என் மலர்tooltip icon

    சேலம்

    • கோணமோரி வனப்பகுதி மற்றும் அதனை ஒட்டிய சிறு சிறு குன்றுகளின் அருகில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • பாறை இடுக்குகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த சாராய ஊறல் பேரல்களை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள கோணமோரி வனப்பகுதி மற்றும் அதனை ஒட்டிய சிறு சிறு குன்றுகளின் அருகில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீஸ்காரர்கள் முருகன், செல்வகுமார், சந்திரகாந்த் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பாறை இடுக்குகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த சாராய ஊறல் பேரல்களை போலீசார் கைப்பற்றி அழித்தனர். அவை 500 லிட்டர் இருக்கும் என கூறப்படுகிறது. இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பாலாஜி (வயது 50). இவர் மூட்டை தூக்கும் கூலி வேலை செய்து வந்தார்.
    • இரவு திடீரென தன்னுடைய ஓட்டு வீட்டில், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:

    சேலம் நெத்திமேடு, மணியனூர் திருவேங்கடம் நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 50). இவர் மூட்டை தூக்கும் கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு திடீரென தன்னுடைய ஓட்டு வீட்டில், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி தகவல் அறிந்த, அன்னதானப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக அவரது மகன் அருள்சஞ்சய், போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது தந்தை பாலாஜிக்கு வலது கையில் அடிபட்டு மருத்துவம் பார்த்து வந்த நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆனைமடுவு அணையில் மீன் பிடிக்கும் உரிமத்தை தாண்டனூர் மீன்பிடி தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் பெற்றுள்ளனர்.
    • ஆனைமடுவு அணையில் பல்வேறு ரக மீன்கள் பிடிபட்டு வருகின்றன.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதியின் குறுக்கே, புழுதிக்குட்டை கிராமத்தில், 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.

    இந்த அணையில் இயற்கையாக கெண்டை, கெளுத்தி ரக மீன்கள் காணப்படுகின்றன. மீன்வளத்துறை வாயிலாக, ரோகு, கட்லா, சில்வர், மிருகால், புல்கண்டா உள்ளிட்ட பல்வேறு ரக மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    ஆனைமடுவு அணையில் மீன் பிடிக்கும் உரிமத்தை தாண்டனூர் மீன்பிடி தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் பெற்றுள்ளனர்.

    அணையில் இருந்து பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. 39 அடியில், 72 மில்லியன் கன அடி தண்ணீரே தேங்கியுள்ளது. இதனால், பரிசலில் செல்லும் மீனவர்களின் வலையில் ருசி மிகுந்த பல்வேறு ரக மீன்கள், அதிக அளவில் பிடிபட்டு வருகின்றன.

    மார்ச் மாத தொடக்கத்திலிருந்து நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கிலோ மீன்கள் பிடிப்படுகின்றன. ஒரு கிலோ மீன் ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஆனைமடுவு அணையில் பல்வேறு ரக மீன்கள் பிடிபட்டு வருகின்றன. அணையில் பிடிக்கபடும் மீன்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறித்து, வாழப்பாடி சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த அசைவ பிரியர்களுக்கு தகவல் பரவியது. இதனால் மீன்கள் வாங்குவதற்கு அசைவ பிரியர்கள் குவிந்து வருகின்றனர். இங்கு தினம் தோறும் காலை நேரத்தில் மீன் கொள்முதல் செய்வதற்கு ஏராளமானோர் அணையில் குவிந்து வருகின்றனர்.

    ''அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருவதால் மீன்கள் பிடிப–டுவது அதிகரித்துள்ளது. எனவே, தட்டுப்பாடின்றி மீன்கள் கிடைக்குமென', மீன் பிடிக்கும் கூட்டுறவு சங்க மீனவர்கள் தெரிவித்தனர்.

    • வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள விடுமுறை நாட்களில் பொது மக்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுகின்றனர்.
    • அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    ஏற்காடு:

    கோடை காலம் தொடங்கியதை அடுத்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள விடுமுறை நாட்களில் பொது மக்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான, ஏற்காட்டிற்கு விடுமுறை நாடகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம்.

    தற்போது கோடை வெயிலை முன்னிட்டு வழக்கத்தை விட அதிகமாக சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள். ஏற்காட்டில் குளர்ச்சியான உடல் நிலை ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்தனர். சுற்றுலா பயணிகள் அண்ணா பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து பூக்கள் மற்றும் இயற்கை காட்சிகளை ரசித்தனர். இங்குள்ள ஊஞ்சலில் விளையாடி மகிழ்ந்தனர். இங்குள்ள மலர் செடிகளை பெண்கள் தங்கள் வீட்டில் வளர்ப்பதற்காக ஆர்வமுடன் வாங்கினர்.

    லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்ப கூடிய படகு இல்லத்தில், நீண்ட நேரம் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • சேலம் இரும்பாலை அருகே உள்ள எஸ்.கொல்லப்பட்டி ஓம் சக்தி நகர் பகுதியில் கந்து வட்டியால் கணவன்- மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் அதிரடியாக செயல்பட்டு கந்துவட்டி கேட்டு மிரட்டிய பெண் உள்பட 2 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள எஸ்.கொல்லப்பட்டி ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 65). இவரது மனைவி விஜயா (58). இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.லேத் பட்டறை வைத்து நடத்தி வந்த தங்கராஜ் வீட்டு தேவைக்காக ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

    வாங்கிய பணத்தை கட்ட முடியாததால் கடன் கொடுத்தவர்கள் வடிவேல் வட்டி போட்டு பணத்தைக் கேட்டு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் மனமுடைந்த தங்கராஜ் கடந்த 8-ம் தேதி பூனைக்காடு பகுதியில் எலி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.

    இதுகுறித்த தகவல் இந்த குடும்பத்தினர் தங்கராஜ் மீட்டு அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தங்கராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.கணவரை மருத்துவமனையில் உடனிருந்து கவனித்து வந்த விஜயா, தங்கராஜ் இறந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    கணவர் இருந்த துக்கம் தாளாமல் இருந்த அவர் நேற்று காலை அதே மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தங்கராஜ் மகன் கோபி சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது தந்தை தங்கராஜ் ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த ராஜா(46) மற்றும் ரெட்டிபட்டி அடுத்த நரசோதிப்பட்டி பகுதி சேர்ந்த கிருஷ்ணன் மனைவி சாவித்திரி என்கிற சித்ரா(45) ஆகியோரிடம் கடந்த 2018 -ம் ஆண்டு தொழிலை அபிவிருத்தி செய்ய ரூ. 4 லட்சம் கடன் வாங்கியதாகவும், அந்த பணத்திற்கு ரூ.10 வட்டி செலுத்தி வந்ததாகவும் வாங்கிய தொகைக்கு 2 மடங்குக்கு மேல் பணம் கட்டியும்,மேலும் பணம் கேட்டு எனது தந்தை தங்கராஜுக்கு நெருக்கடி கொடுத்ததால் தனது தந்தை தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.

    போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி இதுபற்றி விசாரித்து தம்பதி தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி மேற்பார்வையில் சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்ற்உம் போலீசார் கந்து வட்டி கொடுமையின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜா மற்றும் சாவித்திரி என்ற சித்ராவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மருத்துவமனையில் விஜயா தற்கொலை செய்து கொண்டது குறித்து இறந்து போன தம்பதிகளின் மற்றொரு மகன் ஹரிபாபு கொடுத்த புகார் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கந்து வட்டி கொடுமையால் கணவனும் மனைவியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் உள்ளவர்களை கடும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில் போலீசார் அதிரடியாக செயல்பட்டு இந்த தற்கொலைக்கு காரணமாக கைது செய்து சிறையில் அடைத்தது பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • எருமாபாளையத்திலிருந்து சீலநாயக்கன்பட்டிக்கு லாரியில் வந்து கொண்டிருந்தார்.
    • அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் களரம்பட்டி ஆஸ்பத்திரியார் காடு பகுதியைச் சேர்ந்தவர் பச்சியப்பன் (வயது 42), லாரி டிரைவர். இவர் நேற்று எருமாபாளையத்திலிருந்து சீலநாயக்கன்பட்டிக்கு லாரியில் வந்து கொண்டிருந்தார். இரட்டைக் கோவில் அருகே வந்த போது, அங்கு வந்த சில நபர்கள் பச்சியப்பனை திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து ரூ.1100 பணத்தை பறித்தனர்.

    இதைபார்த்து அவர்களை பிடிக்க வந்தவர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட, மூணாங்கரடு வி.ஏ.ஓ. ஆபீஸ் பகுதியைச் சேர்ந்த கோபி (22) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் , கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுதூர் அருகே கடனை திருப்பிக் கேட்ட வாலிபரை கத்தியால் குத்தினார்.
    • இதில் படுகாயம் அடைந்த தியாகராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுதூர் அருகே உள்ள வானகாரன் காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் தியாகராஜன் (வயது 26). இவரது தம்பி அசோக், அதே பகுதியைச் சேர்ந்த சித்தேஸ்வரன் மகன் முனுசாமி என்கிற விஷால் (28) என்பவருக்கு ரூ.200 கடன் கொடுத்துள்ளார்.

