என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    கண்ணீர் அஞ்சலி என போஸ்டர் தயார் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆலங்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள உருமநாதபுரத்தை சேர்ந்தவர் சின்னக்கருப்பன். இவரது மகன் சதீஷ்குமார்(வயது 19). புதுக்கோட்டையில் உள்ள ஒரு கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்தநிலையில், இவர் திடீரென தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயார் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதில், தோற்றம், மறைவு குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், ஊருக்கு அருகே உள்ள ஒரு தோட்டத்தில் பலா மரத்தில் கடந்த 18-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை தோட்ட உரிமையாளர் பார்த்து அவரது உறவினர்களுக்கு தெரியப்படுத்தினார். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சதீஷ்குமார் உடலை மீட்டு போலீசாருக்கு தெரிவிக்காமல் எரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி கே.வி.கோட்டை கிராம நிர்வாக அதிகாரி காமாட்சி ஆலங்குடி போலீசில் புகார் செய்தார்.

    ஆலங்குடி போலீசார் உருமநாதபுரம் சென்று சதீஷ்குமாரின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், சதீஷ்குமாரின் தந்தை உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயார் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆலங்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுக்கோட்டையில் மிகவும் குறைவாக இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருவதால் நாளை முதல் கடைகள் அடைக்கப்படுகின்றன.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் மிகவும் குறைவாக இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால், புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் வியாபாரிகள், வர்த்தக சங்கத்தினர் தாங்களாகவே முன்வந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை கடைகளை அடைக்கின்றனர். இதனால் தளர்வு இல்லாத முழு ஊரடங்கா? என மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

    இதுபற்றி மாவட்ட நிர்வாக தரப்பில் வணிகர்கள் கடைகளை மட்டும் அடைக்கின்றனர் என தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் பால், மருந்து கடைகளை தவிர மற்ற எந்த கடைகளும் திறக்கப்படாது என வியாபாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க நேற்று கடைவீதிக்கு அதிக அளவில் வந்தனர். 

    புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தையில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். சந்தையில் நேற்று காலை முதல் மதியம் வரை கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதில் சமூக இடைவெளியை பொதுமக்கள் பெரும்பாலானோர் கடைப்பிடிக்கவில்லை. அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம்போல செயல்படும் என கூறப்படுகிறது.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் டாஸ்மாக் கடைகள் இரவு 7 மணிக்கு மூடப்படுகிறது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் பரவலை தடுக்கும் பொருட்டு டாஸ்மாக் கடைகளை திறந்திருக்கும் நேரத்தில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது காலை 10 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் கடை இரவு 8 மணிக்கு மூடப்படுகிறது. இந்தநிலையில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக இரவு 7 மணிக்கு டாஸ்மாக் கடை மூடப்படுகிறது. நேற்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி பரிந்துரையின் பேரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் செங்கிஸ்கான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், “புதுக்கோட்டை, அறந்தாங்கி நகரப் பகுதிகளில், கறம்பக்குடி, பரம்பூர் ஆகிய இடங்களில் உள்ள 29 டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டும் திறந்திருக்கும். மேற்கண்ட பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் சுகாதாரத்துறையினர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

    கொரோனா பாதித்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் திருப்புனவாசல், வேப்பங்குடி ஆகிய இடங்களில் 2 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார். டாஸ்மாக் கடைகள் நேற்று இரவு 7 மணிக்கு மூடப்பட்டதால் அதற்கு முன்னதாக மதுப்பிரியர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் முண்டியடித்துக் கொண்டு மது வகைகளை வாங்கி சென்றனர்.

    கொரோனா பரிசோதனை முடிவு வருவதற்குள் வெளியில் செல்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் பரிசோதனை முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒருவருக்கு ஆய்வக பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த நபருடன் தொடர்பில் இருந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொடர்பிலிருந்த அண்டை, அயலார்களுக்கு கொரோனா பரவி உள்ளதா? என உறுதி செய்திட பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். எனவே, ஆய்வக பரிசோதனை மேற்கொண்டு அதற்கான ஆய்வக முடிவு கிடைக்கும் வரை அவர்கள் தம் வீடுகளை விட்டு வெளியில் செல்லாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். 

