search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளையை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்ற காட்சி.
    X
    வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளையை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்ற காட்சி.

    தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது- காளைகள் சீறிப்பாய்ந்தன

    தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் இன்று தொடங்கியது.
    கந்தர்வக்கோட்டை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

    குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காளைகள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை, போட்டியில் பங்கேற்பவர்கள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் பட்டியலில் இடப்பட்டது.

    அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி இதுவரை 8 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளது. அரசிதழில் பதிவு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு விழாக்கள் நடத்தப்படவும், குறிப்பிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் இன்று நடைபெற்றது. வழக்கமாக இங்கு ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறும்.

    ஆனால் இந்த ஆண்டு பொங்கலுக்கு முதல் நாளான போகியன்று ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

    இதில் பங்கேற்பதற்காக 300 காளைகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதே போல் 700 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர். அவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் ஆன்லைன் மூலம் பெறப்பட்டிருந்தது.

    இதையடுத்து தச்சங்குறிச்சியில் இன்று காலை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கலெக்டர் கவிதா ராமு ஆகியோர் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து மற்ற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

    சீறிப்பாய்ந்து வந்த காளையை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்ற காட்சி.


    மாடுபிடி வீரர்கள் சுழற்சி முறையில் களத்தில் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் வாடிவாசலில் இருந்து திமிறியும், சீறிப்பாய்ந்தும் வந்த காளைகளை திமிலை பிடித்து அடக்கினர். இதில் பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் விளையாட்டு காட்டியது. அந்த காளைகளுக்கும், அதேபோல் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் 150 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து யாரும் வராத வகையில் தடுப்பதற்காக கிராமத்தின் எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையில் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் புதுக்கோட்டை முத்து ராஜா, கந்தர்வக்கோட்டை சின்னதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ஜல்லிக்கட்டு விழாவில் விதிமீறல்கள் ஏதுமின்றி நடத்தப்படுவதை கண்காணிக்க கோட்ட வருவாய்த்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டிருந்தது. மேலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் அருகே தயார் நிலையில் ஆம்புலன்சு, தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.


    Next Story
    ×