என் மலர்tooltip icon

    சேலம்

    • புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்று வட்டார பகுதியில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜையுடன், பெருமாள் சுவாமி உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சவுந்தரராஜ பெருமாள் சன்னதியில் அதிகாலையில் பெருமாளுக்கு 108 வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    எடப்பாடி:

    புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்று வட்டார பகுதியில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜையுடன், பெருமாள் சுவாமி உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக எடப்பாடி மேட்டுதெரு சவுந்தரராஜ பெருமாள் சன்னதியில் அதிகாலையில் பெருமாளுக்கு 108 வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர் அலங்காரத்தில் சவுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    தெப்ப உற்சவம்

    விழாவின் முக்கிய நிகழ்வாக எடப்பாடி பெரிய ஏரியில் தெப்ப தேர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க ஏரியின் மறுகரையில் உள்ள வெள்ளூற்று பெருமாள் சன்னதிக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் சவுந்தரராஜ பெருமாள் சன்னதியை வந்தடைந்தார்.

    இதேபோல் எடப்பாடி அடுத்துள்ள வீரப்பம்பாளையம் வெள்ளைகரடு மலை கோவிலில் உள்ள திம்மராய பெருமாள் சன்னதி, பழைய எடப்பாடி சென்றாய பெருமாள் ஆலயம், எடப்பாடி நரசிம்ம மூக்கரை பெருமாள் கோவில், பூலாம்பட்டி மலைமாட்டுப் பெருமாள் கோவில், ரெட்டிபட்டி கிருஷ்ண பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
    • அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. மேலும் மழை இல்லாததாலும் நீர்வரத்து குறைந்து விட்டது.

    இந்த நிலையில் காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனாலும் அந்த தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதில் இந்த ஆண்டில் 2-வது முறையாக கிருஷ்ண ராஜசாகர் அணை 100 அடியை எட்டியது.

    ஆனாலும் அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32.25 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 154 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 8.4 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது. நீர்வரத்து இேத அளவில் இருந்து அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் இதே நிலையில் நீடித்தால் மேட்டூர்அணையில் இருந்து இன்னும் ஒரு வாரத்துக்கு மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

    • பேக்கரி கடை ஒன்றில் குழந்தைகளுக்கு சாப்பிட முட்டை பப்ஸ் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • உடனடியாக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் இடங்கண சாலையை அடுத்த மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (38), இவர் தனது குழந்தைகளான யாசினி (9), யாசித்(8), சபரீஷ் (3) ஆகிய 3 பேருடன் கொங்கணாபுரம் அடுத்த ஆலங்காடு பகுதியில் உள்ள தனது குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார்.

    அங்கு வழிபாடு செய்தவர் தனது குழந்தைகளுடன் மீண்டும் வீடு திரும்பிய நிலையில், கொங்கணாபுரம் பகுதியில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் குழந்தைகளுக்கு சாப்பிட முட்டை பப்ஸ் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனை அடுத்து முட்டை பப்ஸ் சாப்பிட்ட குழந்தைகள் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில், திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    இது குறித்த தகவல் அறிந்த எடப்பாடி தாலுகா உணவு பாதுகாப்பு அலுவலர் குமரகுரு தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கொங்கணாபுரம் போலீசார் சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த தின்பண்டங்களின் மாதிரிகளை சேகரித்ததுடன், சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 

    • உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    • அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கிரி கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் உள்ள பேக்கரியில் பப்ஸ் சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

    உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கிரி கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பேக்கிரி கடைக்கு சீல் வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சேலம் கோட்டையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகிறார்கள்.
    • தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கூறினாலும் அவர் மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்து வந்தனர்.

    சேலம்:

    சேலம் கோட்டையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியில் மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதிகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என மாணவிகள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும் தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கூறினாலும் அவர் மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட கல்வி அதிகாரி மோகன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது மாணவிகள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று உறுதிப்பட தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாணவிகள் கூறியதாவது:-

    பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ்வாணி சக ஆசிரியர், ஆசிரியர்களையும், மாணவிகளையும் தர குறைவாக நடத்துகிறார். பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    2 நாட்களுக்கு முன்பு பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருந்தது. இதனைப் பார்த்த நாங்கள் அந்த குடிநீரை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்தோம். இது தொடர்பாக புகார் தெரிவித்த மாணவிகள் சிலரை தலைமை ஆசிரியை அறையிலேயே முட்டி போட வைத்து அவமானப்படுத்தினார்.