    வாங்கிய பணத்தை திருப்பி தராததால், இதுகுறித்து நேற்று மாலை விஷாலிடம், எனது தம்பியிடம் வாங்கிய பணத்தை ஏன் திருப்பி தரவில்லை என தியாகராஜன் கேட்டுள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த விஷால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தியாகராஜனை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த தியாகராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விஷாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உம்பிளக்கம்பட்டியில் உள்ள தாய் அம்பிகா வீட்டிற்கு வந்த கோகிலா, மதுமிதா மற்றும் 3 மாத குழந்தையுடன் இங்கு தங்கி இருந்தார்.
    • அப்அபோது வீட்டிற்கு எதிரில் உள்ள கோவிலில் இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுமி தவறி விழுந்து பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.

    காடையாம்பட்டி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 35). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு மதுமிதா (6) என்ற பெண் குழந்தை இருந்தது.

    இந்நிலையில் மீண்டும் கருவுற்ற கோகிலாவுக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு குழந்தை பிறந்தது. பிரசவத்திற்காக, சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உம்பிளக்கம்பட்டியில் உள்ள தாய் அம்பிகா வீட்டிற்கு வந்த கோகிலா, மதுமிதா மற்றும் 3 மாத குழந்தையுடன் இங்கு தங்கி இருந்தார்.

    இந்த நிலையில், இன்று காலை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மதுமிதா திடீரென மாயமானார். இதையடுத்து குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர்.

    அப்போது, அம்பிகாவின் வீட்டிற்கு எதிரில் உள்ள கோவிலில் இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுமி பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதை பார்த்து சிறுமியின் தாய் மற்றும் உறவினர் கதறி துடித்தனர்.

    இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சிறுமியின் உடலை மீட்ட போலீசார், இதுபற்றி வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆணைமடுவு அணை அமைந்துள்ளது.
    • இந்த அணையால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பாளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதியின் குறுக்கே, புழுதிக்குட்டை கிராமத்தில், 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆணைமடுவு அணை அமைந்துள்ளது.

    இந்த அணையால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பாளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்தாண்டு இறுதியில் பெய்த பரவலான மழையால், அணையின் நீர்மட்டம் 52.55 அடியாக உயர்ந்து, 141.81 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.

    இந்நிலையில், 2 மாதங்களாக வாழப்பாடி பகுதியில் மழையில்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே, ஆனைமடுவு அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை பாசனத்திற்கு திறந்து விட வேண்டுமென, புதிய ஆயக்கட்டு அணை வாய்க்கால் பாசனம் மற்றும் பழைய ஆயக்கட்டு ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து, பிப்ரவரி 23-ந் தேதி காலை முதல் தொடர்ந்து 16 நாட்களுக்கு தினசரி வினாடிக்கு 50 கன அடி வீதம் ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகளுக்காக வசிஷ்ட நதியில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில், இன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு வலது வாய்க்காலில் வினாடிக்கு 35 கன அடி வீதமும், இடது வாய்க்காலில் வினாடிக்கு வினாடிக்கு 15 கன அடி வீதம் மொத்தம் வினாடிக்கு 50 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தண்ணீரை திறந்து வைத்தார். இவ்விழாவில், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர் கீதாராணி, வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், வாழப்பாடி வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சக்கரவர்த்தி, ஏற்காடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன், ஒன்றிய துணை செயலாளர் குறிச்சி பெரியசாமி, காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் அத்தனூர்பட்டி ராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் புழுதிக்குட்டை அறிவழகன், குறிச்சி கலா பெரியசாமி மற்றும் தி.மு.க பிரமுகர்கள் குறிச்சி சடையன், கனகராஜ், பேளூர் நகர செயலாளர் சுப்பிரமணி மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    • சந்தியா (வயது 22). இவர் திருமணமாகி கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார்.
    • சந்தியா குழந்தை நானிகாவுடன் கடைக்கு செல்வதாக கூறி சென்றனர். அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் சுப்பைய்யாபுரம் செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜானகி. இவர்களது மகள் சந்தியா (வயது 22). இவர் திருமணமாகி கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். ஜானகியின் தாய் வீடு சேலம் கிச்சிபாளையம் சுந்தர் தெருவில் உள்ளது.

