என் மலர்
புதுக்கோட்டை
- தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையினர் தங்கள் வசம் உள்ள மிதவைப்படகுகள் மற்றும் உயிர்காக்கும் சாதனங்கள் மற்றும் இதர மீட்பு உபகரணங்களை நல்ல நிலையில் தயாராக வைத்திருக்க வேண்டும்.
புதுக்கோட்டை,
தென்மேற்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- பருவமழை காலத்தில், காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் தகவல் பரிமாற்றத்தை உடனுக்குடன் ஏற்படுத்திட தொழில்நுட்பக் கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கடலோரப் பகுதிகளிலுள்ள போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களையும் எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்பதுடன், கடலுக்குச் செல்லும் மீனவர்களின் விவரங்களை மீன்வளத்துறையினரிடமிருந்து பெற்று அத்துறையினருடன் இணைந்து தகுந்த முன்னேற்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்.
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையினர் தங்கள் வசம் உள்ள மிதவைப்படகுகள் மற்றும் உயிர்காக்கும் சாதனங்கள் மற்றும் இதர மீட்பு உபகரணங்களை நல்ல நிலையில் தயாராக வைத்திருக்க வேண்டும். மேலும் வெள்ள முன்னெச்சரிக்கை தொடர்பான ஒத்திகை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பொதுப்பணித்துறையினர் மாவட்டத்தில் உள்ள அனைத்து புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பொதுக்கட்டிடங்களில் ஏற்பட்டுள்ள சிறு பழுதுகளை உடனே சரிசெய்ய வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறையினர் சாலையின் சேதங்களை உடனுக்குடன் சரிசெய்ய தகுந்த எந்திரங்களை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். சாலையில் சாய்ந்து விழக்கூடிய நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மின்கம்பங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்திட வேண்டும். பேரிடர்களால் பாதிக்கப்படும் மின்கம்பங்களை உடனுக்குடன் சரிசெய்யவும், போதுமான மாற்று மின்கம்பங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வருவாய்த்துறையினர் பேரிடர் குறித்தான தகவல்களை கலெக்டர் அலுவலகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவில் இயங்கும் 1077 என்ற அவசரகட்டுப்பாட்டு மைய தொலைபேசியிலோ, 04322-222207 என்ற தொலைபேசி எண்ணிலோ தெரிவிக்க வேண்டும்.
தாசில்தார்கள் எல்லா மழைமானிகளையும் தணிக்கை செய்து நல்ல நிலையில் இயங்குகிறதா? என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். களப்பணி அலுவலர்களான வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் 24 மணி நேரமும் தலைமையிடத்தில் தங்கியிருந்து நிலைமையினை கண்காணித்து உடனுக்குடன் அறிக்கை அனுப்ப வேண்டும். தென்மேற்கு பருவமழையினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தங்கள் பணிகளை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, ஊரக வளர் ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- அறந்தாங்கி அருகே குடியிருப்பு பகுதிகளில் ரிங்ரோடு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்
- அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஒன்றிய அரசின் புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் 2-வது பெரிய நகரமான அறந்தாங்கியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக புறவழிச்சாலை (ரிங் ரோட்) பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அறந்தாங்கி நகர் பகுதியை உள்ளடக்கி அதன் புறபகுதியான பாக்குடி, வைரிவயல், ரெத்தினக்கோட்டை ஊராட்சி, கூத்தாடிவயல் போன்ற கிராமங்களை தொட்டும், வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மீமிசல், கட்டுமாவடி, பட்டுக்கோட்டை , புதுக்கோட்டை , காரைக்குடி ஆகிய நெடுஞ்சாலைகளை இணைத்தும் புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது.
11 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட புறவழிச்சாலையில் 7 கிலோ மீட்டர் வரை நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூத்தாடிவயல் பகுதியில் விளைநிலம் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் புறவழிச்சாலைக்கான பணிகள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக துறை அதிகாரிகள் நில அளவை செய்து எல்லைகற்கள் பதிக்கும்போது அங்கே சென்ற பொதுமக்கள் விளை நிலத்தில் சாலை அமைக்கக் கூடாது, அதற்கு பதிலாக மாற்று வழியில் சாலை அமைக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் கோரிக்கை தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு உரிய தீர்வு எட்டப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. அதனையடுத்து பொதுமக்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.
- மா, பலா, பூக்கள் உள்ளிட்ட பணப்பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
- அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இருந்த நெற்பயிர்கள் மண்ணோடு சாய்ந்தது.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, நெடுவாசல், மரமடக்கி, வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கறம்பக்குடி தாலுகாவிற் குட்பட்ட வாணக்கண்காடு, பெரியவாடி, கருக்காக் குறிச்சி, மாங்கோட்டை, நம்பன்பட்டி, மழையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிக அளவில் வாழை சாகுபடி செய்வது வழக்கம்.
