என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வருகிற 31-ந் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தயவு செய்து இதை விடுமுறை என்று கருதாமல் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், ஆசிரியர்கள் மூலமாக தமிழக அரசு யூடியூபில் 8,000 வீடியோக்களை அப்லோடு செய்து உள்ளது. அதனை பார்த்தும் தொடர்ந்து பாடங்களை படிக்க செய்ய வேண்டும்.
31-ந்தேதி வரை தொற்று அதிகமாகும் என்று அரசு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அதன் அடிப்படையில் தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மாணவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருந்தாலும் ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
அரசு என்ன சொல்கிறதோ அதன்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளில் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் அவர்களிடம் உள்ளது, அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். கல்வி தொலைக்காட்சி கடந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்றாலும் இந்த அரசு கல்வி தொலைக்காட்சியை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து தகவல் தொழில் நுட்பத்துறையுடன் ஆலோசனை செய்து வருகிறோம். வரும் காலங்களில் கல்வி தொலைக்காட்சி மேம்படுத்தப்படும்
நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசின் நிலைப்பாடு. இதற்காக விலக்கு வேண்டும் என்று சட்டப் போராட்டம் ஒரு வகையில் நடந்து கொண்டிருந்தாலும் மாணவர்களை தயார்படுத்துவதற்காக நாம் தமிழக அரசின் ஹைடெக் ஆய்வகம் மூலமாக பல பகுதிகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது அதை விரிவுபடுத்துவ தற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று திறக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முடிவுற்றது. இந்த கட்டிடம் தரமானதாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டதா என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு நடத்தி சோதனை செய்த பிறகு கட்டிடம் தரமானதாக உள்ளது என்று கூறிய பிறகு தான் திறப்பு விழாவிற்கு நான் அனுமதி அளித்தேன் என்றார்.
இதையும் படியுங்கள்... முகக்கவசம் அணியாததற்கு வாலிபரை சித்ரவதை செய்வதா? போலீசாருக்கு சீமான் கண்டனம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிக ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை இருந்து வருகிறது.
கொரோனா பரவலுக்கு முன்பாக இந்த மாவட்டத்தில் 120 ஊர்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. கொரோனா தொற்று காரணமாக தற்போதும் 50 ஊர்களில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் பிரசித்தி பெற்ற ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன் விடுதியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
பொங்கலையொட்டி நேற்று நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு முழு ஊரடங்கு காரணமாக இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முன்பதிவு செய்யப்பட்ட 700 காளைகள் களமிறக்கப்படுகிறது. அந்த காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
அதேபோல் 250 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது அவர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதோடு, போட்டியில் பங்கேற்கும் முன்னர் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையும் செய்து கொண்டனர். இந்த வீரர்கள் சுழற்சி முறையில் களமிறங்கினர்.
முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முன்னதாக மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின்னர் கோவில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை.
இதையடுத்து புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்க்கப்பட்டது. அந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்கினர்.
இதில் பெரும்பாலான காளைகள் தன்னை அண்ட விடாதவாறு களத்தில் நின்று விளையாடியது. அந்த காளைகள் பரிசுகளை வென்றது. அதேபோல் ஜல்லிக்கட்டு விதிகளின்படி காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களும் பரிசு மழையில் நனைந்தனர். அவர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், கட்டில், பீரோ, சைக்கிள், சேர்கள், அண்டா உள்ளிட்ட ஏராளமான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு உள்ளூர் பிரமுகர்கள் 150 பேர் மட்டுமே பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டனர். வெளியூர் நபர்கள் வருவதை தடுக்க வன்னியன்விடுதி கிராமத்தின் எல்லைகளில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்தனர்.
புதுக்கோட்டைமாவட்டம் ஆலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள மழையூர், கறம்பக்குடி, வாண்டான் விடுதி, உட்பட இதர பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் உள்ளன.
வழக்கமாக பொங்கல் பண்டிகை தினத்தையொட்டி ஆயிரக்கணக்கான மண் பானைகள் மற்றும் மண் அடுப்புகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடு படுவது வழக்கம். ஆண்டின் ஒருமுறை வெகு விமரிசையாகவும், பாரம்பரிய முறைப்படியும் கொண்டாடப்படும் இந்த பண்டிகைக்காக மண் பாண்ட தொழிலாளர்கள் முழுவீச்சில் பங்கேற்பார்கள்.
ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்ததைவிட பொங்கல் பானைகள் விற்பனை பெரும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. இதுகுறித்து ஆலங்குடி சந்தையில் கரும்பிரான் கோட்டையை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:&
பொங்கல் பண்டிகை காலங்களில் மட்டுமல்லாமல் வருடம் முழுவதும் இவர்கள் தயாரிக்கும் மண்பாண்டங்கள் விதவிதமாக தயார் செய்து, அந்தந்த பகுதியில் உள்ள வாரச்சந்தையில் மக்கள் பார்வைக்கு அடுக்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில், இப்பகுதி மண் பாண்டக்கலை தொழிலாளர்கள் பாரம்பரியமாக இத்தொழில்நுட்பம் தெரிந்து ஆர்வத்துடன் பிழைப்பு நடத்தி வந்தாலும் போதிய வருவாய் பார்க்க இரவு, பரவலாக உழைக்க வேண்டியுள்ளது.
சமையல் அறைகளை எப்போது உலோக பாத்திரங்கள் ஆக்கிரமிக்க துவங்கியதோ அப்போதிலிருந்தே மண் பாண்ட தொழில் சரிய ஆரம் பித்துவிட்டது.
ஒரு பானை 150 ரூபாயிலிருந்து 200 வரை விலைபோகிறது. பொங்கல் வழக்கப்படி மண் பானையில் சமைத்தால் கிடைக்கும் ருசி தனி. கிராம மக்கள் அலுமினிய பாத்திரங்களை பயன்படுத்தினாலும் மண் பாண்டங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை இன்றும் கொடுத்து வருகிறோம் என்று கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பொங்கல் பண்டிகை பல்வேறு பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டையை அடுத்த பூங்குடி கிராமத்தில் இருவேறு சமூகத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்கள் தனித்தனியாக பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஒரு சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் சாலைகளில் திரண்டு நின்று செல்பி எடுத்துக்கொண்டு இருந்தனர். அப்போது மற்றொரு சமூகத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்றுவிட்டு அந்த வழியாக வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.
சாலையை மறித்துக்கொண்டு நின்ற இளைஞர்களால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் சென்றவர் தங்களுக்கு வழி விடுமாறு கேட்டார். ஆனால் இளைஞர்கள் வழிவிடாமல் அவருடன் தகராறில் ஈடுபட்டனர்.
இதனால் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்தவர்கள் ஒருவழியாக வீடு திரும்பினர். பின்னர் அவர்கள் தங்களுக்கு நேர்ந்த பிரச்சினை குறித்து ஆதரவாளர்களிடம் தெரிவித்தனர். ஆத்திரம் அடைந்த மற்றொரு தரப்பினர் இளைஞர்களிடம் சென்று தட்டிக்கேட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக திரண்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் அடித்து உதைத்ததுடன், அருகில் இருந்த கோவில் குளத்தில் மூழ்கடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதுபற்றிய தகவல் கிராமத்தில் காட்டுத் தீயாக பரவியது.
இதையடுத்து இரு தரப்பை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவானது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆனாலும் அவர்கள் வெகுநேரம் வரை கலைந்து செல்லவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் புதுக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியதால் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காளைகள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை, போட்டியில் பங்கேற்பவர்கள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் பட்டியலில் இடப்பட்டது.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி இதுவரை 8 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளது. அரசிதழில் பதிவு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு விழாக்கள் நடத்தப்படவும், குறிப்பிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் இன்று நடைபெற்றது. வழக்கமாக இங்கு ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறும்.
ஆனால் இந்த ஆண்டு பொங்கலுக்கு முதல் நாளான போகியன்று ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இதில் பங்கேற்பதற்காக 300 காளைகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதே போல் 700 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர். அவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் ஆன்லைன் மூலம் பெறப்பட்டிருந்தது.

மாடுபிடி வீரர்கள் சுழற்சி முறையில் களத்தில் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் வாடிவாசலில் இருந்து திமிறியும், சீறிப்பாய்ந்தும் வந்த காளைகளை திமிலை பிடித்து அடக்கினர். இதில் பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் விளையாட்டு காட்டியது. அந்த காளைகளுக்கும், அதேபோல் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் 150 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து யாரும் வராத வகையில் தடுப்பதற்காக கிராமத்தின் எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையில் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் புதுக்கோட்டை முத்து ராஜா, கந்தர்வக்கோட்டை சின்னதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடமாக உள்ள 1 புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்தினை ஒப்பந்த ஊதியம் மாதம் ரூ.8,000&ம் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்திட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
10 ம் வகுப்பு அல்லது 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குழந்தை சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். குழந்தை தொடர்பான பணியில் 1 வருட பணி அனுபவம் பெற்றியிருத்தல் வேண்டும்.
40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. மேற்குறிப்பிட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 28.01.2022 அன்று மாலை 5.30 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைத்தல் வேண்டும்.
28.01.2022&க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல அலுவலக வளாகம், கல்யாணராமபுரம் 1 ஆம் வீதி, திருக்கோகர்ணம் அஞ்சல், புதுக்கோட்டை&622002. தொலைபேசி எண் 04322 221266 மற்றும் அலைபேசி எண் 80564 31053 ஆகும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்






