என் மலர்
ராணிப்பேட்டை
அரக்கோணம் அருகே வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த மேல்ஆவதம் பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் மர்ம நபர் ஒருவர் மிரட்டி பணம் பறிப்பதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்குள்ள கடை ஒன்றில் பணம் பறிக்க முயன்ற நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அதேப் பகுதியை சேர்ந்த குபேந்திரன் மகன் தினேஷ் குமார் என்ற காந்தி (வயது 23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் கவரத்தெருவைச் சேர்ந்தவர் திவாகர் (வயது 22). இவர், கடந்த 13-ம்தேதி ஆற்காடு அடுத்த எசையனூர் கிராமத்துக்கு நண்பரை பார்க்க பாலாறு வழியாக சென்றார். பாலாற்றில் இருந்த வாலிபர் ஒருவர் திவாகரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.500 மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து திவாகர் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் போலீசார் நேற்று காவேரிப்பாக்கம் அத்திப்பட்டு இ.பி. அலுவலகம் அருகே தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிளை போலீசார் மடக்கி, அதில் வந்தவரிடம் விசாரித்தனர். பனப்பாக்கம் திருமால்பூர் ரோடு பகுதியைச் சேர்ந்த கண்ணன் (22) என்றும், திவாகரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக கூறினார். இதையடுத்து போலீசார், கண்ணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன், ரூ.500-யை பறிமுதல் செய்தனர்.
ஆற்காடு பகுதியில் கஞ்சா கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ஆற்காடு பகுதியில் கஞ்சா விற்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்காடு தண்டுபஜார் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 23), தோப்புகானா தியாகி சண்முகம் தெருவைச் சேர்ந்த சபரீசன் (24), குட்டைக்கார தெருவைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (25), முப்பது வெட்டி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (21) ஆகியோர் ஆற்காடு பகுதியில் கஞ்சா விற்றது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமான பணி அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடையும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டை ஐ.வி.பி.எம் அருகே, ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கதர் மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் ஆய்வுசெய்து, அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர்ஏ.வ. வேலு கூறியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் ரூ.118 கோடி மதிப்பீட்டில் 13.4 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. இப்பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந் தேதி தொடங்கப்பட்டது. 25 துறை அலுவலகங்கள் செயல்பட ஏதுவாக இக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக நீளம் மற்றும் அகலம் அதிகம் உள்ள அரங்கம் கட்டும் போது, கட்டிடத்தின் மேற்கூரைகளை தாங்கி பிடிக்க பீம்கள் அமைக்கப்படும். ஆனால் இந்த கட்டிடத்தில் அவ்வாறு இல்லாமல் பீம்கள் சிறிய அளவில் அமைக்கப்பட்டு, நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இப்பணியின் ஒப்பந்த காலம் 18 மாதங்கள் ஆகும். ஒப்பந்தப்படி 2022 ஏப்ரல் மாதம் இக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட வேண்டும். ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே, பிப்ரவரி மாதம் முடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வள்ளுவர் கோட்டம் விரைவில் புதுப்பிக்கப்படும். சாலைகளை விரிவாக்கம் செய்யும்பொருட்டு, 500 கி.மீ விரிவாக்கம் செய்ய, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதுரையில் அமைய உள்ள கலைஞர் நூலகத்திற்கு விரைவில் இடம் தேர்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது அமைச்சர் காந்தி, எம்.எல்.ஏ.க்கள் ஈஸ்வரப்பன், ஏ.பி.நந்தகுமார், மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர்கள் புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத், பொதுப்பணித்துறை கட்டுமானப் பிரிவின் கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, திட்டம் மற்றும் வடிவமைப்பு பிரிவு பொறியாளர் கல்யாண சுந்தரம், கட்டிட கலைஞர் மைக்கேல், செயற்பொறியாளர்கள் சங்கரலிங்கம், ஸ்ரீதர் ஆதித்யா, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளும், தி.மு.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
ஓச்சேரி அருகே கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் தேப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகன் தினேஷ் (வயது 19). தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது உறவினர் கோபி (18). இவர்கள் இருவரும் கடந்த 10-ந் தேதி நெமிலி பகுதியில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டனர்.
பின்னர் அன்று இரவு இருவரும் மோட்டார் சைக்கிளில் காவேரிப்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஓச்சேரி அடுத்த நங்கமங்கலம் அருகே அரக்கோணம் நெடுஞ்சாலையில் வந்தபோது, மோட்டார்சைக்கிளில் வந்த 3 நபர்கள் உதவி கேட்பதுபோல் தினேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர்.
மோட்டார்சைக்கிளை நிறுத்தியதும் மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கழுத்தில் வைத்து கேட்பதை கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். பின்னர் தினேஷ், கோபி ஆகிய இருவரிடமிருந்து 2 செல்போன்கள் மற்றும் ரூ.500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்தி தினேஷ் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் போலீசார் காவேரிப்பாக்கம் அடுத்த பன்னியூர் கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த அரக்கோணம் அடுத்த கும்மினிப்பேட்டை அருந்ததிபாளையம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (22), பனப்பாக்கம் பெரிய தெருவைச் சேர்ந்த பிரசாந்த் (22) ஆகிய இருவரையும் நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்து செல்போன், மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். இவர்களது நண்பர் காஞ்சீபுரம் மாவட்டம் பள்ளப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜசேகர் (25) என்பவரை தேடி வருகின்றனர்.