    கழிவறைகளும் அசுத்தமாக உள்ளதால் அதையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. எனவே எங்களின் அடிப்படை வசதியை நிறைவேற்றாத தலைமை ஆசிரியை தமிழ்வாணியை பணிநீக்கம் செய்ய வேண்டும்.

    வேறு தலைமை ஆசிரியையை இப்பள்ளிக்கு அரசு நியமிக்க வேண்டும். விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மாணவிகள் போராட்டம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியை கூறுகையில், குடிதண்ணீரில் புழுக்கள் இருப்பதாக மாணவிகள் புகார் கூறினர். உடனடியாக ஆய்வு செய்த நான் தண்ணீரில் புழுக்கள் இல்லை என்று கூறினேன். மேலும் கழிவறையையும் சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நான் எந்த மாணவி களையும் அவர்களது பெற்றோரையும் மிரட்டவில்லை. வேண்டுமென்று எனக்கு எதிராக சில ஆசிரியர்கள் மாணவிகளை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கல்வி அதிகாரிகள், வருவாய்துறையினர் மற்றும் போலீசார் தலைமை ஆசிரியை மற்றும் மாணவிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தலைமை ஆசிரியை தமிழ்வாணி மாணவிகளிடம் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே இன்று காலை 9.30 மணியளவில் ராஜேஷ் கண்ணா என்பவர் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.
    • போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ஒடிசா மாநிலம் ஜாக்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே இன்று காலை 9.30 மணியளவில் ராஜேஷ் கண்ணா என்பவர் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென ராஜேஷ்கண்ணா கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தார்.

    இதை பார்த்த ரவுண்டானா பகுதியில் நின்றிருந்த சேலம் மாநகர துணை கமிஷனரின் (தெற்கு) அதிவிரைவு படை போலீசார் செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அந்த வாலிபரை கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ஒடிசா மாநிலம் ஜாக்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரபரப்பான ரவுண்டானா பகுதியில் காலை நேரத்தில் போலீ சார் சிறுவனை விரட்டி சென்று பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மத்திய சிறையில் உள்ள குறிப்பிட்ட பிளாக்குகளில் ஜெயிலர் கிருஷ்ணகுமார் மற்றும் சிறை போலீசாருடன் திடீர் சோதனை மேற்கொண்டார்.
    • ஜெயிலர் கிருஷ்ணகுமார் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    சேலம்:

    சேலம் மத்திய சிறையில் உள்ள குறிப்பிட்ட பிளாக்குகளில் ஜெயிலர் கிருஷ்ணகுமார் மற்றும் சிறை போலீசாருடன் திடீர் சோதனை மேற்கொண்டார்.

    அப்போது சோதனை மேற்கொண்ட அறைகளில் இருந்த கைதிகள் விமல், பிரவீன், அஸ்வின் குமார் ஆகியோர் மறைத்து வைத்திருந்த செல்போன், சார்ஜர், சிம் கார்டு போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இது குறித்து ஜெயிலர் கிருஷ்ணகுமார் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முருகன் இன்று காலை மொபட்டில் வீராணம் சாலையில் தனியார் நூல் மில் அருகே சென்று கொண்டிருந்தார்.
    • படுகாயம் அடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வலசையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள வலசையூர் போயர் தெருவை சேர்ந்தவர் முருகன். (வயது 49). தொழிலாளி.

    இவர் இன்று காலை மொபட்டில் வீராணம் சாலையில் தனியார் நூல் மில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது வலசையூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கவுதம் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தார். அவர் எதிர்பாராத விதமாக முருகனின் மொபட் மீது மோதினார்.

    இதில் படுகாயம் அடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வலசையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது முருகன் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லேசான காயத்துடன் தப்பிய கவுதமனுக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • பவளத்தானூர் ரவுண்டானா பகுதியில் பிரவீன்குமார் (35) என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார்.
    • கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூர் ரவுண்டானா பகுதியில் பிரவீன்குமார் (35) என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்த கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்தனர்.

    • சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
    • 3.15 மணி முதல் 5.30 மணி வரை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், 6 மணி முதல் 10 மணி வரை 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.

    சேலம்:

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி முகூர்த்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    தொடர்ந்து வருகிற 18-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10.15 மணி வரை மஹா கணபதி ஹோமம், முளைப்பாரி இடுதல், 10.15 மணி முதல் 11.30 மணி வரை புதிய கொடி மரம் நிறுவுதல், பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை ராஜகோபுர கலசங்களுக்கு பாலாலயம் செய்தல், 19-ந் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை கணபதி வழிபாடு, கிராமசாந்தி , அஷ்ட பலி பூஜை, 24-ந் தேதி காலை 10.30 மணி முதல் 1 மணி வரை விநாயகர் வழிபாடு, புனித தீர்த்த குட புறப்பாடு, முளைப்பாரி ஊர்வலம் சுகவனேஸ்வரர் கோவிலில் இருந்து நடைபெறும்.

    இரவு 8.30 மணிக்கு வாஸ்து சாந்தி, திஷா ஹோமம், காப்பு கட்டுதல், 25-ந் தேதி 9.30 முதல் 11.30 வரை விநாயகர் வழிபாடு, சங்கல்பம், புண்யாகம், அக்னி சங்கரணம், 4 முதல் 5 மணி வரை சுதை விக்கிரகங்களுக்கு கண் திறப்பு, 6மணி முதல் 10 மணி வரை முதற்கால யாக பூஜை, 26-ந் தேதி காலை 8 மணி முதல் 12 மணி வரை 2-ம் கால யாக பூைஜ, 11 மணி முதல் 1 மணி வரை ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் கலசம் பொருத்துதல், 3.15 மணி முதல் 5.30 மணி வரை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், 6 மணி முதல் 10 மணி வரை 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.

    27-ந் தேதி அதிகாலை 4.30 முதல் 7.30 வரை 4-ம் கால யாக பூஜை, 7.40 முதல் 8 மணி வரை ராஜகோபுரம் , மூலஸ்தான விமானம், பரிவார சன்னதி விமானம் மற்றும் கொடி மரத்திற்கு சம காலத்தில் மகாகும்பாபிஷேகம், 8.30 மணி முதல் 9.30 மணி வரை மகா கணபதி, கோட்டை பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம், 10 மணிக்கு மேல் மூலவர் சுவாமிக்கு மகா அபிேஷகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதான பிரசாத வினியோகம், மாலை 6 மணிக்கு மேல் தங்கத்தேர் புறப்படுதலும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அதிகாரி அமுதசுரபி, அறங்காவலர் கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா, சுரேஷ்குமார் உள்பட பலர் செய்து வருகிறார்கள்.

    • லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • குமார் என்கிற சக்திவேல் (37), கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (66) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அந்த பகுதியில் சோதனை நடத்திய போலீசார் அங்கு லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட கோழிகட்டானூர் பகுதியை சேர்ந்த குமார் என்கிற சக்திவேல் (37), கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (66) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • பச்சக்காடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியின் டிரைவர் அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும், எந்த சைகையும் செய்யாமல் லாரியை திருப்ப முயன்றுள்ளார்.
    • முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே ஜீவகாந்த் இறந்து விட்டார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி பச்சக்காடு பகுதியை சேர்ந்தவர் மகாதேவன். இவரது மகன் ஜீவகாந்த் (19), கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு 9 மணிக்கு தனது மோட்டார் சைக்கிளில் பவானி பகுதியில் இருந்து சங்ககிரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    பச்சக்காடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியின் டிரைவர் அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும், எந்த சைகையும் செய்யாமல் லாரியை திருப்ப முயன்றுள்ளார். இதை கவனிக்காததால் ஜீவகாந்த் லாரியின் பின்னால் மோதினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜீவகாந்த்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே ஜீவகாந்த் இறந்து விட்டார்.

    இதுகுறித்து சங்ககிரி சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் சேலத்தை சேர்ந்த சரத்குமார் (32) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    விபத்தில் உயிரிழந்த ஜீவகாந்த், வீட்டிற்கு ஒரே மகன் என்பதால் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×