என் மலர்
செய்திகள்

மணமேல்குடி அருகே நெற்குப்பத்தில் கருப்பு கொடியேந்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது எடுத்த படம்.
மின் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
புதுகோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை:
மின் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுக்கோட்டையில் தி.மு.க. அலுவலகம் முன்பு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். மேலும் கையில் கருப்பு கொடி ஏந்தி கோரிக்கை தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். இதேபோல் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, பெரியண்ணன் அரசு மற்றும் தி.மு.க.வினர் தங்களது வீடுகள் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் அறந்தாங்கி ஒன்றிய பகுதியில் மாவட்ட தி.மு.க. அவை தலைவர் பொன்துரை, ஆலங்குடி எம்.எல்.ஏ. மெய்யநாதன் உள்ளிட்ட அனைத்து தி.மு.க. நிர்வாகிகளும் தங்களது வீட்டின் முன் கருப்பு கொடி ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மணமேல்குடியை அடுத்த நெற்குப்பத்தில் மணமேல்குடி ஒன்றியக்குழு தலைவர் பரணிகார்த்திகேயன் தலைமையில், மின்கட்டண உயர்வை கண்டித்து வீட்டின் முன் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட விளத்துப்பட்டியில் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாரிமுத்து தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் கல்யாணி முன்னிலையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. முக்கண்ணாமலைப்பட்டியில் கட்சி பொறுப்பாளர் முகமதுபாரூக் தலைமையிலும், அன்னவாசலில் தகவல் தொழில்நுட்ப அணி பேரூர் ஒருங்கிணைப்பாளர் முகமது இலியாஸ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் இலுப்பூர், அன்னவாசல், ராப்பூசல், அம்மாசத்திரம், பெருமநாடு, செங்கப்பட்டி உள்பட அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருவரங்குளத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் மழவராயன்பட்டி, திருக்கட்டளை, வல்லத்திராகோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆலங்குடியில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் மின் உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாநில தலைவர் தங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். ஆலங்குடி அரசு மருத்துவமனை முன்பு, அரசடிபட்டி நால்ரோடு, புதுக்கோட்டை விடுதி, நெம்மக்கோட்டை ஆகிய இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க.வினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கந்தர்வகோட்டையில் தி.மு.க.வினர் மின்கட்டண உயர்வை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கறம்பக்குடியில் நகர தி.மு.க. செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். இதேபோல் ரெகுநாதபுரம், மழையூர், வெட்டன்விடுதி, அம்புக்கோவில் ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆதனக்கோட்டை அருகே பெருங்களூரில் புதுக்கோட்டை ஒன்றியத்தின் சார்பாக மாநில தி.மு.க. விவசாய அணி துணை தலைவர் மட்டையன்பட்டி வி.என்.மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 15 பேர் மீது ஆதனக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
விராலிமலையில் நேற்று காலை காமராஜர் நகர், கடைவீதி, சோதனைச்சாவடி, எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க.வினர் அவர்களது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னமராவதி ஒன்றியத்தில் ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் அவரவர் வீட்டின் முன்பு தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் புதுவளவில் ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி தலைமையில், நகர செயலாளர் அழகப்பன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் கொப்பனாப்பட்டி, வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி, கண்டியாநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆவுடையார்கோவில் அருகே பரிவீரமங்களம் கிராமத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஆவுடையார்கோவில் ஒன்றிய தி.மு.க. செயலாளருமான உதயம் சண்முகம் வீட்டில் அவரும், தி.மு.க.வினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆவுடையார்கோவிலில் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் பாரதிராஜா வீட்டில் புண்ணியவயல் ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தில்குமரன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
Next Story






