என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் உள்ள குளக்கரையில் பனை விதையை அமைச்சர் காந்தி நட்ட போது எடுத்த படம் உடன் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ மற்றும் பலர் உள்ளனர்.
5 மணி நேரத்தில் 52 லட்சம் பனை விதைகள் நடப்பட்டது
- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
- தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்
வாலாஜா :
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உலக சாதனை நிகழ்வாக 5 மணி நேரத்தில் 50 லட்சம் பனை விதைகள் மாவட்டத்தில் உள்ள 288 ஊராட்சிகளில் நடும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் தென்கடப்பந்தாங்கல் ஊராட்சி முசிறி ரோட்டில் அமிர்த சரோவர் திட்டத்தில் வெட்டப்பட்டுள்ள குளம் கரையில் பனை விதைகளை நடும் பணி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.திட்ட இயக்குனர் லோகநாயகி, ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயந்தி, ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்கடப்பந்தாங்கல் ஊராட்சிமன்ற தலைவர் பிச்சமணி வரவேற்றார்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பனை விதைகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் ஆர்.காந்தி கூறியதாவது:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்று ஒன்றரை வருடங்கள் கூட ஆகவில்லை.அவர் ஒவ்வொரு துறையிலும் ஆய்வு செய்து எல்லா துறைகளையும் எப்படி முன்னேற்றுவது என செயல்படுகிறார்.
தமிழகத்தில் 22 சதவீதம் காடுகள் உள்ளது.இதனை 33 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற ஒரு இலக்கோடு பசுமைத்தாயகம் காடு மூலம் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள குளம், ஏரிகளில் மரங்களை நட வேண்டும் என தெரிவித்தார்.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 5 மணி நேரத்தில் 52 லட்சம் பண விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. ஒரு பனைமரம் சுமார் 2000 லிட்டர் தண்ணியை சேகரிக்கும் திறன் கொண்டதாகும். ராணிப்பேட்டை மாவட்டத்தை ஒரு முன்மாதிரி மாவட்டமாக்குவேன்.புதியதாக துவங்கப்பட்ட மாவட்டங்களில் முதலில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி கொண்டு வருவேன்.
மேலும் மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை படிப்படையாக செயல்படுத்தி காட்டுவேன்.இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், வாலாஜா நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, துணை தலைவர் கமலராகவன், ஒன்றியக்குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம், ஒன்றிய செயலாளர் சண்முகம், தாசில்தார் ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட வார்டு உறுப்பினர்கள், மகளிர் குழுவினர், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






