என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • நம்பன்பட்டியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது
    • போராட்டத்திற்கு மணி தலைமை வகித்தார்.

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே உள்ள நம்பன்பட்டியில் மாற்றுத்திறனாளி ராமலிங்கம் வீட்டிற்கு செல்லும் பாதையை அமைத்துத் தரக்கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மணி தலைமை வகித்தார். மறியலில் ஈடுபட்டவா்களிடம் டி.எஸ்.பி. தீபக்ரஜினி, கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி, ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை ஆகியோர் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சம்பந்தப்பட்ட இடத்தை போராட்ட குழுவோடு பார்வையிட்டு உடனடியாக பாதை அமைத்து தருவது மாற்றுத்திறனாளி ராமலிங்கத்திற்கு வீட்டு மனை பட்டா வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி கூறியதையடுத்து போராட்டத்தை கைவிடப்பட்டது. போராட்டத்தில் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், துணைச் செயலாளர் சொர்ணகுமார், செயற்குழு உறுப்பினர்கள் அம்பிகாபதி, வேலன், காந்தி, ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முரளி அவரது நண்பர் ரவிக்குமார், சுரேஷ், சுரேஷின் நண்பர் ஆகிய 4 பேரும் திருச்சி நோக்கி புறப்பட்டனர்.
    • விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இன்று நடந்த கோர விபத்தில் வங்கி ஊழியர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

    இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-

    திருச்சி உறையூர் லிங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி (வயது 37). இவர் திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கார் லோன் ஒதுக்கீடு செய்யும் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருடன் ரவிக்குமார் என்பவர் அதே வங்கியில் கிரெடிட் மேலாளராக பணியாற்றி வந்தார். இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர்.

    இதற்கிடையே முரளி திருநெல்வேலி மாவட்டம் தென்காசி பகுதியில் பணியாற்றி வந்தபோது அங்குள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் நகை அடமானம் வைத்துள்ளார். இந்த நகையை திருப்புவதற்காக நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரு வாடகை காரில் முரளி தனது நண்பர் ரவிக்குமாருடன் தென்காசி புறப்பட்டு சென்றார்.

    பின்னர் இன்று (புதன்கிழமை) அதிகாலை அவர்கள் தென்காசியில் இருந்து திருச்சி நோக்கி புறப்பட தயாராகினர். அப்போது முரளியின் தென்காசி நண்பர் சுரேஷ் சேர்ந்து கொண்டார். அவர் தன்னை திருச்சி விமான நிலையம் பகுதியில் இறக்கி விடுமாறு கூறியுள்ளார். இதற்கிடையே சுரேஷின் நண்பரும் (பெயர் விபரம் தெரியவில்லை) திருச்சி வர விரும்பியுள்ளார். பின்னர் முரளி அவரது நண்பர் ரவிக்குமார், சுரேஷ், சுரேஷின் நண்பர் ஆகிய 4 பேரும் திருச்சி நோக்கி புறப்பட்டனர்.

    காரினை திருச்சி கல்லுக்குழியைச் சேர்ந்த கணேஷ் குமார் ஓட்டி வந்தார். இந்த கார் மதுரையை தாண்டி திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது.

    அப்போது இன்று காலை 6.40 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை லஞ்சமேடு பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் அங்குள்ள பஸ் நிறுத்த நிழற்குடையில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காரை ஓட்டி வந்த டிரைவர் கணேஷ் குமார், ரவிக்குமார், சுரேஷ், சுரேஷின் இன்னொரு நண்பர் ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்து கிடந்தனர்.

    அடமானம் வைத்த நகையை மீட்க சென்ற முரளி மட்டும் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தார். உடனே அவரை கொடும்பாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை கொண்டு சென்றனர்.

    விபத்து பற்றி அறிந்த விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் இலுப்பூர் துணை போலீஸ் காயத்ரி ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அதிகாலை நேரம் என்பதால் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் யாரும் நிற்கவில்லை. இதனால் மேலும் உயிர்பலிகள் ஏற்படவில்லை.