    இந்த நிலையில் ஜானகியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என வந்த தகவலையடுத்து ஜானகி மகள் சந்தியா மற்றும் பேத்தி நானிகாவுடன் சேலம் வந்தனர். அங்கு சந்தியா குழந்தை நானிகாவுடன் கடைக்கு செல்வதாக கூறி சென்றனர். அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுபற்றி ஜானகி கிச்சிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தியா, அவரது குழந்தை நானிகா ஆகிய 2 பேரையும் தேடிவருகின்றனர்.

    • கட்டணமில்லா தொலைபேசி எண்‌ 1800 4252 650 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கொத்தடிமை தொழிலாளர்கள்‌ தொடர்பான புகார்கள்‌ தெரிவிக்கலாம்.
    • தற்போது கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள 155214 என்றகட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும்‌ புகார்கள்‌ தெரிவிக்கலாம்.

    சேலம்:

    சேலம் தொழிலாளர் துறை உதவி ஆணையர்(அமலாக்கம்) பி.கிருஷ்ணவேணி வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் குறித்து கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் 1976-ன் கீழ் சென்னை தேனாம்பேட்டை தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நிறுவப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4252 650 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கொத்தடிமை தொழிலாளர்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்கலாம்.

    தற்போது கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள 155214 என்றகட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பொது மக்கள் தங்களது கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்த புகார்களை பதிவு செய்யலாம்.

    மேலும் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் குழந்தை தொழி லாளர்கள் தொடர்பான சட்ட உதவிகள், மற்றும் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள் மற்றும் குழந்தை தொழிலாளர் களுக்கு உதவிகள் ஏதும் தேவைப்படின் மேற்படி கட்டணமில்லா தொலை பேசி எண்களை தொடர்பு கொண்டு நிவாரணம் பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்ப டுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கலெக்டர் கார்மேகம் தலைமையிலான தேர்வுக்குழு உறுப்பினர்களால், வயது மற்றும் கலைப்புலமைக்கேற்ப தெரிவு செய்யப்பட்டது.
    • நிகழ்ச்சியில் கலைப்பண்பாட்டுத்துறை சேலம் மண்டல உதவி இயக்குநர் செந்தில்குமார், இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரராமன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சேலம்:

    சேலம் கலை பண்பாட்டுத்துறையின் சார்பாக, 2021-2022-ம் ஆண்டிற்கான சேலம் மாவட்டக் கலைமன்றம் சார்பான மாவட்ட விருதுகள் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையிலான தேர்வுக்குழு உறுப்பினர்களால், வயது மற்றும் கலைப்புலமைக்கேற்ப தெரிவு செய்யப்பட்டது.

    அவர்களுக்கு கலை முதுமணி, கலை நன்மணி, கலை சுடர்மணி, கலை வளர்மணி மற்றும் கலை இளமணி ஆகிய விருதுகளை கலை பண்பாட்டு துறை இயக்குநர் காந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா ஆகியோர் வழங்கி கவுரவித்தனர்.

    அதன்படி கலை முதுமணி விருதுகள், நாடக நடிகர் வி.கே.ராஜசிகாமணி, சொற்பொழிவாளர் சிட்டிபாபு, குரலிசை கலைஞர் டாக்டர் கே.விஜயலட்சுமி ஆகியோருக்கும் ரூ.20 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டது.

    கலை நன்மணி விருதுகள், தெருக்கூத்து கலைஞர் மதியழகன், நாதஸ்வர கலைஞர் மாரியப்பன், சிலம்பாட்ட கலைஞர் ரத்தினக்குமார் ஆகியோருக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டது.

    புல்லாங்குழல் கலைஞர் வி.எஸ்.தியாகராஜன், கரகாட்ட கலைஞர் பாலு, நகரி மேள கலைஞர் பூபதி ஆகியோருக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் கலை சுடர்மணி விருதுகள் வழங்கப்பட்டது.

    தப்பாட்ட கலைஞர் கோவிந்த ராஜ், பம்பை, உடுக்கை கலைஞர் பிரகாஷ், வீணை கலைஞர் ராஜவிக்னேஷ் பெருமாள் ஆகியோருக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் கலை வளர்மணி விருதுகள் வழங்கப்பட்டது.

    தவில் கலைஞர் ஸ்ரீநிவாஸ் ,பம்பை, பரதநாட்டியம் கலைஞர் காவ்யா, குரலிசை கலைஞர் கே.எஸ்.தர்ஷினி ஆகியோருக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் கலை இளமணி விருதுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் கலைப்பண்பாட்டுத்துறை சேலம் மண்டல உதவி இயக்குநர் செந்தில்குமார், இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரராமன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    ×