சோளிங்கர் அருகே தூக்குப்போட்டு கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோளிங்கர்:
சோளிங்கரை அடுத்த ரெண்டாடி ஊராட்சிக்கு உட்பட்ட கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 60), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வேலைக்குச் சென்று விட்டு மாலை வீட்டுக்கு திரும்பினார். அவர், மனைவியை சாப்பாடு போடுமாறு கேட்டுள்ளார். மனைவி சிறிது நேரம் இருக்குமாறு கூறினார். இதனால் மனவேதனையடைந்த கோவிந்தராஜ் வீட்டின் அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரின் மகன் தினகரன் (30) சோளிங்கர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓச்சேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம்:
நெமிலி தாலுகா திருமால்பூர் பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 55) விவசாயி. இவர் நேற்று முன்தினம் திருமால்பூரிலிருந்து ஓச்சேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஓச்சேரி- அரக்கோணம் நெடுஞ்சாலை ஆயர்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த டிராக்டர் மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் வந்த துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து அவளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, துரையின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அசோக்நகரை சேர்ந்தவர் சேஷாசலம். அவரது மகன் முரளிகண்ணன் (வயது 33). இவர், நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் இயங்கி வருகிறது.
அரக்கோணம்:
ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தின் மீது 2 டிரோன்கள் உதவியுடன் கடந்த மாதம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள முப்படைகளின் தளங்கள் எச்சரிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் இயங்கி வருகிறது. இங்கிருந்து வங்கக்கடல் பரப்பு கண்காணிப்பு பணியுடன் ஹெலிகாப்டர் பைலட்டுகளுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த மையத்தை சுற்றி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஐ.என்.எஸ். கடற்படை விமான தளம் மற்றும் சுற்றியுள்ள 3 கி.மீ தொலைவுப் பகுதிக்குள் முன் அனுமதி இல்லாமல் டிரோன்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
முன் அனுமதி இல்லாமல் எச்சரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எல்லைக்குள் டிரோன்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள் பறந்தால் அழிக்கப்படும் அல்லது பறிமுதல் செய்யப்படும். மேலும், அதன் உரிமையாளர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
டிரோன்களை பயன்படுத்தும் அரசு அல்லது தனியார் அமைப்புகள் எச்சரிக்கப்பட்ட பகுதியில் பறப்பதற்கு அனுமதி பெற விரும்பினால் சிவில் விமான போக்குவரத்து அமைச்சக இயக்குநரின் முன் அனுமதி பெற்று கிழக்கு பிராந்திய கடற்படை தலைமையக பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் ஒரு வாரத்துக்கு முன்பாக சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அனுமதி இன்றி டிப்பர் லாரியில் ஜல்லி ஏற்றி வந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவர் டிப்பர் லாரியில் அனுமதி இன்றி ஜல்லியை ஏற்றிக்கொண்டு, ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த ராணிப்பேட்டை போலீசார், சுரேசை கைது செய்தனர். அவரிடமிருந்து டிப்பர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
டாஸ்மாக் கடை ஊழியரை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலவை:
கலவையை அடுத்த மேல்நேத்தபாக்கம் கிராமம் அருகில் அரசு மதுபானக்கடை உள்ளது. நேற்று மாலை 6.30 மணியளவில் அகரம் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார், மேல்நெல்லி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் டாஸ்மார்க் கடைக்கு வந்து, அங்கிருந்த ஊழியரிடம் 2 பீர் பாட்டில்களை கடனாக கேட்டுள்ளனர். அதற்கு ஊழியர், காசு இல்லாமல் மதுபாட்டில்கள் கொடுக்க முடியாது, என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், டாஸ்மாக் கடை ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டி, அங்கு கிடந்த காலி பீர் பாட்டிலை எடுத்து வந்து குத்தி விடுவேன், என மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்து டாஸ்மாக் கடை ஊழியர் தினகரன் கலவை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தார்.
வாலாஜா அருகே வேன் கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
ஆந்திர மாநிலம் சித்தூர் பலமனேர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்ஜி (வயது 36). டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு பலமனேரிலிருந்து சென்னை கோயம்பேடுக்கு வேனில் காய்கறி ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.
நேற்று அதிகாலை சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வன்னிவேடு பகுதி அருகே வரும் போது தனியார் திருமண மண்டபம் எதிரே நிலைதடுமாறிய வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் ராம்ஜி வேனுக்கு அடியில் சிக்கி கொண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து வாலாஜா போலீசாருக்கு தகவல் கிடைத்ததன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதனையடுத்து ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நிலைய அலுவலர் அரிகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டனர். இதனையடுத்து உடலை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.






