search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை படத்தில் காணலாம்.
    X
    புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை படத்தில் காணலாம்.

    அரசு அலுவலகங்களில் பிரதமரின் புகைப்படம் வைக்கக்கோரி பா.ஜ.க.வினர் சாலை மறியல் - 22 பேர் கைது

    அரசு அலுவலகங்களில் பிரதமரின் புகைப்படம் வைக்கக்கோரி புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் மற்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படத்தை வைக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. தொழில் பிரிவினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தனர்.

    அதனைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமரின் புகைப்படத்துடன் கலெக்டர் அலுவலகம் வந்த பா.ஜ.க.வினரிடம் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். மேலும், 27-ந் தேதிக்குள் அரசு அலுவலகங்களில் பிரதமரின் புகைப்படம் வைக்க அனுமதிக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்தநிலையில் நேற்று பா.ஜ.க.வின் தொழில் பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் நேற்று வந்திருந்தனர். பின்னர் அவர்கள், வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து தங்களது கோரிக்கை தொடர்பாக கேட்டனர். அதற்கு அவர், பிரதமரின் புகைப்படம் வைப்பது தொடர்பாக அரசின் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தெரிவித்தார்.

    அந்த கடிதம் இன்று (அதாவது நேற்று) தான் அனுப்பப்பட்டதாகவும், அரசு அலுவலகங்களில் பிரதமரின் புகைப்படத்தை வைக்க கோரியும் கோர்ட்டு அருகே பா.ஜ.க.வினர் மோடி புகைப்படத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விரைந்து வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர்.

    ஆனால், போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டு அருகே உள்ள ஆயுதப்படை திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×