என் மலர்
ராணிப்பேட்டை
- ஒன்றாக தகனம் செய்தனர்
- 55 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த தக்கோலத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 81),விவசாயி. இவரது மனைவி இந்திராணி (74), இவர்களுக்கு சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் விவசாயம் செய்து கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் தன்னுடைய நிலத்துக்கு சென்று முனுசாமி விவசாய வேலையில் ஈடுபட்டார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் முனுசாமியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில் அவரது மனைவி இந்திராணி மீளா துயரம் அடைந்தார்.
கணவர் உடல் மீது சாய்ந்து நீண்ட நேரமாக கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் கணவர் இறந்த தூக்கம் தாளாத அதிர்ச்சியில் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அவரது மகன்கள், உறவினர்கள், கிராம மக்கள் உட்பட அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.
இதனையடுத்து ஒரே நேரத்தில் உயிரிழந்த கணவன் மனைவி இருவரின் உடலையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி இவர்களது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இடுகாட்டில் ஒன்றாக வைத்து எரியூட்டப்பட்டது.
55 ஆண்டுகளாக இல்லற வாழ்வில் இனணந்து வாழ்ந்த தம்பதியர் இறப்பிலும் இணைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.
- ஆற்று பாலம் சேதமடைந்துள்ளதால் புதிய மேம்பாலம் கட்ட வேண்டும்
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
நெமிலி:
நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராமன் வரவேற்றார்.
அப்போது சயனபுரம், சிறுணமல்லி, பின்னாவரம், கீழ்வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காலனிகளில் சமுதாய கூடங்கள் அமைக்கவேண்டும். அரக்கோணம்-ஒச்சேரி சாலையில் அமைந்துள்ள கல்லாற்று பாலம் மற்றும் சேந்தமங்கலம் - பாணாவரம் சாலையில் அமைந்துள்ள கொசஸ்தலை ஆற்று பாலம் சேதமடைந்துள்ளதால் புதிய மேம்பாலம் கட்ட வேண்டும்.
மேலும் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட அரசங்குப்பம், சயனபுரம், சித்தேரி, நாகவேடு, மகேந்திரவாடி,காட்டுபாக்கம்,
பொய்கைநல்லூர், சேந்தமங்கலம், நெடும்புலி, பனப்பாக்கம், அசநெல்லிகுப்பம் உள்ளிட்ட 12 பகுதிகளில் இயங்கிவரும் துணை சுகாதார நிலையங்களுக்காக புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
- மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
- அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட திட்டக் குழுவின் முதல் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட திட்டக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரும், திட்டக்குழு துணை தலைவருமான வளர்மதி முன்னிலை வகித்து, மாவட்ட திட்டக் குழுவின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகள் சுயாட்சி நிறுவனங்களாக செயல்பட்டு உள்ளாட்சிப் பகுதியில் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமுதாய மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் தண்னிறைவு அடையும் வகையிலும், மாவட்டம் தன்னிறைவு அடையும் வகையிலும், புதிய செயல் திட்டங்களை உறுப்பினர்கள் ஆராய்ந்து தேவையான திட்ட அறிக்கை, ஏற்கனவே உள்ள சட்ட திட்டத்திற்கு உட்பட்டு செயல்படுத்த முடியும் என்ற நிலையில் உள்ள திட்டங்களாக அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆண்டு வளர்ச்சி திட்டங்களை கிராம ஊராட்சிகள் , ஊராட்சி ஒன்றியங்கள் , மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சி மற்றும் நகராட்சிகள் குறிப்பிட்ட தேதிக்குள் வழங்கிட வேண்டும்.