    பஸ் நிறுத்த நிழற்குடையில் கார் மோதி 4 பேர் உயிரிழந்த சம்பவம் விராலி மலையில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • புதுக்கோட்டை மௌண்ட்சீயோன் கல்லூரியில் 24 மணி நேர மின்னியல் - மின்னணுவியல் பயிற்சி பட்டறை நடைபெற்றது
    • கற்றல் ேவகத்தை அதிகப்படுத்துவதற்காக இப்பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது

    புதுக்கோட்டை, ஜூலை 4-

    மௌண்ட்சீயோன் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் 24 மணி நேர பயிற்சி பட்டறை நடைபெற்றது.மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு காலை 9.00மணி முதல் மறுநாள் காலை9.00மணி வரை தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த 24 மணி நேரபயிற்சி பட்டறையில் மாணவர்களுக்கு சர்க்யூட் விசாட்மென்பொருள் மூலம் மின்னியல் மற்றும் மின்னணுவியல் சர்க்யூட்களை இணைப்பது மற்றும் உருவகப்படுத்துதல் தொடர்பாக பயிற்சியளிக்கப்பட்டது.முன்னதாக நடைபெற்ற பயிற்சி பட்டறை துவக்க நிகழ்வில் கல்லூரிடீன்ராபின்சன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர்பாலமுருகன் தலைமை வகித்து பயிற்சிப் பட்டறையினை துவக்கி வைத்தார்.மாணவர்களுக்கு ஒருமுகப்படுத்தப்பட்ட மற்றும் அதிவேகமான கற்றல் அனுபவத்தை வழங்குவதே இத்தகைய 24 மணி நேர பயிற்சி பட்டறையின் சிறப்பம்சம் ஆகும்.சர்க்யூட்விசா ட்மென்பொருள் மூலம் மின்னியல் மற்றும் மின்னனணுவியல் சர்க்யூட்களை இணைப்பது போன்ற செயல்களை தொடர்ச்சியாக 24-மணி நேரம் செய்து பார்ப்பது போன்ற இப்பயிற்சியானது மாணவர்களுக்கு அவர்களது எதிர்காலத்தில் தொழிற்சாலைகளிலும் ,ஆராய்ச்சிக் கூடங்களிலும் தொடர்ந்து பணிபுரிய உதவியாக அமையும்.இப்பயிற்சி பட்டறையினை உதவிபேராசிரியர்கள் முத்துக்குமார் மற்றும்டென்சில்இன்பன்ட் ஆகியோர் இணைந்து பயிற்றுவித்தனர்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மின்னியல் மற்றும் மின்னனணுவியல் துறைத்தலைவர்திவ்யபிரசாத் மேற்கொண்டார். இறுதியாக உதவிபேராசிரியை அமலிரோஸ்லின் பயிற்சிப்பட்டறையில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

    • மனைவியை கொலை செய்ய கணவர் முயன்றது பரபரப்பை எற்படுத்தி உள்ளது
    • மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொல்ல முயற்சி

    ஆலங்குடி,

    தோப்புக்கொல்லையை சேர்ந்தவர் வீரமுத்து மனைவி கவிதா (வயது 34). இவர்களுக்கு வீரதரன், தயாளன் என்ற இரு மகன்கள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் வீரமுத்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சினையில் வீரமுத்து, கவிதாவின் மீது மண்எண்ணெய் ஊற்றி கொலை செய்ய முன்றுள்ளதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து வீரமுத்துவும், இவர் பேசி வந்த பெண்ணும் சேர்ந்து கவிதாவை தாக்கியதில் அவர் காயமடைந்தார். இதுகுறித்து கவிதா ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவிதா தனது மகன்களுடன் பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தார். தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் கவிதா மற்றும் அவரது இரு மகன்களையும் அவரது கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளிக்கு செல்லாமல் இருந்த கவிதாவின் மகன்கள் 2 பேரையும் போலீஸ் பாதுகாப்புடன் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • புதுக்கோட்டையில் செயல் அலுவலர் ஆய்வு நடத்தினார்
    • கோவில்பட்டி பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு நிறுவனத்தில் ஆய்வு நடைபெற்றது

