என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    விராலிமலை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 2 பேரை கைது செய்தனர்.
    விராலிமலை:

    தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று முதல் 3 நாட்கள் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன்காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மதுக்கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விராலிமலை பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன் பேரில் விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் மாதிரிப் பட்டி பிரிவு சாலை மற்றும் அத்திப்பள்ளம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது விராலிமலை தெற்கு தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 43) என்பவர் மாதிரிப்பட்டி பிரிவு சாலையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் அத்திபள்ளத்தில் ரோந்து பணியில் இருந்த போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த மார்கண்டன் (40) என்பவரது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது கண்டறியப்பட்டது. அவரை கைது செய்து விற்னைக்காக வைத்திருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரின் ஆதரவாளர் வாகனத்தில் இருந்து ரூ.76 ஆயிரம் பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் நேற்று அவர் மணமேல்குடி செங்குந்தர்புரத்தில் திறந்த வாகனத்தில் சென்று தீவிர வாக்குசேகரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    அப்போது, வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் பின்னால் வாகனத்தில் வந்தனர். இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திடீரென்று வந்து வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர். சோதனையில் வேட்பாளரின் ஆதரவாளர் வாகனத்தில் ரூ.76 ஆயிரத்து 600 இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, அந்த வாகனத்தில் இருந்த திருச்சியை சேர்ந்த பிரவின்ராஜ், சென்னையை சேர்ந்த குட்டியப்பன், கணேசன் ஆகிய 3 பேரை பிடித்து மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் அறந்தாங்கி சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
    ஆலங்குடியில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி வீட்டில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சி:

    தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ஆங்காங்கே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இந்தநிலையில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மச்சுவாடி பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் விரைந்து சென்ற பறக்கும்படையினர் மச்சுவாடி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.வினர் பழனி, சதாசிவம் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரத்து 500 பணம், அ.தி. மு.க. துண்டு பிரசுரங்கள் மற்றும் வாக்காளர் பட்டியலும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் விராலிமலை தொகுதிக்குட்பட்ட ராஜாளிப்பட்டி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த தி.மு.க.வை சேர்ந்த மணி, அ.தி.மு.க.வை சேர்ந்த முருகேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    ஆலங்குடியில் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி வீட்டில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    தமிழக சட்டசபை தேர்தலில், 5 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார், யார்? என்பதை பார்ப்போம்.
    வருமானவரித்துறை அதிகாரிகள் சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சோதனையிட்டு ரொக்கம் பறிமுதல் செய்து வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    அதனடிப்படையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு அறை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இங்கு வரும் புகார்களின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சோதனையிட்டு ரொக்கம் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    முக ஸ்டாலின்

    இந்தநிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு அவருடைய கணவர் சபரீசன் அலுவலகத்தில் நேற்று வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அதுபோல அண்ணா நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மோகனின் வீடு, அவருடைய மகனும், சபரீசன் நண்பருமான கார்த்தி மோகனின் அண்ணாநகரில் உள்ள அலுவலகம் மற்றும் கட்டுமான நிறுவன உரிமையாளர் பாலா என்பவரின் வீடு, சேத்துப்பட்டு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேற்று வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இதேபோல் கரூர் அருகே ராமேஸ்வரப்பட்டியில் உள்ள, கரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரும், மாவட்ட பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜியின் வீட்டில் காலை 11 மணியளவில் 10-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அவரது தம்பி அசோக்குமார் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ராயனூரில் உள்ள தி.மு.க. மேற்கு நகர பொறுப்பாளர் தாரணி சரவணன் வீட்டிலும் மற்றும் அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கொங்கு மெஸ் சுப்ரமணி வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதிக்குட்பட்ட கே.வி.கோட்டை திமுக ஊராட்சி மன்ற தலைவர் ராமதிலகம் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி தொகுதி தேர்தல் கூடுதல் கண்காணிப்பு நிலை அதிகாரி சக்தி தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி தொகுதி தேர்தல் கூடுதல் கண்காணிப்பு நிலை அதிகாரி சக்தி தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஜஹாங்கீர் என்பவர் வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தியதில், அதில் ரூ. 1 லட்சத்து 43 ஆயிரம் இருந்தது. ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் ஆலங்குடி தேர்தல் நடத்தும் அதிகாரி, அக்பர் அலி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி பொன்மலர் ஆகியோரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயிலின் உக்கிரத்தில் இருந்த தப்பிக்க, பொதுமக்கள் குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளை சாப்பிட தொடங்கி உள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரவலாக மழைபெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களுக்கு ஓரளவு தண்ணீர் வந்தது. ஆனால் சில இடங்களில் ஆக்கிரமிப்பின்காரணமாக தண்ணீர் வரத்தே இல்லாமல் இருந்தது.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் நிரம்பிய கண்மாய்களில் தண்ணீர் மளமளவென்று குறைந்து வருகிறது.

    நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வெயிலின் உக்கிரம் அனலாக கொதித்தது. இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களின் முகத்தில் அனல் காற்று வீசியது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சிலர் குடையை பிடித்தப்படியும், பெண்கள் தங்களது சேலையாலும், இளம்பெண்கள் சுடிதாரின் துப்பட்டாவாலும் தலையை மூடியபடியும் சென்றதை காணமுடிந்தது. வெயிலால் உடல் சருமம் பாதிக்காமல் இருக்க இரு சக்கர வாகனங்களில் சென்ற இளம்பெண்கள் சிலர் தலை மற்றும் கைகளை துணியால் மூடிய படி சென்றனர். அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் இப்படி அதிகமாக இருப்பதை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மே மாதத்தில் வெயில் எப்படி சுட்டெரிக்குமோ? என்று கவலை அடைந்துள்ளனர்.

    வெயிலின் உக்கிரத்தில் தப்பிக்க, தங்களை பாதுகாத்து கொள்ள குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளை பொதுமக்கள் சாப்பிட தொடங்கி உள்ளனர். சாலையோரங்களில் இளநீர், நுங்கு, தர்பூசணி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.

    இதேபோல வெள்ளரி பிஞ்சுகள், பழ வகைகளையும் வாங்கி சாப்பிடுகின்றனர். பழ ஜூஸ்களையும், குளிர்பானங்களையும் வாங்கி அருந்துகின்றனர்.

    இதற்கிடையில் மோரை பானையில் சுமந்து சென்று சிலர் விற்று வருகின்றனர்.
    ஆலங்குடி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு விவசாயிகளே அதிக அளவில் வசித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏழைகளும் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி மக்கள் ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டால் சிகிச்சைக்காக ஆலங்குடி தாலுகா மருத்துவமனைக்கு வருவார்கள். ஆனால் அங்கு போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    ஆலங்குடி அரசு மருத்துவமனையில் 6 மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள், இது இங்குள்ள மக்கள்தொகைக்கு போதுமானது அல்ல. இதயநோய் மருத்துவர், ஆர்த்தோ மருத்துவர் போன்ற சிறப்பு மருத்துவர்கள் இல்லை. ரத்த வங்கி இல்லை. இதனால் விபத்துகளில் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் மகப்பேறுகாலத்தில் பிரச்சனை உள்ளவர்கள் இங்கிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ள புதுக்கோட்டைக்கு செல்லவேண்டியநிலை உள்ளது. அவ்வளவு தூரம் செல்லும்போது, சில சமயங்களில் நோயாளிகள் இறக்கும் சூழ்நிலை உள்ளது.

    அதுமட்டுமின்றி, இந்த மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் வசதி இல்லை. மேலும் பொதுவார்டில் உள்ள கட்டிடத்தின் மேற்கூரை பழுதடைந்து காணப்படுகிறது. அந்த வார்டில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன. மழைக்காலங்களில் அந்த ஜன்னல் வழியாக தண்ணீர் வருகிறது. கட்டிடங்களில் மரக்கன்றுகள் முளைத்து விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இந்த மருத்துவமனையில் சுமார் 60 படுக்கைகள் உள்ளன. படுக்கை விரிப்புகளை துவைத்து தூய்மைப்படுத்த ஒரே ஒரு சலவைத்தொழிலாளி மட்டுமே உள்ளார். அதுமட்டுமின்றி துப்புரவுப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மிகக்குறைந்த அளவிலே உள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் இந்த மருத்துவமனையை தரம் உயர்த்தி, இங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஒவ்வொரு தொகுதி வாரியாக தனித்தனியாக பிரித்து தபால் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் தேர்தல் பிரிவு ஊழியர்களும் பணியில் இருந்து போலீசாரின் தபால் வாக்கினை சரிபார்த்து ஓட்டளிக்க அனுமதித்தனர்.
    புதுக்கோட்டை:

    சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தபால் வாக்கிற்கு விண்ணப்ப படிவம் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவை வினியோகிக்கப்பட்டன. இதில் பூர்த்தி செய்து விண்ணப்பித்தவர்களுக்கு தபால் வாக்குப்பதிவு நேற்று முதல் தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை (தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுக்கோட்டை ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

    இதில் ஒவ்வொரு தொகுதி வாரியாக தனித்தனியாக பிரித்து தபால் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் தேர்தல் பிரிவு ஊழியர்களும் பணியில் இருந்து போலீசாரின் தபால் வாக்கினை சரிபார்த்து ஓட்டளிக்க அனுமதித்தனர்.

    இந்த வாக்குப்பதிவு நேற்று காலை முதல் மதியம் வரை நடைபெற்றது. இதில் போலீசார் வரிசையில் நின்று தபால் வாக்கினை பதிவு செய்தனர். இந்த வாக்குப்பதிவினை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான உமாமகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த வாக்குப்பதிவின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலர் அந்த மண்டபத்தில் இருந்து பார்வையிட்டனர்.

    போலீசாருக்கான தபால் வாக்குகள் குறித்து அந்த பிரிவு போலீசார் கூறுகையில், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் என தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்கள் மொத்தம் 2,108 பேர் தபால் வாக்கிற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், இதில் 448 பேர் வெளி மாவட்டத்தை சேர்ந்த தொகுதிகளில் வாக்கு அளிக்க கூடியவர்கள்' என்றனர். இந்த சிறப்பு ஏற்பாடு நேற்று ஒரு நாள் மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தபால் வாக்கினை பதிவு செய்யாதவர்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    கறம்பக்குடி தாலுகாவில் புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்தப்பகுதிகளில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. கறம்பக்குடி ரெகுநாதபுரம், மழையூர் உள்ளிட்ட பதிகளில் நேற்று தபால் வாக்குப்பதிவு நடந்தது. இப்பணிகளை கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் கண்காணித்தனர்.
    வாக்குச்சாவடிகளுக்கு 11 வகையான கொரோனா தடுப்பு உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தலை விட இந்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் சற்று வித்தியாசம் தான். கொரோனா நோய் பரவலுக்கு மத்தியில் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து இந்த தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களின் உடல் வெப்ப நிலையை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை மேற்கொண்டும், கைகளை கழுவ கிருமி நாசினி மற்றும் கையுறைகள் வழங்கியும், முக கவசம் கொடுத்தும் அனுமதிக்க உள்ளது.

    கொரோனா தொற்று பாதித்தவர்களும் மற்றும் தொற்று பாதிப்பு இருக்குமோ? என்ற சந்தேக நபர்களுக்கும் பாதுகாப்பு கவச உடைகள் கொடுத்து அணிந்து வாக்களிப்பதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பாதுகாப்பு கவச உடைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல வாக்குச்சாவடிகளில் பணியாற்றுபவர்களுக்கு கையுறைகள், முகம் முழுவதும் மறைக்க கூடிய கவச உபகரணம், முககவசம், கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது.

    மேலும், வாக்குச்சாவடிகளுக்கு வருபவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு, மயக்கம் ஏற்பட்டால் அவர்களுக்கு சக்தியை அதிகரிக்க கூடிய எனர்ஜி பானம் வழங்குவதற்கான பொடியும் தயாராக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் 11 வகையான பொருட்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு அனுப்ப தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடிகளுக்கான கொரோனா தடுப்பு உபகரணங்கள் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் மொத்தமாக வந்திறங்கின. இவை அந்தந்த தொகுதி வாரியாக பிரித்து வைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான உமாமகேஸ்வரி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் மொத்தம் 1,902 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 9,128 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர்.