மாவட்ட திட்டக்குழு டிசம்பர் 31-ந் தேதிக்குள் ஒருங்கிணைந்த மாவட்ட வளர்ச்சி திட்டத்தை தயாரித்து மாநில திட்ட குழுவிற்கும், அரசுக்கும் அனுப்பிட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
ஆகவே கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சி திட்ட அறிக்கையினை துறை அலுவலர்களுடன் இணைந்து வரையறுக்கப்பட்டுள்ள காலத்திற்குள் மாவட்ட திட்ட குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த திட்ட அறிக்கை மீது அடுத்த கூட்டத்தில் விவாதித்து மாநில திட்ட குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு கலெக்டர் வளர்மதி பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி,மாவட்ட ஊராட்சி செயலாளர் குமார், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் நாகராஜு, திட்டக் குழு உறுப்பினர்கள் அம்பிகா, சுந்தராம்பாள் , சக்தி, செல்வம், மாலதி, காந்திமதி , சிவக்குமார்,காஞ்சனா, தியாகராஜன், பாபி ,ஜபர் அகமத் மற்றும் உள்ளாட்சி அமைப்பு தலைவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
- சாலை பாதுகாப்பு நிதி ரூ.8 லட்சம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விபத்துகளை தடுப்பதற்காக நிதி ரூ.68 லட்சத்து 11ஆயிரத்து 486 மற்றும் மாநில குற்ற ஆவணக் காப்பகத்தால் வழங்கப்படும் சாலை பாதுகாப்பு நிதி ரூ.8 லட்சம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியிலிருந்து போக்குவரத்து சிக்னல்கள்- 10, சோலார் ஒளிரும் பிளிங்கர்ஸ்- 20, போக்குவரத்து ஓளிரும் கூம்புகள் - 100, ஒளிரும் தடியடி விளக்குகள் 100, ஒளிரும் சிறிய தடியடி விளக்குகள் 100, போக்குவரத்து பிரதிபலிப்பு முக்கோணங்கள் - 100, மரம் பிரதிபலிப்பான்கள் 1000, போக்குவரத்து தடுப்பாண்கள் - 48, சோலார் போக்குவரத்து தடுப்பாண்கள் - 18 உள்பட போக்குவரத்து உபகரணங்கள் வாங்கப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தைமேடு அருகில் 4 சாலைகள் சந்திக்கும் சந்திப்பு பகுதியில் புதியதாக போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமை தாங்கி சிக்னல்களை தொடங்கி வைத்தார்.
இதேபோல் மாவட்டம் முழுவதிலும் 9 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேசுவரய்யா, இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
- 27 நாட்கள் நடைபெறுகிறது
- விசேஷ திரவியங்களுடன் அபிஷேகம்
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு பஞ்சமுக வராகி அம்மனுக்கு நடைபெற்று வந்த ஹோமம், அபிஷேக பூஜைகள் நிறைவடைந்தது.
இந்த நிலையில் தொடர்ந்து 27 நாட்கள் நடைபெறும் லட்ச ஜப மகா சுதர்சன ஹோமம், அபிஷேகம்,பூஜைகள் நேற்று தொடங்கியது.
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில், உலக நலன் கருதி நடைபெறும் இந்த ஹோமம் நேற்று சுதர்சன ஜெயந்தி முதல் வருகிற 24-ந்தேதி வரை 27 நாட்கள் தினமும் கோ பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
27 கலசங்கள் வைத்து ஹோமமும், 27 விசேஷ திரவியங்களுடன் தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் சக்கரத்தாழ்வார் எனப்படும் ஸ்ரீ சுதர்சன ஆழ்வாருக்கு அபிஷேகமும் நடைபெறுகிறது.
மனதில் ஏற்படும் பயம், குழப்பங்கள் நீங்கிட, எதிரிகள் தொல்லை, பதவி உயர்வு, பணி மாற்றம் கிடைக்க, ஆயுள் பயம் நீங்கி ஆரோக்யம் அதிகரிக்க. நட்சத்திர, கிரக ரீதியான தோஷங்கள் விலகிட வேண்டி நடைபெறும் இந்த ஹோமம் மற்றும் அபிஷேக பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என பீடாதிபதி முரளிதரஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
- புளியமங்கலம் ரெயில் நிலையத்திற்கு சற்று கால தாமதமாக வந்த மின்சார ரெயில் நிற்பது போல் மெதுவாக ஓடியது.
- ரெயில் பெட்டிகளின் இருக்கைகளில் பயணம் செய்தவர்கள் இறங்க முடியவில்லை.
அரக்கோணம்:
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் வழியாக மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு இரவு 8.30 மணிக்கு வரும் மின்சார ரெயில் தினமும் அரக்கோணத்திற்கு முன்னால் உள்ள புளியமங்கலம் ரெயில் நிலையத்தில் இரவு 8.20 மணிக்கு நின்று, பயணிகளை ஏற்றிச் செல்லும்.
அதன்படி நேற்று இரவு மின்சார ரெயில் ஒன்று சென்னையில் இருந்து, அரக்கோணம் செல்ல புறப்பட்டது. புளியமங்கலம் ரெயில் நிலையத்திற்கு சற்று கால தாமதமாக வந்த மின்சார ரெயில் நிற்பது போல் மெதுவாக ஓடியது.
ரெயில் நிலையத்தை கடந்து நிற்காமல் சென்றது.
அப்போது வாசற்படியில் இருந்தவர்கள் மட்டும் இறங்கினர். ரெயில் பெட்டிகளின் இருக்கைகளில் பயணம் செய்தவர்கள் இறங்க முடியவில்லை. அவசரமாக இறங்க முயன்ற பயணிகள் சுதாரித்துக் கொண்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பயணிகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.
இரவு 8.30 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையம் வந்ததும், புளியமங்கலத்தில் இறங்க வேண்டிய பயணிகள் ரெயில் என்ஜின் முன்பு குவிந்தனர்.
