என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் உணவு பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது
    • பெற்றோர்களுக்கு பாம்பினோ பாஸ்தா நிறுவன உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான உணவு பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. விழாவில் கோயமுத்தூர ;பாம்பினோ பாஸ்தாபுட் நிறுவனத்தின் மண்டல மேலாளர் விவேகானந்தன் கலந்து கொண்டு மாணவர்கள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள், தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் பற்றி விரிவாக உரையாற்றினார்.

    பின்னர் பெற்றோர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார் நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கு பாம்பினோ பாஸ்தா நிறுவன உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.  இந்த நிகழ்வில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பளர் கௌரி, மேலாளர் ராஜா, ஆசிரியர்கள் உதயகுமார், கணியன் செல்வராஜ், காசாவயல் கண்ணன், ராமன், உடற் கல்வி ஆசிரியர்கள் நீலகண்டன், விசாலி, தஞ்சாவூர் தொழிலதிபர் செல்வம், பாம்பினோ பாஸ்தா நிறுவனத்தைச் சார்ந்த மணிசேகரன், ஆனந்த், பிரதீப் மற்றும் ஏராளமான பெற்றோர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கான உணவுமுறைகள் பற்றிய இந்தக் கூட்டம் மிகவும் பயனுள்ளதாத அமைந்ததாக பெற்றோர்கள் வெகுவாகப் பாராட்டினர்.


    • ேவறு எந்த அலுவலகத்தற்கும் விராலிமலை அரசு பள்ளி வளாகத்திற்குள் இடம் கொடுக்க பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
    • 600 மாணவிகள் படித்து வந்த நிலையில் தற்போது 1100 க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

    விராவிமலை,

    விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் ஒருங்கிணைந்தகுழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு இடம் ஒதுக்க பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல் கேட்டிருந்தது. அதற்கு பொதுமக்கள் மற்றும் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளனர். அந்த அம்மனுவில் கூறியிருப்பதாவது:- விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் ஒருங்கிணைந்தகுழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு இடம் ஒதுக்க பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல் கேட்டிருந்ததாக தெரியவந்தது.

    இப்பள்ளிக்கு ஏற்கனவே இடம் குறைவாக உள்ளது. 600 மாணவிகள் படித்து வந்த நிலையில் தற்போது 1100 க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். வகுப்பறை கட்டிடங்கள் போக மீதி உள்ள இடத்தில்தான் விளையாட்டு மைதானம், கழிப்பறைகள் உள்ளது. இப்பள்ளி மாணவிகள் கல்வியில் மாவட்ட அளவில் சாதனை செய்து வருவதால் ஆண்டு தோறும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் கூடுதல் கட்டிடங்கள் கட்ட வாய்ப்புள்ளது.

    இந்நிலையில் இப்பள்ளி வளாகத்தில் வேறு அலுவலக கட்டிடத்திற்கு இடம் ஒதுக்கினால் நிச்சயம் இப்பள்ளிக்கு இடப்பற்றாக்குறை ஏற்படும். வேறு அலுவலகம் உள்ளே இயங்கும்பட்சத்தில் வெளி நபர்கள் வாகனங்களில் வந்து போகும்போது பள்ளியின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும். மாணவிகளுக்கு வெளி நபர்கள் தொந்தரவு கொடுக்கும் நிலையும் ஏற்படும்.மேலும் இந்த அலுவலகத்திற்கு நில மாற்றம் செய்வதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் பள்ளி நிர்வாகத்தில் உள்ள யாருக்கும் தெரியப்படுத்தவில்லை. எனவே விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் வேறு எந்த ஒரு அரசு அலுவலகத்திற்கும் இடம் ஒதுக்கிதர வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என அம்மனுவில் கூறியிருந்தனர்.

    • புதுக்கோட்டையில் நண்பரை கொலை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
    • கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை நரிமேடு லட்சுமி நகரை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 47). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதன்பின் புதுக்கோட்டை வந்த அவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை. மனைவி பிரிந்து சென்ற நிலையில் விஜயராகவன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் விஜயராகவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோகா்ணம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் விஜயராகவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளியை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், விஜயராகவனை கொலை செய்த அதே பகுதியை சேர்ந்த சோமசுந்தரத்தை (60) போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், விசாரணையில், அவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதும், ஒன்றாக சேர்ந்து மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் விஜயராகவன் குடிபோதையில் சோமசுந்தரம் வீட்டு வாசல் முன்பு நின்று தகராறில் ஈடுபட்டதால் கத்தியால் கழுத்தை அறுத்து அவரை கொலை செய்ததாக சோமசுந்தரம் வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதையடுத்து சோமசுந்தரத்தை போலீசார் நேற்று புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். கொலை சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே கொலையாளியை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை பறிமுதல் செய்துள்ளனர்.

    • புதுக்கோட்டையில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • பேரணியை கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட குடும்ப நல அமைப்பின்சார்பில் உலக மக்கள்தொகை தினத்தினை முன்னிட்டு செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட கலெக்டர்ஐ.சா.மெர்சி ரம்யா கொடியசைத்து துவக்கி வைத்தார். 250க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணியானது பழைய பேருந்து நிலையம், அண்ணாசிலை வழியாக சென்று மீண்டும் பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் முடிவடைந்தது.

