search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டவிரோத மது விற்பனையை தடுக்க சென்ற போலீசாரை காலணியால் தாக்க முயன்ற தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு
    X

    சட்டவிரோத மது விற்பனையை தடுக்க சென்ற போலீசாரை காலணியால் தாக்க முயன்ற தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு

    • பரிமளம் என்பவர் மூலம் 24 மணி நேரமும் மது விற்பனை செய்து வருவதாகவும் தகவல் கிடைத்தது.
    • கடந்த ஆண்டும் போலீசாரை தாக்க முயன்றுள்ள பழைய வீடியோவும் பரவியது.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடியை அடுத்த வானக்கண்காடு கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். தி.மு.க. பிரமுகரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இவர் அங்குள்ள டாஸ்மாக் கடையில் அரசு அனுமதியின்றி பார் நடத்தி வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    அத்துடன் பரிமளம் என்பவர் மூலம் 24 மணி நேரமும் மது விற்பனை செய்து வருவதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசாருடன் சென்று அதிரடியாக ஆய்வு நடத்தினார்.

    அப்போது சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த பரிமளத்தை மதுபாட்டில்களுடன் பிடித்து போலீசார் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றியுள்ளனர். அப்போது அங்கு வந்த மதியழகன், பரிமளத்தை கீழே இறக்கிவிட்டதுடன் போலீசாருடன் வாக்குவாதம் செய்து காலணியை கழற்றி தாக்க முயன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

    இதே போல கடந்த ஆண்டும் போலீசாரை தாக்க முயன்றுள்ள பழைய வீடியோவும் பரவியது. போலீசாரை தாக்க முயன்றும், அனுமதி இல்லாமல் பார் நடத்தியும் வந்த மதியழகன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு தனிப்படை போலீஸ்காரர் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் மதியழகன், பரிமளம் ஆகியோர் மீது பணி செய்யவிடாமல் தடுத்தது, போலீசாரை தாக்க முயன்றது, காலணியை கழற்றி தாக்க முயன்றது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×