    தேர்தல் ஆணைய அறிவுரைப்படி கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளின்படி நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் தேவையான கைகழுவும் திரவம், தெர்மல் ஸ்கேனர், பாலித்தீன் கையுறைகள், துணி முககவசம், தன் பாதுகாப்பு உபகரணப் பெட்டி, உயிர்கழிவு சேகரிப்பு டிரம் உள்ளிட்ட 11 வகையான தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.

    வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் நாளுக்கு முதல் நாள், தேர்தல் நாளில் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மற்றும் தேர்தல் பணி நிறைவடைந்த பின்னர் முழுமையாக தொற்று நீக்கம் செய்யும் பணியினை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் வாக்காளர்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்து, கைகழுவும் திரவம் மற்றும் பாலித்தீன் கையுறை வழங்க ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 2 தன்னார்வலர்கள் வீதம் மொத்தம் 3,804 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குசாவடிகளிலிருந்து சேகரிக்கப்படும் பயன்படுத்திய முக கவசம், கையுறைகள் போன்ற உயிர்கழிவுகள் முறையாக பேக்கிங் செய்து உயிர் மருத்துவ கழிவு சேகரிப்பு மையங்களில் உள்ளாட்சி அமைப்பினரால் ஒப்படைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, சுகாதார துணை இயக்குனர் கலைவாணி, நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர். ஒவ்வொரு தொகுதிக்கும் இந்த உபகரணங்கள் அனைத்தும் அனுப்பும் பணி நேற்று முதல் தொடங்கியது.
    கந்தர்வகோட்டையில் நிதி நிறுவனத்தின் லாக்கரை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்தது. அலாரம் ஒலித்ததால் மர்ம நபர் தப்பி ஓடி விட்டார்.
    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள கட்டிடத்தின் மாடியின் முதல் தளத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது தேவைக்கு நகைகளை அடகு வைத்து பணம் பெற்று வருகின்றனர். இந்த நிறுவனத்தில் 3 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் நேற்று முன்தினம் வழக்கம்போல தங்களது பணியை முடித்துவிட்டு நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த நிறுவனத்தின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த லாக்கரை உடைக்க முற்பட்டபோது அலாரம் ஒலித்தது. அலாரம் ஒலிக்கும் சத்தத்தை கேட்டதும் பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். இதனால், அந்த மர்ம நபர் கொள்ளையடிக்கும் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து அந்த நிதி நிறுவனத்தின் மேலாளர் சந்திரசேகரன் அளித்த புகாரின்பேரில், கந்தர்வகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர்.

    அப்போது கண்காணிப்பு கேமராக்களில் மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து கையுறையுடன் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. முகமூடி அணிந்த அந்த மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிதி நிறுவனம் செயல்படும் இடத்தின் அருகே இதேபோன்று மற்றொரு நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இரவு நேர காவலர்கள் இல்லாததால் இந்த கொள்ளை முயற்சி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் இந்த கொள்ளை முயற்சி நடந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையில், திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய நிதிமந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பல்வேறு மாவட்டங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மெய்யநாதனை ஆதரித்து ஆலங்குடியில் ப.சிதம்பரம் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது பேசிய ப.சிதம்பரம், முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டிய செங்கல்களை வைத்து ஒரு பெரிய கட்டிடமே கட்டி இருக்கலாம் என்றார். மேலும், கூவத்தூர் செல்லும்வரை பழனிசாமி என்று ஒரு அமைச்சர் இருப்பதே தமக்கு தெரியாது என்றார். ஆலங்குடி தொகுதியில் 60 நாட்களுக்கு முன் மாற்றுக்கட்சியில் இருந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்து அதிமுகவினருக்கு அக்கட்சி துரோகம் செய்துவிட்டதாகவும் அவர் சாடினார்.

    ஆலங்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக தர்ம தங்கவேல் போட்டியிருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×