என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்-அமைச்சர் மெய்யநாதன் உறுதி
- சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் உறுதி அளித்துள்ளார்
- இப்பகுதி விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பீடு ஏற்பட்டது.
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் திருவரங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கடுமையான சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறைக்காற்றால் இப்பகுதியில் உள்ள20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த 500 ஏக்கருக்கு மேலான வாழை, 200 ஏக்கர் பரப்பளவுக்கு மேலான சோழம், இதே போல் நெல், எள் உள்ளிட்ட பயிர்களும் காற்றில் சாய்ந்து கடுமையான பாதிப்படைந்தது. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பீடு ஏற்பட்டது.
இந்தப் பகுதிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். மேலும் வேளாண் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் உடனடியாக பாதிப்பு குறித்து கணக்கீடு செய்யும் பணியை தொடங்கவும் அறிவுரை வழங்கினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆலங்குடி, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழை, சோளம், நெற்பயிர்கள் உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண் துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் கணக்கீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பெற்று தரப்படும். வாழை விவசாயிகள் வருங்காலத்தில் முறையான காப்பீடு செய்ய அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாயம் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வாங்கி வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