    இதன் மூலம் நோய் தொற்று உடையவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும். அவ்வாறு இல்லாமல் எவரேனும் வெளியில் சென்று வருவது தெரியவந்தால் அவர் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் காவல்துறை மூலம் வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    அறந்தாங்கி நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதார துறையினர், நகராட்சி நிர்வாகம், வர்த்தக சங்கத்தினர், தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

    இதன் ஒரு பகுதியாக கடந்த 4 நாட்களாக தன்னார்வலர்களுடன் நகராட்சி நிர்வாகம், வர்த்தக சங்கம் இணைந்து அம்மா உணவகத்தில் கபசுர குடிநீர் தயார் செய்து, அறந்தாங்கி நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர். நேற்று பட்டுக்கோட்டை சாலையில் சாமி நகரில் உள்ள வீடுகளுக்கு அறந்தாங்கி கோட்ட கலால் அலுவலர் பரணி, கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினார்.
    புதுகோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுக்கோட்டை:

    மின் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுக்கோட்டையில் தி.மு.க. அலுவலகம் முன்பு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். மேலும் கையில் கருப்பு கொடி ஏந்தி கோரிக்கை தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். இதேபோல் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, பெரியண்ணன் அரசு மற்றும் தி.மு.க.வினர் தங்களது வீடுகள் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோல் அறந்தாங்கி ஒன்றிய பகுதியில் மாவட்ட தி.மு.க. அவை தலைவர் பொன்துரை, ஆலங்குடி எம்.எல்.ஏ. மெய்யநாதன் உள்ளிட்ட அனைத்து தி.மு.க. நிர்வாகிகளும் தங்களது வீட்டின் முன் கருப்பு கொடி ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மணமேல்குடியை அடுத்த நெற்குப்பத்தில் மணமேல்குடி ஒன்றியக்குழு தலைவர் பரணிகார்த்திகேயன் தலைமையில், மின்கட்டண உயர்வை கண்டித்து வீட்டின் முன் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

    அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட விளத்துப்பட்டியில் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாரிமுத்து தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் கல்யாணி முன்னிலையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. முக்கண்ணாமலைப்பட்டியில் கட்சி பொறுப்பாளர் முகமதுபாரூக் தலைமையிலும், அன்னவாசலில் தகவல் தொழில்நுட்ப அணி பேரூர் ஒருங்கிணைப்பாளர் முகமது இலியாஸ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் இலுப்பூர், அன்னவாசல், ராப்பூசல், அம்மாசத்திரம், பெருமநாடு, செங்கப்பட்டி உள்பட அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருவரங்குளத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் மழவராயன்பட்டி, திருக்கட்டளை, வல்லத்திராகோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆலங்குடியில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் மின் உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாநில தலைவர் தங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். ஆலங்குடி அரசு மருத்துவமனை முன்பு, அரசடிபட்டி நால்ரோடு, புதுக்கோட்டை விடுதி, நெம்மக்கோட்டை ஆகிய இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க.வினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கந்தர்வகோட்டையில் தி.மு.க.வினர் மின்கட்டண உயர்வை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கறம்பக்குடியில் நகர தி.மு.க. செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். இதேபோல் ரெகுநாதபுரம், மழையூர், வெட்டன்விடுதி, அம்புக்கோவில் ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆதனக்கோட்டை அருகே பெருங்களூரில் புதுக்கோட்டை ஒன்றியத்தின் சார்பாக மாநில தி.மு.க. விவசாய அணி துணை தலைவர் மட்டையன்பட்டி வி.என்.மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 15 பேர் மீது ஆதனக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    விராலிமலையில் நேற்று காலை காமராஜர் நகர், கடைவீதி, சோதனைச்சாவடி, எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க.வினர் அவர்களது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னமராவதி ஒன்றியத்தில் ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் அவரவர் வீட்டின் முன்பு தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் புதுவளவில் ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி தலைமையில், நகர செயலாளர் அழகப்பன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் கொப்பனாப்பட்டி, வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி, கண்டியாநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆவுடையார்கோவில் அருகே பரிவீரமங்களம் கிராமத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஆவுடையார்கோவில் ஒன்றிய தி.மு.க. செயலாளருமான உதயம் சண்முகம் வீட்டில் அவரும், தி.மு.க.வினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆவுடையார்கோவிலில் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் பாரதிராஜா வீட்டில் புண்ணியவயல் ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தில்குமரன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் அடைத்து ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுபாட்டில்கள் வாங்க முடியாமல் மதுபிரியர்கள் தவித்தனர்.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவுக்கு டாஸ்மாக் கடை ஊழியர்கள் சிலர் இறந்தனர். இந்த நிலையில் இறந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும், அவர்களது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், டாஸ்மாக் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை டாஸ்மாக் கடை ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் எதிரே 2 டாஸ்மாக் கடைகள் அடுத்தடுத்து உள்ளன. இந்த கடைகள் முன்பு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர், ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச., அண்ணா தொழிற்சங்கத்தினர் உள்பட 5 தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் நேற்று காலை திரண்டனர். காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடையை திறக்காமல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடை திறந்ததும் மதுபானம் வாங்கலாம் என நினைத்து வந்த மதுபிரியர்கள் கடை திறக்கப்படாததால் தவிப்புக்குள்ளாகினர். டாஸ்மாக் கடையின் அருகே ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். கடையை எப்போது திறப்பார்கள், எப்போது மது வாங்கி செல்வது என்ற ஏக்கத்தில் தவித்தனர். காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை 2 மணி நேரம் கடையை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து அறிந்த பின் மதுபிரியர்கள் சிலர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பகல் 12 மணிக்கு பின் ஊழியர்கள் டாஸ்மாக் கடையை திறந்து மதுபான விற்பனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 153 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் அனைத்து கடைகளும் 2 நேரம் அடைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றதாகவும் டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சிவன்மூர்த்தி தெரிவித்தார். ஊழியர்களின் இந்த திடீர் போராட்டத்தால் நேற்று காலை 2 மணி நேரம் மதுபானம் விற்பனை பாதிக்கப்பட்டது.
    புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் 120 நாட்களுக்கு பிறகு டிக்கெட் கவுண்ட்டர் திறக்கப்பட்டது. முன்பதிவு கட்டண தொகையை பயணிகள் திரும்ப பெற்றனர்.
    புதுக்கோட்டை:

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ரெயில்களில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு முழு கட்டணமும் திரும்ப வழங்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் திறக்கப்படாமல் இருந்து வந்தது. மேலும் ரெயில்கள் இயக்கப்படாததால் ரெயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் மையம் திறக்கப்படும் என்றும், ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகள், டிக்கெட் கட்டண தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி புதுக்கோட்டை ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர் நேற்று காலை திறக்கப்பட்டது. 120 நாட்களுக்கு பின் இந்த கவுண்ட்டர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பயணிகள் பலர் வந்து ரெயில் டிக்கெட் கட்டண தொகையை திரும்ப பெற விண்ணப்பித்து, அதற்கான தொகையை பெற்றுச்சென்றனர்.

    இந்த டிக்கெட் கவுண்ட்டர் மையத்தில் ஒரு ரெயில்வே ஊழியர் பணியில் இருந்து வருகிறார். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரையும் இந்த கவுண்ட்டர் திறந்திருக்கும். பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையாக நிற்கும் வகையில் தரையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். நேற்று ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து முன்பதிவு டிக்கெட் கட்டண தொகையை திரும்ப பெற்று சென்றதாக ரெயில்வே ஊழியர் தெரிவித்தார்.
    நாட்டுப்படகு மீனவர் ஒருவர் கடலில் மீன் பிடித்துவிட்டு கரை திரும்பினார். அவருடைய வலையில் 3 ராட்சத நண்டுகள் சிக்கியிருந்தன.
    கோட்டைப்பட்டினம்:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து ஏராளமான நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நாட்டுப்படகு மீனவர் ஒருவர் கடலில் மீன் பிடித்துவிட்டு கரை திரும்பினார். அவருடைய வலையில் 3 ராட்சத நண்டுகள் சிக்கியிருந்தன.