    பபுதுக்கோட்டை, 

    கோவில்பட்டியில் செயல்பட்டு வருகிற, தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணைய லிமிடெட் நிறுவனத்தில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா, முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வில், தென்னை நார்கள் மூலமாக தயார் செய்யப்பட்டு வருகின்ற துடைப்பான்கள், மகளிரால் உற்பத்தி செய்யப்படுகிற பனை ஓலைப் பொருட்களையும் மற்றும் அவைகள் தயாரிக்கப்படுகின்ற பணிகளையும், பார்வையிட்டு, அவர் அறிவுரைகளை வழங்கினார்.மேலும் மாநில இணைய சொந்த நிதியிலிருந்து ரூ.30 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பனைத்தூரிகை, பனைக் கூடம் மற்றும் அலுவலகக் கட்டடப் பணிகளை விரைந்து முடிக்கவும் அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். பனை வெல்லம் பனை ஓலை கூடையில் வைத்து விற்பனை செய்திடவும், பனை ஓலை நவீன முறையில் ஏற்றுமதி செய்யும் வகையில் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

    • சுக்கிரன் விடுதி கிராமத்தில் திடீரென குடிசையில் தீ விபத்து ஏற்பட்டு எரிந்து நாசமானது
    • தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்

    புதுக்கோட்டை,

    கறம்பக்குடி அருகே உள்ள சுக்கிரன் விடுதி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். கூலித் தொழிலாளி. இவர் மனைவி, மகன் மற்றும் பெற்றோருடன் குடிசையில் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலமுருகன் மகனுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் குடும்பத்தினர் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று இரவு பாலமுருகனின் குடிசையில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. உடனே கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பாலமுருகனின் குடிசை முற்றிலும் எரிந்து சாம்பலானது.

    சின்னதுரை எம்.எல்.ஏ. பேசினார்.

    புதுக்கோட்டை:

    குழந்தைகள் வளர்ச்சியில், கர்ப்பிணிகளை பாதுகாப்பதில் பங்களிப்பு செய்துவருவது அங்கன்வாடி மையங்கள். இதனை ஒன்றுடன் ஒன்று இணைத்து எண்ணிக்கையை கணிசமாக குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பல அங்கன்வாடி மையங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உருவாகி உள்ளது.

    எனவே, தமிழக அரசு அங்கன்வாடி மையங்களை இணைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி சி.ஐ.டி.யு., தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் புதுக்கோட்டையில் சின்னப்பா பூங்கா அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முகமதலிஜின்னா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் சின்னதுரை எம்.எல்.ஏ. பேசினார்.

    முன்னதாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக புறப்பட்டு சின்னப்பா பூங்காவை வந்தடைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக சின்னதுரை எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அங்கன்வாடி மையங்களை தரம் உயர்த்தி குழந்தைகளை மையங்களுக்கு வரவழைப்பதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களை சிதைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ள சூழலில் தமிழக அரசும் அதற்கு இறையாகாமல், அங்கன்வாடி மையங்களையும், அதன் ஊழியர்களையும் பாதுகாக்க வேண்டும், என்றார்.

    • 19 பேர் சேர்ந்து நடத்திய மொய்விருந்து நடைபெற்றது
    • ரூ.1 கோடி வசூல் ஆனது

    புதுக்கோட்டை:

