search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்ற காட்சி
    X
    வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்ற காட்சி

    ஆலங்குடி அருகே வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டில் ஆக்ரோ‌ஷம் காட்டிய காளைகள்

    கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு உள்ளூர் பிரமுகர்கள் 150 பேர் மட்டுமே பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டனர்.
    ஆலங்குடி:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிக ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை இருந்து வருகிறது.

    கொரோனா பரவலுக்கு முன்பாக இந்த மாவட்டத்தில் 120 ஊர்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. கொரோனா தொற்று காரணமாக தற்போதும் 50 ஊர்களில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் பிரசித்தி பெற்ற ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன் விடுதியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

    பொங்கலையொட்டி நேற்று நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு முழு ஊரடங்கு காரணமாக இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முன்பதிவு செய்யப்பட்ட 700 காளைகள் களமிறக்கப்படுகிறது. அந்த காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

    அதேபோல் 250 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது அவர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதோடு, போட்டியில் பங்கேற்கும் முன்னர் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையும் செய்து கொண்டனர். இந்த வீரர்கள் சுழற்சி முறையில் களமிறங்கினர்.

    முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முன்னதாக மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின்னர் கோவில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை.

    இதையடுத்து புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்க்கப்பட்டது. அந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்கினர்.

    இதில் பெரும்பாலான காளைகள் தன்னை அண்ட விடாதவாறு களத்தில் நின்று விளையாடியது. அந்த காளைகள் பரிசுகளை வென்றது. அதேபோல் ஜல்லிக்கட்டு விதிகளின்படி காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களும் பரிசு மழையில் நனைந்தனர். அவர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், கட்டில், பீரோ, சைக்கிள், சேர்கள், அண்டா உள்ளிட்ட ஏராளமான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு உள்ளூர் பிரமுகர்கள் 150 பேர் மட்டுமே பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டனர். வெளியூர் நபர்கள் வருவதை தடுக்க வன்னியன்விடுதி கிராமத்தின் எல்லைகளில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்தனர்.



    Next Story
    ×