என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • பேரிடர் காலங்களில் தங்களை பாதுகாத்துக்கொள்வது குறித்து விளக்கினர்
    • ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் எஸ்.ஆர் கேட் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, பேரிடர் காலங்களில் தங்களை பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது, மழை காலங்களில் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து விலகி இருத்தல் வேண்டும். நீர் நிலைகளில் தவறி விழுந்தால் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் செயல்முறை விளக்கங்களுடன் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    • ஒருவர் படுகாயம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பெரியகிராமம் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள மேம்பாலம் வழியாக நேற்று இரவு 8 மணிக்கு பைக்கில் சென்ற 2 பெண்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

    இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். உயிருக்கு ஆபத்தானநிலையில் இருந்த இருவரையும் மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் வையூர் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்பவரின் மனைவி

    தனம்வர்த்தினி மற்றும் அதே பகுதி சேர்ந்த மேகலா என்பது தெரியவந்தது.

    தனம்வர்த்தினி மற்றும் மேகலா இருவரும் ஏகாம்பநாதர் கோவில் பகுதிகளில் பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வருகின்றனர். நேற்று இரவு தங்கள் வியாபாரத்துக்காக பிளாஸ்டிக் பொருட்களை வாங்குவதற்காக வாலாஜாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த டாக்டர்கள் தனம்வர்த்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேகலாவை மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    • செங்குத்தான மலை பாதையில் ஏறிய போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த அனந்தலை மலையில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரிகள் உள்ளது. இந்த கல்குவாரியில் பாறைகளை துளையிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு தனியார் கல்குவாரி ஒன்றில் வடகடப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த குமார் (வயது 27) என்பவர் கல்குவாரிக்கு பாறைகளை துளையிடும் கம்ப்ரஸர் டிராக்டரை ஓட்டி சென்றார்.

    டிராக்டர் செங்குத்தான மலை பாதையில் செல்லும்போது திடீரென டிராக்டர் பழுதடைந்துது. இதனால் டிரைவர் கட்டுபாட்டை இழந்து பின்னோக்கியே வந்து தடம்புரண்டு டிராக்டர் கவிழ்ந்தது.

    இதில் டிராக்டரின் கீழ் சிக்கிகொண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக குமாரின் மனைவி ரஞ்சிதா வாலாஜா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, குமார் உடலை பிரேத பரிசோதனை க்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 63 மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலைப் பிரிவில் கடந்த ஆண்டு முதலாமாண்டு படித்த 4 ஆயிரத்து 168 மாணவர்கள், 5 ஆயிரத்து 517 மாணவிகளுக்கு என மொத்தம் 9ஆயிரத்து 685 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 கோடியே 66 லட்சத்து 84 ஆயிரத்து 120 மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது.

    இதில் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் மட்டும் 16 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 2ஆயிரத்து 609 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 25 லட்சத்து 76 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.

    விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கி தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ,முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், பேரூராட்சி தலைவர் சங்கீதா மகேஷ், மாவட்ட கல்வி அலுவலர் சுப்பாராவ் உள்பட நகரமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி நன்றி கூறினார்.

    • மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நடந்தது
    • தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து முத்துக்கடை பஸ் நிலையம் அருகில் கையில் மெழுகு வர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் எஸ்.அண்ணாதுரை தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கையில் மெழுகு வர்த்தி ஏந்தியவாறு மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் குப்புசாமி, உத்தமன், சால்வை.மோகன், நாகேஷ், ராணி வெங்கடேசன், முருகன், மோகனசுப்பிரமணியம், பிரகாஷ், உதயகுமார், ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் ராணிப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூரில் காங்கிரஸ் மாநில செயலாளர் அக்ராவரம்.கே. பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் கணேசன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள், பொதுமக்கள் வரவேற்பு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த அய்யம்பேட்டைசேரியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிராமமக்கள் பயன்பெறும் வகையில்,புதன்கிழமை தோறும் செயல்படக்கூடிய புதிய வாரச்சந்தை திறப்பு விழா நடந்தது.