மேலும் மா, பலா, பூக்கள் உள்ளிட்ட பணப்பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அதிக அளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டது. வாழை பயிரில் தார்கள் விட்டு மகசூல் கிடைக்கும் நேரத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
இந்த சூறாவளி காற்றில் ஆலங்குடி மற்றும் கறம்பக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் இருந்த வாழை மரங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் ஒடிந்து சாய்ந்தது. அதேபோல் அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இருந்த நெற்பயிர்கள் மண்ணோடு சாய்ந்தது.
இதனால் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சூறாவளி காற்றுடன் மழையும் பெய்ததால் வாழை மரங்கள் முழுவதுமாக சேதமடைந்ததை இரவே சென்று பார்வையிட்ட விவசாயிகள் தங்களின் உழைப்பு முற்றிலுமாக வீணானதாக பெரும் கவலை அடைந்தனர்.
எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் தாமதப்படுத்தாமல் பார்வையிட்டு கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு போதிய இழப்பிடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- சிலட்டூர் முத்துமாரியம்மன் கோவில் வைகாசி தேரோட்டம் நடைபெற்றது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சிலட்டூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலாவும் நடைபெற்று வந்தது. மேலும் பக்தர்கள் பால்குடம், காவடி, பறவைக்காவடி மற்றும் அலகுகுத்தி கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி கோவில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- காரில் கடத்தி வரப்பட்ட 120 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி-அரிமளம் விளக்கு சாலையில் மாவட்ட தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து ேசாதனை நடத்தினர். சோதனையில் காரில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது அறந்தாங்கி அருகே உள்ள எல்.என்.புரம் பகுதியை சேர்ந்த சேக் தாவுது மகன் சதாம் உசேன் (வயது 28), கல்லாலங்குடி பாரதி நகரை சேர்ந்த சம்சுதீன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, 120 கிலோ புகையிலை பொருட்கள், கார், மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
வடகாடு அருகே வாணக்கன்காட்டில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகேயுள்ள பாரில் நேற்று சட்டவிரோதமாக மது விற்பனை நடந்து வந்துள்ளது. ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக்ரஜினி மற்றும் போலீசார் அப்பகுதியில் நடத்திய ஆய்வில், சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்த வாணக்கன்காடு பகுதியை சேர்ந்த பரிமளம் (வயது 49) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது வரும் வழியில், அப்பகுதியில் அனுமதியின்றி பார் நடத்தி வரும் அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அவரது மகனும் சேர்ந்து போலீசாரை வழிமறித்து பிரச்சினையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- கார் உரிமையாளர் மேல்நிலைபட்டி சுப்பையா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் வடக்கு நல்லிபட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விபத்துக்குள்ளான காரை சோதனை செய்த போது சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த காரை ஓட்டி வந்தது புதுக்கோட்டை அசோக் நகரை சேர்ந்த அக்பர் அலி மகன் சேக் தாவூத் (வயது 24) என்பதும், ரேஷன் அரிசியை கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் சேக்தாவூத்தை கைது செய்து, 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். கார் உரிமையாளர் மேல்நிலைபட்டி சுப்பையா என்பவரையும் தேடி வருகின்றனர்.
- கந்தர்வகோட்டை பகுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
- ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றில் பதிவேடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார்.
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு மேற்கொண்டார். கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதுப்பட்டி ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளின் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். தொடர்ந்து கந்தர்வகோட்டை தாலுக்கா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றில் பதிவேடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது திட்ட அலுவலர் கவிதா பிரியா, ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், வட்டாட்சியர் காமராஜ், ஆணையர்கள் நளினி, திலகவதி ஆகியோர் உடன் இருந்தனர்.
- முத்துக்குளி வயல் என்னும் வன பகுதியில் தான் அரிக்கொம்பனை விட்டுள்ளார்கள்.
- அங்கிருந்து நாலுமுக்கு, ஊத்து, மாஞ்சோலைன்னு ஒரு ரவுண்ட் அடிக்கவும் வாய்ப்பிருக்கு.
தமிழக-கேரள மக்களை அச்சுறுத்திய அரிசி கொம்பனை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தது சந்தோஷம் தான் என மகிழ்ச்சி அடைந்த நிலையில், தற்போது அதனை வனத்தில் விட்ட பகுதி மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்டங்களுக்கு விரைவில் செல்லும் வகையில் உள்ள முத்துக்குளி வயல் என்னும் வன பகுதியில் தான் அரிக்கொம்பனை விட்டுள்ளார்கள்.