புளியமங்கலத்தில் ஏன் ரெயிலை நிறுத்தவில்லை?, இரவு நேரம் என்பதால் நாங்கள் எப்படி திரும்பிச் செல்வோம்? என ரெயிலை முற்றுகையிட்டு டிரைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது டிரைவர் புளியமங்கலத்தில் நிறுத்தம் உள்ளதா? இல்லையா? என என குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக ரெயிலை நிறுத்த மறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து பயணிகள் ரெயில் நிலைய அதிகாரியிடம் புகார் கொடுத்தனர்.
இரவு நேரத்தில் குழந்தைகளுடன் பயணித்த பெண்கள், முதியவர்கள் என அனைவரும் சிரமத்துடன் பயணிகள் பஸ்சில் தங்கள் ஊருக்கு சென்றனர்.
இந்த சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
- கிரேன் மூலமாக பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை, ஆட்டோ நகர் பகுதியில் சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை விரிவுபடுத்தாமல் சாலை நடுவே கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ராணிப்பேட்டை நோக்கி அரசு பஸ் வந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். தகவல் அறிந்து வந்த ராணிப்பேட்டை போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.
விபத்துக்குள்ளான அரசு பஸ்சை கிரேன் மூலமாக அப்புறப்படுத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 5 பவுன் நகை பறிமுதல்
- ஜெயிலில் அடைத்தனர்
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த குடிமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாயகி இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி தனது வீட்டிலிருந்து விவசாய நிலத்திற்கு செல்ல நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ரங்கநாயகி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி விட்டார்.
இது தொடர்பான புகாரின் பேரில் வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த முகமது சதாம் (வயது 23) என்பவர் ரங்கநாயகியிடம் செயினை பறித்து சென்றது தெரியவந்தது.
பின்னர் வாலாஜா போலீசார் முகமது சதாமை கைது செய்து , அவரிடம் இருந்த 5 சவரன் செயினை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
- ரூ.2000 அபராதம் விதிப்பு
- ஜே.எம்.நீதிமன்றம் தீர்ப்பு
ராணிப்பேட்டை:
ஆற்காடு அடுத்த மாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 32) இவரது நண்பர் கோபிநாத் (34) ஆகிய 2 பேரும் கடந்த 2018-ம் ஆண்டு திருவலத்திலிருந்து ராணிப்பேட்டை நோக்கி பைக்கில் சென்றனர்.
அப்போது எதிரே திருவலம் நோக்கி சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கோபிநாத் பலத்த காயமடைந்தார்.
இந்த விபத்து குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் ரிஸ்வான் என்பவரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு ராணிப்பேட்டை ஜே.எம்.நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
5 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில் நேற்று மாஜிஸ்திரேட் நவீன் துரைபாபு, ரிஸ்வானுக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
- வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்
- வருகிற 30-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும்
நெமிலி:
காவேரிப்பாக்கம் வட்டார விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.இதுகுறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் கூறியதாவது:-
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் பதிவு செய்த அனைத்து வேளாண் குடும்பங்களும் பயன்பெறும் வகையில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2ஆயிரம் என ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் விவசாயிகளுக்கு வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் தொடர்ந்து பயனடைய இ.கே.ஒய்.சி. மற்றும் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை வருகிற 30-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஊக்கத்தொகை வருவது நிறுத்தப்படும்.
எனவே விவசாயிகள் அருகில் உள்ள வங்கி, இ சேவை மையங்கள் மற்றும் தபால் நிலையங்களை அணுகி ஆதார் எண்ணை உடனடியாக இணைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறப்பு ஆட்டுச் சந்தை நடந்தது
- வெளி மாநிலங்களில் இருந்தும் மாடுகள் கொண்டு வரப்பட்டது
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை நடந்தது.
இதில் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனைக்கு அதிகளவில் கொண்டுவரப்பட்டன.
வெள்ளாடுகள் அதிகப்பட்சமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று ஒரு நாள் மட்டும் இந்த சிறப்பு ஆட்டுச் சந்தையில் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் வேலூரை அடுத்த பொய்கை மாட்டு சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நடக்கும். சுற்றுவட்டார பகுதிகளில் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து மாடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி நேற்று நடந்த மாட்டு சந்தையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வழக்கத்தை விட ஏராளமான மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.
அதன்படி கறவை மாடுகள் அதிகபட்சமாக ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையிலும், எருது மாடுகள் ரூ.60 ஆயிரம் வரையிலும் மற்றும் எருமை மாடுகள் ரூ.50 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று ஒரு நாள் மட்டும் பொய்கை வார சந்தையில், அதிக அளவில் ரூ.1.90 கோடிக்கு வரை விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- 10 பிள்ளைகள் இருந்தும் கவனிக்க ஆளில்லாததால் பரிதாபம்
- உடலை போலீசார் அவரது மகனிடம் ஒப்படைத்தனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே 10 பிள்ளைகள் இருந்தும் கவனிக்க ஆளில்லாததால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதியோருக்கு இன்றைய சூழலில் ஏற்படும் துன்பங்கள் சமூக பிரச்னையாக உருவெடுத்து உள்ளது. லட்சக்கணக்கான முதியோர், ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.