    அய்யம்பேட்டை சேரியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள வார சந்தையில், இப்பகுதி கிராமப்புறங்களில் விளை விக்கப்படும் வெண்டை, முருங்கை, பாகற்காய், கீரை வகைகள், வேர்க்கடலை, காராமணி உள்ளிட்ட பயறு வகைகள் மற்றும் வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படும் கேரட், பீட்ரூட், பீன்ஸ், உருளை உள்ளிட்ட பல்வேறு காய்கறி வகைகளை விற்பனை செய்யும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரச்சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இந்நிகழ்ச்சிக்கு காவேரிப்பாக்கம் தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி தலைமை வகித்தார். கட்டளை கிளை செயலாளர் தனசேகர், கிளை பிரதிநிதி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவேரிப்பாக்கம் பேரூர் செயலாளர் பாஸ் (எ) நரசிம்மன் வரவேற்றார்.

    முன்னாள் அய்யம்பேட்டை சேரி ஊராட்சி தலைவர் நரசிம்மன் புதிய வார சந்தையை திறந்து வைத்தார். மாவட்ட விவசாயஅணி அமைப்பாளர் வெங்கடேசன் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் துரைமஸ்தான், மாவட்ட பிரதிநிதி மங்கலம் கோபி, ஒன்றிய பொருளாளர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு 21 அடி உயரத்தில் அஷ்டநாக விஸ்வரூப கல் கருடர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    நேற்று கருட ஜெயந்தியை முன்னிட்டு 21 அடி உயர கருடருக்கு கருட ஹோமம் , சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், அனுமந்த ஹோமம், மகாலக்ஷ்மி ஹோமம் ஆகிய ஹோமங்களுடன், சிறப்பு நவ கலச அபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று வாஸ்து நாளை முன்னிட்டு அஷ்டதிக் பாலகர்கள், பஞ்ச பூதங்கள் மற்றும் வாஸ்து பகவானுக்கு சிறப்பு ஹோமத்துடன் அபிஷேகங்கள் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, பீடாதிபதி முரளிதரஸ்வாமிகளிடம் ஆசியும், பிரசாதமும் பெற்று சென்றனர்.

    • பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்றனர்
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி அலுவலக்கூட்ட அரங்கில் நெமிலி, பனப்பாக்கம்,தக்கோலம் உள்ளிட்ட 3 பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    இந்த முகாமிற்கு நெமிலி பேரூராட்சி செயல் அலுவலர் பூவேந்திரன் தலைமை வகித்தார். பனப்பாக்கம் செயல் அலுவலர் குமார் முன்னிலை வகித்தார்.

    இந்த பேரூராட்சிகளில் பணியாற்றும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்துகொண்டு ரத்தஅழுத்தம்,சர்க்கரை நோய், கண் பரிசோதனை, தோல் நோய் உள்ளிட்ட பிரிவுகளில் சிகிச்சை பெற்றனர்.

    இதில் இளநிலை உதவியாளர் வெங்கடேசன், நந்தகுமார், திமுக இளைஞரணி செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி திடீர் ஆய்வு
    • காலதாமதங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்தும் கேட்டறிந்தார்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்தில் நெமிலி,வேட்டாங்குளம், நெடும்புலி,பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்காண விண்ணப்பம் பதிவேற்றும் முகாமை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது இதுவரை இணையத்தில் பதிவேற்றம் செய்த விவரங்கள் குறித்தும், பதிவேற்றம் செய்யும் போது ஏற்படும் தொழில் நுட்ப கோளாறுகள், காலதாமதங்கள் ஏற்படு வதற்கான காரணங்கள் குறித்தும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும் மகளிர் உரிமை தொகை படிவங்களை உரிய நேரத்தில் விடுபடாமல் அனைத்து விபரங்களையும் பதி வேற்றம் செய்யப்படுவதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இதில் மாவட்ட கலெக்டர் வளர்மதி, சப் -கலெக்டர் பாத்திமா, நெமிலி தாசில்தார் பாலசந்தர், நெமிலி சேர்மன் வடிவேல், மாவட்ட கவுன்சிலர் சுந்தராம்பாள், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகாதேவி (நெமிலி), கவிதா (பனப்பாக்கம்), லதா (காவேரிப்பாக்கம்), உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாகன ஓட்டிகள் பீதி
    • இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் இருந்து பெரும்புலி பாக்கம் செல்லும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இரவு நேரங்களில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறும் இடங்களில் மின்விளக்கு வெளிச்சம் இல்லாமல் இருட்டாக உள்ளது.

