என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்

    வாலாஜா :

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உலக சாதனை நிகழ்வாக 5 மணி நேரத்தில் 50 லட்சம் பனை விதைகள் மாவட்டத்தில் உள்ள 288 ஊராட்சிகளில் நடும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் தென்கடப்பந்தாங்கல் ஊராட்சி முசிறி ரோட்டில் அமிர்த சரோவர் திட்டத்தில் வெட்டப்பட்டுள்ள குளம் கரையில் பனை விதைகளை நடும் பணி இன்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.திட்ட இயக்குனர் லோகநாயகி, ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயந்தி, ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்கடப்பந்தாங்கல் ஊராட்சிமன்ற தலைவர் பிச்சமணி வரவேற்றார்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பனை விதைகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் ஆர்.காந்தி கூறியதாவது:-

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்று ஒன்றரை வருடங்கள் கூட ஆகவில்லை.அவர் ஒவ்வொரு துறையிலும் ஆய்வு செய்து எல்லா துறைகளையும் எப்படி முன்னேற்றுவது என செயல்படுகிறார்.

    தமிழகத்தில் 22 சதவீதம் காடுகள் உள்ளது.இதனை 33 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற ஒரு இலக்கோடு பசுமைத்தாயகம் காடு மூலம் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள குளம், ஏரிகளில் மரங்களை நட வேண்டும் என தெரிவித்தார்.

    அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 5 மணி நேரத்தில் 52 லட்சம் பண விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. ஒரு பனைமரம் சுமார் 2000 லிட்டர் தண்ணியை சேகரிக்கும் திறன் கொண்டதாகும். ராணிப்பேட்டை மாவட்டத்தை ஒரு முன்மாதிரி மாவட்டமாக்குவேன்.புதியதாக துவங்கப்பட்ட மாவட்டங்களில் முதலில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி கொண்டு வருவேன்.

    மேலும் மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை படிப்படையாக செயல்படுத்தி காட்டுவேன்.இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், வாலாஜா நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, துணை தலைவர் கமலராகவன், ஒன்றியக்குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம், ஒன்றிய செயலாளர் சண்முகம், தாசில்தார் ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட வார்டு உறுப்பினர்கள், மகளிர் குழுவினர், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அரசு பெண்கள் பள்ளி அருகே உள்ளது
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் நடுவே அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே பயனற்றுக் கிடக்கும் இரண்டு அரசு கட்டிடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது.

    இந்த இடத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சிலர் மது குடித்து விட்டு அங்கேயே படுத்து கிடப்பதும் சீட்டு விளையாடுவதும் போன்ற சீர்கேடான செயல்களை செய்து வருகின்றனர்.

    பெரிய குற்றங்கள் நடக்கும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • தொடர் திருட்டால் பொதுமக்கள் பீதி
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரபீக் நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெய வீரன் (வயது 54), எல்ஐசி அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.

    ஆரணி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் குடும்பத்துடன் சென்றார். இந்நிலையில் நேற்று அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பக்கத்து வீட்டுக்காரர்கள் போன் செய்து அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து தனது வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த 11 பவுன் தங்க நகை, 5 லட்ச ரூபாய் ரொக்க பணம், 200 கிராம் வெள்ளி பொருட்கள் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    அதே பகுதியை சேர்ந்தவர் ஷாநவாஸ் (36) இவர் மனைவி சாஜிதா.தனது குழந்தைகளுடன் சோளிங்கர் கொடைக்கல் பகுதியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார்.

    இவரது வீட்டில் பூட்டை உடைத்த கும்பல் உள்ளே புகுந்தனர். பெட்ரூமில் உள்ள பீரோவை உடைத்து அதிலிருந்து 17 சவரன் தங்க நகைகள், 3லட்ச ரூபாய் ரொக்க பணம், 1 கிலோ 200 கிராம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இரு வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக வழக்கு
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி எம் பி டி ரோடு பகுயை சேர்ந்தவர் சீனு என்கிற சீனிவாசன் (வயது 26) இவர் தனியார் கம்பெனி நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

    நேற்று சீனு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். நண்பர்களுடன் மது அருந்திவிட்டு பெங்களூர் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியும் பொது சொத்துக்கு குந்தகம் விளைக்கும் வகையில் கற்களை எடுத்து வாகனத்தில் செல்பவர்கள் மீது எறிந்து இடையூறு செய்தார்.

    அவலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சீனிவாசனை அங்கிருந்து மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அவர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியும் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்தது கைது செய்தனர்.

