடி நகரத்தில் பக்தர்கள் காவடி எடுத்துச் செல்லும்போது அந்தந்த பகுதிகளில் உள்ள பெண்கள் அமைத்து காய்கறிகள், பழங்கள், பல்வேறு வகை மாலைகள், கடலை, சர்க்கரை, மாவு உள்ளிட்ட வகைகளை படைத்து பக்தர்களுக்கு வழங்குவார்கள்.

    கணபதி கவுண்டர் என்பவரிடம், முதியவர் வேடத்தில் முருகன் வந்து ஆதி காவடியை கொடுத்து பழனி மலைக்கு வழிகாட்டி சென்றதாகவும் இவ் காவடிதான் எடப்பாடியில் இருந்து பழனி மலைக்கு எடுத்துச் சென்ற முதல் காவடி என்று கூறப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தின் போது காவடி தாராபுரம் அமராந்தி மானூர் பாலாற்றில் சிறப்பு பூஜை செய்து பழனி மலையில் ஆதி பரம்பரை காவடி 9-ந்தேதி மலை ஏறுகிறது.

    • தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது.
    • கடந்த சில தினங்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு மட்டுமின்றி, மூடுபனியும் படர்ந்து வருகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கடந்த ஆண்டு பரவலாக பருவமழை பெய்தது. தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. தற்போது பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையிலும், பனிப்பொழிவு குறையவில்லை. கடந்த சில தினங்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு மட்டுமின்றி, மூடுபனியும் படர்ந்து வருகிறது.

    காலை 7.30 மணி வரை வானம் சூரிய வெளிச்சமின்றி இருட்டாக காணப்படுகிறது. இதனால், முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் சாலையில் ஊர்ந்து செல்கின்றன. காலை 9 மணி வரை மூடுபனி நீடித்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

    கடந்த சில தினங்களாக அதிகாலையில் மட்டுமின்றி, காலை 8 மணி வரை தொடரும் மூடுபனியால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவியரும், வேலைக்கு செல்வோரும் குறித்த நேரத்திற்குள் எழுந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாவதாகவும், இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

    • சேலத்தில் 2 இடங்களில் ஆண் பிணங்கள் மீட்கப்பட்டன.
    • பிணமாக கிடந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் டவுன் பஸ் நிலையத்துக்கு உட்பட்ட பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மார்க்கெட் அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இது பற்றி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து இடத்தை கைப்பற்றி பிரேத சோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் கம்பி வேலி அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். அவரது உடல் அழுகி காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும், சேலம் செவ்வாய்ப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த முதியவர் பெயர் மற்றும் ஊர் விபரங்கள் குறித்து விசாரித்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது பற்றி பெரியேரி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த முதியவர் பற்றி தகவல் கிடைத்தால் பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • சேலத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியின் மோட்டார்சைக்கிள் திருட்டு போனது.
    • திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி, வேலு புதுத் தெரு 1- வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 19). மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி. நேற்று  வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்டதை அடுத்து அங்கு வந்து பார்த்துள்ளார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளை ஒருவர் திருடிக் கொண்டு ஓட்டிச் சென்றார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த லோகநாதன் மற்றும் அக்கம் பக்கத்தினர் திருடன் , திருடன் என சத்தம் போட்டுக் கொண்டே அவரை துரத்திச் சென்றனர் . இருந்தாலும் அந்த நபர் வேகமாக அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் மோட்டார் சைக்கிளை திருடியது மூணாங்கரடு செல்லக்குட்டிக்காடு பகுதியைச் சேர்ந்த சுண்ணாம்பு குணசேகரன் (25) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • சேலம் மாவட்ட காவல் துறை சார்பில் 2-ம் நிலை காவலர், தீயணைப்பு படைவீரர் மற்றும் வனக் காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று 6-ந்தேதி தொடங்கியது.
    • தொடர்ந்து வருகிற 11-ந்தேதி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது.

    சேலம்:

    சேலம் குமாரசாமிப்பட்டி போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் சேலம் மாவட்ட காவல் துறை சார்பில் 2-ம் நிலை காவலர், தீயணைப்பு படைவீரர் மற்றும் வனக் காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று 6-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து வருகிற 11-ந்தேதி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது.

    தேர்வில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்கின்றனர். முன்னாள் ராணுவத்தினரும் இதில் பங்கேற்கிறார்கள். இன்று முதல் 8-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்த்தல் உள்ளிட்ட முதல் கட்ட தேர்வு நடக்கிறது.

    பின்னர் ஓட்டம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய உடல் தகுதி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, தகுதியான தேர்வர்கள் 9-ந்தேதி முதல் நடக்க உள்ள கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 அல்லது 400 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

    தேர்வில் பங்கேற்பதற்கு முன் பலத்த சோதனைக்கு பிறகே தேர்வர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வில் கலந்து கொள்ள வருவோர் செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் கருவிகள் தேர்வு வளாகத்திற்கு எடுத்து வரக்கூடாது, காலம் தாமதம் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் தேர்வில் கலந்து கொள்ளுங்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×