    அப்பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் பைக்கில் செல்பவர்கள் மெதுவாக செல்கின்றனர்.

    இருட்டில் பதுங்கி இருக்கும் மர்ம நபர்கள் பைக்கில் தனியாக செல்பவர்களை பைக்கில் பின் தொடர்ந்து சென்று வழிமறிக்கின்றனர்.

    அவர்கள் கத்தியை காட்டி நகை, பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி செல்கின்றனர். தங்களது உடைமைகளை பறிப்கொடுத்தவர்கள் அவளூர் போலீசில் புகார் செய்தாலும் வழக்கு பதிவு செய்யாமல் புகார் கொடுக்க அனுப்புவதாக கூறப்படுகிறது.

    வழிப்பறி சம்பவத்தில் ஏராளமானவர்கள் தங்களது உடைமைகளை வழிப்பறி கும்பலிடம் இழந்து உள்ளனர்.

    இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

    எனவே மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் போலீசாருக்கு உரிய அறிவுரை வழங்கி வழிப்பறி கும்பல்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும்.

    போலீசார் வழிப்பறி நடைபெறும் இடங்களில் இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிர படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • மாணவ, மாணவிகளுக்கு பரிசு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் ஆற்காடு அண்ணா சிலை அருகில் கொட்டும் மழையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள் விழா நடந்தது.

    இதில் தமிழில் பேசு பாிசை வெல்லு என்ற தலைப்பில் பேச்சு போட்டியும், கவிஞா் ஜெயபாஸ்கரன் தமிழும் தமிழின போரளி எனும் சொற்பொழிவு நிகழ்ச்சினை நடத்தினர்.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட வன்னியர் சங்க தலைவர்.அ.ப. லட்சுமணன் ஆற்காடு நகர செயலாளர் துளசி ரவி வரவேற்று பேசினார்.

    சுரேஷ், அ.ப.லட்சு மணன், திருமுருகன், சுரேந்தர்,ஏ.வி.டி. பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட தலைவர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் ஞான சௌந்தரி வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த போட்டியில் சுமார் 50 க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் தூய தமிழில் பேசிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட செயலாளர் சரவணன், கவிஞர் பாஸ்கரன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்களை மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், தென்னை மரக்கன்றுகளையும் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் செல்வம், செல்வி ரமேஷ் , பாஞ்சாலி வெங்கடேசன், மாநில பசுமை தாயகம் துணை செயலாளர் டீ.டி.மகேந்திரன், மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய,பா.ம.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இறுதியாக ஆற்காடு நகர மன்ற தலைவர் சஞ்சீவிராயன் நன்றி உரை வழங்கினார்.

    • வாலாஜா அரசினர் மகளிர் கல்லூரியில் நடந்தது
    • மாணவிகளுக்கு ெசயல் விளக்கம் காட்டினர்

    ராணிப்பேட்டை :

    வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கல்லூரியில்,தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் சார்பில் நேற்று ஒத்திகை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    முகாமில் பேரிடர் மீட்பு குழு சப் -இன்ஸ்பெக்டர் மோகனரங்கன் தலைமையிலான குழுவினர் பேரிடர் மற்றும் விபத்து காலங்களில் எவ்வாறு செயல்பட்டு உயிர்களை காப்பாற்றுவது என்பது குறித்து கல்லூரி மாணவர்களுக்கு ஒத்திகைகள் மூலம் செயல் விளக்கம் அளித்தனர்.

    இதில் துணை தாசில்தார் வினோத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×