என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • வாகனம் மோதி முதியவர் பலியானார்.
    • இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    கீரனூரில் 70 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் சுற்றித்திரிந்து வந்தார். இந்தநிலையில் அவர் புறவழிச்சாலை வழியாக நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து களமாவூர் கிராம நிர்வாக அலுவலர் மாதேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்
    • இந்த சம்பவம் குறித்து மழையூர் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கறம்பக்குடி,

    கறம்பக்குடி அருகே உள்ள கெண்டையன்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மனைவி புஷ்பம் (வயது 74). இவர் முதுமை காரணமாக இடுப்பு மற்றும் மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மூதாட்டி புஷ்பம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதைக்கண்ட குடும்பத்தினர் தீயை அணைத்து அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி புஷ்பம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மழையூர் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மௌண்ட் சீயோன் கல்லூரி மாணவர்கள் திறனறிவு போட்டிகளில் சாதனை படைத்தனர்
    • வெற்றி பெற்ற இரு அணி மாணவர்களுக்கும் மிஸ்டரால் சொலுஷன்ஸ் சார்பாக சான்றிதழ்களும், ரூ.75,000க்கான காசோலையும் வழங்கப்பட்டன.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மௌண்ட்சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப க்கல்லூரியின் இசிஇ மற்றும் சிஎஸ்இ துறை மாணவர்கள் பெங்களுருவில் உள்ள பெங்களூரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் நடைபெற்ற திறனறிவு போட்டிகளில் பங்கேற்றனர். மொத்தம் 39 கல்லூரிகள் கலந்து கொண்ட இப்போட்டிகளை ஆக்ஸிஸ்கேட் மற்றும் மிஸ்டரால் சொலுஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தின. இப்போட்டிகளில் எமது கல்லூரியின் மூன்றாம் ஆண்டு இசிஇ துறை மாணவர்கள்விக்ரம் மற்றும் விஜயன் ஆகியோர் மெக்கானிக்கல் பிரிவில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசை தட்டிச் சென்றனர்.

    மேலும் எமது கல்லூரியின் மூன்றாம் ஆண்டு சிஎஸ்இ துறை மாணவர்கள்செந்தில்ராஜா, வாஞ்சிநாதன் மற்றும் சரவணன் ஆகியோர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற இரு அணி மாணவர்களுக்கும் மிஸ்டரால் சொலுஷன்ஸ் சார்பாக சான்றிதழ்களும், ரூ.75,000க்கான காசோலையும் வழங்கப்பட்டன. இப்போட்டியில் பங்கு பெற்று கல்லூரிக்கு சிறப்பு சேர்த்த மாணவர்களை கல்லூரிஇயக்குனர் ஜெய்சன்கீர்த்தி ஜெயபரதன், கல்லூரி முதல்வர் பாலமுருகன், கல்லூரி டீன் ராபின்சன் மற்றும் துறைத்தலைவர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

    • பொன்னமராவதி கருப்புகுடிபட்டி கிராமத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது
    • ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசி போட்டியை தொடங்கி வைத்தனர்

    பொன்னமராவதி,

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அருகே உள்ள கருப்புகுடிபட்டி கிராமத்தில் கண்டனி கம்மாயில மீன் பிடி திருவிழா நடைபெற்றது. பொதுவாக பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் விவசாய பாசன கண்மாயில் நீர் வற்றும் கண்மாய்களில் ஜாதி,மதம் பாராமல் அனைத்து மக்களும் ஒற்றுமையாக ஒன்று கூடி கலந்து கொள்ளக்கூடியதே மீன்பிடித் திருவிழாவாகும்.கடந்த ஆண்டு பெய்த மழையும் விவசாயம் போன்றே வரும் ஆண்டில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் ஊர் ஒற்றுமைக்காகவும் இந்த மீன்பிடித் திருவிழா நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டும் பொன்னமராவதி பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நாள்தோறும் மீன்பிடித் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று பொன்னமராவதியில் அருகே உள்ள கருப்புகுடிபட்டி கிராமத்தில் கண்டனி கம்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கண்மாயில் குவிந்தனர். பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசி போட்டியை தொடங்கி வைத்த நிலையில் ஒரே நேரத்தில் கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி மீன்பிடி உபகரணமான ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன்பிடிக்கத்தொடங்கினர். அதில் ஒவ்வொருத்தர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. அதனை மகிழ்ச்சியுடன் மக்கள் வீட்டிற்க்கு எடுத்து சென்றனர்.

    • கந்தர்வகோட்டை அருகே சர்க்கரை ஆலை காவலாளி விபத்தில் பலியானார்
    • திருமணம் நடந்து 2 வருடங்களே ஆன நிலையில் சோகம்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அருகே உள்ள சுங்கம்பட்டியை சேர்ந்தவர் சதீஸ்குமார்(வயது 35). இவர் அரசு சர்க்கரை ஆலையில், தனியார் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல இரவு பணியில் ஈடுபட்ட அவர், பணி முடிந்ததும் ஆலையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கந்தர்வகோட்டை-தஞ்சாவூர் சாலை சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனத்துடன் வாலிபர் பிணம் கிடப்பதாக கந்தர்வகோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் உடல் கிடந்த இடத்தில் சோதனை நடத்தினர்.முகத்தில் பலத்த காயத்துடன் கிடந்தது சதீஸ்குமாரின் உடல் என்பது ெதரிய வந்தது.