முதியோருக்கு அடிப்படை சுதந்திரத்தை வழங்க வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ந் தேதி, உலக முதியோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இன்றைய பரபரப்பான உலகில் குடும்ப உறவுகள் என்பது பழங்காலம் போல் இல்லை. பெற்ற பிள்ளை களால் கைவிடப்பட்டு, பொருளா தாரத்தாலும் பாதிக்கப்பட்டு, அனாதைகளை போல வாழும் நிலைக்கு முதி யோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
முதியோர்கள் இல்லாமல் வாழ நினைக்கும் இந்த காலத்தினருக்கு, கூட்டு குடும்பத்துடன் வாழும் சந்தோசமும் மன நிறைவும் கிடைப்பதில்லை.
எந்திரத்தை போல் மாறிப்போன இன்றைய வாழ்க்கை முறையில், முதியோர்களை கவனிக்கவும் பாதுகாக்கவும் தவறி விடுகின்றனர்.
பெற்றவர்களை பாதுகாக்க அவரவர் பிள்ளைகள் முன்வர வேண்டும். பிள்ளைகள் நல்ல வசதியோடு இருந்தும், பெற்றோர்களை தாங்களே பார்த்துக்கொள்ளாமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் கொடுமையும் நம் நாட்டில் அதிகரித்து வருகிறது.
பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது இன்றைய காலத்தில் பேஷனாக மாறிவிட்டது. கவனித்துக் கொள்ள விரும்பாத நிலையில் பெற்ற பிள்ளைகளை, பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் நிலை தமிழ் கலாச்சாரத்தை படிப்படியாக அழித்து வருகிறது.
பிள்ளைகள் கவனிக்காமல் நடுத்தெருவிலும், முதியோர் இல்லத்திலும் கொண்டு சேர்ப்பதால் பெரும்பாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர்.
பெற்ற பிள்ளைகளே கவனிக்கவில்லை என்றால், அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு யாரை சேரும் என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. முதியோர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கர்நாடகா மாநிலம், கே.ஜி.எப். அருகே உள்ள துருளிசி பகுதியைச் சேர்ந்த ராமப்பா மனைவி ஜெயாயம்மாள் (வயது 72). ஜெயம்மாளுக்கு 10 பிள்ளைகள் உள்ளனர். கணவன் இறந்த பிறகு பெற்ற பிள்ளைகளும் சரிவர கவனிக்கவில்லை.
தள்ளாடும் வயதில் உழைத்து சாப்பிடவும் தெம்பு இல்லை. இதனால் ஜெயம்மாள் உறவினர் வீடுகளுக்கு அழைக்க ப்படாத விருந்தாளியாக சென்று தங்கி வந்துள்ளார்.
உறவினர் வீடுகளிலும் சரி வர கவனிப்பில்லா ததால், அனாதைப்போல் சாலைகளில் சுற்றி திரிந்து சாப்பிட உணவு இன்றி பரிதவித்துள்ளார்.
இவர் நாட்டறம்பள்ளி அடுத்த நந்திபெண்டா பகுதியில் உள்ள தனது குல தெய்வம் நந்தீஸ்வரன் கோவிலுக்கு அடிக்கடி சாமி கும்பிட வந்துள்ளார்.
அதன்படி கர்நாடகாவில் இருந்து ஜெயம்மாள் கடந்த 22-ந் தேதி நந்தி கொண்ட பகுதியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு வந்தார். பெற்ற பிள்ளைகள் கவனிக்காததை கடவுளிடம் கூறி அழுது புலம்பி உள்ளார்.
இதனை அந்த வழியாக சென்ற மக்கள் பார்த்துள்ளனர். பெற்ற பிள்ளைகள் கைவிட்ட நிலையில், வாழ வழியும் இல்லாததால் வாழ்வில் விரக்தி அடைந்த ஜெயம்மாள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
பையனப்பள்ளி சுடுகாட்டுக்கு சென்று, அங்குள்ள மரத்தில் புடவையை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை மீட்டு விசாரித்ததில் அவர் யார் என்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஜெயம்மாள் உடலை, போலீசார் அவரது மகனிடம் ஒப்படைத்தனர். தவமிருந்து பெற்றெடுத்த 10 பிள்ளைகளும் கவனிக்காததால், வாழ்வில் விரக்தி அடைந்து தாய் சுடுகாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.