நெல்லை மாவட்டம் அப்பர் கோதையாரில் இருந்து 13 கி.மீ.தூரத்தில் தான் முத்துகுளி வயல் உள்ளது. இதனால் சில மணி நேரத்திலேயே அப்பர் கோதையார் மின்வாரிய குடியிருப்புக்கு, அரிசிக்கொம்பன் நினைத்தால் வந்து விட முடியும். அங்கிருந்து நாலுமுக்கு, ஊத்து, மா ஞ்சோலைன்னு ஒரு ரவுண்ட் அடிக்கவும் வாய்ப்பிருக்கு.
முத்துகுளியில் இருந்து அப்படியே அந்த பக்கமா கொஞ்சதூரம் நடந்தால் குமரி மாவட்டம் பாலமோர் எஸ்டேட் குடியிருப்பிற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. அங்கிருந்து மாறாமலை, காளிகேசம், கீரிப்பாறை வரைக்கும் வந்தாலும் வரலாம் அரிசிக்கொம்பன். குறுக்கு வெட்டு சரிவுகளை கடந்து சென்றால் ஒரு மணி நேரத்தில் அரிசிக்கொம்பனால் லோயர் கோதையாரை அடைந்துவிட முடியும். கோதையாரை சுற்றி குற்றியாறு, கிழவியாறு, மோதிரமலை என்று 10-க்கும் மேற்பட்ட வன கிராமங்கள் உள்ளன.
சரி, தமிழ்நாடு பக்கமே இனி தலைவைத்து படுக்க மாட்டேன்னு அரிசிக்கொம்பன் நினைத்தால் வனத்தின் தெற்கு பக்கமா கொஞ்சம் காலார நடந்தால் போதும்.... கேரளாவின் நெய்யாறு வனப்பகுதி வந்துவிடும். அப்படியே விதுரா, நெடுமங்காடு, காட்டா கடைன்னு ஊருக்குள்ள புகுந்து போகவும் வாய்ப்பிருக்கு.
எங்கே செல்ல வேண்டும் என்று ஒருவனால் மட்டுமே முடிவெடுக்க முடியும். அவன்.... அரிசி கொம்பன் மட்டுமே...!
- அறந்தாங்கி அருகே முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
- திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
அறந்தாங்கி,
ஆவுடையார்கோவில் குறிச்சிக்குளத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா மே மாதம் 28-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளையும் முத்துமாரியம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.மேலும் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். தேர் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி வந்து கோவில் நிலையை வந்தடைந்தது. அப்போது பக்தர்கள் தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். வழிநெடுகிலும் அம்மனுக்கு கஞ்சி காய்ச்சி படைத்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்கள் பால்குடம், வேல்காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழாவில் சுற்று வட்டார பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆவுடையார்கோவில் காவல்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- ஆலங்குடி பகுதிகளில் பழம் தரக்கூடிய 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது
- அமைச்சர் மெய்யநாதன் தகவல்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட வன்னியன் விடுதி, பாத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மரக்கன்றுகளை நட்டார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பாத்தான் குளம் பகுதியில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் நடப்பட்ட மரக்கன்றுகளை பார்வையிட்டார்.அப்போது ஒவ்வொரு மரக்கன்றுகளும் முறையாக வளர்ச்சி அடைந்துள்ளதா, ஏதேனும் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதா என்று அங்கு பணியில் இருந்தவர்களிடம் கேட்டறிந்தார்.இதனை தொடர்ந்து அமைச்சர் கூறும்போது, இந்த ஆண்டு ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் மா, பலா, நாவல், கொய்யா போன்ற பழம் தரக்கூடிய 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட உள்ளோம். ஏற்கனவே 14 இடங்களில் குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அது நல்ல பலனை தந்துள்ளது. இனி வரக்கூடிய காலங்களில் நடவு செய்ய உள்ள அனைத்து மரக்கன்றுகளும் பழங்கள் தரக்கூடிய மரக்கன்றுகளாகவே நடப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
- சகோதரர்கள் இருவரும் சேர்ந்து நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தனர்.
- சோதனை நடந்து வரும் பகுதிகளில் ஏராளமான உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குடி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். தொழிலதிபரான இவர் அ.தி.மு.க.வில் உள்ளார். அரசு ஒப்பந்ததாரரான இவர் ஏராளமான பணிகளை எடுத்து நடத்தி வருகிறார்.
இவரது சகோதரர் முருகானந்தம். பா.ஜ.க.வில் இருக்கும் இவர் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளராக பணியாற்றி வருகிறார்.
சகோதரர்கள் இருவரும் சேர்ந்து நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக தொழில் செய்து வருகின்றனர்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்த இவர்கள் மீது அதிக சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் பழனிவேலுக்கு சொந்தமான கருக்காக்குடியில் உள்ள இரண்டு வீடுகள், புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
இதையொட்டி சோதனை நடந்து வரும் பகுதிகளில் ஏராளமான உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






