என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    கோட்டைப்பட்டினம் அருகே டீசல் விலை உயர்வை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    ஆர்ப்பாட்டம்

    கொரோனா பரவல் காரணமாக மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. வருகிற 30-ந்தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதாக மீனவர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தி வருகிறது. இதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

    இதுகுறித்து விசைப்படகு மீனவர்கள் சங்க தலைவர் சின்ன அடைக்கலம் கூறியதாவது:-

    மத்திய அரசின் தொடர் டீசல் விலை உயர்வு மீனவர்களை மிகவும் பாதிப்படையச் செய்துள்ளது. தற்போதைய நிலையில் கடலுக்குள் சென்று மீன் பிடிப்பது மீனவர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

    அவ்வாறு பிடித்து வரும் மீன்கள் குறைந்த விலைக்கு விற்பனையாகிறது. இதனால் அதிக விலை கொடுத்து டீசலை வாங்கி கடலுக்குள் மீன்பிடிக்க செல்வது மிகவும் சாத்தியமற்றது. எனவே மத்திய அரசு டீசல் விலையை குறைக்க வேண்டும். மாநில அரசுகள் மீனவர்களுக்கு மானிய விலையில் டீசலை அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின. வழக்கத்தை விட இரு மடங்கு விற்பனையாகி உள்ளன.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 144 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த மே மாதம் 10-ந் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வின் காரணமாக மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஒரு மாதத்திற்கு மேலாக பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டதால் மதுபானம் வாங்க மதுப்பிரியர்கள் கடை முன்பு குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

    பக்கத்து மாவட்டமான தஞ்சாவூரில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் புதுக்கோட்டை மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அம்மாவட்ட மக்கள் படையெடுத்து வந்தனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை களைகட்டியது.

    புதுக்கோட்டை மாவட்டத்தையொட்டி எல்லைப்பகுதியில் மொத்தம் 18 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்திலும் மதுபானங்கள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. மதுபானங்கள் பெருமளவு காலியாகின.

    மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ரூ.7 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் வட்டாரத்தில் தெரிவித்தனர். வழக்கமான மதுபான விற்பனையை விட நேற்று முன்தினம் இரு மடங்கிற்கு மதுபாட்டில்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் நேற்றும் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
    வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரையூர்:

    காரையூர் அருகே உள்ள ஒலியமங்களம் வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் வினோத் (வயது 24). இவர் கடந்த 7-ந்தேதி மோட்டார் சைக்கிளில் கொக்குப்பள்ளம் என்ற இடத்தில் சென்றபோது, 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டினர். இதுகுறித்து காரையூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே 3 பேரை கைது செய்தார். இந்நிலையில் நேற்று திருவப்பூர் அம்பாள்புரத்தை சேர்ந்த மணிகண்டன் (31), மச்சுவாடி வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்த வீரையா (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    ஊரடங்கை மீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    அன்னவாசல்:

    இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கைமீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    ஆவுடையார்கோவில் ஒன்றியம் காவதுகுடி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    ஆவுடையார்கோவில்:

    ஆவுடையார்கோவில் ஒன்றியம் காவதுகுடி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன், பொன்பேத்தி ஒன்றியக் குழு உறுப்பினர் சுந்தர பாண்டியன், ஆவுடையார்கோவில் தாசில்தார் சிவகுமார், ஒன்றியக்குழு தலைவர் உமாதேவி மற்றும் பொன்பேத்தி அரசு மருத்துவமனை மருத்துவர் துரை ராமச்சந்திரன், மருத்துவ ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். முகாம் ஏற்பாடுகளை காவதுகுடி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா சோனமுத்து செய்திருந்தார். இதில் 90-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

    இதேபோல திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    ஊரடங்கை மீறி முககவசம் அணியாமலும், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    அன்னவாசல்:

    இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி முககவசம் அணியாமலும், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    திருமயம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பாத்திரங்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமயம்:

    திருமயம் அருகே உள்ள கடியாபட்டி சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரத்தினம். இவரும், இவரது உறவினர்களும் சென்னை மற்றும் வெளிநாடுகளில் தொழில் செய்து வருகின்றனர். முக்கியமான விசேஷங்களுக்கு மட்டும் சொந்த ஊருக்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடியாபட்டி வந்த ரத்தினம், வீட்டின் முதல் தளத்தில் உள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த வெள்ளி பாத்திரங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, திருமயம் போலீசில் ரத்தினம் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் நேற்று ஒரே நாளில் 369 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் `டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து572 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 1,674 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு நேற்று 2 பேர் பலியாகினார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 259 ஆக அதிகரித்துள்ளது.
    மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் திருமணஞ்சேரி, முள்ளங்குறிச்சி காட்டாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்ற டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து டிராக்டர் டிரைவர் குமரன் (வயது 32) என்பவரை கைது செய்த போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை.முத்துராஜாவின் சட்டமன்ற அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொண்டு, எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினர். அனைவரும் சட்டமன்ற அலுவலகத்தில் கலைஞரின் புகைப்படத்துக்கு மலர் தூவி வணங்கினர். 

    எம்எல்ஏ முத்துராஜா

    அதன்பின்னர் எம்எல்ஏ முத்துராஜா தனது இருக்கையில் அமர்ந்து பணிகளை தொடங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர், கே.கே.செல்லப்பாண்டியன், நகர செயலாளர் நைனா முகமது. இளைஞர் அணி அமைப்பாளர் ஷண்முகம். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் முல்லை முபாரக், சுதாகர் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 
    ஊரடங்கைமீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 9 பேர் மற்றும் அரசு உத்தரவைமீறி கடை திறந்த ஒருவர் என 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    அன்னவாசல்:

    இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, ஊரடங்கைமீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 9 பேர் மற்றும் அரசு உத்தரவைமீறி கடை திறந்த ஒருவர் என 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 9 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    சிறுவயதிலேயே வீட்டில் உபயோகம் இல்லாத பொருட்களை, பயன்பாட்டிற்கு உரியதாகவும், அலங்கார சாதனமாகவும் தயாரிக்கும் சிறுவனை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
    கறம்பக்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியைச் சேர்ந்த கண்ணன் - சுவேதா தம்பதியின் மகன் சந்தோஷ் விநாயக் (வயது 8). 3-ம் வகுப்பு படித்து வருகிறான். 4 வயதிலிருந்தே ஓவியம் வரைவதிலும், வீட்டில் உபயோகமற்ற பொருட்களை கொண்டு வீட்டு அலங்கார பொருட்களை உருவாக்குவதிலும் ஆர்வமாக இருப்பான். பள்ளி விடுமுறை காரணமாக கறம்பக்குடியில் உள்ள தாத்தா வீட்டில் தங்கியுள்ள சிறுவன் சந்தோஷ் விநாயக் டீ கப்புகள் மற்றும் பழைய சேலை, சுடிதார்களில் உள்ள சரிகைகளை வைத்து பேட்டரி மேஜை விளக்கை உருவாக்கி உள்ளான். சிறுவயதிலேயே வீட்டில் உபயோகம் இல்லாத பொருட்களை, பயன்பாட்டிற்கு உரியதாகவும், அலங்கார சாதனமாகவும் தயாரிக்கும் சிறுவனை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
    ×