    • கிராம மக்கள் சிகிச்சை பெற்றனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பெரப்பேரி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.கலைவாணி மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை ஒன்றிய குழு தலைவர் பெ.வடிவேலு தொடங்கி வைத்தார். இத்திட்டத்தினை அரசு சிறப்பான முறையில் செயல்படுத்தி வருவது குறித்தும், பொதுமக்கள் இந்த முகாமில் எவ்வாறு பயன்பெற முடியும் என்பது குறித்தும் விளக்கி பேசினார்.

    இந்த சிறப்பு மருத்துவ முகாமில் மாவட்ட சுகாதரப் பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் மணிமாறன் கலந்து கொண்டு திட்ட விளக்கவுரை ஆற்றினார்.

    இந்த சிறப்பு மருத்துவ முகாமில், பொது மருத்துவம், இருதய சிகிச்சை பிரிவு, மகப்பேரு மருத்துவம், கர்பப்பை, வாய் புற்றுநோய், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், எலும்பு முறிவு, மாற்றுத்திறனா ளிகளுக்கான மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, பல் மற்றும் கண் மருத்துவம், கோவிட்-19 சித்த மருத்துவம், தொழு நோய், காச நோய், குழந்தைகள் நலம் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் மருத்துவம் அளிக்கப்பட்டது.

    இதில் பெரப்பேரி கிராமத்தை சுற்றியுள்ள கீழ்வீதி, மகேந்திரவாடி, கோடம்பாக்கம், உளியநல்லூர் ஆகிய கிராம மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

    • அன்புமணி ராமதாஸ் பேட்டி
    • ராணிப்பேட்டையில் பா.ம.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க. இன்னாள் முன்னாள் பொறுப்பாளர்கள் சந்திப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அதைதொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டம் தொடங்கி சரியான நிர்வாக கட்டமைப்பு உருவாகவில்லை.

    ஆந்திராவில் உள்ள பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதுமட்டுமின்றி தடுப்பணை உயர்த்துவது என திட்டமிட்டு இருக்கிறார்கள். இதனை கடுமையாக நாங்கள் கண்டிக்கிறோம். பாலாறு கர்நாடகாவில் தொடங்கி 86 கி.மீ. தொலைவிற்கு 18 தடுப்பணை கர்நாடக அரசு கட்டியுள்ளது. ஆந்திரா குப்பம் பகுதியில் 22 கி.மீ. தூரத்தில் 32 தடுப்பணை கட்டியுள்ளனர்.

    தமிழ்நாட்டின் எல்லை பில்லூர் பகுதியில் 223 கி.மீ சென்று சதுரங்கபட்டினம் கடலில் கலக்கிறது.கடந்த 5 ஆண்டு முன்பு வரை பாலாற்றின் குறுக்கே ஒரே ஒரு தடுப்பனை மட்டும் தான் இருந்தது. அதுவும் வாலாஜா பகுதியில் வெள்ளையர் காலத்தில் கட்டப்பட்டது.தற்போது 3 தடுப்பனை கட்டி இருக்கிறார்கள் அது போதுமானது இல்லை.

    பாலாற்றின் குறுக்கே ஒவ்வொரு 10 கிமீ.க்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். பாலாற்றின் குறுக்கே அடுத்த 10 ஆண்டுகளில் 20 தடுப்பணைகளை கட்டப்பட வேண்டும். அதற்கு அரசு திட்டமிட வேண்டும். இந்த பகுதியை சார்ந்தவர் தான் நீர்வளத்துறை அமைச்சர் அவருக்கு அன்பான வேண்டுகோள் ஆந்திரா அரசு தடுப்பனை உயர்த்தும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    அமைச்சர் நேரடியாக சென்று ஆந்திர முதலமைச்சரை சந்திக்க வேண்டும். கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 தடுப்பனை கட்ட ஆந்திர அரசு திட்டமிட்டு அதற்கு நிதியும் ஒதுக்கி இருக்கிறார்கள். இது சம்மந்தமாக என் தலைமையில் ஆர்.கே.பேட்டை பகுதியில் ஆர்பாட்டம் நடத்தினோம். தமிழக அரசு குறிப்பாக அமைச்சர் ஆந்திர முதல்வரை சந்தித்து இந்த திட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும்.

