என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் 120 நாட்களுக்கு பிறகு டிக்கெட் கவுண்ட்டர் திறப்பு
புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் 120 நாட்களுக்கு பிறகு டிக்கெட் கவுண்ட்டர் திறப்பு
புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் 120 நாட்களுக்கு பிறகு டிக்கெட் கவுண்ட்டர் திறக்கப்பட்டது. முன்பதிவு கட்டண தொகையை பயணிகள் திரும்ப பெற்றனர்.
புதுக்கோட்டை:
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ரெயில்களில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு முழு கட்டணமும் திரும்ப வழங்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் திறக்கப்படாமல் இருந்து வந்தது. மேலும் ரெயில்கள் இயக்கப்படாததால் ரெயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் மையம் திறக்கப்படும் என்றும், ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகள், டிக்கெட் கட்டண தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி புதுக்கோட்டை ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர் நேற்று காலை திறக்கப்பட்டது. 120 நாட்களுக்கு பின் இந்த கவுண்ட்டர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பயணிகள் பலர் வந்து ரெயில் டிக்கெட் கட்டண தொகையை திரும்ப பெற விண்ணப்பித்து, அதற்கான தொகையை பெற்றுச்சென்றனர்.
இந்த டிக்கெட் கவுண்ட்டர் மையத்தில் ஒரு ரெயில்வே ஊழியர் பணியில் இருந்து வருகிறார். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரையும் இந்த கவுண்ட்டர் திறந்திருக்கும். பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையாக நிற்கும் வகையில் தரையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். நேற்று ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து முன்பதிவு டிக்கெட் கட்டண தொகையை திரும்ப பெற்று சென்றதாக ரெயில்வே ஊழியர் தெரிவித்தார்.
Next Story






