என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    ஆவுடையார்கோவில் ஒன்றியம் பாண்டிபத்திரத்தில் 151 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
    ஆவுடையார்கோவில்:

    ஆவுடையார்கோவில் ஒன்றியம் பாண்டிபத்திரம் ஊராட்சியைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பொன்பேத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செலுத்தப்பட்டது. இதில் 151 பேருக்கு போடப்பட்டது. இந்த தடுப்பூசி போடும் பணியில் டாக்டர் மதன், சுகாதாரஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் ஈடுபட்டனர்.
    மாட்டு வண்டியில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவூர்:

    மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஆவூரில் இருந்து துரைக்குடி செல்லும் சாலையில் வந்த ஒரு மாட்டு வண்டியை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் அப்பகுதியில் உள்ள கோரையாற்றிலிருந்து மணல் அள்ளி கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மணல் கடத்திய சாமிஊரணிபட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 27) என்பவரை கைது செய்தனர்.
    வாக்குச்சாவடி அலுவலர்களுக்காக நடந்த பயிற்சி வகுப்பில் இருந்து ஆசிரியர்கள் பாதியில் வெளியேறுவதை தடுக்க பள்ளிக்கு பூட்டு போடப்பட்டது. ஆனால் ஆசிரியர்கள் சிலர் சுவர் ஏறி குதித்து தப்பிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிறசி வகுப்பு ராணியார் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இந்த பயிற்சி வகுப்பானது காலை 9.30 மணி முதல் தொடங்கி மாலை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பயிற்சியில் பங்கு பெறுபவர்களுக்கு வசதியாக மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் பயிற்சி நடைபெற்றதை நேற்று மதியம் 12.30 மணிக்கு மேல் கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டு சென்றார். மதியம் 1 மணிக்கு மேல் உணவு இடைவேளை விடப்பட்டது.

    மேலும் மதிய உணவு அங்கேயே பொட்டலமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன. அந்த நேரத்தில் ஆசிரியர்கள் பலர் உணவு பொட்டலங்களை வாங்கிவிட்டு வெளியே செல்ல முயன்றனர். மேலும் சிலரும் வெளியில் செல்ல முயன்றனர். இதனால் பள்ளியின் நுழைவு வாயில் பூட்டப்பட்டது. பயிற்சி வகுப்பில் இருந்து பாதியில் வெளியேறி செல்வதை தடுக்க நடவடிக்கையாக இதனை மேற்கொண்டனர். அப்போது ஆசிரியர்கள் பலர் வெளியே செல்ல முடியாமல் நுழைவுவாயில் முன்பு தவித்தனர்.

    இதற்கிடையில் சிலர் தங்களுக்கு வெளியில் சென்று உணவு சாப்பிட வேண்டும் நுழைவுவாயில் கதவை திறந்துவிடுங்கள் என கூறினர். மேலும் சிலர், மாணவர்களை விட கேவலமாக எங்களை நடத்துகின்றனர். நாங்கள் என்ன சிறை கைதிகளா?. எங்களை அடைத்து வைத்துள்ளீர்கள். வெளியில் சென்று வரக்கூடாதா? எனக்குமுறினர். மேலும் அங்கிருந்த வருவாய்த்துறை ஊழியர்களிடமும், பள்ளி நிர்வாகத்தினரிடமும் முறையிட்டனர்.

    ஆனால் அவர்களோ, உணவு இடைவேளைக்குபின் மேலும் பயிற்சி ஒரு மணி நேரம் நடைபெறும். அதுவரை அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். பாதியில் செல்லக்கூடாது என அறிவுறுத்தினர். இதனால் அவர்கள் செய்வதறியாது திகைத்தனர். அதிகாரிகளின் வாகனங்கள் வெளியே செல்வதற்காக நுழைவு வாயில் திறக்கப்பட்ட போது அந்த இடைவெளியில் சிலர் தப்பித்தோம், பிழைத்தோம் என்று சென்றனர்.