    ஜம்மான் நண்டுகள் என்று கூறப்படும் இந்த நண்டுகள் ஒவ்வொன்றும் சுமார் 2 கிலோ எடை கொண்டதாகும். இந்த வகை நண்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நண்டின் விலை 1 கிலோ ரூ.1,800 ஆகும். இதனால் அந்த மீனவர் மகிழ்ச்சி அடைந்தார். இந்த வகை நண்டுகள் எப்போதாவதுதான் வலையில் சிக்கும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
    புதுக்கோட்டையில் இருதரப்பினர் மோதலை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகே போசம்பட்டியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அரிவாளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    தேர்தல் முன்விரோதத்தால் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினர் மோதிக்கொண்டதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

    இதையடுத்து மோதலை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரிமளம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரிமளம்:

    அரிமளம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் யோகராஜ் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது வையாபுரிபட்டி பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். 

    இதில், அவர்கள் அரிமளம் அருகே உள்ள தெற்குகுடியிருப்பு கிராமத்தை சேர்ந்த அருள்(வயது 45), கே.புதுப்பட்டி அருகே உள்ள கும்மங்குடி கிராமத்தை சேர்ந்த சிதம்பரம்(50) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதும் தெரியவந்தது. 

    இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.300-ஐ பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
    அன்னவாசலில் ஒரே குடும்பத்தில் சிறுவர்கள் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று சற்று குறைந்திருந்தது. நேற்று 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 941 ஆக உள்ளது. இதுவரை 523 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 407 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 17 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 11 ஆக உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்னவாசலை சேர்ந்த ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையில் இறந்தார். அவருடைய உடல் உறவினர்களிடம் வழங்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் கொரோனா தொற்று ஏற்பட்டுதான் இறந்தார் என்று மறுநாள் காலை சுகாதாரத்துறை மூலம் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து இறந்தவரின் குடும்பத்தினர் உள்பட பலர் தனிமைப்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று பரிசோதனை முடிவு வந்த நிலையில், இறந்தவர் குடும்பத்தில் சிறுவர்கள் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அப்பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலையில் 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் முக்கண்ணாமலைப்பட்டியில் கொரோனா பாதிப்பால் 18 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் மட்டுமே திறக்கப்பட்டு பின்னர் அடைக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து 16 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள்.

    கறம்பக்குடி பகுதியில் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் 2 பேர், மானியவயல் கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி, தனியார் நிதி நிறுவன மேலாளர் ஆகிய 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை கறம்பக்குடியில் 45 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கீரனூர் மேலப்புதுவயல் ரோடு பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள், உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சமீபத்தில் வீட்டிற்கு உறவினர் ஒருவர் வந்து சென்றுள்ளார். இந்நிலையில் குடும்பத்தினருக்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டதால், பரிசோதனை செய்த நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    இதேபோல் ஒடுக்கூர் கிராமத்தில் 55 வயது காங்கிரஸ் பிரமுகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் கீரனூர் பகுதியில் கொரோனா வேகமாக பரவி வருவதால் அண்டக்குளம் சுகாதார மையத்தில் இருந்து டாக்டர் செவிலியர் குழுவினர் வீடு, வீடாக சென்று இன்று(ஞாயிற்றுக்கிழமை) பரிசோதனை நடத்துகின்றனர்.

    அரிமளம், ராயவரம் கிராமத்திற்கு சென்னையில் இருந்து வந்த 2 பேர், கடையக்குடி ஊராட்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய தொடர்புடைய நபர்கள் மற்றும் அரிமளம், ராயவரம், கடியாபட்டி ஆகிய ஊர்களில் காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என மொத்தம் 36 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    ×