என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    அரசு அலுவலகங்களில் பிரதமரின் புகைப்படம் வைக்கக்கோரி புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் மற்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படத்தை வைக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. தொழில் பிரிவினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தனர்.

    அதனைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமரின் புகைப்படத்துடன் கலெக்டர் அலுவலகம் வந்த பா.ஜ.க.வினரிடம் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். மேலும், 27-ந் தேதிக்குள் அரசு அலுவலகங்களில் பிரதமரின் புகைப்படம் வைக்க அனுமதிக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்தநிலையில் நேற்று பா.ஜ.க.வின் தொழில் பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் நேற்று வந்திருந்தனர். பின்னர் அவர்கள், வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து தங்களது கோரிக்கை தொடர்பாக கேட்டனர். அதற்கு அவர், பிரதமரின் புகைப்படம் வைப்பது தொடர்பாக அரசின் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தெரிவித்தார்.

    அந்த கடிதம் இன்று (அதாவது நேற்று) தான் அனுப்பப்பட்டதாகவும், அரசு அலுவலகங்களில் பிரதமரின் புகைப்படத்தை வைக்க கோரியும் கோர்ட்டு அருகே பா.ஜ.க.வினர் மோடி புகைப்படத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விரைந்து வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர்.

    ஆனால், போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டு அருகே உள்ள ஆயுதப்படை திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அறந்தாங்கி அருகே தடையில்லா சான்றிதழ் வழங்க விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய என்ஜினீயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நாகுடியில் கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருபவர் தென்னரசு (வயது 45). இந்தநிலையில், அறந்தாங்கியை சேர்ந்த விவசாயி பிரபாகரன், தனது விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு பெற விண்ணப்பித்திருந்தார். அதற்கு கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் தடையில்லா சான்றிதழ் வாங்கி வரும்படி மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து பிரபாகரன், அந்த அலுவலகத்தை நாடினார்.

    அப்போது அங்கு பணியில் இருந்த உதவி என்ஜினீயர் தென்னரசு, தடையில்லா சான்றிதழ் வழங்க பரிந்துரைக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் தருமாறு பிரபாகரனிடம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இதுகுறித்து புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் போலீசார் நாகுடிக்கு சென்று மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து என்ஜினீயர் தென்னரசுவிடம், பிரபாகரன் ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று தென்னரசுவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்சமாக வாங்கிய பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். கைதான அவரை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மேலும் உதவி பொறியாளர் தென்னரசு மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
    கொரோனா காலத்தில் தனது மனைவியை நன்றாக பார்த்துக்கொண்டதோடு, சுக பிரவசத்துக்கு வழிவகுத்த டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மின் விசிறியை அரசு ஆஸ்பத்திரிக்கு விவசாயி அன்பளிப்பாக வழங்கினார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது வன்னியன்விடுதி கிராமம். இந்த ஊரைச்சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40), விவசாயி. இவரது மனைவி தமிழரசி (34). கர்ப்பிணியான இவர் கடந்த வாரம் ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.

    கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக அங்குள்ள டாக்டர்கள் தமிழரசியை மிகுந்த கவனத்துடன் பார்த்துக்கொண்டனர். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் தாயும், சேயும் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அப்போது தனது மனைவியை நன்றாக பார்த்துக்கொண்டதோடு, சுகப் பிரவசத்துக்கு வழிவகுத்த டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரமேஷ், ரூ.2 ஆயிரம் மதிப்பிலான மின் விசிறியை அரசு ஆஸ்பத்திரிக்கு அன்பளிப்பாக வழங்கினார். அதனை ஏற்றுக்கொண்ட ஆஸ்பத்திரி நிர்வாகம் தம்பதிக்கு நன்றி தெரிவித்ததோடு, தமிழக அரசின் அம்மா பரிசு பெட்டகத்தை வழங்கி அனுப்பி வைத்தது.
    அரிமளம் அருகே கிணற்றில் பதுக்கி வைத்திருந்த வெடிகள் வெடித்து சிதறியதில் 15 வீடுகள் சேதம் அடைந்தன. இந்த சம்பவம் தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அரிமளம்:

    புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தை அடுத்த கே.புதுப்பட்டி அருகே கீழாநிலைக்கோட்டை ஸ்ரீராம் நகரில் வெடி தொழிற்சாலை உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி, வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அதன் உரிமையாளர் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு தொழிற்சாலை நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

    எனினும் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெடி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வாங்கி வந்து, இந்த தொழிற்சாலையில் பதுக்கி வைத்து, அனுமதியின்றி வெடிகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி இந்த தொழிற்சாலையில் பட்டாசுகளையும் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இங்கு சிறிய ரக பட்டாசுகள், வாணவெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் இங்கு தயாரிக்கப்பட்ட வெடிகளை அருகில் உள்ள தரை மட்ட கிணற்றில் பதுக்கி வைத்திருந்தனர். இந்த நிலையில் இரவு 11 மணி அளவில் அங்கு வைக்கப்பட்டிருந்த வெடிகள் திடீரென வெடித்தன. அப்போது, அங்கு ஏராளமான வெடிகள் இருந்ததால் ‘டமார்’, ‘டமார்’ என பயங்கர சத்தத்துடன் வெடித்தன. வெடித்த வேகத்தில் தரைமட்ட கிணற்றில் சுற்றி கட்டப்பட்டிருந்த கருங்கற்கள் நீண்ட தூரம் தூக்கி வீசப்பட்டன.

    இந்த கற்கள் அருகே உள்ள 15-க்கும் மேற்பட்ட ஓட்டுவீடுகள் மீது விழுந்ததில் ஓடுகள் உடைந்தன. இதனால் 15 வீடுகள் சேதமடைந்தன. மேலும் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மண்புழு உரம் தயாரிக்கும் கட்டிடத்தின் ஆஸ்பெட்டாஸ் சீட் முழுமையாக சேதம் அடைந்தது. வெடி, வெடித்தபோது சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு சத்தம் கேட்டது. இரவு நேரம் என்பதால் பொதுமக்கள் வீட்டிற்குள் இருந்ததால் காயம் இன்றி தப்பினர். இந்த வெடிவிபத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படவில்லை.

    வெடிகளை பதுக்கி வைத்தது தொடர்பாக கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன்கள் வீரப்பன் (வயது 30), விஜயகுமார் (25), விக்னேஸ்வரன் (23), அண்ணாமலை (22) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஆலங்குடி அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் திருவள்ளுவர் சிலை அருகே கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த இடத்தில் கஞ்சா விற்ற கீரனூரை சேர்ந்த முஸ்தபாவை (வயது 26) போலீசார் கைது செய்தனர். கைதான அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    வெங்காயம் விலையேற்றம் நீடித்தால் ரேஷன் கடைகளில் வெங்காயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே கிடாரம்பட்டியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை உணவுத்துறை அமைச்சர் காமராஜ், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கருடன் சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு களத்துடன் கூடிய நிரந்தர கட்டிடம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளன. மத்திய அரசு நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் மட்டுமே அனுமதி வழங்கி உள்ளது. மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகரிக்க அனுமதி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. மத்திய குழுவினர் நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு செய்ய வருகிறார்கள். ஆய்வுக்கு பின் அனுமதி கிடைக்கும். ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை வைப்பதில் சிக்கல்கள் தீர்ந்த பின் இத்திட்டம் நடைமுறைக்கு வரும். அதுவரை பழைய முறையிலேயே ரேஷன் அட்டைகளை ஸ்கேன் செய்து பொருட்களை வாங்கலாம்.

