search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் பணியினை அமைச்சர்கள் எ.வ. வேலு, காந்தி ஆகியோர் ஆய்வு செய்தபோது காட்சி
    X
    புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் பணியினை அமைச்சர்கள் எ.வ. வேலு, காந்தி ஆகியோர் ஆய்வு செய்தபோது காட்சி

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமான பணி அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடையும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
    சிப்காட் (ராணிப்பேட்டை):

    ராணிப்பேட்டை ஐ.வி.பி.எம் அருகே, ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கதர் மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் ஆய்வுசெய்து, அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

    பின்னர் நிருபர்களிடம் அமைச்சர்ஏ.வ. வேலு கூறியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் ரூ.118 கோடி மதிப்பீட்டில் 13.4 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. இப்பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந் தேதி தொடங்கப்பட்டது. 25 துறை அலுவலகங்கள் செயல்பட ஏதுவாக இக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக நீளம் மற்றும் அகலம் அதிகம் உள்ள அரங்கம் கட்டும் போது, கட்டிடத்தின் மேற்கூரைகளை தாங்கி பிடிக்க பீம்கள் அமைக்கப்படும். ஆனால் இந்த கட்டிடத்தில் அவ்வாறு இல்லாமல் பீம்கள் சிறிய அளவில் அமைக்கப்பட்டு, நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இப்பணியின் ஒப்பந்த காலம் 18 மாதங்கள் ஆகும். ஒப்பந்தப்படி 2022 ஏப்ரல் மாதம் இக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட வேண்டும். ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே, பிப்ரவரி மாதம் முடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வள்ளுவர் கோட்டம் விரைவில் புதுப்பிக்கப்படும். சாலைகளை விரிவாக்கம் செய்யும்பொருட்டு, 500 கி.மீ விரிவாக்கம் செய்ய, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதுரையில் அமைய உள்ள கலைஞர் நூலகத்திற்கு விரைவில் இடம் தேர்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது அமைச்சர் காந்தி, எம்.எல்.ஏ.க்கள் ஈஸ்வரப்பன், ஏ.பி.நந்தகுமார், மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர்கள் புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத், பொதுப்பணித்துறை கட்டுமானப் பிரிவின் கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, திட்டம் மற்றும் வடிவமைப்பு பிரிவு பொறியாளர் கல்யாண சுந்தரம், கட்டிட கலைஞர் மைக்கேல், செயற்பொறியாளர்கள் சங்கரலிங்கம், ‌ ஸ்ரீதர் ஆதித்யா, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளும், தி.மு.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×