    முன்னதாக அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் உலக மக்கள் தொகை நாள் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவியர்களிடையே நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரி சு மற்றும் சான்றிதழ்களையும், மாவட்ட குடும்ப நலத்துறையில் 20 வருடங்கள் விபத்தின்றி வாகனங்கள் இயக்கியமைக்காக தமிழக அரசால் ஊர்தி ஓட்டுநர்கள் எஸ்.செந்தில்குமார், தெ.சிங்காரவேலு ஆகியோர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிக்ழ்ச்சியில் இணைஇயக்குனர் இரவி, மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜ்மோகன், துணை இயக்குநர்கள்கோமதி, ராம்கணேஷ், சிவகாமி சிவசங்கர், மக்கள் கல்வி தகவல் அலுவலர் சேகர் , வட்டாட்சியர் விஜயலெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது
    • நகர்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கேட்டு ஆயிரத்திற்கும் அதிகமான மனுக்கள் கொடுக்கப்பட்டன.

    புதுக்கோட்டை,

    நகர்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் புதுக்கோட்டை நகராட்சியையும் இணைக்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்சங்கமும், அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கமும் இணைந்து மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். இதற்காக புதுக்கோட்டை சிறைச்சாலை ரவுண்டானாவில் இருந்து பேரணியாக புறப்பட்ட அவர்கள் கலெக்டர்அலுவலகம் வந்தடைந்தனர். இந்த பேரணியில் ஆயிரத்திற்கும் அதிகமானோ கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் புதுக்கோட்டை நகரத் தலைவர்நிரஞ்சனாதேவி தலைமை வகித்தார்.

    மாதர்சங்க மாநில செயலாளர்பொன்னுத்தாய், விவசாயத் தொழிலாளர்சங்க மாநில செயலாளர்சங்கர்ஆகியோர்சிற ப்புரையாற்றினர். கோரிக்கைகளை விளக்கி விவசாயத் தொழிலாளர்சங்க மாவட்டச் செயலாளர்சலோமி, மாநிலக்குழு உறுப்பினர் சண்முகம், மாதர்சங்க மாவட்டச் செயலாளர்சுசிலா, தலைவர் பாண்டிசெல்வி, விதொச மாவட்ட துணைச் செயலாளர்சித்திரைவேல் மற்றும் மாதர்சங்க நிர்வாகிகள் காயத்ரி, பரமேஸ்வரி, சித்ரா, புவனேஸ்வரி, மகேஸ்வரி உள்ளிட்டோர்பேசினர். மாதர்சங்க நகர்செயலாளர் முத்துமாரி நன்றி கூறினார். போராட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேலுவிடம் நகர்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கேட்டு ஆயிரத்திற்கும் அதிகமான மனுக்கள் கொடுக்கப்பட்டன.

    • அறந்தாங்கி மணமேல்குடியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது
    • வீரன் அழகு முத்துகோன் குருபூஜையை முன்னிட்டு நடைபெற்றது

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மணமேல்குடியில் ஆண்டுதோறும் வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தையம் நடைபெறுவது வழக்கம் இந்தாண்டு நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை,சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 40 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. 2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரிய மாடு பிரிவில் 11 ஜோடி மாடுகளும், நடு மாடு பிரிவில் 29 ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு 1 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். பந்தயம் நடைபெற்ற பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • புதுக்கோட்டையில் இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 9 பேர் கும்பல் கைது செய்யபட்டனர்
    • பணம், செல்போன்கள் பறிமுதல் செய்தனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகர் பகுதி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் பாலியல் தொழில் அதிகரித்துள்ள தாகவும், வெளி மாநில ங்களில் இருந்து பெண்களை அழைத்து வந்து சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடு த்து வதாகவும் புதுக்கோ ட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார்கள் வந்துள்ளன.இதன் அடிப்படையில் இது போன்ற சட்டவிரோத சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க எஸ்.பி. வந்திதா பாண்டே உத்தரவிட்டதன் அடிப்படையில் இரு வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்த ப்பட்டது.

    புதுக்கோட்டை நகர காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெரியார் நகரில் பொறுப்பு இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் தலைமையில் ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டதில் வேலூர் காட்பாடியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை அனிதா, நந்தினி, அகஸ்தீஸ்வரன், பாலமுருகன், ரவி, கண்ணன் ஆகியோர் விப ச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இதில் அகஸ்தீஸ்வரன் (வயது21), பாலமுருகன் (27) ஆகியோர் போலீஸ் பிடியில் சிக்கிக்கொண்டனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    இவர்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு தூது விட பயன்படுத்திய நவீன செல்போன்கள், மோட்டார் சைக்கிள் ரொக்க பணம் ரூ.4,240 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் சுப்பு நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சோதனை மேற்கொண்டதில் கர்நாடக மாநிலம் பெங்களூர் தேனி மாவட்டம் போடி ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.