    பண்ணை பசுமைக் கடைகளில் பெரிய வெங்காயம் ரூ.45-க்கு வழங்கப்பட்டு வருகிறது. வெங்காய விளைச்சல் உள்ள இடத்தில் மழை கூடுதலாக பெய்த காரணத்தினால் வெங்காயம் கொள்முதல் செய்தல், எடுத்து வருதல் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளது. வெங்காய விலை ஏற்றம் தற்காலிகமானதாகும். அரசு இதனை கண்காணித்து வருகிறது. எனினும் இந்த விலையேற்றம் தொடர்ந்தால் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வெங்காயம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மகனின் பிறந்தநாளை கொண்டாட மும்பையிலிருந்து கறம்பக்குடிக்கு ஸ்கூட்டரில் தம்பதிகள் வந்தனர்.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கோட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 41). இவரது மனைவி சங்கீதா (36). இவர்களுக்கு வேணி (13) என்ற மகளும், யோகேஸ்வரன் (6) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தங்கி பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மார்ச் மாதம் மும்பையில் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டதால், செல்வம் தனது குழந்தைகளை கறம்பக்குடி அருகே பில்லக்குறிச்சியில் உள்ள அவர்களது தாத்தா வீட்டில் விட்டு சென்றார். செல்வமும், அவரது மனைவியும் மும்பையிலேயே இருந்தனர்.

    இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதனால் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக பெற்றோரை பார்க்காமல் குழந்தைகளும், குழந்தைகளை பார்க்க முடியாமல் பெற்றோரும் தவித்து வந்தனர். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும், மும்பையிலிருந்து தமிழ்நாட்டிற்கு, பஸ், ரெயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதனால் செல்வமும், அவரது மனைவியும் கறம்பக்குடி வந்து அவர்களது குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் செல்வத்தின் மகன் யோகேஸ்வரனுக்கு வருகிற 28-ந் தேதி பிறந்தநாள் வருகிறது. ஆண்டுதோறும் மகனுடன் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த பெற்றோர் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால், சேர்ந்து கொண்டாட முடியாத நிலை ஏற்படுமோ என வருந்தினர். இருப்பினும் எப்படியாவது கறம்பக்குடி சென்று மகன் பிறந்த நாளை கொண்டாடுவது என முடிவு செய்தனர். விமான கட்டணம் செலுத்த முடியாத நிலையில், அவர்களுக்கு சொந்தமான ஸ்கூட்டரில் கறம்பக்குடிக்கு செல்வது என முடிவு செய்தனர்.

    அதன்படி கடந்த 21-ந் தேதி மும்பையில் இருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டு 23ந்தேதி இரவு கறம்பக்குடி வந்து சேர்ந்தனர். 7 மாதத்திற்கு மேலாக பெற்றோரை பார்க்காத குழந்தைகள் ஆவலுடன் ஓடிவந்து பெற்றோரை கட்டித்தழுவினர். மகனின் பிறந்தநாளை கொண்டாட 1,400 கிலோ மீட்டருக்கு மேல் ஸ்கூட்டரில் பயணம் செய்து கறம்பக்குடி வந்த தம்பதியை அப்பகுதி கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து பாராட்டு தெரிவித்தனர்.
    அன்னவாசல் பகுதியில், நிலக்கடலை விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் நிலக்கடலையை தெருக்களில் கூவி, கூவி விற்று வருகின்றனர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் அருகே காலாடிப்பட்டி, வீரப்பட்டி, சென்னப்பநாயக்கன்பட்டி, புதூர், குளவாய்ப்பட்டி, குடுமியான்மலை, முக்கண்ணாமலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, அறுவடை தொடங்கியுள்ளது.

    வழக்கமாக, நிலக்கடலையை எண்ணெய் ஆலைக்காக ஏஜென்டுகள், விவசாயிகளை நேரடியாக சந்தித்து கொள்முதல் செய்வர். நடப்பாண்டில் நிலக்கடலை நல்ல விளைச்சல் உள்ளதால், விவசாயிகளே நேரிடையாக பொதுமக்களிடம் நிலக்கடைலையை விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் கிராம சந்தைகள் மற்றும் தெருவோரப் பகுதிகளில், மண் நீக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட நிலக்கடலையை விவசாயிகள், வியபாரிகள், சரக்குவாகனம், இருசக்கர வாகனம், தள்ளுவண்டி, சைக்கிள் போன்ற வாகனங்களில் கூவி, கூவி விற்பனை செய்கின்றனர்.