    பாலாற்றில் தோல் பதனிடும் தொழிற்சாலை சுத்தகரிப்பு ஆலைகள் சரியான முறையில் செயல்பட வில்லை. சுற்றுச்சூழல் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் காந்தி வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.21.5 மதிப்பீட்டில் 187 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு அதிநவீன மின்சாதனம் பொருந்திய மூன்று சக்கர வண்டி, செயற்கை கை மற்றும் கால், தேசிய அட்டை உள்ளிட்ட பல்வேறு நல திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஜெகத்ரட்சகன் எம்.பி., ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட அலுவலர் சரவணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அம்பிகா பாபு, மாவட்ட அலுவலர் மணிமேகலை, நகர மன்ற தலைவர் லட்சுமி, நகராட்சி ஆணையாளர் லதா, தாசில்தார் (பொ) சுமதி, ஊராட்சி ஒன்றிய அலுவலர் வெங்கடேசன், நகர் செயலாளர் வி.எல். ஜோதி, நகர மன்ற உறுப்பினர்கள் குமார், செந்தில்குமார், சாமுண்டீஸ்வரி, கே.எம்.பி.பாபு, சங்கீதா, சி.என் அன்பு, வடிவேல், கங்காதரன், நந்தாதேவி, துரை சீனிவாசன், மல்லிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
    • பக்தர்கள் சாமி தரிசனம்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை நேருஜி நகர் 7-வது தெருவில் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவில் உள்ளது. நவராத்திரி 5-ம் நாளான நேற்று துர்கா கொலு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதில் அரக்கோணம் நகர மன்ற தலைவர் லட்சுமி, நகர மன்ற உறுப்பினர்கள் சாமுண்டீஸ்வரி, நந்தாதேவி சங்கீதா, ரஷிதா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கொலுவை கண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.

    • கவுன்சிலர் கூட்டத்தில் வலியுறுத்தல்
    • 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகர மன்ற சாதாரண கூட்டம் நகராட்சி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத் தலைமை தாங்கினார்.துணை தலைவர் ரமேஷ் கர்ணா, ஆணையாளர் ஏகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் 19-வது வார்டு காரை புதுத்தெருவில் சிறுபாலம் மற்றும் மழைநீர் வடிகால்வாய் அமைத்திடும் பணிக்கு ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் செலவிடுவது, வார்டு 6,பாட்டை தெரு, பாறை தெரு மற்றும் புது தெருவில் மழை நீர் வடிகால்வாய் பழுதுபார்த்தல் பணி செய்ய ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் செலவிடுவது, தகுதியான சாலையோர வியாபாரிகளின் சமூக பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்திட நடப்பாண்டில் புதிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்கள் எவ்வித சிரமமும் இன்றி வியாபாரம் செய்வதற்கு ஏற்ற சூழல் உருவாக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் அறிவிப்பின்படி ராணிப்பேட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உத்தேசமாக 400 வரை உள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் குடும்ப உறுப்பினர்களின் நிலையை மேம்படுத்த புதியதாக கணக்கெடுப்பு செய்து அவர்களுக்குரிய புள்ளி விவரங்களுடன் அடையாள அட்டை, விற்பனை செய்வதற்கான சான்றிதழ், விற்பனை திட்டத்தை தயாரித்தல் என்பன உள்பட 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் பேசியதாவது: கிருஷ்ணன்:- பஜார் வீதியில் பெரிய வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது எனவே அப்பகுதியில் இரு சக்கர வாகனம் மட்டும் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

    ஜோதி சேதுராமன்: ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் பொதுமக்கள் இளைஞர்கள் குழந்தைகள் மாலை நேரத்தில் நடை பயிற்சி மற்றும் விளையாடுகின்றனர் எனவே மைதானத்தை சுற்றி மின்விளக்கு அமைக்க வேண்டும்.

    வினோத்: ராணிப்பேட்டை வார சந்தை மைதானத்தில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் தினசரி மார்க்கெட் கொண்டு வந்த அமைச்சர் காந்திக்கு நன்றி தெரிவித்தார்.

    குமார்: ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் காரிய மேடை அருகே தினசரி தூய்மை பணி நடத்த வேண்டும், ராணிப்பேட்டை நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் தெருக்களில் உள்ள நாய்கள், பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அப்துல்லா: நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் நகராட்சி அனுமதி பெறாமல் மாறுதல்கள் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

    இதற்கு பதில் அளித்த நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • ஆற்காடு நகர மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    ஆற்காடு:

    ஆற்காடு நகரமன்ற கூட்டம் தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணைதலைவர் பவளகொடிசரவணன், ஆணையாளர் (பொறுப்பு) கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நகரில் உள்ள30 இடங்களில் உள்ள ஆழ்துறை கைபம்புகளை மாற்றி புதியதாக சிறுவிசை பம்ப் குடிநீர் தொட்டி மற்றும் மோட்டார் பொறுத்துதல், தோப்புகானா நகாராட்சி உயர்நிலைபள்ளியில் கட்டத்தின் பழுதடைந்துள்ள மேல்தளங்களை ரூ.3.80லட்சம் மதிப்பீட்டில் பழுது பார்த்தல் அதேபோல் சித்தமருத்துவமனை கட்டிடத்தின் மேல்தனம் ரூ.2.80 மதிப்பீட்டில் பழுது பார்த்தல், அண்ணாநகர் நடுநிலைப்பள்ளியில் உள்ள பழைய கழிப்பிடத்தை இடித்து விட்டு ரூ.9.20 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கழிப்பிட கட்டிடம் கட்டுதல் ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை மாதிரி பள்ளியாக மாற்றிட ரூ.6 கோடியே 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது.