    இதற்கிடையில் நுழைவு வாயில் கதவு பூட்டப்பட்டிருந்ததால் வேறு வழியில்லாமல் பள்ளியின் பக்கவாட்டு சுவரில் ஏறி குதித்து தாண்டி வெளியே சென்றனர். இதில் ஆண் ஆசிரியர்களுக்கு இணையாக ஆசிரியைகளும் குதித்து வெளியில் சென்றனர். ஏதோ பெரும் விடுதலை பெற்றதை போல மதியத்திற்கு மேல் பயிற்சி வகுப்பில் பங்கேற்றாமல் நிம்மதியுடன் அவர்கள் சென்றதை காணமுடிந்தது.

    அவ்வாறு சென்றவர்களில் சிலர் கூறுகையில், இந்த பயிற்சி ஏற்கனவே வழங்கப்பட்டது தான். அதனால் மதியத்திற்கு மேல் இருக்கத்தேவையில்லை. ஏற்கனவே எங்களுக்கு இந்த நடைமுறைகள் தெரியும் என்றனர். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வருகிற 3-ந் தேதி 2-ம் கட்ட மறுபயிற்சியும், வருகிற 5-ந் தேதி 3-ம் கட்ட பயிற்சியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
    விராலிமலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அண்ணனின் உதவியாளர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். இவரது அண்ணன் உதயகுமார். இவருக்கு சொந்தமான கல்லூரி இலுப்பூரில் உள்ளது. இங்கு விராலிமலை அம்மன் கோவில் அருகே உள்ள ஆசாரி தெருவை சேர்ந்த மகாலிங்கம் மகன் வீரபாண்டி (வயது 32) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    மேலும், அவர் உதயகுமாரின் உதவியாளராகவும் உள்ளார். இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் வீரபாண்டி வீட்டுக்கு வருமானவரித்துறை திருச்சி மண்டல துணை ஆணையர் அனுராதா தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீரபாண்டியின் வீடு முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சோதனை நடத்தினர். மேலும் வீட்டில் உள்ளவர்களை வெளியே செல்லவும், வெளியில் உள்ளவர்களை வீட்டுக்குள் செல்லவும் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமின்றி வீரபாண்டியின் செல்போனில் தொடர்பில் இருந்தவர்களின் வீட்டிற்கும் சென்று சோதனை நடத்தினர். வீரபாண்டியின் வீட்டின் அருகே உள்ள வீடுகளிலும் சோதனை நடத்தினர்.

    மேலும், சிலரின் முகவரிகளையும் வாங்கினர். அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தப்படலாம் என தெரிகிறது. வீரபாண்டி வீட்டில் தொடர்ந்து இரவு முழுவதும் சோதனை நடைபெற்றது. இதில் கட்டுக்கட்டாக பணமும், முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தெரிகிறது.

    வீரபாண்டி விராலிமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய காசநோய் பிரிவில் தற்காலிக முதல்நிலை சிகிச்சை மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    இலுப்பூர் அருகே பெண்ணிடம் 4½ பவுன் சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    இலுப்பூர் கண்ணாரத்தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி மாணிக்கத்தம்மாள் (வயது 78). ஓய்வு பெற்ற சத்துணவு உதவியாளரான இவர் தனது குடும்பத்தினருடன் இலுப்பூரில் உள்ள தரம் தூக்கி பிடாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அனைவரும் கோவிலுக்கு உள்ளே சென்றதும் மாணிக்கத்தம்மாள் மட்டும் பின்புற கதவு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 மர்ம நபர்கள் மாணிக்கத்தம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இலுப்பூர் அருகே பாம்பு கடித்து வாலிபர் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    இலுப்பூர் அருகே உள்ள சொரியம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. விவசாயி. இவரது மகன் பெரியசாமி (வயது 25). வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற பெரியசாமியை பாம்பு கடித்தது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சட்டமன்ற தேர்தலுக்காக ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 231 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    ஆலங்குடி:

    சட்டமன்ற தேர்தலுக்காக ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 231 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 6 ஆயிரத்து955 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 9 ஆயிரத்து 971 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 4 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 930 வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கான பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அறையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

    வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய தேர்தல் படிவங்கள் ஏராளமானவை வந்துள்ளன. அவை ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை ஒவ்வொரு படிவம் வாரியாக தனியாக பிரித்து வைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனுடன் வாக்காளர்களுக்கான படிவங்களும் தனியாக வைக்கப்படுகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தனித்தனியாக பிரித்து வைத்து அதனை ரப்பர் பேண்டில் கட்டி வைக்கின்றனர்.

    வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள்வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கு முன்பாக எல்லாம் தயார் நிலையில் அதிகாரிகள் வைக்கின்றனர். இதேபோல வேட்பாளர்களின் பெயர், சின்னம் அடங்கிய பேலட் தாள் அச்சடித்து வந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி நடைபெற உள்ளது.
    ரூ.20 ஆயிரம் திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோட்டைப்பட்டினம்:

    மீமிசல் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் ராக்கப்பன் (வயது 50). சம்பவத்தன்று குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமி பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.20 ஆயிரத்தை திருடினார். பின்னர் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில் கிடந்த ஒரு கிராம் தங்கடாலரை திருடினான். தொடர்ந்து அந்த ஆசாமி, ராக்கப்பனின் மகள் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை அறுக்க முயன்றபோது, அவர் விழித்துக்கொண்டார்.

     இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என்று சத்தம்போட்டார். அந்த ஆசாமி மிளகாய்பொடி ஸ்பிரே அடித்து விட்டு தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து ராக்கப்பன் மீமிசல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை அருகே கார் மீது லாரி மோதியதில் திருச்சி டாக்டரின் தாயும், தந்தையும் பலியானார்கள். இதில் 5 வயது சிறுவன் காயத்துடன் உயிர்தப்பினான்.
    அன்னவாசல்:

    திருச்சி கே.கே.நகர், ஜான்சிநகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62). இவரது மனைவி சத்தியவாணிமுத்து (58). இவர்கள், பேரன் சூரியபிரகாஷ் (5) என்பவனை அழைத்துக்கொண்டு காரில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் நேற்று மீண்டும் காரில் திருச்சிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். கார் புதுக்கோட்டை அருகே நெடுஞ்சேரி என்ற இடத்தில் வந்தபோது, அந்த வழியாக கல் லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரி கார் மீது மோதியது.

    மோதியவேகத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செல்வராஜ், அவருடைய மனைவி சத்தியவாணிமுத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சிறுவன் சூரியபிரகாஷ் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர்தப்பினான்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சூரியபிரகாசை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் குணசேகரன் என்பவரை தேடி வருகின்றனர். விபத்தில் இறந்த செல்வராஜ்-சத்தியவாணிமுத்து தம்பதியின் மகனும், மருமகளும் திருச்சியில் டாக்டர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    வடகாடு அருகே புள்ளான்விடுதி மேற்கில் இருந்து வாணக்கன்காட்டிற்கு செல்லும் தார்சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி பல்லாங்குழியாக காட்சி அளிக்கிறது.
    வடகாடு:

    வடகாடு அருகே புள்ளான்விடுதி மேற்கில் இருந்து வாணக்கன்காட்டிற்கு செல்லும் தார்சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி பல்லாங்குழியாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது விவசாய விளை பொருட்களை மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களில் கொண்டு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் தாமரை ஊரணி அருகே பறக்கும்படை அலுவலர் ராமு தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    அன்னவாசல்:

    விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் தாமரை ஊரணி அருகே பறக்கும்படை அலுவலர் ராமு தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருகாரை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் பச்சை நிற இரட்டை இலை சின்னம் பொறித்த சேலை 20 மற்றும் 50 கிராம் எடை கொண்ட மிளகாய் தூள் 40 பாக்கெட்கள், மல்லித்தூள் 80 பாக்கெட்கள், மஞ்சள்பொடி 40 பாக்கெட்கள், பிஸ்கெட் 34 பாக்கெட்கள், ஒருடைரி ஆகியவை இருந்தன. மேலும் அவைகள் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்றது கண்டறியப்பட்டது. இதை எடுத்து வந்த பேராவூரணி வீரக்குடியை சேர்ந்த ரமேஷ் (வயது 40) மற்றும் சேலை, மளிகை பொருட்களை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தண்டாயுதபாணியிடம் ஒப்படைத்தனர். பின்னர் பறக்கும்படை அதிகாரி ராமு இதுகுறித்து மேல் நடவடிக்கைக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    புதுக்கோட்டை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது23). இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஒரு தலைக்காதல் சோகத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    ×