    இதுகுறித்து, அன்னவாசல் விவசாயிகள் கூறும்போது, தற்போது, நிலக்கடலை விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், எண்ணெய் ஆலைக்கான ஏஜென்டுகள் நிலக்கடலை கேட்டு அதிகம் வரவில்லை. ஒரு சிலர் வந்தாலும், குறைந்த விலைக்கு கேட்கின்றனர். இதனால், பொதுமக்களிடம் நேரிடையாக சென்று விற்பனை செய்கிறோம். படி ஒன்று ரூ.20-க்கும், 3-படி ரூ.50-க்கும் விற்பனை செய்கின்றோம் என்றார்.
    பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதி பேரூராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற லஞ்சம் கேட்பதாகவும், லஞ்சம் கேட்ட சுகாதார மேற்பார்வையாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. நகர துணை செயலாளர் பன்னீர்செல்வம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பேரூராட்சி செயல்அலுவலரை தகாத வார்த்தையில் திட்டி பணி செய்ய விடாமல் தடுத்ததாக செயல் அலுவலர் தனுஷ்கோடி போலீசில் கொடுத்துள்ளார். மேலும் பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் மேஸ்திரி பழனிச்சாமி பஸ் நிலையம் அருகே சந்தை வீதியில் பணி செய்து கொண்டிருந்தபோது, தன்னை கல்லால் அடித்து பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவரும் ஒரு புகார் மனு அளித்துள்ளார். இதனையடுத்து பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டிருந்த பன்னீர்செல்வத்தை பொன்னமராவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
    நெடுவாசலில் கதண்டுகள் கடித்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். பெண்கள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.
    வடகாடு:

    புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசல் கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 71). விவசாயியான இவருக்கு நெடுவாசல் வடக்கு கிராமத்தில் தென்னந்தோப்பு உள்ளது. நேற்று இவரது தோப்பில் தேங்காய் பறிக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது, ஆறுமுகம் உள்பட தொழிலாளர்கள் ஒரு தென்னைமரத்தின் அடியில் நின்று கொண்டிருந்தனர். 

    இதற்கிடையில் அந்த மரத்தில் கூடுகட்டி இருந்த கதண்டுகள் திடீரென்று கலைந்து அங்கும், இங்குமாக பறந்து சென்றது. இதனையடுத்து தென்னைமரத்தின் கீழே நின்றிருந்த ஆறுமுகத்தை நூற்றுக்கணக்கான கதண்டுகள் கடித்தது. மேலும் அருகே நின்றுகொண்டு இருந்த கூலி தொழிலாளர்களையும் கதண்டுகள் கடித்தன. இதைப்பார்த்த மற்றதொழிலாளர்கள் கதண்டுகளை தீயிட்டு விரட்டினர். தொடர்ந்து கதண்டுகள் கடித்ததில் படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை மீட்டு பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். 

    மேலும் கதண்டுகள் கடித்ததில் பெண்கள் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் நெடுவாசலில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ஆலங்குடி அருகே லாரி மோதி எண்ணெய் வியாபாரிகள் 2 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆலங்குடி:

    தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் செட்டித்தெருவை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 49). அதே பகுதியை சேர்ந்தவர் அழகர்(62). இருவரும் கடலை எண்ணெயை சொந்தமாக தயாரித்து விற்பனை செய்து வந்தனர். சம்பவத்தன்று எண்ணெய் தயாரிப்பதற்காக நிலக்கடலை வாங்குவதற்காக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் இருவரும் மீண்டும் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். 

    ஆலங்குடி-ஆதனக்கோட்டை சாலையில் இருங்குளவன்பட்டி உப்பு கொட்டைமுனியன் கோவில்குளம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி திடீரென்று அவர்கள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி ரத்தினவேல் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து லாரியை, அதன் டிரைவர் அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    படுகாயம் அடைந்த அழகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அழகர் இறந்தார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் சம்பட்டிவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவர் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்த ராஜ்குமார் என தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை தாசில்தார் பட்டியலினை உடனடியாக வெளியிட வேண்டும், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்களுக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலைப்பட்டியல் தயார் செய்யப்பட்டு ஏற்பளிக்கப்பட்டதை வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
    ×