    பொன்ராஜசேகர்- நகரில் தூய்மை பணிகள் சரியாக நடைபெறவில்லை அதனை சரிசெய்யவேண்டும்

    ரவிச்சந்திரன்: எனது வார்டில் நகராட்சிக்குட்பட்ட இரண்டு பள்ளிகள் உள்ளன. ஒரு பள்ளிக்கு மட்டும் காலை உணவு திட்டம் வழங்கப்படுகிறது. மற்றொரு பள்ளிக்கு வழங்கப்பட வில்லை. அந்தப் பள்ளிக்கும் காலை உணவு திட்டம் வழங்க வேண்டும்.

    ஆணையாளர் கணேசன்: நகராட்சி பள்ளிகள் எத்தனை உள்ளன என்று கணக்கெடுக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அந்தப் பள்ளிக்கும் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படும்.

    செல்வம்- அண்ணாநகர் நகராட்சி பள்ளிக்கு தலைமையாசிரியர் நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தணிகேசன்- திருநாவுக்கரசு தெருவில் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும்.நகரில் நாய்கள், பன்றிகள் உள்ளது அதனை பிடிக்க வேண்டும்.

    ஜெயந்திபழனி- மின்விளக்குகள் இல்லாத கம்பங்களில் மின்விளக்குகள் அமைக்கவேண்டும்.

    கீதாசுந்தர்-ஆற்காடு -ஆரணி சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளஅரசு மதுக்கடையை இடமாற்றம் செய்யவேண்டும்.

    குணாளன்- வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் போதை பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது அதனை தடுக்கவேண்டும்

    அனு அருண்குமார் - பொதுப்பணித்துறை கால்வாயை தூர்வார வேண்டும் என பேசினார்.

    இதில் நகரமன்ற உறுப்பினர்கள் முனவர்பாஷா, உதயகுமார், கண்ணன், விஜயகுமார், செல்வம், ராஜலட்சுமி துரை, காமாட்சி பாக்யராஜ், விமலா பூவரசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • சீர்வரிசை தொகுப்புகள் வழங்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் உள்ள தனியார் மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். அரக்கோணம் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சமுதாய வளைகாப்பு விழாவினை குத்து விளக்கு ஏற்றி வட்டார பகுதிகளில் உள்ள 200 கர்ப்பிணி களுக்கு சீர்வரிசை தட்டுக்களை அமைச்சர் சொந்த செலவில் வழங்கி னர். பின்னர் பேசியதாவது:-

    ஆட்சி பொறுப் பேற்கும் பொழு தெல்லாம் மகளிருக்கு பல்வேறு திட்டங்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதி செயல்படுத்தி இருக்கின்றார். ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண வேண்டும் என்று சொல்லக்கூ டிய அண்ணா, கருணாநிதி ஆகியோர் பொதுமக்க ளுக்கும் மகளி ருக்கும் என்ன வெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தா ர்களோ அதனை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

    ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் எந்த கட்சியாயினும் குறிப்பாக தாய்மார்கள் நமது முதல்வரை மறக்க மாட்டார்கள்.அந்த அளவிற்கு மகளிருகளுக்கு பல்வேறு புதிய திட்டங்களை நமது முதலமைச்சர் மு க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

    அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சத்தான உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதனைத் தொடர்ந்து தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் அமைச்சர் காந்தி 200 கர்பிணிகளுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் சந்தனம் பல்வேறு பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தொகுப்புகளையும், மதிய உணவினையும் சொந்த செலவில் அமைச்சர் காந்தி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, ஒன்றிய குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஹம்ச பிரியா நன்றி கூறினார்.

    • விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • ஆற்காடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பெரிய குக்குண்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 48). விவசாயி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

    தம்பதிக்கு சொந்தமாக விவசாய நிலம் வீட்டின் அருகே உள்ளது. நிலத்திற்கு செல்வதற்காக இன்று காலை சுமார் 7 மணி அளவில் சரவணன் நடந்து சென்றார். வயல்வெளியில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்தது.

    அதில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.

    இதனை அறியாமல் சரவணன் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே சரவணன் பரிதாபமாக இறந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு சாந்தி நிலத்திற்கு ஓடி வந்தார். அப்போது சரவணன் மீது மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது தெரியாமல் அவரை தூக்க முயன்றார். இதில் சாந்தி மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதனைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்கும், மின்சார துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது சம்பந்தமாக ஆற்காடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்சாரம் தாக்கி தம்பதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×