    இதனை தொடர்ந்து உறவினர்களுக்கு தகவல் அளித்த பின்னர், உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து நடந்ததா? அல்லது சதீஸ்குமாரின் இரு சக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்தால் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்தில் உயிரிழந்த சதீஸ்குமாருக்கு, பிரியா என்பவருடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்து, 6 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. திருமணமாகி இரண்டே வருடத்தில் சதீஸ்குமார் இறந்த சம்பவம் சுகம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசாருக்கு சுழற்சி முறையில் வாரம் ஒருநாள் விடுமுறை விட வேண்டும்.
    • இலங்கையில் தமிழர்களுக்கு குடியுரிமை பெற வேண்டும்.

    புதுக்கோட்டை :

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுப்பதில் விதிமுறைகள் இருப்பது மிகப்பெரிய கொடுமை. தேர்தல் நேரத்தில் அறிவித்தபோது விதிமுறைகளை அறிவிக்கவில்லை. அப்போது ஏன் சொல்லவில்லை.

    கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை காங்கிரஸ், பா.ஜனதா என 2 கட்சியும் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளனர். இதை தெரிந்து தான் அரசியல் கட்சியினர் ஆதரித்தனர்.

    தமிழ் தேசிய கொள்கையை விட்டு வந்தால் எங்களுடன் இணைந்து செயல்பட தயார் என பா.ஜனதா எச்.ராஜா கூறியுள்ளார். அதற்கு வாய்ப்பு இல்லை. தமிழ் தேசிய சித்தாந்தம் தோல்வியடைந்ததாக திருமாவளவன் கூறியிருக்கிறார். பொறுத்திருந்து பாருங்கள் தெரியும்.

    பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பது பற்றி பேசுவதை விட்டுவிடலாம். ஈழத்தமிழர்களுக்கு நல்லது செய்ய மத்திய அரசு நினைத்தால் கச்சத்தீவை மீட்க வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு குடியுரிமை பெற வேண்டும்.

    கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்ததற்கு காரணம் பணிச்சுமை தான். 6 மாதமாக அவருக்கு விடுமுறை கொடுக்கவில்லை. எனக்கு அவரை தெரியும். நல்ல அறிவாளி, சமூக பற்றுக்கொண்டவர், எல்லாரையும் நேசிக்க கூடியவர். துணிவான அவர் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய கோழைத்தனமானவர் அல்ல. அவரது தற்கொலை அதிர்ச்சியளிக்க கூடிய வகையில் உள்ளது.

    டி.ஐ.ஜி. அளவில் உள்ளவர்களே மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்கிற நிலை இருக்கிறபோது சாதாரண போலீசாரின் நிலையை கூறவா வேண்டும். எனவே போலீசாருக்கு சுழற்சி முறையில் வாரம் ஒருநாள் விடுமுறை விட வேண்டும். 6 மாதத்திற்கு ஒரு முறை குடும்பத்துடன் சுற்றுலா செல்ல அனுமதிக்கலாம்.

    தமிழ் சினிமாவில் பட்டியலின மக்களின் உரிமை பற்றி பேசப்படுவதை நான் வரவேற்கிறேன். பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும்.

    சென்னை மெரினா கடல் பகுதியில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தாலும் நான் உடைப்பேன். சென்னையில் அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தையின் கை பறிபோனதில் நிவாரணம் வழங்காமல் முறையற்ற பதில் கூறுவது சரியல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ௩ ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
    • கழ்ச்சிக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் தலைமை தாங்கினார்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அமராவதி உடனுறை ஆபத் சகா ஈஸ்வரர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மூன்று ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் தலைமை தாங்கினார். இந்த திருமண விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம், வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா,நகரச் செயலாளர் ராஜா ஆத்மா சேர்மன் ராஜேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி, சிவரஞ்சனி சசிகுமார்,அரவம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தாமரை. பழனிவேலு மற்றும் மணமக்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர். மணமக்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா ஒரு லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.


    • வடகாடு அருகே குரங்கு கடித்து 7 பேர் காயம் அடைந்தனர்.
    • இதில் 3 பேர் குழந்தைகள் ஆவர்.

    புதுக்கோட்டை :

    வடகாடு அருகேயுள்ள கீழாத்தூர் சமத்துவபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் குரங்கு ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் அப்பகுதியை சேர்ந்த சரண்யா, விஜய், லட்சுமி, இந்திரா, சித்ரா, விஜயா உள்பட 7 பேரை கடித்தும், நகங்களால் கீறியும் உள்ளது. இதில் 3 பேர் குழந்தைகள் ஆவர். இதனைத்தொடர்ந்து காயமடைந்தவர்கள் வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி மற்றும் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பி சென்றனர். மேலும் இவர்கள் தொடர்ந்து 4 நாட்கள் தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என டாக்டர்கள் அறிவுரை கூறினர்.