    தமிழர்களின் வீட்டில் நடக்கும் திருமணம், காதணி விழாக்களில் கலந்து கொள்ளும் உறவினர்கள் விழா செலவிற்காக மொய் செய்துள்ளனர். இந்த கலாசார நிகழ்வு கடந்த 30 வருடங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், மேற்பனைக்காடு, குளமங்கலம், மாங்காடு, வடகாடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களில் மொய்க்காக மட்டுமே ஆட்டுக்கறி விருந்து கொடுத்து மொய் வசூல் செய்யும் பழக்கமாக மாறியது. "மொய் விருந்து" என்று அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள் நண்பர்களுக்கு கொடுத்து தொடக்கத்தில் ஆயிரக்கணக்கில் மொய் வாங்கியவர்கள் பிறகு லட்சங்களில் மொய் வாங்கினார்கள். பலர் கோடிக்கணக்கிலும் மொய் வசூல் செய்தனர்.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு கஜா புயல் தாக்கத்திற்கு பிறகு விவசாயம் பாதிக்கப்பட்டதால் குறைந்த மொய் விருந்து கொரோனா காலத்திற்கு பிறகு மேலும் குறைய தொடங்கினாலும் கூட ஒவ்வொரு ஆண்டும் மொய் விருந்துகள் நடத்துவோர் எண்ணிக்கை குறையவில்லை. ஆடி மாதத்தில் மட்டும் மொய் விருந்துகள் நடத்துவதால் மொய் செய்வோர் சிரமப்படுவார்கள் என்பதால் இந்த ஆண்டு ஆனி மாதம் முதல் நாளிலேயே கீரமங்கலம் பகுதியில் மொய் விருந்துகள் தொடங்கி நடந்து வருகிறது. வாரத்திற்கு 150 முதல் 200 பேர் வரை மொய் விருந்துகள் நடத்தி வருகின்றனர். இதையடுத்து கொத்தமங்கலத்தில் 19 பேர் சேர்ந்து மொய் விருந்து நடத்தினர். இதில் ரூ.1 கோடி வசூல் ஆனது. அடுத்ததாக மாங்காடு, மேற்பனைக்காடு என பரவலாக மொய் விருந்துகள் நடத்தப்பட உள்ளது.

    • அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது
    • அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பரம நகர் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் வடக்குப்பட்டி பள்ளிகளில் ரூ. 48 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதனை சூற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் தொடங்கி வைத்தார். அப்போது பரமநகர் பள்ளியில் குழந்தைகள் அமைச்சரை பார்த்ததும் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர்.

    இதனை பார்த்ததும் நேராக குழந்தைகளிடம் சென்ற அமைச்சர் குழந்தைகளிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது உங்களுக்கு வகுப்பறை கட்டுவது யார் தெரியுமா என்று கேட்க ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஹரிஷ் என்ற மாணவன் தனது மழலை மொழியில் மெய்யநாதன் என்று கூறினார்.

    இதை கேட்டதும் அமைச்சரும் அங்கிருந்த அதிகாரிகளும் சிரித்து மகிழ்ந்தனர். பூமி பூஜை நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன், ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை தங்கமணி,கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி,கீரமங்கலம் பேரூராட்சி தலைவர் சிவக்குமார், ஆலங்குடி நகர துணைச் செயலாளர் செங்கோல் , வடகாடு ஊராட்சித் தலைவர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது.
    • 70 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை அரிமளம் ஒன்றியம் தேக்காட்டூர் ஊராட்சி சிவபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் பளு தூக்கும் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. சீனியர் ஆண்கள், பெண்கள், ஜூனியர் ஆண்கள் போன்ற பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 70 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு உடற்பயிற்சி கூடத்திலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு 2023 ஆண்டிற்கான மாவட்ட சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.

    • முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்குகிறது
    • அரசு கலைக்கல்லூரிகளில் அரசு கலைக்கல்லூரிகளில்

    புதுக்கோட்டை

    தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதனை தொடர்ந்து உயர்கல்வி படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது தொடங்கியது. அந்த வகையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பித்தனர். அதன்பின் மதிப்பெண்கள் அடிப்படையில் தர வரிசையில் கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டனர். புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மன்னர் கல்லூரி, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி உள்ளிட்ட இடங்களில் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து முடிந்தது.

    இந்த நிலையில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. கல்லூரிகளில் காலை மற்றும் மதியம் என 2 பிரிவுகளில் வகுப்புகள் நடைபெறும்.

    பள்ளிப்படிப்பை முடித்த பின் கல்லூரி படிப்பில் காலடி எடுத்து வைக்க மாணவ-மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் வருகை தருவார்கள். சீருடை அணிந்து பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் பல வண்ணங்களில் ஆடை அணிந்து கல்லூரிக்கு மகிழ்ச்சியுடன் வருவார்கள். கல்லூரிகளிலும் முதலாமாண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு முன்கூட்டியே தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

    • மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ெதாழிலாளி இறந்தார்.
    • வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை விராலிமலை தாலுகா வானத்திராயன்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா மகன் கிருஷ்ணா (வயது 47). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் விராலிமலைக்கு வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். விராலிமலை தெப்பக்குளம் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளிலிருந்து அவர் கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணா நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×