    இந்த சம்பவத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மாலதி (40), ரவி( 52), முகமது(50) பேராவூரணியைச் சேர்ந்த கணபதி (33), ஆலங்குடியைச் சேர்ந்த வேலாயுதம் (46), திருமயத்தைச் சேர்ந்த ராமச்சந்திர (47), சேலத்தைச் சேர்ந்த சபரிநாதன் (40) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ரூ. 4680 ரொக்க பணம் 3 இரு சக்கர வாகனங்கள் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குடியிருப்பு பகுதிகளில் விபச்சார கும்பல்கள் பிடிபட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீட்கப்பட்ட அழகிகள் மற்றும் பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • ஆலங்குடி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து செம்பட்டி விடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை தெற்குப்பட்டியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி சுசிலா (வயது 39). இவர்களுக்கு சுகிலன் (14), தரண்யாஸ்ரீ (11) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அய்யப்பன் தினந்தோறும் மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சுசிலா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுசீலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செம்பட்டி விடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    புதுக்கோட்டை:

    ஆதனக்கோட்டை அருகே குப்பையன்பட்டி கிராமத்ைத சேர்ந்தவர் சின்னையா (வயது 70). இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் நேற்று ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் உள்ளே இருந்து மர்ம நபர் ஒருவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து சின்னையா ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சின்னையா வீட்டில் திருட முயன்றது ஆதனக்கோட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்த ரெங்கசாமி மகன் அரசு (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அரசுவை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை மறுநாள் தொடக்குகிறது.
    • குரூப்-1 மற்றும் குரூப்-2 ஆகிய போட்டி தேர்வுகளுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் (ஆகஸ்டு) வெளியிடப்பட உள்ளது.

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் 2023-ம் ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிரலின்படி குரூப்-1 மற்றும் குரூப்-2 ஆகிய போட்டி தேர்வுகளுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் (ஆகஸ்டு) வெளியிடப்பட உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 மற்றும் குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுனர்களை கொண்டு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட உள்ளது.

    ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வுகள், வினாடி-வினா மற்றும் குழு விவாதங்களும் நடத்தப்படும். எனவே போட்டித்தேர்வர்கள் நேரடி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பயிற்சி வகுப்புகளில் சேருவது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரிலோ அல்லது 043322-222287 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.



    • சில ஜோடிகளின் சேட்டைகள் பக்தர்கள் மனதை பெரிதும் புண்படுத்துகிறது.
    • மலைப்பகுதிக்கு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இத்திருத்தலத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கிறார்கள். இயற்கை எழில் சூழ்ந்த இந்த மலைக்கோவிலில்

    தோகை விரித்தாடும் வண்ண மயில்களின் நடமாட்டம் பக்தர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மேலும் அடர்ந்த வனப்பகுதி, வித்தியாசமான பாறைகள் குழந்தைகளை பெரிதும் கவர்ந்துள்ளது. இதனால் உள்ளூர் பக்தர்கள் குடும்ப சகிதம் மலைக்கோவிலுக்கு இயற்கை காட்சிகளை ரசித்த வண்ணம் மலையேறி முருகப்பெருமானை தரிசிக்கின்றனர். இவ்வாறான சூழலில் கோவில் சுற்று வட்டார பகுதிகளில் அருவருக்கத்தக்க சம்பவங்கள் நாளும் நடந்தேறுவது பக்தர்களை வேதனை அடைய செய்துள்ளது.

    சமீப காலமாக உள்ளூர் மற்றும் வெளியூர் காதல் ஜோடிகளின் வரத்து அதிகரித்துள்ளது. திருச்சி, திண்டுக்கல், மதுரை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வரக்கூடிய காதல் ஜோடிகள் மணிக்கணக்கில் அங்குள்ள பாறை இடுக்குகளில் அமர்ந்து கடலை போடுகிறார்கள். மேலும் சில ஜோடிகளின் சேட்டைகள் பக்தர்கள் மனதை பெரிதும் புண்படுத்துகிறது.இதனைக் கண்டு பக்தர்கள் முகம் சுளிக்கிறார்கள். ஆகவே அத்து மீறும் காதல் ஜோடிகளை மலை அடிவாரத்திலேயே அடையாளம் கண்டு மலைப்பகுதிக்கு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, எங்கள் காவல் நிலையத்தில் போதிய அளவுக்கு போலீசார் இல்லை. சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற வழக்குகளை கையாள்வதற்கு கூட நேரம் போதுமானதாக இல்லை. பற்றாக்குறை இருக்கின்ற காரணத்தால் நிரந்தரமாக மலைக்கோவிலில் காவல்துறையினரை கண்காணிப்பில் ஈடுபடுத்த இயலவில்லை என்றனர்.

    எனவே மாவட்ட காவல்துறை மேற்கண்ட பிரச்சனையின் அதி தீவிரத்தை உணர்ந்து விராலிமலை காவல் நிலையத்திற்கு போதிய காவலர்களை பணியமர்த்த வேண்டும் அதோடு பொது மக்கள் அதிகம் கூடும் முக்கிய சாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே பக்தர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

    • கந்தர்வகோட்டையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் கந்தர்வகோட்டை கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், அங்கன்வாடிகளை இணைப்பது மற்றும் மூடும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், பதவி உயர்வு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்டார சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×