    கீழாத்தூர் சமத்துவபுரம் பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்கை கூண்டு வைத்து பிடிக்கக்கோரி வனத்துறை மற்றும் கீழாத்தூர் ஊராட்சிக்கு தகவல் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அந்த குரங்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அமர்ந்து பயமுறுத்துவதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியே வர அச்சம் அடைந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதுக்கோட்டையில் திருநங்கைகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது
    • முகாம், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் நடைபெற்றது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வீட்டு மனைப்பட்டா, வேலைவாய்ப்பு, தொழில் கடன், திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகிய கோரிக்கைகள் அடங்கிய 4 மனுக்களை திருநங்கைகள் மாவட்ட வருவாய் அலுவலர்களிடம் வழங்கினார்கள். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் இந்தியன் வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் திருநங்கைகளுக்கான இலகுரக வாகனம் ஓட்டுநர் பயிற்சியினை, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி துவக்கி வைத்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


    • அறந்தாங்கி அருகே புதிய பேருந்து நிழற்குடையை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்
    • அமைச்சர் மெய்யநாதன் பள்ளி வளாகம், கழிவறைகள் மற்றும் கட்டிடங்களை பார்வையிட்டார்.

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காயக்காடு கிராமத்தில் புதிய பேருந்து நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு சுற்றுசுழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்து இனிப்புகளை வழங்கினார். அதனை தொடர்ந்து ஆவணத்தான்கோட்டை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து பள்ளி வளாகம், கழிவறைகள் மற்றும் கட்டிடங்களை பார்வையிட்டார். அப்போது ஆசிரியர்களை பள்ளி வளாகத்தை வீட்டை போல தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் 156 மாணவ மாணவியர்கள் படிக்கின்ற பள்ளியில் போதிய வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளது. அரசு வழங்குகின்ற சலுகைகளை அரசு அதிகாரிகள் செயல்படுத்தாமல் தயக்கம் காட்டக் கூடாது என வட்டார வளர்ச்சி அலுவலரை சாடிய அமைச்சர் கட்டிட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளியில் உங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பீர்களா எனவும் குற்றம் சாட்டினார். எனவே உடனடியாக போதிய கட்டிட வசதிகளுக்கு பரிந்துரைக்க அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.

    அமைச்சரின் செயலால் பொதுமக்கள் பெற்றோர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், வட்டாட்சியர் பாலக்கிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை இந்து அறநிலையத்துறை சார்பில் 5 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது
    • அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையேற்று நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கி மணமக்க ளை வாழ்த்தினார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 5 திருமணங்களை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையேற்று நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கி மணமக்க ளை வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், அறங்காவலர் குழுத்தலைவர் தவ.பாஞ்சாலன், கவுன்சிலர் ரமேஷ்பாபு, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




    • ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சி நடைபெற்றது
    • மாணவர்கள் சுமார் ஆயிரம் பேர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து நூல்களை ஆர்வமுடன் வாசித்தனர்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா– வை முன்னிட்டு, வரவேற்புக் குழுத் தலைவர் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் பங்கேற்கும் "புதுக்கோட்டை வாசிக்கிறது" என்ற நிகழ்வு நேற்று முற்பகல் 11.00 மணிமுதல் 12.00 மணிவரை நடைபெற்றது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சுமார் ஆயிரம் பேர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து நூல்களை ஆர்வமுடன் வாசித்தனர்.

    பள்ளியின் முதல்வரும், புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான கவிஞர் தங்கம் மூர்த்தி கூறும் போது, முதல் முறையாக புத்தகத் திருவிழா புதுக்கோட்டையில் தொடங்கிய ஆண்டிலிருந்து புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வில் எங்கள் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பங்கேற்கிறார்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து விரும்பிய நூல்களை வாசித்தார்கள். பள்ளி மாணவர்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி பொதுவான நூல்களை வாசிப்பதால் மட்டுமே வாழ்க்கைக்குத் தேவையான அறத்தை, அறிவை, சான்றோர்களின் அனுபவங்களை அறிந்து தெளிவு பெறமுடியும். இளமையில் கல் என்றவாக்கிற்கிணங்க வாசிக்கும் பழக்கத்தை அறிய, நூல்களை நேசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள இந்த "புதுக்கோட்டை வாசிக்கிறது" நிகழ்வு பெரிதும் உதவுகிறது என்று குறிப்பிட்டார்.

    இந்த நிகழ்வில் பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, அபிராமசுந்தரி, வரலெட்சுமி, கோமதி, மேலாளர் ராஜா, ஆசிரியர்கள் காசாவயல் கண்ணன், உதயகுமார், செல்வராஜ், ராமன் உடற்கல்வி ஆசிரியர்கள் நீலகண்டன், விசாலி மற்றும் பெரும்பாலான ஆசிரியகளும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    ×