என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழுதடைந்த ஆலங்குடி அரசு மருத்துவமனை.
    X
    பழுதடைந்த ஆலங்குடி அரசு மருத்துவமனை.

    ஆலங்குடி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

    ஆலங்குடி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு விவசாயிகளே அதிக அளவில் வசித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏழைகளும் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி மக்கள் ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டால் சிகிச்சைக்காக ஆலங்குடி தாலுகா மருத்துவமனைக்கு வருவார்கள். ஆனால் அங்கு போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    ஆலங்குடி அரசு மருத்துவமனையில் 6 மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள், இது இங்குள்ள மக்கள்தொகைக்கு போதுமானது அல்ல. இதயநோய் மருத்துவர், ஆர்த்தோ மருத்துவர் போன்ற சிறப்பு மருத்துவர்கள் இல்லை. ரத்த வங்கி இல்லை. இதனால் விபத்துகளில் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் மகப்பேறுகாலத்தில் பிரச்சனை உள்ளவர்கள் இங்கிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ள புதுக்கோட்டைக்கு செல்லவேண்டியநிலை உள்ளது. அவ்வளவு தூரம் செல்லும்போது, சில சமயங்களில் நோயாளிகள் இறக்கும் சூழ்நிலை உள்ளது.

    அதுமட்டுமின்றி, இந்த மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் வசதி இல்லை. மேலும் பொதுவார்டில் உள்ள கட்டிடத்தின் மேற்கூரை பழுதடைந்து காணப்படுகிறது. அந்த வார்டில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன. மழைக்காலங்களில் அந்த ஜன்னல் வழியாக தண்ணீர் வருகிறது. கட்டிடங்களில் மரக்கன்றுகள் முளைத்து விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இந்த மருத்துவமனையில் சுமார் 60 படுக்கைகள் உள்ளன. படுக்கை விரிப்புகளை துவைத்து தூய்மைப்படுத்த ஒரே ஒரு சலவைத்தொழிலாளி மட்டுமே உள்ளார். அதுமட்டுமின்றி துப்புரவுப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மிகக்குறைந்த அளவிலே உள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் இந்த மருத்துவமனையை தரம் உயர்த்தி, இங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×